நடிகை புவனேஸ்வரி மீதான விபச்சார வழக்கு அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. அவர் " என்னை மட்டும் ஏன் கைது செய்கீறீர்கள். இன்னும் இந்தத் தொழிலில் இருக்கும் சினிமா நடிகைகளின் பட்டியலையும், அவர்களின் கட்டணம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய இடங்களின் விவரங்களையும் தருகிறேன். அவர்களையும் கைது செய்யுங்கள்" , என குமுறியதாக தினமலர் நாளிதழில் நடிகைகளின் புகைப்படங்களுடன் செய்தி வெளியானதால் கொதித்துக் கிடக்கிறது கோடம்பாக்கம்.

 சம்பந்தப்பட்ட பத்திரைகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போலீஸ் கமிஷனரிடம் மனு, முதல்வரை சந்தித்து முறையீடு, கண்டனக் கூட்டம் போட்டு, “சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து எழுதிய நிருபர்களை வெட்டிப் போட வேண்டும்” என்ற ஆவேச வசனத்தில் தொடங்கி நிருபர்களின் குடும்பத்தினர் வரை வசைபாடி தீர்த்துள்ளனர் சினிமா துறையினர். கண்டனக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நடிகைகள் ‘எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது, கணவர், பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்கள் மனது என்ன பாடுபடும்” என்று வேதனைப்பட்டுள்ளனர்.

 பதில் நடவடிக்கையாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 கண்டனக் கூட்டத்தில் சினிமாத் துறையினர் மொத்த நிருபர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சோத்து வசைபாடியதையும், "பிரியாணிக்கும், கால் பாட்டில் பிராந்திக்கும் எழுதுகிறவர்கள்" எனப் பேசியதையும் கேட்டு ஆவேசமான பத்திரிகையாளர்கள் பதிலுக்கு ஆர்ப்பாட்டம் போராட்டம் என இறங்கியுள்ளனர்.

 சம்பந்தப்பட்ட பத்திரிகையின் நம்பகத்தன்மை பற்றி ஓரளவுக்கு சமூக அக்கறையுடன் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும், அவர்களின் மேல்மட்ட சாதியத்தோரணை. அது பெரியார் சொன்ன சமூக நீதிப்பிரச்சனை ஆகட்டும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையாகட்டும் அல்லது நடந்து கொண்டிருக்கும் ஈழப்பிரச்சனையாகட்டும், அவர்கள் தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதுமில்லை, நியாயமாக நடுநிலையுடன் நடந்து கொண்டதுமில்லை. 

 அங்கே போர் ஈழத்தில் உச்சம்பெற்று மக்கள் இறந்து கொண்டிருந்த போது இவர்கள் இங்கே சினிமா நடிகைக்கு நடந்த விபத்தை முதல் பக்கத்தில் போட்டு காசு பார்த்தவர்கள். சினிமா நடிகைகளின் கவர்ச்சிப்படங்களும் , துண்டுச் செய்திகளும் இவர்களுக்கு முக்கியச் செய்திகள், ஆனால் அடிமட்ட மக்களின் பிரச்சனைகள் இவர்களுக்கு காமெடிச் செய்திகள்.

 எந்தவித சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் இன்றி எதை வேண்டுமானாலும் செய்தியாக தரலாம் என்ற இந்த மேல்சாதிப் பத்திரிகை வழக்கை சந்திப்பதை பற்றி நமக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.

 அதைப் போல தமிழ்நாட்டில் நடிகர், நடிகைக்கு கிடைக்கும் பெயரும், புகழும், பணமும் எந்தத் துறையிலும், எவ்வளவு நேர்மையாக உழைத்தாலும், கடினமாக உழைத்தாலும் கிடைப்பதில்லை. இவர்கள் ஒப்பனை முகங்களுடன் யாராவது எழுதிக் கொடுக்கும் வசனங்களை ஒப்பித்துவிட்டு வாங்கும் பெயர் இருக்கிறதே அது தியாகி, சமூக , மனித உரிமை போராளி என யாருக்கும் கிடைப்பதில்லை.

 ஆயிரம் பேரின் உழைப்பினில் உருவாகும் சினிமாவின் வெற்றி முழுவதும் மக்களின் அறியாமையினால் இந்த சினிமா நடிகர், நடிகையருக்கு மட்டுமே கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் திறமையாக இருந்தால் நாட்டின் முதலமைச்சராகவே ஆகிவிடலாம்.

 நாட்டில் நடைபெறும் சுதந்திர, குடியரசு தின கொண்டாட்டமாக இருக்கட்டும், தீபாவளிப் பொங்கல் என எந்த சிறப்பு நாட்களானாலும் பத்திரிகை, தொலைக்காட்சி என எல்லாம் தெரிந்த தலைவர்கள் இவர்கள் தான் பேட்டிக் கொடுப்பார்கள். தமிழனுக்கு அன்று வெளியிடப்படும் புதிய திரைப்படமும், விருப்பமான நடிகர், நடிகைகளின் பேட்டி மட்டுமே சிறப்பு நிகழ்ச்சிகள். கூத்தாடிகளை மட்டுமே கொண்டாடும் சமூகத்தில் மிக குறைந்த உழைப்புடன் மிக அதிக பலனை பெறுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

 எந்த நடிகையும் தமது சினிமா வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாவில் ஆபாசமாக நடித்ததற்காக வருந்தியதாக தெரியவில்லை. சினிமாவிலும், பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் மலிவாக தங்களை ஒரு போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்துவதால் தங்கள் மனம் காயம்பட்டதாக இத்தகைய கண்டனங்களை திரைப்படத் துறையினர் சொன்னதில்லை.

 எந்த நடிகரும் தான் பேசிய இரட்டை பொருள் வசனங்களுக்கு வருத்தப்பட்டதாக, தன்னை வைத்து படத்தில் பெண்மையை இழிவுபடுத்தியதாக ,தங்களை ஒரு பாலியல் தொழிலாளியைப் போல் பாடல் காட்சிகளில் நடத்துவதாக கண்டனம் தெரிவித்து கூட்டம் நடத்தியதில்லை.

 நடிகைகள் விபச்சாரம் செய்தார்களா என்பது முக்கிய விசயமல்ல, அதனால் இந்த சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அது அவரவர் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளிலும், விருப்பங்களிலும் உள்ளது.

 ஆனால் சினிமா நடிக, நடிகைகள் படத்தில் தோன்றும் ஆபாச காட்சிகளும், வசனங்களும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சென்றடைகிறது. ஏன் நடிகையின் அப்பா, சகோதரர் குழந்தைகள் என அவரது குடும்பமே பார்க்கும். ஆனால் இத்தகைய ஒரு சங்கடம் ,பாலியல் தொழில் செய்யும் பெண்களால் சமூகத்துக்கு ஏற்படுவதில்லை.

 எனவே இன்று விபச்சாரம் செய்தார்கள் என்று செய்தித்தாளில் வந்தவுடன் தனக்கும் ஒரு குடும்பம் உள்ளது, குழந்தைகள் உள்ளனர் என கண்ணீர் விடும் நடிகைகளும், திரைப்படத்துறையினரும், சினிமாவை பார்க்கும் சாமானியனுககும் குடும்பம் உள்ளது. சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் சேர்த்துதான் திரைப்படம் பார்க்கிறோம். செய்திகள் படிக்கிறோம், அவற்றின் மூலம் உங்களின் அசிங்கங்களும், அபத்தங்களும் எங்களை வந்தடைகின்றன. எனவே அதனையும் மனதில் வைத்து நடிக்க வேண்டும்.

 மற்றபடி உங்கள் பிரச்சனையை முதல்வரிடம் எடுத்துச் சென்றுள்ளீர்கள், அவர் திறமையானவர், அனுபவஸ்தர், பத்திரிகை நடத்திக் கொண்டிருப்பவர், இன்னமும் திரைப்படத்துறையில் வசனகர்த்தாவாக இருப்பவர். நடிகைகள் பற்றி செய்திகளை கசிய விட்டதாக கூறப்படும் காவல் துறையையும் கையில் வைத்திருப்பவர்.

 பிரச்சனையின் தன்மைக்கேற்ப மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டோ அல்லது தேவையேற்பட்டால் காவல் துறையை வைத்து நீதிமன்றத்துக்குள் வேண்டுமானாலும் புகுந்து, அடித்து எந்த முறையிலேனும் தீர்த்து வைத்துவிடுவார். பிரச்சனை கைமீறிப் போகாது.

 ஆனால் சமரசங்களுடன் வாழும் நீங்களும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியும் சேர்த்து எங்களையும் இம்சைக்குயுள்ளாவது பற்றி அவரிடம் முறையிட முடியாது.

 ஏனெனில் தொலைக்காட்சித் துறையிலும், அவரது பணி அளப்பறியது. மானாட மயிலாட போன்ற அவசியமான நிகழ்ச்சிகளின் மூலம் தமிழர்களின் கலை தாகத்தையும், தமிழையும் வளர்ப்பவர், அவரிடம் இது பற்றி அநாவசியமாக முறையிட வேண்டியதில்லை.

 எதிர்த்துப் போராடவும் எங்களால் முடியாது ஏனெனில் நீங்கள் டீ குடிக்க தெருவுக்கு வந்தாலே கூடும் கூட்டத்தையும், செய்தியையும் எந்த ஆர்ப்பாட்டங்களிலும் எங்களால் சேர்க்க முடியாது.

 எனவே வேண்டுகோளாகவே வைக்கிறோம், உங்களுக்கு ஒரு குடும்பம் இருப்பது போலவே எல்லாச் சாமானியனுக்கும் இருக்கிறது. நீங்களாவது வசதியான வாழ்க்கைக்காகவும், புகழுக்காகவும் சினிமாவில் சமரசம் செய்து கொண்டு நடிக்கிறீர்கள், உங்களது மனதே புண்படும்போது,  சமரசங்களை ஏற்றுக் கொள்ளாமல் சாதாரண மனிதனாகவே வாழும் எங்களுக்கு, பத்திரிகை துறையின் மூலமாக தகுதியே இல்லாத நீங்கள் தலைவர்களாக, வாழ்வின் முன்மாதிரிகளாக நிற்கும்போது எவ்வளவு வருத்தம் ஏற்படும் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

- வெ. தனஞ்செயன்

Pin It