ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?  எங்கிருந்து தொடங்க வேண்டும்?  என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை தோழர் நிலாந்தன் கீற்று இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலானவைகளோடு நம்மால் உடன்பட முடிந்தாலும் நாம் முரண்படும் இடங்களும் உள்ளதால் அவைகளை பதிவு செய்வது அவசியமாகிறது. விடுதலைப்புலிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு மாதம் கழிந்தும் எதிர்காலம் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் ஈழத் தமிழர்கள் தடுமாறுவதாக அவர் கூறுவதைக் நம்மால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சமரசங்களற்ற தலைமைத்துவத்தை விடுதலைப் போராட்டத்துக்கு அளித்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதல் இல்லாத நிலையிலும், திறந்த வெளிச் சிறைச்சாலையாக இருக்கும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற நகரசபை, மாநகர சபைக்கான தேர்தல்களை 75 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருந்தனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது நமக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகிறது. சிங்கள் பேரினவாதிகள் மற்றும் அவர்களின் தமிழ் கூட்டாளிகளின் ஆதிக்கத்துக்கு வெளியேதான் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் அரசியல் சிந்தனையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அது. மேலும் சிங்கள் பேரினவாத அரசால் நடத்தப்படும் தேர்தல்களில் தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்திருப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் சிங்கள பெரும்பான்மையினரின் ஒட்டுக்களைப் பெறுவதற்கான ஆயுதமாக தமிழர்களுக்கு எதிரான இனவெறியைப் பயன்படுத்தி வந்த சிங்கள் ஆளும்வர்க்கங்கள் எத்தகையை உலக நாடுகளின் நிர்பந்தங்கள் வந்தாலும் தங்களுக்கான உரிமைகளை வழங்க மாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதன் விளைவாக இந்த புறக்கணிப்பை பார்ப்பதில் தவறில்லை.

உலக நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமிழர்களுக்கான உரிமைகளைக் கொடுக்க முனைவது சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் ஒட்டுவங்கியை சிங்கள் மக்களிடம் இழப்பதில் கொண்டுபோய் விடும் என்கிற புரிதலும் தமிழர்களுக்கு உள்ளதையே நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. மொத்தத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்கிற சாத்தியமும் அதன் மாறுபட்ட வடிவமான ஒட்டுமொத்த இலங்கைக்குள் சமூக மாற்றத்துக்கான புரட்சி என்கிற விடயமும் கற்பனாவாத கருத்துக்களாக மட்டுமே எஞ்சி நிற்கும் நிலைதான் நீடிக்கிறது. ஈழ விடுதலைக் கோரிக்கை எழக் காரணமாக இருந்த எந்த அடிப்படைக் காரணமும் மாற்றப்படாத நிலையில் தமிழீழ விடுதலை என்ற ஒற்றைத் தீர்வை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. விடுதலைக்கான மக்கள் ஆதரவு தளம் அப்படியே பேணப்பட்டிருப்பதும், விரிவடைந்து கொண்டிருப்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.

போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும் பலாலியிலும் ஆனையிறவிலும் நிலைகொண்டு இருந்த ராணுவத்தை எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய் விட்டார்கள் என்று தனது யாழ்ப்பாண ஊடக நண்பர் சொல்வதாக நிலாந்தன் குறிப்பிடுவம், ஆயுதப் போரட்டம் மக்களை எதிரிகளிடம் கையளிப்பதில் போய் முடிந்திருப்பதாக கூறுவதும் அவரது அரசியல் அறியாமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே உதவுகின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையங்கள் என்று அறிவித்த தமிழீழப் பகுதிகளில் பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள் தொழில் துவங்க சிங்கள அரசு அனுமதியளித்துக் கொண்டிருப்பதை அறியாதவரா நிலாந்தன்? சம்பூர் பகுதியில் இந்திய அரசின் அனல்மின் திட்டத்துக்காக இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துக் கொடுத்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருந்த மக்களை காக்கும் காவல் அரணாக விளங்கியது விடுதலைப்புலிகள் என்பது மறந்து போய்விட்டதா அவருக்கு? தங்கள் பேரினவாத திட்டத்தின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்தும்போது அதனைத் தொடர்ந்து ராணுவ முகாம்களையும் சிங்கள அரசு அமைத்து வந்திருப்பது வரலாறு.

பன்னாட்டு இலங்கை முதலாளிகளின் பொருளாதார திட்டங்களுக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் விதமாக சிங்கள அரசு தனது ராணுவத்தை தமிழர் பகுதிகளில்  நிறுத்துவதை இத்துணை காலமும் தடுத்துக்கொண்டு இருந்தது விடுதலைபுலிகளின் ஆயுதப் போராட்டம் என்பதை மறைத்துவிட்டு பழியை புலிகள் மீது சுமத்துவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் நிகழ்ந்திராவிட்டால் இலங்கை ராணுவம் தமிழர் வீடுகளிலும் கோடியிலும் வந்து நின்றிருக்காதா? முப்பது ஆண்டுகால அரசியல் போராட்டம் தமிழர் பகுதிகளில் தடுத்து நிறுத்திய சிங்கள குடியேற்றங்களின் பட்டியலை வெளியிடுவாரா நிலாந்தன்?

பிரபாகரனை கடவுளாக்கி வழிபடுபவர்கள்,பிசாசாக்கி புறக்கணிக்க கோருபவர்கள் என்கிற இரண்டு தரப்பையும் தாண்டிய ஒரு மூன்றாவது போக்கை நிலாந்தன் அடையாளம் காட்டி இருப்பதில் நாமும் உடன்படுகிறோம். அவர் காட்டியிருக்கும் மூன்று போக்குகளில் உள்ள சில விசயங்களை நாமும் ஆய்வுக்குட்படுத்தும் முன் வரலாற்றின் குப்பைத் தொட்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் அவரது போக்கை கண்டிக்க வேண்டி இருக்கிறது. அந்நிய மண்ணின் வீரர்களை விமர்சனத்துக்கு அப்பால் வைத்துப் போற்றுவது, தனது இனத்தை சேர்ந்தவர்கள் என்றால் மிக சுலபமாக குறைத்து மதிப்பிடுவது என்பது ஏற்கத்தக்க நடைமுறையல்ல. தன்னை தனது இனத்தைச் சேர்ந்தவர்களை தாழ்வானவர்களாகக் கருதும் பார்ப்பன சிந்தனைப்போக்கில் தமிழ் இனம் ஆழமாக சிக்கிக் கொண்டுவிட்டதோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் பிரபாகரனை அரசியலற்ற விதத்தில் அவதாரபுருசனாக அறிமுகப்படுத்திய தமிழகம் மற்றும் ஈழத்தைச் சார்ந்த நபர்களின் அரசியல் இன்றைக்கு ஈழ ஆதரவுச் சக்திகள் மத்தியில் நிலவும் சோர்வுக்கு காரணமாக இருந்தது என்கிற நிலாந்தனின் கருத்திலும் உண்மைகள் இல்லாமல் இல்லை.

2009 ஆம் ஆண்டுக்குகான மாவீரர் உரை வெளியாகி அதில் காணப்பட்ட அரசியல் புலிகள் தலைமையின் இருப்பை நமக்கு உறுதிப்படுத்தினாலும் நிலாந்தன் முன்வைத்திருக்கிற கருதுகோள்களை ஆய்வுக்கு உட்படுத்த முயலலாம். பிரபாகரன் ஒரு செயல் வீரர் என்றும் அவர் தொடர்ந்து செயல்படுவதன் மூலமே தன்னை நிறுவிக் கொள்ள முனைந்தவர் என்கிற கூற்று ஓரளவு ஏற்கத்தக்கதே. ஆனால் யதார்த்த நிலைமை என்ன? புலிகளின் அரசியல் ராணுவ கட்டமைப்புகளில் அந்நிய மற்றும் இலங்கை அரசைச் சார்ந்த சக்திகள் போருக்கு முன்பிருந்தே ஆதிக்கம் செலுத்தினர் என்பதும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தவறான வழிகாட்டுதல்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் நடாத்தினர் என்பதும் உணரக் கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் அமைப்பை மறுகட்டமைப்பு செய்வதற்கும் சர்வதேச மட்டத்தில் ஈழ ஆதரவை பெருக்குவதற்கும், நிலாந்தனே கூறுவது போல ஜனவசியமிக்க, தீர்க்கதரிசனமிக்க, தவறுகளை களைய முனையும் தலைமைக்கு உறங்குநிலைதான் அவசியமாக இருக்கும் இல்லையா?

அடுத்ததாக தான் தப்பிச் செல்லும் முன் தனது வயதான பெற்றோர்களையும் தப்ப வைத்திருப்பார் என்கிற நிலாந்தனின் கூற்றும் ஏற்க இயலாததாக இருக்கிறது. ஈழத்தின் மக்கள் போராட்டத்தில் தனக்கென எந்த தனிச் சலுகைகளையும் கோராத மனிதராகத்தான் பிரபாகரன் இருந்திருக்கிறார். தனது பிள்ளைகளையும் போருக்கு அனுப்பிய மனிதன் தனது பெற்றோர்களைத் தப்ப வைக்க எண்ணி இருப்பார் என்று கருத சிரமமாக இருக்கிறது. பிரபாகரனோடு ஈழத்தமிழ் அரசியல் தேங்கி நின்று விட வேண்டும் என்று பிரபாகரனின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத விசுவாசிகள் விரும்புவதாக நிலாந்தன் கூறுவதும் ஏற்கதக்கதல்ல. போராட்டம் தொடங்கியதற்கான காரணங்கள் களையப்படும்வரை போராட்டம் தொடரும் என்பதும், தங்கள் இருத்தலுக்கான போராட்டத்தை ஈழத் தமிழர்கள் நிகழ்த்தியே தீர வேண்டும் என்பதும் யதார்த்தம். அது பிரபாகன் இருப்பு மற்றும் இறப்பை மட்டுமே சார்ந்தது என்பதாக நாம் கருதவில்லை.

மேலும் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற ராகவனின் கூற்றை நிலாந்தன் உதாரணமாகக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு மரபு ரீதியான அரசாங்கம் ஒரு பொய்யை இவ்வளவு நாள் தொடர்ச்சியாக கூற முடியாதாம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இறுதி யுத்தத்தில் எந்த போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று கூடத்தான் மரபு ரீதியான அரசாங்கம் இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறது. அது உண்மையாகி விடுமா? இந்திய மரபு ரீதியான அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தனது போராகவே நடாத்திக்கொண்டே நாங்கள் இலங்கைக்கு எந்த ஆயுதங்களும் தரவே இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது என்பதால் அது உண்மையாகிவிடுமா?

சமீப காலத்தில் ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை என்பதில் நிலாந்தனோடு நம்மால் உடன்பட முடிகிறது. இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிற உலக ஒழுங்கில் தேசிய விடுதலைப் போர்களில் ஆயுதபோராட்டத்துக்கான சாத்தியம், வடிவங்கள் பற்றி ஒரு விரிவான மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனபது காலத்தின் அவசியமாக இருக்கிறது. நடந்து முடிந்த போரில் ஒரு சிறிய இனதிற்கு இருக்கக் கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச் சாதிக்கப்பட்ட அனைத்துச் சாதனைகளுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும் என்கிற வார்த்தைகளை படிக்கையில் மனதில் பரவும் வலியையும் தாண்டி, இலங்கை அரசுக்கு தாங்கள் அளிக்கிற அத்துணை உதவிகளையும் தாண்டி முப்பது ஆண்டுகாலமாக ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பை ஆதரித்து நின்ற மக்களை உலக ஆதிக்க சக்திகள் தண்டிக்க விரும்பின என்றே புரிந்துகொள்ள முடிகிறது. உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டு தங்கள் உயிர்களை அர்ப்பணித்து நம்மை மேலும் மேலும் மனிதநிலையை நோக்கிச் செல்லத் தூண்டியிருக்கும் அந்த உயிர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச்சனங்களை வரவேற்கும் அப்பாவித் தமிழர்கள் பற்றியும், பார்வையாளர் பாத்திரம் மட்டுமே வகிக்கத்தயாராக இருக்கும் அவர்களின் நிலை பற்றியும் நிலாந்தன் கூறுவது நம்மில் பல கேள்விகளை எழுப்புகிறது. 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரின் வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கொடும் வதைகளுக்குப் பிறகு கொல்லப்பட்ட வரலாறு மனதில் வந்து செல்கிறது. அதில் போராடி மடியும் முடிவை எடுத்தவர்கள் எத்தனை பேர்? ஒதுங்கி ஒதுங்கி சாத்தியமான எல்லைவரை பொறுத்துக்கொண்டு இருப்பது என்கிற சிந்தனையைவிட்டுச் தமிழ்ச் சமூகம் வெளியேறுவது எப்போது என்கிற கேள்விக்கு நம்பிக்கை அளிக்கும் பதில்கள் கிடைப்பதில்லை.

மேலும் தேசியக் கோரிக்கையும் புலிகளும் தங்கள் சாதிய ஒழிப்பு போராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் இடையூறு செய்துவிட்டதாக இலங்கையிலும், புலத்திலும் இருந்து ஒப்பாரி வைத்த கூட்டங்கள் சிங்கள ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாதிய ஒழிப்பு போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் நிகழ்த்துவதையும் மக்களை அணிதிரட்டுவதையும் யார் தடுத்தது? எந்த விதமான முற்போக்கு பாத்திரத்தையும் வகிக்க கையாலாகாத இவர்கள் புலிகளை விமர்சித்துக்கொண்டு மட்டுமேதான் பிழைப்பு நடத்தினரே தவிர வேறு எதைச் சாதிதார்கள்? ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிக்கத் தகுதியற்ற அல்லது தலைமையேற்கத் துணிவற்ற இவர்களை மக்கள் புறக்கணித்ததும், போராட்டத்தலைமை புலிகளின் கைகளுக்கு இயல்பாகவே போய்சேர்வதுதான் நடந்தது.

பிரபாகரன் பற்றிய நிலாந்தனின் கருத்துகளோடும் பெருமளவில் நம்மால் உடன்பட முடிகிறது. ஆனால் கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது என்கிற அவரது வார்த்தைகள் மிக கொச்சைத்தனமான அரசியலையே முன் வைக்கின்றன. ஈழத்தின் தமிழ் ஆதிக்கவர்க்கங்கள் இலங்கை ஆளும் வர்க்கத்துடன் சமரசத்துக்கு உட்பட்டோ, அல்லது புலம் பெயர்ந்தோ தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு, இயல்பாகவே ஈழத்தின் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தலைமையாக பிரபாகரனை தேர்ந்து எடுத்தனர் என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஈழ விடுதலை தங்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வரும் என்பதும் அதனை விடுதலைப் புலிகளால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அமைந்த புலிகள் மக்கள் உறவை கொச்சைத்தனமாக புரிந்துகொள்வது சரியல்ல. சர்வதே நாடுகளின் சுரண்டலுக்கு திறந்து விடப்பட்ட ஈழ மண்ணில் இருந்து தங்களை ஆதரித்து நின்ற ஈழ மக்களுக்கு எதையும் கொடுக்க இயலாது என்கிற நிர்பந்தத்தின் அடிப்படையை தவிர்த்துவிட்டு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் விமர்சனப்படுத்துவது, அதை தமிழ்சமூக உளவியலோடு பொருத்திக் காட்டுவது எல்லாம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பது நமக்குப் புரியவில்லை.

நிலாந்தன் கட்டுரையில் முன் வைத்திருக்கும் மற்ற கருத்துகளில் நமக்கு பெரிய முரண்பாடுகள் இல்லை. வழிபாட்டுத்தனமான அல்லது எதிர்மறை விமர்சனங்களால் நிரம்பிக் கிடக்கும் ஈழம் பற்றிய கட்டுரைகளில் போதுமான அளவு நேர்மையுடன் முன் வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்களே சமூக இயக்கத்தை முன்நகர்த்த உதவும் என்றாலும் நாம் முரண்படும்  இடங்களையும் சுட்டிக்காட்டுவது கடமை என்கிற முறையிலும், சில மாற்றுப் பார்வைகளையும் முன்வைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு இந்தப் பதிவை நிறைவு செய்யலாம்.

- ஸ்டாலின்குரு

Pin It