சுற்றம் கவ்வும் மாயத்தின் நரம்புகளை அறுத்து வெளி உடைத்து உனை கொத்தி போகும் யாகத்தை இம்முறை பூமியாக்கி சுழலுகிறேன்...அரசியே. மெய்மறத்தல் தகுமோ என்பது உன் சூட்சுமம். பொய் உடைத்தல் சுகமோ என்பது என் ஆகமம்.

man lonely 323காதலை போலொரு சாபம் வேறொன்று உண்டோ......என உரக்க கத்தும் தனிமைக்குள் சுரந்து கொண்டே இருக்கிறது...யாவும் நீயாகி நானும் நீயாகும் கானகத்து யோசனையின் சுயம். அது பொன்னொளி செய்யும் புதர் மண்டிய திரவியத்தில் சித்தம் கலங்கி யுத்தம் செய்யும் கத்தும் ஊமை நதியை சல சலக்கிறது. கண்டு கடந்து நீந்தி செல்லும் நீரில் என் தாகமாகும் 

மழையே நீ பொழி. உண்டு உறங்கிய வண்டின் நிறம் மாற்றும் வெயிலே நீ குளி. துண்டு நிலவு உருகி... நீயாகும் பெண்ணே.... நீ... நானாகு. உன் எல்லா வழிகளிலும் 

நடை பயணி.... நானே. என் எல்லா வழிகளிலும் அடைபட்ட மதில்கள் நீயே. 

நானோர் தீவுக்குள் எல்லாம் மறந்த உன் கோபமாவதில் எனையே சிருஷ்டிக்கிறேன். தேவதைகளை கொன்று விடும் எல்லாமும் ஒரு முனையில் உன் பெயர் சொல்லும்.. கூராகி விடுவதை எப்படியாவது பிரதிஷ்டிக்கிறேன்.  யாரோ ஒரு காதலனின் ஆயுள் தண்டனையாய் எனையே தொங்க விடுவதில்.... தங்கி கொள்ளட்டும் உன் ஆதித் திமிர். ஆண்டவன் எவனுமில்லை என வந்து கொல்லட்டும் மீதி உயிர்.

உன் எல்லா தூரங்களையும் அடுத்த வளைவுகளிலேயே கடந்து விட முடிகிறது. கடக்க முடியாத தூரத்தில் உன் சொல் ஒன்று மட்டுமே நொண்டிக் கொண்டு போகிறது. யுத்தங்களால் நிறைந்து வழியும் நம் வாசல்களில்...யாருக்கும் தெரியாமல் முத்தமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன... நாம் வைத்த மரங்கள். போதும் போதும் என்றபடியே என் காதல் கூடு உன் வாது மழை பொழிவதாக தோன்றும் கனவை இன்னும் கொஞ்சம் உற்று நோக்க, மழையில் நனைந்த அருவிக் கூட்டம் எனக்குள்ளான சமன்பாட்டில் தள்ளாடுகிறது. பட்டாம் பூச்சியின் ரகசியம் உன்னாலே திறந்து விடப் படுகிறது. சிறகடித்து வலிக்கும் புராணம் என்னாலே அடை காக்கப் படுகிறது.  ஆட ஆட நின்று விட்ட சிலைக்கு உன் உடல்...செய்து பார்க்கும் வரத்தை நானே தருகிறேன்.  நீக்கமற மறந்து விட்ட பொழுதொன்றில் நித்திரையின் நிறத்தை இப்படித்தான் நிரப்ப முடிகிறது..... இதுவாகிய இன்னொன்றாக. அல்லது ருதுவாகிய ஆண் இரண்டாக.

கட்டுடைத்தலின் விதி போல ஒரு நிறம் விரட்டும் காயத்தில் எனது காத்திருப்பின் முன் ஜென்ம நிலை.... நீயாகவும் உன் நிலையாகவுமே இருந்திருக்கிறது. நிர்வாண பூக்களின் நித்திரையை யாரின்றி துவங்குவது அல்லது வேறின்றி விலக்குவது என்பதாகத்தான் சித்தரிக்கப்படுகிறது உன் பறவை. என் பிரபஞ்ச திறவுகளை எட்டிப் பார்க்கும் நான் நீ பார்க்கும் நானல்ல. அது உனைப் பார்க்கும் நான். உனை உருக்கும் நாண்.  ஒரு கோடி துகள்களைக் கடக்கும் லட்சம் கனவுகளின் துருப்பிடித்த ஞாபகம்.

புணர்தலின் விதியை நீ விலகியும் நெய்கிறாய்.......வேதனை தூரமெங்கும்.  திறக்க இருக்கும் கற்பனைகளில் எப்பொழுதும் உன் சொப்பனங்கள். இப்படியாகத்தான் அடர் நிற தொடுவானம் ஒன்றில் நான் உன்னைத் தேடும் கடவுளானேன். காடுகளின் கடைசி மரமாய் ஆவதில் இருப்பதாக காற்றசைக்கிறது உன் ஆதி இசையின் கூந்தல் வாசம். மலர்களின் வனமெங்கும் வெண்மேகப் படர்தலின் மூச்சடக்கும் நுட்பமாக.... மீண்டும் மீண்டும் வளைந்து கொண்டுதான் இருக்கிறது... காதலின் கொண்டை ஊசிக் காடுகள்.

உனை முழுதாக மறந்து விட்டதாக நினைக்கும் போதுதான் தேகமின்றியும்.... வந்து நிற்கிறாய்.  என் வழியெங்கும் சாமியே தள்ளி போ என்று தான் சொல்ல முடிகிறது உன்னில் சாத்தானாய் நான் நின்ற பிறகும்.  எனக்கு முன்னும் பின்னும் உன் பெயர் என்னை சிறை பிடிக்கிறதா... சிணுங்குகிறதா..... ? இனம் புரியா நடைமொழியில் கீற்றொளி உடைக்கிறது என் சாபம். இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் உனக்கு முன்பான என் மரணம்.

- கவிஜி

Pin It