பட்டென்று குதித்து
படக்கென்று கால் படாமல்
நகர்ந்து விடும் பூனையை
ஒரு பேச்சுக்கு
கள்ள பூனை என்கிறேன்
மறுபேச்சுக்கு
சக பூனையைப் போல
மாறி விடும் முகத்தை
என்ன செய்து மாற்றுவது
அந்நிய மியாவ் சத்தம்
செவிக்கொன்றாய் எதிரொலிக்க
அச்சுறுத்தும் பூனை நடை
தனித்த கால்களின் குறுக்கே
அட்டகாச மீசையில்
மடங்கி எழும்பும் கண்களோடு
ஜோடி பூனைகள் எதிரும் புதிரும்
பொதுமொழிக்குள் தன்னை தானே
காட்டிக் கொடுத்தல்தான்
பூனைகளுக்கும் அழகு
கண்டதும் மறக்கும் நிறத்தோடு
ஒன்று வரலாம் அல்லது போகலாம்
ஒரு புத்தம் புது சுவர்
இப்படியாக
தினம் ஒரு பூனைக்குத்தான் காத்திருக்கிறது
- கவிஜி