கலகக்காரன் எப்போதும் விழித்திருப்பான்
மெல்லியதோர் சாட்டைகொண்டு
அடித்துக் கொண்டே...

அவனைச் சிலர் மனசாட்சி என்பர் சிலர்.
இல்லை எதிரிகளின் சாட்சி என்பர் சிலர்.

ஊரோடு ஒன்றாத பித்தனென்பர்
யாரோடும் பொருந்தாத சித்தனென்பர்
அவனை நண்பனாக்குதல் கடினம்
அவனை எதிரி ஆக்குதல் தவறு.

மனங்களைப் பொறுத்து மாற்றங்கள் செய்வான்.
விளைநிலத்தில் அவன் வார்த்தை பயிராகும்.
கற்குவியல்களில் அது வெற்றுச் சருகாகும்.
அது விதை
வளர்தலும் தளர்தலும் மனம் சார்ந்தது.

ஊரோரத்து மரத்தில் கேட்பார்
யாருமில்லாது தனித்து கத்துகிற
ஒற்றைக் குயிலின் செய்தி
உங்களுக்கானதாக இருக்கலாம்.

நீங்கள் கேட்காது போனாலும் அது கத்திக்
கொண்டே இருக்கும்.

எனக்கு அவனை மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு ?!

- சாந்தி நாராயணன்

Pin It