ஒரு கைப்பிடி சாம்பலளவு
கோபத்தினால்
பெரும் கடலளவு அன்பை
தொலைத்து விட்டு
நிற்கிறேன் இன்று
தெய்வங்கள் நம்மைப் பார்த்து
கண்போட்டு விட்டன போலும்
முத்தமிடுதல் என்ற
ஒற்றைப் புள்ளியில்
தொடங்கிய நம் காதல்
உயிர் தீண்டி உடல் தீண்டி
இந்த பிரபஞ்சம் அளவுக்கு
வளர்ந்ததும்
நீ பிரிவதற்கோ
நீ பிரிந்த பின்பு
இந்த பிரபஞ்சம்
ஒரு சிட்டுக் குருவியின்
சிறகசைப்புக்குக் கூட
போதுமானதாக இல்லை
எப்படிப் பார்த்தாலும்
அற்றைத் திங்கள்
ஒரு தீராத ஏக்கம் தான்
நேசத்தை தொலைத்த மனிதர்களுக்கு
நினைவு ஒரு மாபெரும் குன்றாக
வளர்ந்து கிடக்கிறது
இதை எந்த வழியில் கடந்து போய்
நிஜத்தை தொடுவதோ தெரியவில்லை
- தங்கேஸ்