அடர்ந்து புரளும் தனிமை
ஆழ்ந்துறங்கும் வானம்
கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சும் மழை
உழுது பெய்யும் தமிழ்
அறை முழுதும் கமழும் தாள்களின் வாசம்
தரையெங்கும் தவழும் பிழையில்லா இலக்கணம்
எதிர்வீட்டு பண்பலையில் இழையோடும் இளையராஜா
சுரமிழந்த சுவற்றில் மின்னல் கீற்றாய் தெறிக்கும் விரிசல்கள்
வெற்று விட்டத்தை வெறிக்கும் பொழுதுகள்
எப்பொதேனும் எட்டிப் பார்க்கும் கீழ்வீட்டுச் சிறுமியின் அர்த்தமற்ற‌ உரையாடல்கள்
கதவிடுக்கினூடே ஓலமிடும் காற்றின் ஒலியும் எதிரொலிக்கும் பெருங்கடல் மௌனம்
தேங்கிய மௌனத்தை தேற்றிக் கலைத்து விடும் தேநீர் இடைவேளை
பெட்டிக்கடை நிலுவைக் கணக்கை
அழுத்திச் சொல்லும் பஞ்சு பிதுங்கிய சிகரெட் துண்டு
ஒன்றல்லது இரண்டு வேளை அரைவயிற்று உணவு
தமிழ் நனைத்த தாள்கள்
தாள்கள் மொத்தம் தீர்ந்த பின் ஓர் தீர்க்கமான இரவு
இவையெல்லாம் கற்றுத் தந்த கவிதையும் சேர்ந்து
இப்படியும் கழியலாம் ஓர் சராசரி கவிஞனின் தினசரி வாழ்க்கை. 

Pin It