வீட்டுச் சுவரை ஒட்டிய
பெரிய வாகை மரத்தின் கீழ்
கிடக்கும் பழைய பெஞ்ச்சின்
முன்பும் எதிரிலும்
ஆறு பேர் உட்காரலாம்

சாலையோரச் சிற்றுண்டிக்கடை
சரஸ்வதிப் பாட்டி நெற்றியில்
எப்போதும்
திருநீறு துலங்க
பாசப் பொலிவோடு நிற்கிறார்
உதவிக்கு ஒரே மகன் சேகர்

எளிய மக்களும்
கிராமவாசிகளும்
அந்தக் கடை வாடிக்கையாளர்கள்

படிக்காத பாட்டியின்
நல்லறிவு
அவள் செயல்களில் மிளிரும்

இட்லி நான்கு ரூபா
கனமான வீட்டுத் தோசை பத்து ரூபா
அசாதாரண கைமணத்தால்
இரண்டு சட்னியும்
சாம்பாரும் மிகவும் ருசிக்கும்

அவரவர்க்கு
சிறு எவர்சில்வர் செம்பில்
குளிர்ந்த குடிநீர்

பேராசை காற்றுப்படாத
பாட்டியைப் பாராட்டுவது போல்
மரக்கிளைகளால் உருவான
கரிய நிழல்
இப்படியும் அப்படியும்
அசைந்து அசைந்து விசிறியது!

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It