பாதரசமாக வழுக்கிக் கொண்டு ஓடும்
எண்ணங்களை மொண்டு
நிலவு வடிவ அச்சில் வார்க்கிறேன்
அதிலிருந்து முளைத்தெழுகிறது
என் மனது
காற்றில் நீந்தச் சொன்ன என் பறவை
மீன்குஞ்சாகி
ஆற்றில் நீந்திப் போகிறது
செதில்கள் முளைத்த இடத்தில்
சிறகுகள் முளைத்து
விண்ணேறிப் பாய்கின்றன
நான் வளர்க்கும் மீன்கள்
இன்றைய என் முதல் சிறகடிப்பே
உன்னிலிருந்து தான் தொடங்குகிறது
ஒளியாண்டுகள் நிரம்பிய
நட்சத்திரத்தின் தனித்தலைந்த பயணம்
உன் மடி வந்து சேர்வதற்கோ?
யுகம் யுகமாய் நடனத்தில்
திளைத்திருந்த
புள்ளியளவே ஆன அணு ஒன்று
உன்னைப் பார்த்த பின்பு
முதன்முறையாக
ஒரு பாடலை முணுமுணுக்கிறது அம்மு
- தங்கேஸ்