‘அகதிகளாக முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்கப் போனேன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை’. இப்படிச் சொன்னது ஒரு தமிழர் அல்ல; சிங்களர் இனத்தைச் சேர்ந்த இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா.

‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.

இதுதான் ஒடுக்கப்படும் ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள மிகப்பெரும் சிக்கல். ஓர் இனப்படுகொலைக்கு ஆதரவாக பாதிக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்களையே பேசவைக்கும் வலிமை எல்லா அதிகார வர்க்கங்களுக்கு உண்டு. ஆனால் அதையும் மீறி அழிப்பு வேலையில் ஈடுபடும் இனத்திலிருந்தே சில உண்மைக் குரல்கள் வெளிப்படுவது வரலாற்றில் சில மகத்தான தருணங்கள். பாலஸ்தீனப் பிரச்சினையில் உளவியல் அறிஞரான எரிக் பிராம் உள்ளிட்ட யூத அறிஞர்கள் வெளியிட்ட இஸ்ரேல் எதிர்ப்புக் குரல் அவ்வாறானது. ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போராட்டங்கள் அவ்வகையிலானவை. இலங்கைப் பிரச்சினையில் அவ்வாறான நிகழ்வுகள் கொஞ்சம் குறைவுதான்.

சரத் சில்வா சொன்ன மேலும் சில வார்த்தைகள் முக்கியமானவை. ‘இலங்கை நாட்டின் குடிமகனாக இருப்பதை நான் கேவலமாக உணருகிறேன். அகதி முகாம்களில் எல்லாவற்றுக்கும் க்யூவில் நிற்கிறார்கள். கூடாரத்துக்குள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இடுப்பு ஒடிந்து போகும். ஐந்து பேர் இருக்க வேண்டிய கூடாரத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எங்கள் நாட்டில் மனித உரிமைகளை யாரும் மதிப்பதே இல்லை. இப்படிக் கூறுவதால் எனக்கும் என் உடைமைக்கும் ஆபத்து வரலாம்’.

இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவதிகளைக் கண்டு ஒரு சிங்கள நீதிபதிக்கு இருக்கும் மனசாட்சியின் உறுத்தலும் குற்ற உணர்வும் கூட இந்து ராம் போன்ற பார்ப்பனத் தமிழர்களுக்கு இல்லாமல் போனது தமிழின அழிவின் அடையாளங்களில் ஒன்று. மற்றொரு சிங்களரான இலங்கை மனித உரிமை அமைப்பாளர் சுனிலா அபயசேகராவும் கிட்டத்தட்ட சரத் சில்வாவின் கருத்தையே வெளிப்படுத்தி உள்ளார். ‘தடுப்பு முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் ஆறாத காயங்களுடன் மாதக்கணக்கில் இருக்கிறார்கள். இலங்கை உளவுத்துறையின் சித்ரவதை பிரபலமானது’ என்று தமிழர்களின் நிலை குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார் சுனிலா. ஆனால் அகதிகள் முகாமில் உள்ள மக்களை நேரில் பார்த்துப் பேசிவிட்டு வந்த ‘இந்து’ ராமிடம் அங்குள்ள மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்கிறதா என்ற கேட்ட போது, ‘அம்மக்களுக்கு உணவு வழங்கும்போது நான் பார்க்கவில்லை’ என்றிருக்கிறார் அந்த பார்ப்பனத் தமிழர். போரினால் பாதிக்கப்பட்டுக் கிட்டதட்ட போர்க்கைதிகள் போல் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களிடம் பேசும்போது உங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கிறதா என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட எழுப்ப மறந்த இவர் அங்கு போய் வேறு என்னதான் கிழித்தார் என்று புரியவில்லை.

வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்ட அமெரிக்க சனத்தொகை மற்றும் அகதிகள் விவகார உதவி செயலாளர் எரிக் பிஸ்க்வாட்ஸ் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ‘வவுனியா முகாம்களில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உணர முடிகிறது. சிறிய இடத்தில் இவ்வளவு பெரிய சனத்தொகை நெருக்கடியில் கலாச்சாரதைப் பேணி வாழ்க்கை நடத்துவது மிகவும் கொடுமையானது. முகாம்களின் உண்மை நிலையை உலகம் அறியமுடியாதபடி தகவல்களை இலங்கை அரசு மறைத்து வருகிறது’ என்றார் எரிக். உண்மைகளை மறைப்பதோடு மட்டுமல்லாது ராம் போன்ற தமிழின விரோதிகளின் மூலம் பொய்களைப் பரப்பும் வேலையையும் திறம்படச் செய்கிறது ராஜபக்சே அரசு. ஏற்கனவே ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு பெரும் அதிர்ச்சி வெளியிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

‘முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதை அரசு விரும்பவில்லை’ என்றும் ‘முகாம்களுக்குச் சென்று பார்வையிட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்றும் மற்றொரு சிங்களத் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார். இதனை உறுதிப்படுத்துவது போல், ‘தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏற்ற சூழல் தற்போது இல்லை’ என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். அத்துடன் ‘தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை’ என்று கூறி தன் சுயரூபத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கி விட்டார். ‘போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று கூறமுடியாது’ என்று வேறு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சிங்கள ராணுவம் போரின் பெயரால் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி கொத்துக் கொத்தாக உயிர்களைக் காவு வாங்கியதை வெறும் ‘போர் சார்ந்த விபத்து’ என்கிறார் இந்த ‘புத்தரின் சீடர்’. இதுதானா சிங்கள ‘வீரம்’?

இந்நிலையில் சிங்கள ராணுவத்தின் அவலட்சணமான இன்னொரு முகம் தற்போது பத்திரிகைகளில் வெளிப்பட்டுள்ளது. தமிழர் குடியிருப்புப் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினருக்கு லஞ்சம் கொடுத்து முகாம்களின் இம்சையிலிருந்து தப்பித்ததாக சில தகவல்களைப் பத்திரிகைககள் வெளியிட்டுள்ளன. (அப்படிப் போனவர்களில் புலிகளும் பெருமளவு இருக்கக் கூடும் என்று ராணுவத் தரப்பு இப்போது அஞ்சி நடுங்குகிறது.) இந்தத் தகவல்களை கோத்தபய ராஜபக்சேவும் உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிடும் துணிச்சல் இல்லாமல் ராணுவத்திலிருந்து விலகி ஓடி ஒளிந்த ராணுவ வீரர்களைப் படங்களுடன் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இவ்வளவு காலமாய் சுயமாகப் புலிகளை எதிர்த்துப் போரிட்டு அவர்கள் வெற்றி காண முடியாததன் ரகசியங்கள் இப்போதுதான் அம்பலத்துக்கு வருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை அரசால் சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் புலிகளின் ஆதரவாளர்கள் என்று இலங்கை ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெயரத்னாயகே அறிவித்துள்ளார். போர் முடிந்த பிறகு இலங்கை அரசின் உயர்மட்ட அளவிலான பிரமுகர்கள் இவ்வாறு சில தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றனர். இத்தகவல்களின் பின்னணியில் ராஜபக்சே அரசு பின்னி வரும் சதிவலை வெளிப்படையானது. தமிழர்களை முழுமையாக அழித்து அந்தக் குட்டித்தீவை சிங்களமயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன.

சிங்களமயமாகும் ஈழம்:

ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது கொஞ்ச நஞ்சமல்ல. சுமார் 60 ஆண்டு கால போராட்ட வரலாறு, வாழ்வுரிமை, வசிப்பிடம், தங்களுக்காகப் போராடிய தலைவன், வாழ்வையே தியாகம் செய்த போராளிகள் என பெரும் செல்வங்களை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாய் அலைக்கழிக்கப் பட்டு வரும் அவர்களிடம் இன்னும் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்; உயிர். அதையும் பறித்து இலங்கையை சிங்களர்களின் முழுமையான தனிநாடாக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு வெறித்தனமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே போர்க்காலத்தில் தமிழர் பகுதிகளில் இளைஞர்களையும் சிறுவர் சிறுமிகளையும் குறிவைத்துத் தாக்கியதன் மூலம் தமிழர்களின் எதிர்கால சந்ததி உருவாக்கத்தை பலவீனப்படுத்தியது சிங்கள அரசு. போர் முடிவுக்கு வந்து தமிழர்களை அகதிகள் முகாம்களில் அடைத்து அவர்களுக்குரிய உணவு, மருந்துப் பொருட்கள், சுகாதார மற்றும் கழிப்பிட வசதிகள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுக்கப்படுகின்றன. அத்துடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் வெவ்வேறு இடங்களில் பிரித்து வைக்கின்றனர். (இதனை ரணில் விக்கிரமசிங்கே கடுமையாகக் கண்டித்துள்ளார்.) பட்டினிச்சாவு மற்றும் தொற்று நோய்களால் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது தவிர விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்கிற ஐயத்தின் பேரில் ஏராளமான இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் ராணுவத்தினர் அழைத்துச் செல்கின்றனர். இவர்களில் யாரும் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதில்லை. அவர்களின் கதி என்னவென்பது சொல்லாமலே புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாக சில அறிவிப்புகளைச் செய்து விட்டு அவர்களையும் விசாரணையின் பேரால் ‘காணாமல்’ போகச் செய்வதற்கான முயற்சியின் தொடக்கம்தான் ஜெயரத்னாயகே போன்றவர்களின் அறிவிப்புகள். தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்விடங்களை முழுமையாக ஆக்கிரமித்து புனரமைப்பு என்ற பெயரில் அவற்றை பதப்படுத்தி சிங்களர்களின் வசமாக்கும் முயற்சிகளின் முதல்கட்டப் பணிகள்தான் இவை. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளின் பெயர்களையும் சிங்களப்படுத்தும் முயற்சிகள் தொடங்கி விட்டன. கிளிநொச்சி எனும் பெயர் ‘கிரானிக்கா’ என்றும் முல்லைத் தீவு என்பது ‘மூல தூவா’ என்றும் மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை முழுவதையும் சிங்களமயமாக்கும் அவர்களுடைய பெரும்பான்மை இனவாதக் கனவு மெய்ப்படத் தொடங்கியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இந்தப் போர் வெற்றிகளினால் சிங்கள மக்கள் பெருமிதப்பட்டுக் கொள்ளவோ, ஆனந்தக் களிப்படையவோ ஒன்றுமே இல்லை. ராஜபக்சே அரசின் இந்த அழிப்புச் சூத்திரம் கொண்டாடத்தக்கதல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தன்னுடைய எதிரியாகக் கருதிய தமிழர்களை அடக்கி, ஒடுக்கிவிட்ட அதிகார வர்க்கம், நாளை தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் அடக்கும் அல்லது அழிக்கும் வேலையில் கண்டிப்பாக இறங்கும். அதற்கான துணிச்சலையும் சர்வாதிகார உணர்வையும் இலங்கை அரசுக்கு சிங்கள மக்களின் இந்த அப்பாவித்தனமான ஆதரவும் தரும். அதாவது ராஜபக்சே அரசின் இந்த அழிப்பு வேலைகள் தமிழர்களோடு நின்றுவிடப் போவதில்லை. தன்னை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர் சிங்களராயிருந்தாலும் கூட எதிராகவும் ஒரு கட்டத்தில் வெளிப்படும். அன்று சர்வாதிகார ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அதிகார வர்க்கத்தின் மற்றுமொரு கோர முகம் வெளிப்படும். நாம் அனுதாபப்பட வேண்டியது தமிழர்களுக்காக மட்டுமல்ல; சிங்கள மக்களுக்காகவும்தான். 

Pin It