ஒவ்வொரு பாடலினிறுதியிலும் வெறுமையை வைத்திருப்பவள்
உலகினைத் தலைகீழாகவே எப்போதும் படித்துக் கொண்டிருக்கிறாள்.
1.
பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்றில்
சற்றுத் தயங்கியபடி நின்றிருந்தத் தன்னை
முழுவதுமாக அழைத்து வந்து தீர்ந்திடாத இவ்வாழ்விற்குள்
நிறுத்தியிருந்த ஒரு பருவத்தைத்தான்
எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாளவள்.
பிறகு
இந்த கலர் போட்டோவில் சிரித்த படி
நின்றிருக்கும் தன் அசலற்ற முகத்தை
வெகுநேரம் பார்த்து முடித்து,
தனது பேத்தியிடம் அதில் வண்ணம் நிரப்பச் சொல்கிறாள்.
காய்ந்த பூ வொன்றின் இதழை புத்தக மடிப்பிலிருந்து எடுத்து
அவளின் முகத்தில் பூசத்துவங்குகிறாள் அச்சிறுமி..
பழைய கறுப்பு வெள்ளையின் சந்தோசத்தை
இறுக்கமாக அனைத்த படியே
அவள் தூங்கிப்போகிறாள்.
2.
முத்தங்களின் கடைசி நொடியில் மீண்டும் முளைத்திடும்
ஒரு கனவை இருவரும் சரிபார்த்துக் கொண்டனர்.
பற்களின் தடம் பதிந்த சொல்லை அவள் திரும்பத் திரும்பச்
சொல்லியபடியிருந்தாள்.
அச்சொல்லை முத்தமிட்டே கரைந்து கொண்டிருந்தாள்
மற்றொருவள்.
ஒரு ஆழ்ந்த தழுவலையோ
ஒரு முடிக்கற்றையின் வாசணையையோ
ஒரு ஏக்கத்தின் தனிமையான ஒலியையோ
இருவரும் உணர்ந்து திரும்புவதற்குள்
இந்த உலகம் மிக அவசரமாக அறைக்கதவுகளைத்
திறந்து விடுகிறது.
பார்ப்பதற்கென அங்கு யாருமில்லை.
சொல்வதற்கென அங்கு ஒரு மொழியுமில்லை
ஒரு மௌனத்தைச் சுற்றிய இரண்டு இதயங்கள்
மட்டுமிருக்கின்றன அவ்வளவு நெருக்கமாய்.
3.
தன் கைகளில் ஒளித்து வைத்திருந்த நதியை
மேற்கு நோக்கி ஊற்றினாள்
அது சூரியனை நோக்கி ஓடியது.
தன் மனதில் ஒளித்து வைத்திருந்தச் சிறு விதையை
கிழக்கு நோக்கி எறிந்தாள்.
அது சூரியனை நோக்கி வளரத்துவங்கியது.
எல்லாச் சாலைகளிலும் பின்னோக்கியே நடந்து கொண்டிருந்தவள்
தன் வாழ்வில் மீதமானவற்றை இந்த பூமிக்குள் புதைத்து
சூரியனுக்குக் கீழே படுத்துக் கொண்டாள்.
உலகம் அழிவதற்கு ஒரு நொடிக்கு முன்பு
ஒரு பூ உதிர்ந்து கிடக்கிறது அந்த மணல் மேட்டின் மீது.
ஒரு துயரத்தின் எடையை சமப்படுத்துவதற்கு
எவ்வளவு காலங்கள் தேவைப்பட்டிருக்கின்றன
இப்பிரபஞ்சத்திற்கு.
4.
சாமந்திப் பூக்களில் உலர்ந்த சொல்லொன்றை
எடுத்து வந்து பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டாள்
அதன் இரவில் கனவுகளின் மீது நம்பிக்கை கொண்டாள்
அதன் எலும்புகளில் வெறுமையைப் பாடித் தீர்த்துக் கொண்டாள்
அதன் கதகதப்பான அணைப்பில்
சாம்பலிலிருந்து திரும்பி வர முடிந்திடாத
அந்த முகத்தை பார்த்து சமாதானமடைந்தாள்.
ஆகக்கடைசியில்,
இறந்து போவதென்றால் என்னவென்று
கொஞ்சமாகத் தெரிந்து கொண்டாள்.
மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் உலர்ந்த அச்சொல்லை
ஒரு போதும் தன் கைகளிலிருந்து உலகத்தில்
இறக்கி வைக்க விரும்புவதில்லை அவள்.
5.
ஒவ்வொரு அறையாகக் கதவுகளைத் தட்டி
அனுமதி வாங்கிய பிறகு உள்ளே நுழையுமவள்
கலைந்து கிடக்கும் பெட் கவர்களையும் போர்வைகளையும்
தலையனை உறைகளையும்
வெஸ்டன் டாய்லெட் பேப்பர் சுருளையும்
ஜாடியில் மிதந்து கொண்டிருக்கும் சிறிய வாசணைப் பூக்களையும்
நீரையும்
மெல்லிய அசைவுகளில் தினந்தோறும் மாற்றுகிறாள்.
மேலும்
விரிந்தினருக்குப் பிடித்த மிகச் சிறிய அளவொன்றில்
சிரிக்கவும் பேசவும் செய்யும் அவள்,
மிகப்பெரிய அவ்வோட்டலின் எல்லாத் தரைகளையும்
தினந்தோறும் துடைத்துக்கொண்டிருக்கும் பெண்ணொருத்தியோடு
வீடு திரும்பும் போது
அவளுக்குப் பிடித்த பெரிய அளவில்
பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்
நடக்கிறாள்.
இயல்பாக யிருப்பதற்கும் சில நிமிடங்கள் கிடைக்கத்தான்
செய்கின்றன இந்த வாழ்வில்.
6.
அவள் தன்னை முழுவதும் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
நேற்றின் கதவுகளுக்குப் பின்னால் சதா நின்றுகொண்டு
எதையேனும் வேண்டிய படியிருந்த விழிகளை
மறந்து போயிருந்தாள்.
கூடுதலாக ஒரு சொல்லை வேண்டிய படியிருக்கும்
அற்புதமான நேசிப்புகளை
ஒரு கதையைப் போல நிறைவு செய்திருந்தாள்.
சோகத்தின் இழுப்பறையிலிருந்த பழைய
மெலிந்த வாசணைகளை,
மிருதுவான நினைவுகளுக்குள்ளிட்டு மூடியிருந்தாள்.
அவ்வொவ்வொரு தினத்தையும் பிடித்த பாடல்களைப் போலவே
கடந்து கொண்டிருக்கிறாள்.
அத்தினங்களின் வெளிச்சங்களை பிடித்து வைக்க எப்படி
முடிகிறது அவளது சிறிய கைகளுக்கு.
- ஜீவன் பென்னி