வீடுபேறு வேண்டாம்
வீடுபோய் சேர வேண்டும்
என்கிற விருப்பத்தின் பெயரால்
அவர்கள் நடக்கிறார்கள்
இதய வெடிப்புகளை
எவரும் அறியாவண்ணம்
பாதவெடிப்புகளை மட்டுமே
நாம் பார்க்கும் வண்ணம்
அவர்கள் நடக்கிறார்கள்
கூரை மறுக்கப்பட்ட
கொடிய வாழ்விற்கு
கொடையாக வந்தவர்கள்
தங்கள் பெயர்கள் எழுதிய
தானியங்களைத் தேடி
திசையெங்கும் திரிகிறார்கள்
வெயிலில் காயும்
மல்லிகை மொட்டுக்களாக
தங்கள் குழந்தைகளைத்
தோளில் தூக்கிக் கொண்டு
அவர்கள் நடக்கிறார்கள்
நீதிதேவதையின் கண்கள்
குருடாக்கப்பட்ட இருள்வெளியெங்கும்
வியர்வை சொட்ட சொட்ட
அவர்கள் நடக்கிறார்கள்
இன்னொரு உயிரைத் தன்னுயிரில் வளர்க்கும்
கர்ப்பிணி மனைவியோடும்
இரண்டாம்
குழந்தைப் பருவத்தில்
தட்டுத் தடுமாறி நடக்கும்
முதியவர்களோடும்
செல்லப் பிராணிகளைப்
பிரிய மனமின்றி
உடன் அழைத்துவரும்
சின்னஞ்சிறார்களுடனும்
அவர்கள் நடக்கிறார்கள்
அரசாங்கம் என்னும்
அழுகிய இதயத்தின் வழுக்குப்பாறையில்
கால்வைத்து
அவர்கள் நடக்கிறார்கள்
விஷம் ஊறிய பாம்பிற்கு
நல்ல பாம்பென்று
நற்பெயர் வைத்தது போல
ஆட்சியாளர்களின்
வெற்று அறிக்கைகளை
வேதனைக்கு தின்னக் கொடுத்து விட்டு
கண்ணீரை
குடிநீராய் அருந்தி
கால்நடையாய்
அவர்கள் நடக்கிறார்கள்
பச்சைப் பொய்களால்
பச்சைத் துரோகங்களால்
பச்சைப் படுகொலைகளால்
நாடாளும்
பஞ்சமா பாதகர்கள்
நம்மையும் காப்பார்கள்
என்று நம்பி
அந்தப் பாமரர்கள் நடக்கிறார்கள்
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்தால்
கடைசித் தூக்கம்
நிகழக்கூடும் என்கிற கவலைகள் ஏதுமின்றி
கண்ணயர்ந்து தூங்குகிறார்கள்.
தாய்ப்பாலால்
தள்ளி வைக்கப்பட்டு
கள்ளிப்பால் குடித்து
கண் மூடும் குழந்தைகளாய்
வாழ்வு மறுக்கப்பட்டு
வழிகள் மறிக்கப்பட்டு
வானம் பார்த்து நடந்தவர்கள்
புண்ணிய பூமியென்று
சொல்லப்பட்ட
பொய்களை நம்பி
பூமிக்குள் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள்
குற்ற உணர்ச்சி
ஏதுமின்றி
விளக்கேற்றி
கைகளைத் தட்டி
பூத்தூவி மகிழ்கிறார்கள்
சக மனிதர்கள்
- அமீர் அப்பாஸ்