ப்யார் பிரேமா காதல்... இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கிற பொழுது, இது ஒரு காதல் படம் என்பது போல் தோன்றும். ஆனால், இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில், காதல் என்ற வார்த்தையைக் கொண்டு வெளிவந்த மற்றும் காதல் பற்றிய படங்களிலிருந்து முற்றிலும் வேறான எதார்த்தமான காட்சியமைப்புகளுடன் வெளி வந்துள்ள மிகச் சிறந்த படமாகும்.

நீங்கள் நினைக்கலாம், அப்படி என்ன வேறு பாடு என்று? எப்படி என்றால், இது வரை நம் தமிழ் சினிமா விதைத்த காதல், கற்பு, திருமணம் பற்றிய மூடநம்பிக்கைகளுக்கு மாற்றாகும். இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், பெரியார் அவர்கள் காண விரும்பிய பெண்களின் வாழ்க்கையை இந்தப் படம் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தில் நிலை நிறுத்தியுள்ளது.

pyar prema kadhal

அப்படியா! ஆம், படத்தின் முதல் காட்சியிலேயே அலுவலகத்தில் பணிபுரியும் கதாநாயகன் தனது வேலைகளைச் சரியாகச் செய்யாமல், அருகிலுள்ள ஜன்னலின் வழியாகப் பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்யும் கதாநாயகியை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருப்பதி லிருந்து கதை தொடங்குகிறது.

பிறகு திடீரென்று ஒரு நாள் தான் தூரத்தி லிருந்து பார்த்து மகிழ்ந்த பெண் தன் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வதைக் கண்டு தன் வாழ்நாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ இயல்பாக ‘வணக்கம்’ சொல்வதிலிருந்து தனது வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். இதனை யடுத்து தன் சக ஊழியரான கதாநாயகனுக்கு ஃபோன் செய்து உரையாடுகிறார்.

ஆனால் கதாநாயகன் தன் வீட்டில் இருக்கும் போது ஒரு பெண்ணிடம் பெற்றோர்கள்முன் பேச அஞ்சுகிறான். ஆனால் அந்தப்பெண் ஆண் நண்பர் களிடம் தன் அப்பா முன்னும் இயல்பாகப் பழகு கிறார். இதற்குக் காரணம் இருவரின் பெற்றோர்களினுடைய வாழ்க்கை முறையும் மற்றும் அவர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய நிலையையும் இது உணர்த்துகிறது.

                இதற்கடுத்து அவர்கள் நட்பின் பழக்கத்தில் ஓரிடத்தில் உணர்ச்சி வயப்பட்டு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அப்பொழுது கதாநாயகன் கதா நாயகியிடம் “I Love You” என்று முதன்முறையாகச் சொல்லுகிறான். அதற்கு அந்தக் கதாநாயகி சொல்லும் மறுமொழி தான் மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அந்த மறுமொழியில் அவள் “நீ இப்படிச் சொல்வாய் என்று நான் எதிர்பார்க்க வில்லை, ஏதோ உணர்ச்சி வேகத்தில் நமக்குள் இவ்வாறு நடந்துவிட்டது. I like your innocence. But, I’m not in love with you”..

இதைக் கேட்ட மறுகணமே கதாநாயகன் அந்த இடத்தை விட்டுக் கோபத்துடன் வெளியேறுகிறான். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் கேரக்டரைப்பற்றித் தனது நெருங்கிய நண்பர் களிடம் தவறாக விமர்சிக்கிறான். இந்தக் காட்சி முழுக்க முழுக்க நமது சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற ஆணாதிக்கச் சிந்தினையின் வெளிப் பாடாகவே இருக்கிறது.

இதற்குப் பிறகும் கூட அந்த பெண், அவனுடன் நட்பு பாராட்டுவதையே விரும்புகிறாள். பிறகு ஒரு கட்டத்தில் அவன் மீது அவளுக்குக் காதல் ஏற்படுகிறது. அதை அவள் வெளிப்படுத்துவதற்கு முன் தனது அலுவலக பார்ட்டியில் குடித்துவிட்டு தங்களுக்குள் நடந்தவற்றை அனைத்து அலுவலக நண்பர்களுக்கு முன் கோபத்தில் உளறிவிடுகிறான். அதற்கு மறுநாள் அந்தப் பெண் அலுவலகத்திற்குள் நுழைந்து இயல்பாக ‘குட்மார்னிங்’ சொல்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் அந்த அலுவலகத்தில் இருக்கிற மொத்த ஆண்களும், அவளைப் பார்த்துத் திகைக்கும் காட்சி நமது சமுதாயத்தில் வழிவழியாக வந்த ஆணாதிக்கத்தின் பார்வையில், திருமண மாகாத ஒரு பெண்ணின் கற்பைப் பற்றிய மூடப் பார்வையாகும். இந்த இடத்தில் இயக்குனர் பெரியார் சொன்ன பெண்ணை அடிமைப்படுத்தும் ‘கற்பு’ என்ற கருத்தியலை வென்ற பெண்ணாகக் கதாநாயகியைக் காட்டியிருக்கிறார்.

இதற்கடுத்து தனது காதலை அவனிடம் வெளிப்படுத்தும் போது பெரியார் சொன்ன பழமை வாதத் திருமணம் என்ற நடைமுறைக்குள் உடனடி யாகச் செல்லாமல் சேர்ந்து வாழுதல் (Live in relationship) என்ற முறையில் நம் வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று சொல்வது மிகச் சிறப்பாகும்.

அதன்பின் அவர்கள் (Live in relationship)-இல் வாழும் போது கதாநாயகன் தனது வீட்டுச் சூழ் நிலையைச் சொல்லி திருமணத்திற்குக் கட்டாயப் படுத்தும்போது அவள் தனது எதிர்காலக் கனவைச் சுட்டிக்காட்டியும் அந்த இலட்சியத்தை அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வதும் - நம் சமுதாயத்தில் வெறும் திருமண பந்தம் என்பதற்காகத் தான் கற்ற கல்வி, வேலை என அனைத்தையும் விட்டுவிட்டுக் குடும்ப வேலைக் காரியாக மாறும் முறைக்கு சரியான சாட்டையடி!

மேலும், அந்தப் பெண் குழந்தை பெற்றுக் கொள்வது எவ்வாறு பெண்ணின் இலட்சியத்தைச் சிதைக்கிறது என்பதைப் பற்றி விளக்கும் காட்சி பெரியார் பார்வையில் தமிழ் சினிமாவின் முதல் பரிணாமம். இப்போது இந்தப்படம் (Live in relationship) பற்றிக்கூறுவதைப் பெரியார் பல ஆண்டு களுக்கு முன்பே பின்வருமாறு கூறியுள்ளார்.

“நான் 1931-இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒருவீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை ‘PROPOSED HUSBAND AND WIFE’ என்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டேன். நாங்கள் உண்மையான கணவன் - மனைவியாக, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளப் பயிற்சி பெறுகிறோம் என்றார்கள். எவ்வளவு காலமாக? என்று கேட்டேன். எட்டு மாதமாக என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? பதிவிரதம் பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்தநாடு முன்னேறுமா?” - தோழர் பெரியார், 1973 பெங்களூர் சொற்பொழிவு

காதல், கற்பு, திருமணம், குழந்தை பெறுதல் போன்ற பலவற்றையும் விவாதிக்கும் இப்படம், தமிழ்த் திரையுலகின் வழக்கப்படி, இவை அனைத்தையும் தவறு என்கிற ரீதியில் முடிக்கப்பட்டிருப்பது தேவை யற்றது. இப்படி, புரட்சிகரமாகப் பேசுவதும், இறுதியில் கல்லானாலும் கணவன் என்பது போல, காதலித்தவனுடன் அல்லது முதலில் உறவு கொண்டவனுடன் வாழ்வைப் பகிர்ந்து கொள்வது என்பது போன்ற முடிவுகள் பாலச்சந்தர் படங்களைத்தான் நினைவூட்டுகின்றன. தரமணி கூட இப்படித்தான் முடிக்கப்பட்டது. இப்படத்தின் கதாநாயகி, இரண்டாவதாக, ஹரீஷ் கல்யான் தவிர வேறு எவருடனாவது இணைந்து தனது இலட்சியங்களையும் அடைந்து வாழ்வது போல படத்தை முடித்திருக்கலாம். அதற்கேற்ற வலுவான திரைக்கரை இருந்தும் இயக்குநர் அதில் தவறிவிட்டார். இருந்தாலும், பெண்விடுதலைக் கருத்துக்கள் பற்றி இளைய சமுதாயத்திடம் ஒரு விவாதத்தைத் தொடங்கிய இயக்குநர் இளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Pin It