எதிர்ப்பின்றி எதுவும் நடந்துவிடவில்லை
அநீதியான சமூகத்தின் கோரமுகத்தினைக் கிழித்தெறிய
உயிரிழந்தோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை
இன்றும் தொடர்கிற போராட்டம்தான்


சாதிப் படிநிலையில் தூக்கி எங்களின்
உரிமை வேர்களைப் பறித்துக்கொண்டு
ஆளும் அதிகாரங்களை தன்வசப்படுத்திய
காலங்கள் கடந்தேறி விட்டது

சாதியற்ற வாழ்வை நிறுவுதலில்
சதுர்வர்ண சாயங்கள் அழித்தொழிக்கப்பட்டு
புதுயுகச் சாயலானது
சமகாலச் சூழலில் சுயசாதி அசலைத் தேடினாலும்
சாதிக்கலப்பின் சிதறல்களே அழுத்தமாய் கனம் பெறுகிறது

உதிர்ந்த தலைமயிரை
ஒட்டிப் பார்க்கத் துணியும் மூடத்தனங்களை
சாதி உரிமையென கைப்பற்றத் துணிகிறது
வரலாற்றுச் சாயம் வெளுத்துப் போக
கழற்றியெறியப்பட்டது சாதிச் சிம்மாசனங்கள்

எதிர்மொழியை முன்மொழிய
தலைமுறைகள் மரணத்தைக் கண்டு அஞ்சவுமில்லை
இனி அச்சப்படப் போவதுமில்லை
தன்மானத்தை மீட்டெடுக்க
துண்டு துண்டாக எங்களை வெட்டியெறிந்தாலும்
மரணத்தைக் கண்டு அஞ்சவுமில்லை
இனி அச்சப்படப் போவதுமில்லை

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It