விண்நிறைந்த நட்சத்திரங்களிளொன்று
அந்த இரவுக்கு இரையாக
உதிர்ந்து கொண்டிருந்த நேரம்
என் தோட்டத்தில்
ஒரு புதிய பூ பூத்தது
மிக மெல்லிய குறட்டைச் சத்தத்தில்
பொதிந்திருந்த என்னை
மாயக்கரமொன்று
மெல்லத் தட்டி
எழுப்பிச் சென்றதும்
முதலில் நினைவில் தோன்றியது
முன்னிருளில் வழிதப்பிய வெண்நாரை
தன் சரியான கூடடைந்திருக்குமா
என்ற ஞாபகம் தான்
மூளையின் அடுக்குகள்
பிரபஞ்சத்தின் அடுக்குகளைப் போல
திறந்து கொண்டபோது
கருங்குழிக்குள்ளிருந்து ஒடுகிறார்கள்
சிறுவர்களும் சிறுமிகளும்
இளைஞர்களும் யுவதிகளும்
கயவர்களும் மனிதர்களும்
சிவலிங்கத்தைச் சுற்றிய
நாகம் ஒன்று உச்சியில்
படமெடுத்தாடிக் கொண்டிருக்கிறது
நீல வண்ணத் துளிகளை
விடம் என்று சொல்லவும் வழியில்லை
அல்லது கடவுளின் மீது எச்சில்
என்று சொல்லவும் முடியவில்லை
கண நேரமாவது
தரிசனம் கிட்டும் என்று நினைத்திருந்தேன்
நீண்டு நெடிதுயர்ந்த
சுவர்களின் மீது குதித்துவர
அதிர்ந்த கோவில் புறாக்கள்
பிரகாரத்தை விட்டு
மேல் நோக்கிப் பறக்கின்றன
மறுபடியும் என் பிரபஞ்சத்தின்
அடுக்குகள் திறந்து கொண்ட போது
தப்பி ஓடியவர்கள்
யாவரும் மீண்டும் மீண்டும்
கருங்குழிக்குள் குதிக்கிறார்கள்
- தங்கேஸ்