ரேஷன் வரிசையில் நின்றதில்லை..
வரிசையில் நின்று பேருந்தில்
ஏறுவது இழுக்கு...
தியேட்டர் வாசலில் 50 ரூபாய்
அதிகம் கொடுத்தாவது
டிக்கட் வாங்குவேன்
வரிசையில் நிற்பதாவது...
பால் வாங்க வரிசையில் நிற்கையில்
கடைக்காரர் பெண் ஜன்னலோரம்
வந்து தொலைந்தால் மானம் போகும்
பெரும்பாலும் தவிர்ப்பேன்...
வேலைக்கு விண்ணப்பம் வாங்கும்
போது கூட அந்த நீண்ட வரிசை எனக்குள்
சலிப்பைத்தான் வியர்த்தது.
வரிசைக்கு பயந்து வாசலோடே திரும்பிய
கோவில் தரிசனங்கள் தான் அதிகம்...
இருந்தும் ஏனோ எது பற்றியும்
கவலையிலல்லாமல்
மதுக்கடை வாசலில் மட்டும் 48 வது ஆளாக
இருந்தாலும் நின்று விடுகிறேன்.
ஹெல்மெட் போட்டுக் கொள்வதில்
வேகமாய் வரிசை முன்னேறுகிறது என்பது
வரிசையின் நம்பிக்கை...
எனதும் கூட....!

- கவிஜி

Pin It