இந்த நேரத்தில் 
இந்த இசையுடன் 
நாம் 
இங்கு சந்தித்திருக்க வேண்டாம் 

வயலினும் குழலும் 
ஊடுபாவாக நெய்வதை 
அணிந்து கொள்ள முடியாமல் 
அவிழ்த்து நிரப்புகிறது 
இடைவெளி 

உன் நெஞ்சில் சாய்ந்த 
பழைய இமைகளில் வண்ணத்துப்பூச்சிகள் 
படபடக்கின்றன இசையாக 

தண்ணீரில் பிடிக்க முடியாத பூச்சிகளாக 
நழுவி நகரும் விரல்கள் 
காட்டுத்தீயைத் தவிர்க்க 
அகல் விளக்கை ஏற்றுகின்றன 

வெகுநாளைக்குப் பிறகு 
தனியாக இருந்தாலும் 
வெகுநாளைக்கு முந்தைய 
தனியாக இருத்தல்  
இப்போதும் வந்துவிடுகிறது 

வேலை பற்றிய பேச்சு 
மிக சௌகர்யமாக உள்ளது 
பார்வைகளின் நேர்க்கோட்டை 
அடிக்கடி கலைப்பதற்கு 

என்ன என்ன என்று உயரும் இமைகள் 
இல்லை இல்லை என நகரும் கண்கள்
முடிவற்ற வரைபடங்கள் 
முகங்களில் 

கதையின் 
இன்னொரு பக்கமாக 
இந்த நாளும் இருக்கட்டும் என 
எழுதுகிறது இரவு 

கூடு சேராத பறவைகளுக்கென 
தீராத பிரிதலின் கதைகள் 
நுரைத்துக்கொண்டே இருக்கிறது 
மேகங்களில்.

- இரா.கவியரசு

Pin It