அனிச்சை செயலானது
அதிகாலை எழுதல்,
வாசல் பெருக்கி
நீர் தெளித்து
தினம் ஒரு கோலமிடுதல்..
நாள் கிழமைக்கு
செந்நேர் கோடுகளும்,
இழையோடும்
இலைகளும் பூக்களும்,
சிட்டுக்குருவி யானையும்,
சிலநேரம் வண்ணங்களும்,
சிக்கலான இடைப்புள்ளிகளும்,
சிக்கனமாய் ரங்கோலியும்
எனக்குப் பாட்டியும்
அவளுக்குப் பாட்டியும்
வைத்த முதற்புள்ளியில்
வரைபடமாக
வரையப்பட்டவையே
வரையப்படுகின்றன...
புள்ளிகளை இடம்மாற்றவோ
கோடுகளை வளைத்துப் பார்க்கவோ
கிஞ்சித்தும் முனைப்பின்றி....
இடம்மாறும் புள்ளிகள்
இதழ்களாகும் கோடுகள்
கோலங்களாக
கொண்டாடப்படாததாலோ?

- அருணா சுப்ரமணியன்

Pin It