அமர்ந்திருந்த பறவைகள்
பார்த்துக் கொண்டிருந்தனவோ
பிரார்த்தித்துக் கொண்டிருந்தனவோ
அத்தனை இலைகளும் மூச்சு விட்டனவா
முளை விட்டனவா
கை கட்டி காத்திருந்த காற்றுக்கு
மூச்சு பேச்சு இல்லை
வலசைக்கு வந்திருந்த பறவைகள்
மரமேறத் தவித்தும் ஒதுங்கியே இருந்தன
மழையோ வெயிலோ பனியோ குளிரோ
வட்டமிட்டு விலகியே நின்றிருந்தன
காட்சிகளும் இல்லை
காட்சிப் பிழைகளும் இல்லை
கண்கட்டு வித்தைதான் குறிப்பிட்ட
காலக் கண்களுக்கு
இதோ இன்று இதோ இன்று
என்ற போதெல்லாம்
வலிமையோடு தாக்குப் பிடித்தது போதி
புத்தன் ஞானம் அடைந்த பிறகுதான்
விடுதலை யாவற்றிற்கும்...!

- கவிஜி

Pin It