மலர்த்தி மலர்த்தி காட்டும்
செடிகளின் இசை அவள்
மதியம் கூட பூத்து விடும்
வெண்மதி ஈர்ப்பு அவள்

தினம் ஒரு தீவு செய்யும்
கடலலை விசை அவள்
மனம் அதில் கோயில் செய்யும்
மௌனத்தின் ஓசை அவள்

என் திசை பார்த்து காத்திருக்கும்
ஒரு கோடி பறவை அவள்
தன் மடி விரித்து பூத்திருக்கும்
என் மலை உச்சியும் அவள்

அன்பில் கொட்டும் அருவி
பாறையைப் பவளமாக்கும்
அவள் தொட்டிச் செடி பூக்கள்
எனைத்தான் தேன்துளி ஆக்கும்

எங்கிருக்கிறேன் என்று
தெரியாத போது
எங்கிருக்கிறாள்
என்று அவளும் மறப்பாள்

என் நேரம் தான் அவள் நாள்
என் வானம் தான் அவள் நீலம்

மழை கண்டால்
மனம் அனுப்பிடுவாள்
மயில் கண்டால்
மழை அனுப்பிடுவாள்

சுவாசத்தில் பாதி எனக்கு
மீதி தான் சுவாசம் அவளுக்கு

- கவிஜி