1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது என்பதை நாம் அறிவோம். அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1945-இல் நடைபெற்ற மாநாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மாநாட்டில்தான் கருஞ்சட்டைப் படை ஒன்றை அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

periyar 500திருச்சியில் 29.09.1945, 30.09.1945 ஆகிய இரு நாட்களில் 17-வது திராவிடர் கழக மாகாண மாநாடும், நான்காவது மாகாண சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன.

திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களில் ஒன்று தொண்டர்படை அமைப்பது தொடர்பானது.

‘திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும், சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு மாகாண திராவிட விடுதலைப்படை (Dravidian Freedom Force) அமைக்க வேண்டுமென்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது’. (குடிஅரசு, 06.10.1945).

இதனையடுத்து, 20.10.1945 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் கருஞ்சட்டைப்படை குறித்த அறிவிப்பையும், விளக்கத்தையும் வெளியிடுகிறார் தந்தை பெரியார். படையில் சேர்ந்து தொண்டாற்ற ஆசை கொள்ளுபவர்கள் இப்போது நிலைகுலைந்து மானமற்று கீழ்மைப்பட்டுக் கிடக்கும் திராவிட மக்கள் தங்கள் நிலை உணர்ந்து, தலைநிமிர்ந்து, மான உணர்ச்சி பெற்று, மனிதத் தன்மை அடைய வேண்டும் என்கின்ற அவாவுடன், அதற்கு அவசியமான எந்தக் காரியத்தையும் செய்யவும், அதனால் ஏற்படும் எப்பலனையும் அனுபவிக்கவும் முழுமனதுடன் ஆயத்தமாயிருக்க வேண்டியவர்களாவார்கள் என்று தெரிவிக்கும் பெரியார், கருப்புச்சட்டை என்பது எப்படியிருக்க வேண்டும் என்ற வரையறையையும் தருகிறார்.

‘கருப்புச்சட்டை என்பது இடுப்பில் வெள்ளை வேஷ்டி அல்லது (பைஜாமா என்னும்) கால்சட்டை அணிந்து உடலுக்குக் கருப்பு அரைக்கைச் சட்டை அணிந்து கொண்டிருப்பதாகும். கருப்புச்சட்டை எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். (குடிஅரசு, 20.10.1945)

கருப்புச் சட்டை அணிவதன் நோக்கத்தை வலியுறுத்தியும், கருப்புச்சட்டை தொடர்பான விமர்சனங்களைப் புறந்தள்ளியும் ‘குடிஅரசில்’ பெரியார் தொடர்ந்து எழுதுகிறார்.

‘கருப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொருளை பாழாக்கிக்கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்காக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், அதற்கான முயற்சிகளைச் செய்ய, தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்’ (குடிஅரசு 17.11.1945).

மேலும், ‘பெண்களும் இப்படையில் சேரலாம். அவர்கள் கருப்புச் சேலை அல்லது குறைந்த அளவு கருப்பு ரவிக்கையையே சதா அணிந்து கொள்ள வேண்டும்’ என்று பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.

திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாடு 11.05.1946, 12.05.1946 ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற்றபோது மாநாட்டுப் பந்தல் வன்முறையாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. திராவிடர் கழகக் கொடிகள் கொளுத்தப்பட்டன. மாநாட்டில் பங்கேற்றோர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர் நிர்வாணமாக்கப்பட்டார். ஏ. வைத்தியநாத அய்யர்தான் வன்முறையாளர்களுக்குப் பணம் கொடுத்துத் தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக ‘குடிஅரசு’ (18.05.1946) எழுதிற்று.

இவ்வாறாக இயக்கத் தோழர்களின் கொள்கை உணர்வாலும், தியாகத்தாலும் வளர்ந்தது திராவிட இயக்கம். திராவிட இயக்கக் குறியீடான கருஞ்சட்டையின் 75-வது ஆண்டு தொடங்குகிறது.

நாம் நினைவில் கொள்ள வேண்டிய பெருமிதத் தருணம் இது.

Pin It