Handகறுப்பென்றால்
இருட்டென்று
கற்பிதம் கொள்ளாதே.
சமூக இருளைக்
கிழித்த வெளிச்சமது.

மேகம் கறுப்பாக இல்லாவிட்டால்
எப்படி வெளிச்சமாயிருக்கும்
நிலா ?

கறுப்பை
கைக்கொள்ள முடியாமல்
காவி நிழல்
தவிக்கிறது.

இருளின் வெளிச்சத்தில்
மெழுகுவர்த்தி
அழகு பூசிக்கொள்கிறது.

இயல்பாகவே
நாம் அனைவரும்
நீச்சல் கற்றவர்கள் தான்.
இருள் பூசிக்கிடந்த
கருவறையில்
பத்து மாதம்
பயிற்சி எடுத்தோமென்பதை
மறந்து தான் விடுகிறோம்.

கருவறை அசிங்கத்தை
பத்தி வாசனையால்
கழுவ முடியவில்லை.
வெட்கப்பட்டு
காஞ்சி காமாட்சி
இருளில் மறைந்து கொண்டார்.

கறுப்புச்சட்டை
ஒன்று இல்லாது போயிருந்தால்
பல வெள்ளைச்சட்டைகள்
மினிஸ்டர் ஒயிட்டாக
மாறியிருக்கவே முடியாது.

ஈரோட்டுப் பாம்பு
கழட்டிப் போட்டது
சட்டையல்ல . . . .
சாட்டை.
அதை எடுக்காமல்
திருந்தமாட்டார்கள் போலிருக்கிறது.

கறுப்பு ஒரு நிறமல்ல.
நமது அடையாளம்.
எத்தனை
சிவப்பழகு க்ரீமினாலும்
மாற்ற முடியாது.

Pin It