நண்பர்காள்…!

சமீபத்தில் தங்களது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்தேன். என் அறிவுக்கெட்டிய தூரத்தில் சில கேள்விகள் எழுவதால் இதனை எழுதுகிறேன்.

பொட்டிப் பகடையின் வாரிசுகளாக தங்களால் கருதப்படும் வடிவேலு என்ற அருந்ததியின திமுக தொண்டன் சேலம் மாவட்டத்தில் எம் எல் ஏ வாக மாறி கடைசியில் மகனது “உட்கட்சி’ போராட்டத்தால் சபாநாயகராக மாறி வெல்வதாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு சபாநாயகராவதன் மூலம் தலித் விடுதலை சாத்தியம் என்பது தான் தாங்கள் சொல்ல வருவதா? உங்களிடம் (திமுக) துணைசபாநாயகராக இருந்த விபி துரைசாமி மூலமாகவோ அல்லது புரட்சித் தலைவியிடம் சபாநாயகராக இருந்த தனபால் மூலமாகவோ அந்த சமூகம் சல்லிப்பைசாவிற்காவது பயனடைந்திருக்குமா? ஒரு சபாநாயகரின் அதிகார வரம்பு சட்டசபைக்கு வெளியில் என்ன பெறுமானம் உள்ளது என்பது தாங்கள் அறியாத ஒன்றா? அல்லது இதுதான் ‘சாத்தியம்’ என இந்தப் பக்கம் இருந்து திராவிட இயக்கத்தின் மீது விமர்சனம் வைக்கிறீர்களா? இதுதான் எனக்கு எழுந்த முதல் சந்தேகம்.

இரண்டாவது ஐயம் கொஞ்சம் விரிவானது. கதாநாயகன் அதிவீரன் என்ற உதயநிதியை சந்திக்க ஆதிக்க சாதியில் பிறந்த சிபிஎம் கட்சியின் கீர்த்தி சுரேஷ் தனது சக நண்பர்களுடன் எம் எல் ஏ வடிவேலு வீட்டுக்கு வருகிறார். அவளை தனியாக அழைத்துப் போய் உதயநிதியின் தாய் கேட்கிறார். ‘ஏம்மா நீங்க காதலிக்குறீங்கதானே.. உங்கிட்டயாவது அவன் சிரிச்சு பழகுவானா.. வீட்ல ஒத்துக்குவாங்களா’ என்று. உதயநிதியின் புத்தக இடுக்கில் கண்டறியப்பட்ட கீர்த்தியின் புகைப்படத்தால் இந்தக் கேள்வி வருவதாக புரிந்து கொள்கிறேன். இல்லை, தான் சக வகுப்பு மாணவிதான் எனவும், காதலிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறாள் கதாநாயகி. ‘அப்போ நீயும் அவங்க அப்பா மாதிரிதானா அவனுக்கு... பிடிக்கும், ஆனா பேச மாட்டாரு…’ என சொல்லிவிட்டு வடிவேலுவுடன் மகன் உதயநிதி பேசாமல் போனதற்கான காரணத்தை பிளாஷ்பேக் உத்தியில் அந்த தாய் சொல்வதாக சொல்லி இருப்பீர்கள். ஒருவேளை வடிவேலு திமுக, லீலா சிபிஎம் என்பதை குறியீடாக சொல்லி இருவர் மீதும் ஒரு அருந்ததியின தலித் இளைஞனுக்கு இருக்கும் உணர்வை சொல்லி இருக்கிறீர்களா? எனக்கு தெரிந்தவரை அது இல்லை.vadivelu and udayanithi in maamannanஇடதுசாரியாகவே இருந்தாலும் ஆதிக்க சாதியில் பிறந்த தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் தலித் இளைஞனது தவிப்பும், சொந்த சாதியின் சிறுவர்கள் கோவில் கிணற்றில் குளித்ததற்காக ஆதிக்க சாதி வெறியர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டு தனது பிள்ளையும் கொலையுயிரும் குற்றுயிருமாய் திரும்ப நேர்ந்த போது சொந்த வஞ்சிக்கப்பட்ட தலித்துகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏன் ஒரு சிஎஸ்ஆர் போடக்கூட கட்சியைத் தூண்டாத, இன்னும் சொல்லப் போனால் ‘பிரச்சினை ஆகாமல்’ பார்த்துக் கொண்டு, அதனால் ஒரு எம் எல் ஏ சீட்டை கட்சியிடமிருந்து ஆதாயமாக பெற்ற அற்பவாதி (பிலிஸ்டைனிஸ்டு) வடிவேலு தன் தந்தையாகவே இருந்தாலும் அவரிடம் பேசாமல் தவிர்ப்பதும் ஒன்றாகி விடுமா? அந்த தாயின் கேள்வியில் மாரி செல்வராஜ் தான் எனக்கு தெரிந்தார். அப்படி இல்லையா?

வடிவேலு தான் கருணாநிதி. உதயநிதி தான் ஸ்டாலின். மிசா வந்த போது சிறையில் ஸ்டாலினை காப்பாற்றப் போய் உயிர் துறந்தாரே ஒரு தலித், சிட்டிபாபு... அவரை நினைவில் இருக்கிறதா உங்களுக்கு? அல்லது உதயநிதிக்கு? படத்தில் செத்துப்போன நான்கு தலித் சிறுவர்களின் தந்தைமார்களுக்கு கிடைக்காத எம் எல் ஏ பதவி வடிவேலுவுக்கு பிரச்சினையை வராமல் பார்த்துக் கொண்டதால் கிடைத்தது. கருணாநிதிக்கு அது முதலமைச்சர் பதவி.

மிசாவுக்கு பிறகு வந்த 80 தேர்தலில் சோவியத் சார்பில் இருந்து அமெரிக்க தரப்புக்கு இந்திரா நகர்ந்த பிறகு அமெரிக்க சார்பு திமுகவுடன் கூட்டணி ஏற்படுகிறது. ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்கிறார் கருணாநிதி. அதற்காக தந்தையுடன் ஸ்டாலினுக்கு பிணக்கு ஏதும் இல்லை. ஏனென்றால் படத்தில் தான் உதயநிதி அருந்ததியின சாதியினராக இருக்கிறார். இங்கோ இறந்த சிட்டிபாபு மட்டும் தான் தலித்தாக இருக்கிறார் (ஸ்டாலின் இல்லை). சிட்டிபாபுவின் வாரிசுகளைப் பற்றி திமுக தொண்டனுக்கு என்ன கவலை?

கருணாநிதியிடம் வெளிப்பட்டது அரசியலின் அற்பவாதம். அற்பவாதத்திற்கு என தனி வடிவம் கிடையாது. தேசியத்திற்கு ஏற்றாற் போல அது வடிவத்தை எடுத்துக் கொள்ளும். அற்பவாதி நிலவும் சமூக அமைப்பை காப்பாற்றியபடியே இருக்கும், பழைய அடிமை முறையில் இருந்த கைக்கூலித்தனத்தின் தொடர்ச்சி தான். ஊரே பற்றி எறியும்போது அதில் தனக்கு ஏதாவது இலாபம் கிடைக்காதா என்றுதான் அற்பவாதி கருதுகிறான். நானறிந்த தமிழகத்தின் ஏடறிந்த வரலாற்றின் தவிர்க்கவியலாத முதன்மை அற்பவாதிகளில் ஒருவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி தான்.

மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியாக அதே சாதியில் இன்னொருவரை வளர்த்து விடுவது (சத்தியவாணி முத்துவுக்கு எதிராக பரிதியை வளர்த்த்து), இடைநிலை சாதிக்கெதிராக ஆண்ட சாதியை வளர்த்து விடுவது (மதுரை முத்துவுக்கு எதிராக தா கிருஷ்ணன், பிறகு தா கிருஷ்ணனுக்கெதிராக பிடிஆர்), அண்ணாமலை மாணவர் உதயகுமாரின் பிணத்தை தாய் தந்தையரே தன் பிள்ளை கிடையாது என மாற்றிப் பேச வைத்தது, ஈவெகி சம்பத்தின் தமிழ்த் தேசிய அரசியலை சீமான் அளவுக்கு பேசியபடியே வளர்ந்த திமுக வின் கருணாநிதி 1961 வேலூர் பொதுக்குழுவில் எம்ஜிஆர் உதவியுடன் திரைப்பட ஸ்டண்டு நடிகர்களைக் கொண்டு அவரை தாக்கி வெளியேற்றியது, பிறகு எம்ஜிஆர் விலகிய பின் சீமான் இன்று பேசும் இனவாத அரசியலையே எம்ஜிஆருக்கு எதிராகப் பேசியது … என இந்தப் பட்டியலைப் போட்டால் கட்டுரை இன்றைக்கு முடியாது.

மாநில சுயாட்சியைப் பேசும்போதெல்லாம் மத்திய அரசை எதிர்த்துக் கொண்டே உலக முதலாளிகளுக்கு மாநிலத்தை காவு கொடுப்பது, ‘தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ என வாஜ்பாயிக்கு சான்றிதழ் கொடுத்து மண்டல் கமிசனுக்கெதிராக விபி சிங் ஆட்சியை கவிழ்த்தவர்களோடு அமைச்சரவையில் ஒன்றாக உட்கார்ந்தது, கோவை கலவரத்தில் ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக இருந்தபடியே இசுலாமியர்களை தீவிரவாதிகள் போல நடத்தியது, சிங்காரச் சென்னை என்ற பெயரில் குடிசை மாற்று வாரியத்துக்கான குடியிருப்புகளை ஊருக்கு வெளியே அமைக்க வழிவகை செய்தது, சிம்சன் போராட்டத்தை ஒடுக்கியது, நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது, குஜராத் இனப்படுகொலையை அரசியலாக்க வேண்டாமென்று சமூகநீதி அமைப்புகளிடம் கோரிக்கை வைத்தது, பாஜக வுடன் கூட்டணியா என்ற நிருபரின் கேள்விக்கு அவரது மனச்சாட்சியான மாறனை ‘நாங்கள் சமூகத்திலும் சரி அரசியலிலும் சரி தீண்டாமையை கடைபிடிப்பதில்லை’ என கொள்கையை தீண்டாமைக்கு நேர் என பேச வைத்தது.. என கருணாநிதியின் அற்பவாதத்தை பேசிக் கொண்டே போகலாம்.

 ‘கவிஞர்கள் மத்தியில் மார்ட்டின் டப்பருடைய இடத்தைத் தத்துவஞானிகள் மத்தியில் பெந்தாம் கொண்டிருக்கிறார்' என்று மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் அற்பவாத வட்டாரங்களில் மார்ட்டின் டப்பர் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய கவிதையின் ஆர்ப்பாட்டமான கொச்சைத் தனமும் போலியான ஆழமும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. மார்க்சின் புதல்வியர் மார்க்சிடம் 1865இல் சில வினாக்களுக்கு விடைகளே ஒப்புதல்களில் பதிவு செய்தார்கள். “நீங்கள் வெறுப்பது என்ன” என்று கேட்கப்பட்ட பொழுது “மார்ட்டின் டப்பர்” என்று மார்க்ஸ் பதிலளித்தார்.

மார்க்சின் வாழ்க்கை முழுவதும் கூலி எழுத்தாளர்கள், திருட்டுத்தனமான அரசியல் சதிகாரர்கள், திறமையற்ற வாய்வீச்சுக்காரர்களைக் கொண்ட பெரும்கூட்டம் அவரை ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்தது. அக்கூட்டத்திலிருந்து மார்க்ஸ் ஒரே ஒரு நபரை, தன்னுடன் தனிப்பட்ட முறையில் எத்தகைய சம்பந்தமும் இல்லாத ஒரு நபரின் பெயரைச் சிறிதும் குறிதவறாமல் மார்க்ஸ் தேர்ந்தெடுத்தார். அற்பவாதியின் கீழ்த்தரமான ஆசைகளுக்குத் தீனி போடுகின்ற மலிவான வெற்றியின், இலக்கிய ரீதியான அற்பவாதத்தின் உருவகம் என்று மார்ட்டின் டப்பரைப் பற்றி மார்க்ஸ் கருதினார்.

அற்பவாதி விஞ்ஞானத்தைக் கருவியாக உபயோகித்து விஞ்ஞானத்துக்குச் சம்பந்தமில்லாத தன்னுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார். அவர் “கீழான நோக்கங்களுக்கு” அதை உபயோகிக்கிறார். “ஆனால் ஒரு மனிதர் விஞ்ஞானத்தை விஞ்ஞானத்திலிருந்து வருவிக்கப்படாத ஒரு கருத்துக்கு, (அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்) வெளியே, அந்நிய, வெளிப்புற நலன்களிலிருந்து வருவிக்கப்பட்ட கருத்துக்குத் தகவமைக்க முயற்சிக்கும் பொழுது நான் அந்த நபர் இழிவானவர் என்கிறேன்.” (மார்க்ஸ்).

மால்தஸ் குறித்தும் பாஸ்தியா குறித்தும் மார்க்ஸ் குறிப்பிட்ட இந்த கடுமையான வார்த்தைகள் தான் இன்று எம் எஸ் எஸ் பாண்டியனின் ரசிகர்களுக்கும் பொருந்தும். திமுக வே விரும்பாத சமூகநீதி முத்திரையை விஞ்ஞானத்துக்கு புறம்பாக குத்துவதற்கு தயங்காத பாஸ்தியாவின் சீடர்கள், பரமார்த்த குருவின் சீடர்களும் கூட.

கருணாநிதியை அறிவாளி, சுயமரியாதைக்காரர், சமூகநீதியின் விடிவெள்ளி என்பதற்காக கொண்டாடுவதாக காட்டிக் கொண்டாலும் இந்த அற்பவாதிகளிடம் அவர் ’பிழைக்கத் தெரிந்த’ போராளியாகத்தானே மனதில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார். அதுதான் அவர்கள் வழுக்கும் கொள்கையின் நடைமுறையின் இடங்களை ‘நியாயப்படுத்த’ உதவுகிறது. 

***

மூன்றாவதாக ஒரு எளிய கேள்விதான். ஒருவேளை மாரி செல்வராஜின் மனம் புண்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன். ஆனாலும் தொடர்கிறேன்.

கதையை சேலம் மாவட்டத்தில் நடப்பதாக காட்டியிருந்தீர்கள். வீரபாண்டி ஆறுமுகம் தான் திமுகவின் நீண்டகால மாவட்ட செயலாளர். வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். அவரை ராசிபுரத்தின் அருந்ததியின எம் எல் ஏ வான வடிவேலுவின் மகன் உதயநிதி எல்லோர் முன்னிலையிலும் காலால் மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளுகிறார். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. உண்மையில் வீரபாண்டியாரை அடித்துவிட்டு ஒரு தலித் தப்ப முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதன்பிறகு அங்கு தலித் சேரிகளுக்கு ஒன்றுமே ஆகவில்லையா? ஏன் அதைச் சொல்லாமல் மழுப்பிச் செல்கிறீர்கள்? உதயநிதியின் கட்டளை மட்டுமா? இல்லை உங்களுக்கும் மழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறதா? 

நீங்கள் சார்ந்த பள்ளர் சாதி எம் எல் ஏ மகன் ஒரு தேவர் சாதி அமைச்சரைத் தாக்கி விட்டு தப்பிக்க முடியுமா? இல்லை தலித் கிராமங்கள் தான் அழிக்கப்படாமல் இருக்குமா? சாதிக் கலவரங்களுக்கு பேர் போன நெல்லை பகுதியில் வாழ்ந்தும், பார்த்தும் வளர்ந்த உங்களுக்கு அருந்ததியினர் கதையை சொல்லும்போது மட்டும் அது மறந்து விடுகிறதா? ஒருவேளை தலித் இலக்கியத்தை தலித்து தான் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே அது போல அருந்ததியினர் இலக்கியத்தை அருந்ததியினர் மட்டும் தான் பதிவு செய்ய முடியும் என்பதை பிரச்சினையின் பரிமாணத்தை ’சொல்ல மறுப்பதன்’ மூலம் நிரூபிக்க விரும்புகிறீர்களா?

***

தமிழகத்தின் எல்லா தலித் சமூகத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைக்க முடியும் என்றுதான் எல்லோரும் கருதுகிறார்கள். வரலாற்றுரீதியில் அது சாத்தியமே இல்லை என்பதை பார்க்க மறுக்கிறார்கள். மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் சாதிய கணக்குகள் தமிழகத்தில் பொருந்தி வராமல் இருப்பதை கவனிக்க மறுப்பதால் இங்குள்ள சாதிய முரண்களுக்கு பார்ப்பனிய, வர்ணாசிரம தர்ம வர்ணங்களை பூசுவதை ‘மட்டுமே’ போதுமானதாக கருதுகிறார்கள் இந்த அறிவியலின் அற்பவாதிகள். இங்கு நிலவிய, நிலவும் இடங்கை, வலங்கை சாதி பிரச்சினைகள் குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாத, ஆய்வுகளையும் மேற்கொள்ளாத இந்த சோ கால்டு கம்யூனிஸ்டுகளும், திராவிட இயக்க ஆதரவாளர்களும், தலித் இயக்க முன்னோடிகளும் முட்டுச்சந்தில் வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சரியாக சொன்னால் தொலைத்த இடத்தில் பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லாவின் வாரிசுகள் தான் இவர்கள்.

பட்டியல் சாதி வெளியேற்றம் குறித்து பேசும் பள்ளர் சாதி தலைவர்கள் யாரும் காமடியனாக அந்த சாதி மக்களிடம் மாறி விடவில்லை. அப்படி ஒரு கோரிக்கை நீண்ட காலமாகவே அங்கு இருப்பதால் தான் கிருஷ்ணசாமி போன்றவர்கள் துணிந்து கோரிக்கையை முன்வைக்க முடிகிறது. தங்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைப்பதை தேவேந்திரகுல வேளாளர் சாதியினர் விரும்புவது இல்லை. 1984 தேர்தல் என் பால்ய வயதில் பார்த்த தேர்தல். எங்களது தொகுதி ஓட்டப்பிடாரம், தனித்தொகுதி. காங்கிரசு சார்பில் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆர் எஸ் ஆறுமுகம் நிற்கிறார், பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். சிபிஐ சார்பில் பறையர் சமூகத்தை சேர்ந்த அன்றைய இளைஞரும், 80ல் வென்றவருமான எம் அப்பாத்துரை கதிர் அருவாள் சின்னத்தில் நிற்கிறார். இந்திராவின் மரணம் தோற்றுவித்த அனுதாப அலையும், ப்ரூக்ளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் புரட்சித் தலைவரின் புகைப்படமும் தமிழகத்தில் தலைவிதியை தீர்மானித்துக் கொண்டிருந்த போது, எங்கள் தொகுதியில் காங்கிரசு வித்தியாசமானதொரு முழக்கத்தை முன்னெடுத்தது, அதாவது ‘பள்ளர் ஓட்டு பள்ளருக்கே’. 

கடைசியில் தொகுதியில் சிறுபான்மையினராக இருந்த பறையர் சமூகத்தினை சேர்ந்த எம் அப்பாத்துரை தோற்றுத்தான் போனார். இந்த காங்கிரசு தான் கடையனுக்கும் கடைத்தேற்றமாக இன்று திராவிட இயக்கத்தாலும், இடதுசாரிகளாலும், தலித் தலைமையாலும் முன்வைக்கப்படுவது தேர்தல் வரலாற்றின் நகைமுரண் மட்டுமல்ல, அக்கட்சிகளிளது அரசியலின் அற்பவாதமும் கூட. இந்தப்பகையின் உட்பகை இன்னொன்றுதான் அருந்ததியின மக்களுக்கு திமுக வழங்கிய உள்ஒதுக்கீட்டை எதிர்த்த இன்னொரு தலித் சாதியின் சமூகநீதிப் பார்வை. அப்படிப் பார்ப்பதற்கு இடங்கை வலங்கை குறித்த புரிதலும், அது இன்றும் செல்வாக்கு செலுத்தும் அல்லது இருப்பை தக்க வைக்கும் இடங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினை தீர்ந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டதாகத்தான் திராவிட இயக்கமும் அதன் விசிலடிச்சான் குஞ்சுகளும் கருதுகிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன மாரி செல்வராஜ் அவர்களே!

கிருஷ்ணசாமியின் கோரிக்கையை மாரி செல்வராஜ் முழுவதும் புறக்கணித்து விட்டதாக எனக்குப் படவில்லை. பரியேறும் பெருமாளில் நாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வீரமிக்க அடையாளமாக, ஆண்ட வடிவமாகவும் பரிணாம வளர்ச்சி பெறுகிறது. ஆனால் மாமன்னனில் அது ஆண்டையின் அடிமையாக குறியீட்டினைப் பெறுகிறது. ஈயம் பூசுன மாரியும் இருக்கணும் பூசாத மாரியும் இருக்கணும் என்பது தான் இயக்குநரது நிலைப்பாடாக தோற்றமளிக்கிறது. சாரமாகவும் இருக்கிறது. 

நான்காவதாக, ஆயுதப் போராட்டமா? இல்ல தேர்தல் பாதையா? என்பதை ரெண்டு மூணு இடத்துல கேள்வியா எழுப்பி ஆயுதப் போராட்டம் வீண் என்பதை சொல்ல முயற்சி பண்ணிருக்கதா நினைக்குறீங்க டைரக்டர் சார். ஆனா நாம நினைக்கிற மாதிரியே விளைபொருள் அமைவது நடப்பில் இல்லாமல் போவது எல்லாத்திலயும் தானே நடக்கும். உங்க கதைலயும் அதே தான் நடக்குது. உங்க புரடக்சன் கம்பெனியான திமுக நோக்கமும் இந்தக் கதை தான்.

அடி வித்தை கற்றுத் தரும் ஆசானாகத்தான் உதயநிதி படத்துல வருகிறார். ஆதிக்க சாதி மாவட்ட செயலாளரை எட்டி உதைத்த பிறகு இவரை அடிப்பதற்காக அவரோட ஆட்கள் வீடு தேடி வர்றாங்க. கதவ உட்பக்கமாக பூட்டி வடிவேலுவும் உதயநிதியும் இருக்கையில மகன கதவ தொறக்க விடாம தடுத்து ரிவால்வரையும் அரிவாளையும் எடுத்து வந்து அரிவாளை கையில கொடுக்கிறார் வடிவேலு. தனக்கோ தன் மகனுக்கோ ஆபத்து வரும்போது ஆயுதம் ஏந்தச் சொல்லும் தலித் எம் எல் ஏ வடிவேலு, அவர் இளமையாக இருந்த காலத்தில் வெறும் கருப்புச் சட்டையும் கைலியுமா தொண்டனாக இருந்த காலத்தில் ஆதிக்க சாதியினரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சக தலித் சிறுவர்களுக்காக ஆயுதமும் எடுக்கல, சிறு கல்லைக் கூட எடுக்கல. அவ்ளோ ஏன், ஒரு வழக்கு போட கூட முயற்சிக்கல. ஆனா ஊத்தி மூட முன் நின்றார். இந்த அற்பவாதம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் தன் சக நண்பரகள் கொல்லப்பட்டபோது துரோகம் செய்த தந்தை தனக்காக என வரும்போது தரும் ஆயுதமான அரிவாளைப் பெற்றுக் கொண்ட உதயநிதியின் அற்பவாதம் எந்த செருப்பால் அடிக்க வேண்டியது? 

ஆதிக்க சாதியினர் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தை தங்கள் ஊர்களில் நடத்த விடாமல் தடுத்து விடுகிறார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ் நடத்தும் போட்டித் தேர்வு மையத்தில் பயிலும் ஆதிக்க சாதி இளைஞர்கள் அதன் பிறகு கூட்டமாக உதயநிதியிடம் வந்து, ‘எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க பாத்துக்குறோம்’ என்று சொல்வதாகவும், அதனால் சாதியின் கட்டுப்பாடு மீறப்படுவதாகவும் காட்சிப்படுத்தியிருந்தீர்கள். சொந்த சாதியினர் உள்ளே வர விடாமல் தடுத்த போது அவர்கள் ஒருவேளை ஐ ஏ எஸ் பிரிலிமினரி எழுதப் போயிருக்கலாம் என நினைக்கிறேன். ஏன்னா தேர்தலும் இந்த தேர்வும் மே மாதம் தானே வரும். ஒருவேள அப்படி சமாளிக்கலாம் நீங்க. ஆனா பாருங்க.. ஊருல வெட்டியா சுத்துற லும்பன் கூட இந்த மாதிரி பொதுவிசயத்துல தலையிட்டாலும் விடுவானே தவிர போட்டித் தேர்வுக்கு தயாராகுறவன் தலையிடுவான்னு சொல்றீங்க பாருக்க… அங்க இருக்கு உங்க சமூக அறிவு..

அப்படி ஆதிக்க சாதி இளைஞர் ஒருத்தர் வீட்ல உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போது வன்னியர் சாதி சங்கத்து ஆள்கள் வந்து அவர வெளியே அனுப்ப சொல்றாங்க. வெளியே வரும் உதயநிதி அவங்கள அடிச்சு துவம்சம் பண்றாரு. பாக்க நல்லாதான் இருக்கு. அதுக்கு பிறகு எந்த சேரியும் பத்தி எரியல னு தான் எஸ்கேப் ஆகுறீங்க. சரி இதுவும் வழக்கமான உங்க பிரச்சினைதான். ஆனா இதுல ஒரு இடம் வருது. அடிக்கும்போது கைத்துப்பாக்கிய எடுத்து ஆதிக்க சாதிக்காரன மிரட்டுவாரு உதயநிதி. உடனே அவன ஆயுதத்தை மவுனிக்க சொல்வாரு அவரோட ஆதிக்க சாதி காதலியான கீர்த்தி சுரேஷ். அதுக்கு ரெண்டு அடி பக்கத்துல தான கீர்த்தியோட சொந்தக்காரன் இருப்பான். அவனோட உரையாடாமல், அவர்களிடம் பேசுவது வேஸ்ட் என்று சொல்லிப் போவார் சிபிஎம் கட்சியின் கீர்த்தி சுரேஷ். இது சிபிஎம் மேல நீங்க வைக்குற விமர்சனம் தானே.? 

அடுத்து மையமான விசயத்துக்கு வந்துருவோம். கட்சியோட தலைமைக்கும் இந்த சண்டைகளுக்கும் உள்ள உறவு பற்றியது. மாவட்ட செயலாளராக வரும் பகத் பாசில் கட்சிய விட்டு விலகுறாரு. ஆனால் அதுக்கு அப்புறம் மாவட்ட செயலாளராக யாரையாவது நியமிச்சிருப்பாங்க இல்லியா? அவங்க என்ன சாதி மாரி செல்வராஜ்? இதப்பத்தி பேசக் கூடாதுங்குறது உங்க தயாரிப்பு நிறுவனத்தோட ‘அன்புக்’கட்டளையா? இது மாரிசெல்வராஜ் என்ற படைப்பாளியின் அற்பவாதம். 

கட்சித் தலைமைக்குக் கூட, அதாவது நான் இருக்கும் இடத்துக்கு கூட நீ வரணும் என தலைவர் சொல்வதாக கதையை கட்டியமைத்திருக்கிறீர்கள். எப்போதெல்லாம் தலித் மக்கள் மீது அரசின் ஒடுக்குமுறை திமுக ஆட்சியில் நடக்கிறதோ அப்போதெல்லாம் நானும் தலித் சம்பத்தி தான் என்று சொல்லி தப்பிப்பதில் கருணாநிதி பலே கில்லாடி. தலைவர் பதவியை விடுங்க 1949 ல ஆரம்பிச்ச அந்த கட்சில துணைப்பொதுச்செயலாளர் தவிர பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கெல்லாம் தலித் வர எவ்ளோ வருசம் இன்னும் எடுக்கும். பகத் பாசில் ஒரு இடத்துல சொல்வாரு, ‘மொதல்ல இந்த சமூகநீதிய குழுதோண்டி புதைச்ச பிறகுதான் அதப் பேசுற தலைவர்கள குழிதோண்டி புதைக்கணும்’பாரு. ஆனா திமுக வின் சமூகநீதிய பேப்பர்ல சர்க்கரைனு எழுதி வச்சுதான் நக்கணும் என்பது ஊரறிந்த உண்மை. உங்களுக்கு இது தெரியாதா? தெரிந்தும் நடிக்குறீங்களா மாரி செல்வராஜ்? உங்களோட எல்லாப் படத்துலயும் படைப்புலயும் உங்களைத் தூங்க விடாமல் துரத்துதே அந்த தாமிரபரணி படுகொலை, அது கூடவா உங்கள உறுத்தல. நீங்களும் ஒரு வடிவேலு கேரக்டர் தானா? 

கடசில, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தினமும் குறள் சொல்லி ஆரம்பிக்கும் சபாநாயகர் உத்யோகம். சமூகநீதி கிடைச்சிருச்சுனு கொண்டாட சொல்றீங்க. திமுக தலைமை நல்ல தலைமை தான், மாவட்ட செயலாளர்கள் தான் மோசம் என்ற பிரச்சாரப் படத்தை எடுத்து விட்டீர்கள். இது ஏழாவது அமைச்சரவை. நடைமுறையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் தராமல் போன கருணாநிதியின் கைகளை கட்டிப் போட்டது வீரபாண்டியார் தானா? இயேசுவின் கொலையில் எனக்கு பங்கில்லை என கையைக் கழுவும் பிலாத்துவின் வகையறாக்களுக்கு வியாக்யானம் செய்ய வந்த புனித பவுல் நீங்கள் தானா?

***

ஊருக்குள்ள போக முடியாத நிலை வடிவேலுக்கு வந்தவுடன ஒரு வீடியோ எடுப்பாங்க, அப்போ வடிவேலு சொல்வாரு ‘என்னய எல்லாரும் மண்ணு மண்ணு னுதான் கூப்பிடுவாங்க. என் மகன்தான் என் பேர எனக்கு மாமன்னன் என புரிய வச்சவன்’. இதை கட்சித் தலைவர்ட்டயும் சொல்வாரு. ’அப்போ நான் பிடிச்சு வச்ச பச்ச மண்ணு, இப்போ அப்படி இல்ல’ என்று. உண்மைல அவரு கட்சிய காப்பாத்துறதுக்காக சாதிப் பிள்ளைகளின் படுகொலைய மறைக்கும்போதே மா மன்னன் இல்ல ‘மாமா’ மன்னனாவே மாறிட்டாரு. இந்தப் படம் எடுக்கும்போது திமுக வின் முன்னாள் துணைசபாநாயகரும் அருந்த்தியினத்தை சேர்ந்தவருமான விபி துரைசாமி எப்போதாவது உங்களுக்கு நினைவில் வந்தாரா? 

***

என்னுடைய மேற்கண்ட கேள்விகளும் விமர்சனங்களும் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள். ஆனால் ஒருபோதும் கேட்க நாதியற்ற சாதிக்காக பேசுகிறேன் பேர்வழி என்று துரோகம் செய்யாதீர்கள்.

உங்களுக்கு பக்கத்து மாவட்டம் விருதுநகர். அங்கே ராஜபாளையம் ஒன்றியத்துல கே. தொட்டியம்பட்டினு ஒரு ஊர் இருக்கு. நாயக்கர்களும், அருந்ததியின மக்களும் வசிக்கும் ஊர் இது. 2017 ல் ஊர்ப்பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த குற்றத்துக்காக அருந்ததியின மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரைக்கும் அங்கு இருப்பது திமுக எம் எல் ஏ தான். போய் எட்டிப் பாத்திருப்பாருனா நினைக்குறீங்க.. அப்போ சபாநாயகர் கூட அருந்ததியின சாதியைச் சேர்ந்த தனபால் தான். 

பேப்பர் படிப்பீங்க தானே.. இப்போ திமுக ஆட்சில தலித் மக்களுக்கு ஆலய நுழைவு மறுக்கப்பட்ட மேல்பாதி திரவுபதி அம்மன் ஆலயத்துக்கு அரசு தரப்பில் சீல் தான வச்சாங்க.. இல்ல உங்க பேனாவுக்குமா?

பி.கு. – 1 :

கவிஞர் இன்குலாப்

ராஜராஜ சோழன் பற்றிய கவிதை

கண்மணி ராஜம்

-------------------------------

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன் ஜீவித்திருந்த இம்மன்னன்
என்ன செய்து கிழித்துவிட்டானாம்?

ஈழம் வென்றானாம்
சாவகம் வென்றானாம்
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?

கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரக்தீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம
மண்ணில் தேய்த்த மாபாதகன் இவன்

தஞ்சை நகரில் தேவரடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழச்செய்த காமுகன்
இம்மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்..

(எண்பதுகளில் வெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்து ராஜராஜன் சிலை அல்லோகலப்படுவதாக சட்டசபையில் மு கருணாநிதி கண்ணீர் வடித்த போது கவிஞர் இன்குலாப் எழுதியது. அவரும் படைப்பாளிதான்.)

பி.கு. 2 : https://www.jstor.org/stable/4412773

திராவிட இயக்க ஆதரவாளரான ஆய்வாளர் எம் எஸ் எஸ் பாண்டியனது வழிகாட்டுதலில் தற்போதைய திமுக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சனும், பேரா ராஜன்குறையும், பாண்டியன் மனைவி ஆனந்தியும் 2002 ல் இபிடபிள்யூ வில் எழுதிய தலித் விரோத கட்டுரை. இது பற்றி 2004 ல் பேரா ரகுபதி புதிய கோடாங்கியில் ஒரு கட்டுரை எழுதினார். பேரா லட்சுமணனும் எழுதினார்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஆய்வுப்பகுதியாக கொண்டு Work , Caste and Competing Masculinities என்கிற கட்டுரையில் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பத்து வருடம் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தலித் இளைஞர்களை நோக்கி நாடக காதல் உள்ளிட்ட என்னென்ன குற்றச்சாட்டை வைத்தாரோ அதே கருத்தை தான் மூன்று அறிவுஜீவிகளும் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர்.

1. இடைநிலைச் சமூகப் பெண்கள் படிக்காமலிருப்பதற்கும் படிப்பைத் தொடர முடியாமலிருப்பதற்கும் காரணம் தலித் இளைஞர்கள்.

2. தலித் இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்வதில்லை; காரணம் பணிபுரிகிற கம்பெனிகளில் திருடுகிறார்கள்.

3. மேல்சாதிப் பெண்களை நாகரீக உடை உடுத்தி காதலில் வீழ்த்துவதை குறிக்கோளாகவும் போட்டியாகவும் கொண்டிருக்கின்றனர்.

மாரி செல்வராஜுக்கு தான் ஏற்றிருக்கும் விபீடண பாத்திரம் இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

- தளபதி

Pin It