2009 ல் திமுக, அதிமுக, தேமுதிக என பெரிய கட்சிகளும், ஆதிக்க சாதி சார்ந்த ஊடங்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஈழம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டன. எல்லாரும் சேர்ந்து ஈழத்துக்கு குழி தோண்டினார்கள். ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகள் பொதுவெளியிலும், ஊடங்கங்களிலும் பேச முடியாதவைகளாக இருந்தன. ஒன்னரை லட்சம் மக்களை பலிகொடுத்தும், நம் பக்கம் நியாயம் இருந்தும், உரத்துப் பேசும் திராணியற்று இருந்தோம்.

சிறு சிறு இயக்க கூட்டங்களிலும், திரும்ப திரும்ப பார்த்த அதே முகங்களுடன், அதே முழக்கங்களுடன் கழிந்தன. ஆனால் இன்று நிலைமை என்ன? எந்த திமுகவும், அதிமுகவும் ஈழம் ஒரு பொருட்டல்ல்; அது ஒரு சிறு கூட்டத்தின் அரசியல் என்று ஒதுங்கி இருந்தார்களோ, அவர்களே இன்று தனி ஈழமே தீர்வு என்கிறார்கள். பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் வேண்டுமானால் இந்த இனப்படுகொலைகளும், பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டதும், இசைபிரியாக்கள் வேட்டையாடப்பட்டதும் இப்போதுதான் சென்று இருக்கலாம். அனால் இவ்வளவு பெரிய இயக்கங்கள் நடத்தும், அதிகார மட்ட தொடர்புகளுடன் இருக்கும் ஜெயாவுக்கும், கருணாவுக்கும் இப்போது அக்கறை வரக் காரணம் மாணவர்களின், பொது மக்களின் எழுச்சி.

காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பெறும் லாபங்களை விட கருணாநிதிக்கு இன்று கட்சியைக் காப்பது முக்கியம். மாணவர் போராட்டத்தின் மூர்க்கமும் அவர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் ஆதரவும் கருணாநிதியை பீதியடைய வைத்து உள்ளன. இதற்கு பின்பும் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது திமுகவுக்கு சாவு மணி அடித்துவிடும் என்ற பயம்தான் இன்றைய காங்கிரசு கூட்டணியிலிருந்து அவசர வெளியேற்றம்.

ஈழப் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் எதிர்த்து செயல்பட்ட ஜெயா, இன்று ஈழத்தின் தேவையை முழுமையாக ஏற்றுக் கொண்டா செயல்படுகிறார்? இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக போய்க் கொண்டிருக்கிறது. நாம் இதில் தேவை இல்லாமல் நடவடிக்கை எடுத்து சிக்கிக் கொள்ள கூடாது என்ற பயம்தானே ஒதுங்கி நிற்க சொல்கிறது! ஈழப் போராட்டம் தமிழகத்தின் முக்கிய பிரச்சினை அல்ல என்று முழங்கிய அரசியல் வித்தகர்கள் எங்கே போனார்கள்?. இனி தமிழகத்தில் ஈழ கோரிக்கை இல்லாமல் யாரும் கட்சி நடத்த முடியாது என்ற நிலை வந்து விட்டது. 

செய்திகளை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று போட்டி போட்டு விவாதிக்கின்றன. இவர்கள் எல்லாம் இன்று திருந்தி விட்டர்களா என்ன? இப்பொழுதும் இந்த இனப்படுகொலையைப் பற்றி பேசவில்லை என்றால், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற பயம்தானே காரணம்.

இன்று தமிழருக்கு ஒரு தீர்வும் அற்ற வெற்றுத் தீர்மானமாக அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறி இருக்கிறது.

மத்திய காங்கிரசு அரசும், எதிர்க் கட்சியான பாஜகவும் ஈழத்திற்கு எதிரான நிலையிலேயே உள்ளன. நடந்தது இனப்படுகொலை என்பது அவர்களுக்குத் தெரியும். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் இந்திய அதிகார மையங்கள் அல்லவா? அதனால் தமிழர்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள்.

எப்படி தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஈழத் தமிழர்களுக்குகு துரோகம் செய்து இருந்தாலும், இன்று மக்கள் முன் அம்பலப்பட்டு போய் ஈழத்தை ஆதரிக்கிறார்களோ, அது போல இந்தியாவின் முக்கிய கட்சிகளும் தங்களுக்கு சுயவிருப்பம் இல்லை என்றாலும் ஈழத்தை ஆதரித்தே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். இல்லையெனில் குறைந்த பட்சம் ஈழப்பிரச்சினையில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்காதவாறு முடக்குவோம். மற்ற மாநில மாணவர்களிடமும், பொது மக்களிடமும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கொண்டு செல்வோம்.

உலகத்தின் மனசாட்சியை இனஜ்ப்படுகொலை ஆதாரங்களின் மூலம் தட்டிக் கொண்டே இருப்போம். சர்வேதச அரசியலில், நமக்கான மாற்றம் வரும்வரை ஈழக் கொள்கையை பேசிக் கொண்டே இருப்போம். சொந்த நாட்டில் போராடும் சிறுபான்மை மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் எப்படி வேண்டுமானாலும் ஒடுக்கலாம், உலகம் கேள்வி கேட்காது என்ற சர்வதேச அரசியல், அனைத்து ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது என உலகுக்கு புரிய வைப்போம்.

இலங்கை மீது பொருளாதார தடை, சர்வதேசத்தின் இடைக்கால அரசு, சர்வதேச விசாரணை, தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

Pin It