இப்பகலை
நகர்த்துவதற்கு
எத்துனை
பிரயத்தனப்படுகிறேன்.

எனக்கிது
உவப்பாயில்லை..
எங்கோ ஒரு பறவையின்
குரல் தன் கூடிழந்த
சோகத்தைக் கூறிக்கொண்டே
இருக்கிறது.

எவ்விடமிருந்தோ
மெல்ல பயணப்பட்டு வந்த
வெண்மேகமொன்று
மொத்தமாய் பொழிவதற்கு
என்நிலம் கேட்கிறது.

நானோ
நாடு தொலைத்த அகதியைப் போல்
நீயிருக்கும் திசை
பார்த்தபடி நின்றிருக்கிறேன்!

கூண்டிலிருந்து
விடுபட எத்தனிக்கும்
பறவையொன்றின்
சிறகடிப்பை ஒத்த என்
இதயத்துடிப்பை
எப்போது நீ அறியப்போகிறாய்?

குரலுண்டு
வாழும் சிறுபறவை நான்!
ஒருமுறை
உனைக் காண
பிரயாசைப்படுவதை
உணரப் போவதெப்போது?

உன் பார்வையை
எதிர்கொள்ளும்
தெம்பற்று
கால்நோக்கும் பார்வைக்குள்
சிறைப்பட்டிருக்கிறது
அத்துனைக் காதலும்!

ஈமோஜிக்களால்
பரிமாறப்படுகிற
முத்தங்கள்
ஒருபோதும்
உயிர்ப்பிப்பதேயில்லை!
ஈரம்
உலர்ந்தே எனை
வந்தடைவதால்..

இதோ
இப்பகலின்
சூடு மெல்ல
எனை படர்கிறது.
வெயிலின் கதகதப்பு
முன்னொரு நாளில்
எனைப் பற்றியிருந்த
உன் கரங்களை நினைவுப்படுத்திக் கொல்கிறது.

பத்ரமாயிரு

- இசைமலர்