உலகிலேயே தமிழனுக்கு நாதியில்லையே! ஏனென்று கேட்க இப்பொழுது யார் இருக்கிறார்கள்? தமிழ் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஒரு தமிழனுக்கு ஆபத்து என்றால் ஏன் என்று கேட்க நாதியற்றுப் போய்விட்டது. திருச்சியில் கலெக்டராக மலையப்பன் என்னும் தமிழர் ஒருவர் இருந்தார். இந்த விவசாயிகள் தகராறில் விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக போலீஸ் காவல் கொடுத்தார். அந்த நிலத்திற்குச் சொந்தமானவன் ஒரு பணக்காரப் பார்ப்பான். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஹைகோர்ட்டில் (உயர்நீதிமன்றத்தில்) இரண்டு பார்ப்பான் நீதிபதிகள், "கலெக்டர் வேலைக்கே மலையப்பன் தகுதியில்லை" என்று தீர்ப்பு கூறினார்கள். உடனே இந்த 'இந்து' பத்திரிகை, "இந்த மாதிரியான ஆள்கள் கலெக்டர் வேலையில் இருப்பது அரசாங்கத்திற்கே அவமானம்; அரை நிமிடம்கூட இனிமேல் மலையப்பன் அந்த பதவியில் இருந்தால் அரசாங்கத்திற்குத்தான் கேடு" என்று தலையங்கம் எழுதிற்று.

தீர்ப்பு சொன்னவர்கள் பார்ப்பன நீதிபதிகள்; தீர்ப்பு செய்யப்பட்டவர் தமிழர்; தலையங்கம் எழுதியது ஒரு பார்ப்பனப் பத்திரிகை; தவிர குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராகவும் நீதிபதிகள் இருவரும் தமிழராகவே இருந்திருந்தால் தீர்ப்பு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அப்படியே கலெக்டர் செய்தது சட்டப்படி தப்பு என்று வைத்துக் கொண்டாலும் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டார் என்று கூறியிருக்கலாம்; அல்லது இனிமேல் இந்தப்படி நடக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டிருக்கலாம் இதைவிட்டு விட்டு வேண்டுமென்றே வேலைக்குத் தகுதியில்லை என்பதாக எழுதிவிட்டார்கள்.

இந்தத் தீர்ப்பு வெளிவந்த பொழுது நான் திருச்சியில் இருந்தேன்; தீர்ப்பைப் பார்த்த உடனே எனக்கு 'இப்படியே விட்டுக் கொண்டுபோனால் தமிழ்நாட்டின் கதி மோசமாக அல்லவா போய்விடும் என்று தோன்றியது; உடனே அன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டத்தில் 50-ஆயிரம் மக்களிடையில் தீர்ப்பு சொன்னது தப்பு என்று சொன்னேன்; தவிர இனிமேல் பார்ப்பனர்களை இந்நாட்டில் அதிகாரிகளாக நியமிப்பதானால் வெளிநாடுகளில் எங்கேயாவது கொடுத்து அனுப்பிக்கொள்ளுங்கள் என்று சொன்னதோடு நின்றுவிடாமல் அப்படி கலெக்டர் மலையப்பன் அவர்களுக்கு ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் கலகம் செய்வோம் என்று எச்சரிக்கை செய்தேன். அந்தக் கூட்டத்திலேயே 'இந்து'ப் பத்திரிக்கைக் கொளுத்தப்பட்டது. அவ்வாறு சொல்லியிருக்காவிட்டால் மலையப்பன் அவர்களை Public Service Commission இல் போட்டிருப்பார்கள். நாங்கள் எச்சரிக்கை செய்ததால் ஒன்றும் செய்யவில்லை; மலையப்பன் நல்லவர், கடவுள் பக்தர்கூட, இருந்தும் அவர் ஒருவித தப்பு தண்டாவிற்கோ, அநியாயத்திற்கோ போக மாட்டார்.

இதற்கு என்மேல் ஹைகோர்ட்டை (உயர்நீதிமன்றம்) அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடுத்து "ஜட்ஜ் பற்றி குற்றம் சொல்லு; ஜாதியைப் பற்றி குற்றம் சொல்லாதே" என்று கூறி ரூ.100-தண்டனை போட்டார்கள். விடுதலையில் பிரசுரித்ததாக மணியம்மையை இனிமேல் அப்படி எழுதக்கூடாது என்பதாகக் கூறி எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்கள். இந்த சங்கதியைப் பற்றி வேறு யாராவது வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. நாங்கள் தானே கூப்பாடு போட்டோம்? அவ்வளவு நாதியற்றுப்போய் விட்டது தமிழ்நாடு. மந்திரிகளுக்குத் தெரியாதா கலெக்டர் மலையப்பனைப் பற்றி? தெரிந்தும் பேசாமல் தானே இருந்தார்கள்? ஏன்? மந்திரிகளுக்குப் பயம்; எல்லா நீதிபதிகளும் பார்ப்பனர்கள். மந்திரிகளின் பெயரில் ஏதாவது Remark (கண்டனக் குறிப்பு) எழுதி வைத்து விடுவார்களோ என்கிற பயம்.

இதைப் போலவே போலீஸ் அதிகாரி சங்கதியும். போலீஸ் இலாகாவை (காவல் துறையை) எடுத்துக் கொண்டால் போலீஸ்காரர்கள் (அனைவரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். சப் இன்ஸ்பெக்டர் (துணை ஆய்வாளர்) உத்தியோகத்தை எடுத்துக் கொண்டால் பாதி தமிழரும் பாதி பார்ப்பனர்களுக்குத்தான் இருப்பார்கள். இதற்கும் உயர்ந்த உத்தியோகங்களை எடுத்துக் கொண்டால் 10-க்கு 2, 3-நபர்கள் தான் தமிழர்களாக இருப்பார்கள்; மீதி நபர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகத்தான் இரப்பார்கள். இந்த மாதிரியான இலாகாவின் (துறையின்) தலைமைப் பதவியை ஒரு பார்ப்பனருக்குக் கூப்பிட்டுக் கொடுக்க ஆச்சாரியார் திட்டம் போட்டிருந்தார். காமராசர் வந்தவுடன் அந்தப் பதவியை ஒரு தமிழருக்குக் கொடுத்தார். அந்த மாதிரி பதவியில் இருக்கும் தமிழரைப்பற்றி இன்னொரு தமிழன் சட்சபையில் எவ்வளவ இலஞ்சம் வாங்கினார் என்று கேள்வி கேட்கிறான்! ஏன்? ஆச்சாரியார் மனதைத் திருப்தி செய்து அவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமென்றுதான்; அதற்குக் காமாசர் "நான் என்னமோ நல்ல ஆள் என்று நினைத்து அந்தப் பதவியை அவருக்குக் கொடுத்தேன். நீங்கள் சொல்கிறபடி இலஞ்சம் ஊழல் இருந்தால் அவரை ஒழித்துக் கட்டிவிடுகிறேன்" என்று கூறி ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை செய்யச் சொன்னார்.

அந்த விசாரணையில் அந்த போலீஸ் அதிகாரி இலஞ்சம் வாங்கினாரென்று சொல்ல யாரும் முன்வரவில்லை. சட்டசபையில் கேள்வி கேட்ட நபரே அப்பொழுது இருக்குமிடம் தெரியவில்லை. பிறகு வீடுகள் கட்டிவிட்டார் என்று சொன்னார்கள். பிறகு அதைப்பற்றித் துப்புத்துலக்கிப் பார்த்து அதிலும் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார்கள். இப்படிப்பட்ட சங்கதிகளெல்லாம் நாங்கள் கவனித்து கூச்சல் போடாவிட்டால் வேறு விதமாகத்தானே நடந்திருக்கும்?

இந்தச் சங்கதிகளை எத்தனை கஷ்டங்களுக்கிடையே சொல்கிறேன்? எனக்கு இந்த ஊரில் திராவிடர் கழகம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி என் மேல் உங்களிடத்தில் அன்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய கடமையை நான் போகுமிடங்களிலெல்லாம் இதுபோல் கூறிக் கொண்டே போகிறேன். என்னுடைய நோக்கமெல்லாம் மக்கள் தங்களுடைய சொந்த புத்தியைக் கொண்டு நடக்க வேண்டும் என்பதுதான். மக்களுடைய எண்ணம் அவர்களுடைய காரியங்கள் எல்லாம் சரியான வழியில் நடைபெற வேண்டும் என்பதுதான்.

மூன்றாவது, இந்நாட்டில் மக்களை மூடர்களாக நடமாடவிட்டிருக்கும் புராண இதிகாச மதங்கள், கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

அடுத்து, தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு விகிதாச்சாரப்படி உத்தியோகம், பதவி, படிப்பு கிடைக்க வேண்டும்.

இன்றைய தினத்தில் எடுத்துக் கொண்டால் போலீஸ், பியூன் (அலுவலக ஊழியர்) முதலிய வேலைகளில் எல்லாம் நம் தமிழர்கள். இவற்றைப்பற்றி எழுத பேனா எடுத்தால் இங்கியும், காகிதமும்தான் செலவழியுமே தவிர, சங்கதி முடியாது. கக்கூஸ் (மலக்கழிவு) எடுப்பவன் தமிழன்; முடிவெட்டுபவன் தமிழன்; துணி வெளுப்பவன் தமிழன்; தோல் வேலை செய்பவன் தமிழன்; காஃபி, தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் எஸ்டேட்களிலும், பஞ்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் நம்மாள்கள் (தமிழர்கள்) தொழிலாளியாக ஒரு பார்ப்பான்கூட இந்த 1958-இல் காணமுடியாதே! எல்லாம் நம் ஆள்கள். இது யாருடைய நாடு? நம் தமிழர் நாடு. நம்நாட்டில் தான் கக்கூஸ் எடுப்பவன், கூலி வேலை செய்பவன் எல்லாரும் நாம். பார்ப்பன நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஜனாதிபதி (குடியரசுத் தலைவர்) பார்ப்பான், உப ஜனாதிபதி பார்ப்பான், பிரதம மந்திரி பார்ப்பான், மந்திரிகள் எல்லோரும் பார்ப்பனர்கள். இன்றைய தினத்தில் தமிழர் சார்பில் ஒருவர் கூட மந்திரியாக இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் பாதுகாப்பான காரியங்களைச் செய்து கொண்டு போகிறார்கள் பார்ப்பனர் தவிர மற்றச் சாதியார்களை நுழையவிடுவதில்லை. இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் என்று கேட்க ஆள் இல்லை.

இந்த நாட்டில் ஏன் சூத்திரன்? ஏன் பார்ப்பான்? என்று கேட்க 1958-லும் ஆள் இல்லையே! விஞ்ஞான வளர்ச்சி மிகுந்துள்ள இந்த நாளில் ஈனப் பார்ப்பனன் மேல்சாதியாகவும், நாமெல்லோரும் சூத்திரர்களாகவும் ஏன் இருக்க வேண்டும்? நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழு பேர் நாம். மீதி மூன்று நபர் தான் பார்ப்பனர்கள். தோளில் கோடாரியைத் தூக்கிக் கொண்டு வீதிவீதியாக திரிபவன் தமிழன். கையிலே கலப்பையைப் பிடித்துக் கொண்டு மழையென்றும், வெய்யிலென்றும் பாராமல் உழைப்பவன் தமிழன். சிரைப்பவன், வெளுப்பவன் எல்லோரும் தமிழர்கள். அனைவரும் கீழ்சாதிகள். ஒரு வேலையும் செய்யாமல், ஒரு காரியத்திற்கும் உபயோகப்படாமல், ஊரார் தயவில் வயிற்றை நிரப்பி வருபவனை மேல்ஜாதி என்று கூறுவதா? கேட்டால் கடவுள் படைப்பு என்கிறார்கள்.

அப்படிக் கூறும் கடவுளை உடைத்து ரோட்டில் (சாலையில்) ஜல்லிக் கற்களாக போட வேண்டாமா? ஒரு நாட்டில் ஒரு கடவுள் என்று ஒன்று இருந்தால் இந்த அநியாயங்களைக் கேட்க வேண்டாமா? ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் காட்டலாமா? இவற்றையெல்லாம் கேட்காத ஒன்று கடவுளாகுமா? இப்படிப் பார்ப்பானைக் கடவுளாகக் கருதி, அவன் காலைக் கழுவி, அந்தத் தண்ணீரைச் சூத்திரன் குடிக்க வேண்டுமென்று எழுதி வைத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தைக் கக்கூசில் (மலக் கழிவு அறையில்) போட வேண்டாமா? என்னைத் தேவடியாள் மகனாக (சூத்திரன் என்பதாக) படைத்த கடவுள் எதற்காக? உழைக்காத ஒருவனை மேல்சாதி என்றும், உழைக்கும் நம்மைக் கீழ்சாதியென்றும் கூறும் மதம், இங்கு எதற்காக இருக்க வேண்டும்? நாங்கள் ஏதாவது சொந்தமாக எழுதி வைத்துக் கொண்டா நாடு முழுவதும் பேசிக் கொண்டு வருகிறோம்? பார்ப்பனர்களே எழுதி வைத்துள்ள வேதங்களிலிருந்து ஆதாரத்துடன்தானே பேசுகிறோம். இதைக்கூட கவனிக்காமல் சாதியை இந்த நாட்டிலிருந்து ஓட்ட யோசித்துக் கொண்டு வருகிறோம்; ஆகட்டும் பார்க்கலாம், கொண்டுவருகிறோம்; ஆகட்டும் பார்க்கலாம், கவனிக்கிறேன்; என்றால் என்ன அர்த்தம்?

கால் புத்தியிருப்பவனெல்லாம் பார்ப்பானைத் தூக்கி வைத்துக் கொண்டே காசு சம்பாதித்துவிடுகிறான். 80-வயதான எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும்? இம்மாதிரி காரியங்களை வேறு எந்த ஆளாவது செய்தால் நாங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு காரியங்களைக் கவனிப்போம். ஆனால் இவைபோன்ற சங்கதிகளை வேறு யாராவது சொன்னாலும் அவர்களை ஒழித்துவிடுவார்கள்! இருந்தும் எங்களைத் தவிர, "நான் ஏன் தேவடியாள் மகன்? சூத்திரன்?" என்று யார் கேட்கிறார்கள்? நாங்கள் பேசுவதில் ஏதாவது தப்பு காணப்படுமானால் அடுத்தபடி கூட்டம் போட்டு யாராவது சொல்லட்டுமே! சாதி வேண்டாம் என்று. நாம் சொன்னால் இந்த நாட்டில் சாதியிருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்ல ஆள் இல்லையே! ஆச்சாரியார் சாதியைப்பற்றி கொஞ்சம் சொல்லிப் பார்த்தார். நாலா பக்கங்களிலிருந்தும் நிறைய எதிர்ப்புகள் வந்தன. அதோடு நிறுத்திக் கொண்டார்.

இந்த நாட்டிலே பல கட்சிகள் இருக்கின்றன. எந்தக் கட்சியும் சாதிகள் இருக்க வேண்டுமென்று சொல்லவில்லையே! இருந்தும் வெளிப்படையாக ஏன் வேண்டாம் என்று சொல்வதில்லை. சொன்னால் ஓட்டுகள் தம் கட்சிக்கு விழுமா என்கின்ற பயம். இப்படி யாரும் எதிர்பார்க்காத ஒன்றை, யாரும் சொல்லாத ஒன்றை நாங்கள் தான் சொல்கிறோம். இதுபோலவே சாதிக்கு ஆதாரமாக இருக்கும் கடவுள், புராண இதிகாசங்கள், சாஸ்திரங்கள் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோம். நாங்கள் ஒழிந்தால் மறுபடியும் சாஸ்திரம் வந்துவிடும். நெற்றியில் நம்மையெல்லாம் சூத்திரன் என்று கட்டாயம் எழுத வேண்டுமென்று சொல்வார்கள் ஏன்? சட்டமே கூட செய்து வைத்துக் கொள்வார்கள்!

மனிதர்களிடையே சாதிகள் இருந்தன என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மதியர் நூல்களிலே சாதிக்கு ஆதாரம் இருக்கிறதா? கிறிஸ்தவரின் பைபிளில் கடவுள் இருக்க வேண்டுமென்றோ, மதங்கள் இருந்துதான் ஆகவேண்டுமென்றேனும் எழுதியிருக்கிறதா? அதில் எல்லாம் இல்லை என்றால் நமக்கு மட்டும் ஏன் சாதி இருக்க வேண்டும்? உதாரணமாக மழை பெய்தால் நாம் நனைந்து விடாமல் இருப்பதற்காகக் குடை பிடித்துக் கொள்கிறோம். வெய்யிலாக இருந்தால் நிழலுக்காகக் குடை பிடித்துக்கொள்கிறோம்.

அதைப்போல இன்ன காரியத்துக்குத்தான் சாதி இந்த நாட்டில், அதுவும் நம்மிடையேயிருக்க வேண்டும் என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆதிதிராவிடர், முதலியார், நாயுடு, பார்ப்பனர் ஆட்களைக் கொண்டுவந்து, உட்சிக்குடுமி பூணூலை அறுத்துவிட்டு எல்லோரையும் ஒரே மாதிரியாக நிற்க வைத்துப் பிறகு இன்ன ஆள் ஆதிதிராவிடர், இந்த ஆள் பார்ப்பனர் என்று அடையாளம் காட்ட முடியுமா? கருப்பாக இருக்கும் ஆள் ஆதிதிராவிடர் என்றும், சிவப்பாக இருப்பவரெல்லாரும் பார்ப்பனர் என்றும் கூறிவிட முடியுமா?

அதுபோலவே ஒரே மாதிரி புடைவை, ஒரே மாதிரி ஜாக்கெட் உடுத்திய பெண்களை வரிசையாக நிற்கவைத்து இன்னவள் பார்ப்பனத்தி, மற்றவர்கள் சூத்திரச்சி என்று கூறிவிட முடியுமா?

வேண்டுமானால் நாய்களை நிற்கவைத்து அதிலிருந்து அல்சேஷன் நாய், கோம்பை நாய், புல்டாக் நாய், இராசபாளையம் நாய் என்று காட்ட முடியும்.

அதுபோலவே இது திருவண்ணாமலை மாடு, சிந்து மாடு, இது டெல்லி மாடு என்று பிரித்துச் சொல்ல முடியும்.

சோம்பேறிகள் "எட்டி நில், தொடாதே" என்றால் அது சாதியா? ஏன் இந்த நாட்டில் இருக்கிற கம்யூனிஸ்டுகளைத் தான் கேட்கிறேன். எதற்காகப் பணக்காரர்களை ஒழிக்கின்றாய்? பணக்காரர்கள் உலகமெல்லாம் இருக்கிறார்கள். வேண்டுமானால் ரஷ்யாவிலும், சீனாவிலும், இல்லாமல் இருக்கலாம். அதில் உனக்கு என்ன அதிசயம் வந்துவிட்டது? உனக்கு உணர்ச்சி என்பதாக ஒன்று இருந்தால், பொது நலத்தொண்டு மக்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணம் இருந்தால், உலகத்தில் மற்ற நாடுகளில் இல்லாமல், இந்த நாட்டில் மாத்திரம் மேல் சாதி - பார்ப்பனர், கீழ்சாதி - சூத்திரர்கள் ஏன் என்று கேட்டு அதை ஒழிக்க முன்வர வேண்டாமா? இதைச் செய்யாமல் இவர்களே பாதிப்பார்ப்பனர் ஆகிப் பணம் சம்பாதித்து வருகிறார்கள். முதலாளிகளை ஒழிக்க வேண்டுமானால் துருக்கி, அமெரிக்கா போய் அல்லவா ஒழிக்க வேண்டும்? இங்கு இருக்கிற கோவணாண்டிகள் எல்லோரும் உனக்குப் பணக்காரர்கள் போலும்! தருமபுரம், மாயவரம் மடாதிபதிகள், சங்கராச்சாரியார் முதலியோரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இப்படிப் பாடுபடாமல் பணம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருப்பவர்களையல்லவா முதலில் ஒழிக்க வேண்டும்? இதை விட்டு விட்டு வீட்டிலிருக்கும் பணத்தை மில்லாகக் கட்டித் தொழிலாளிக்கு வேலை கொடுப்பவனிடம் போய் வேலை நிறுத்தம் செய் என்று சொல்லி மில் வாசலில் காலித்தனம் செய்வதா? உண்மை அக்கிரமத்தை ஒழிக்க யாரும் முன்வரவில்லையே?

வெள்ளையர்கள் காலத்திலாவது ஆங்கிலப் படிப்பினால் உலக ஞானம் ஏற்பட்டது. பறையன், சக்கிலி என்கிற வித்தியாசம் கொஞ்சமாவது மறைந்தது. இந்தக் காங்கிரஸ்காரர்கள் அரசாள வந்த பிறகு என்ன நன்மையேற்பட்டது?

சாதிமுறை இழிவு ஒழிக்க - நீக்க கடும் போராட்டம் நடத்தி ஆக வேண்டும்? நீங்கள் அனைவரும் முதலில் கோவிலுக்குப் போகக்கூடாது.

நெற்றியில் சாமி மதச் சின்னங்களை அணியக்கூடாது.

கடவுளை மனதிலேயே வைத்துக்கொண்டால் போதும். ஒழுக்கமாக நடக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் தாழ்ப்பாள் ஏன் இருக்க வேண்டும்? பெட்டிக்குப் பூட்டு ஏன்? ஆகவே மனிதனுக்கு ஒழுக்கம் தான் முக்கியமானது. 

- கோவை குன்னூரில் 14.12.1958- அன்று பெரியார் ஆற்றிய‌ சொற்பொழிவு. ('விடுதலை' 23.01.1959)

Pin It