எப்போதும் கையிலே
ஏந்தித்திரியும்
கனத்த மௌனம்
உன்னுடையது!
ஓயாது சலசலத்துக்
கொண்டேயிருக்கும்
கோவில் மணியின் பேச்சு
என்னுடையது!
எங்கேனும் இறக்கி
வைத்திட விரும்பா
சிலுவை என்றென்றும்
உன்னுடையது!
காற்றில் கனமற்றுத்
திரியும் வண்ணத்துப்பூச்சியின்
பட்டுறெக்கையிரண்டு
என்னுடையது!
ஞாபகங்களைத்...
தவிர்க்க விரும்பும்
தருணம் ...
உன்னுடையது!
நீங்கவியலா
நினைவுக்குவியலின்
சொர்க்க தேசம்
என்னுடையது!
எவ்வளவு முரண்களின்
மத்தியிலும் என்றென்றும்
முறியாப் பெருங்காதல்
நமக்கானது!
- இசைமலர்