நெருக்கடியான நிலையிலும் உணவு உறுதிப்பாட்டை அடைதல் (Achieving Food security in times of Crisis) என்பதுதான் இந்த ஆண்டுக்கான உலக உணவு தின மையக் கருத்து. ஓரிரு மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகரின் ஒரு பிரதான சாலையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. கடைகள் நிறைந்த அந்தப் பகுதியில் அமெரிக்காவின் பிரபல சிற்றுண்டி குழும அமைப்பின் புதிய சென்னை கிளை திறப்புவிழா. சாதாரணமாக பல்வேறு வகை ரொட்டிதுண்டுகளை விற்பனை செய்யும் அந்த கடை வாசலில், தங்கள் கார்களை நிறுத்திவிட்டு பல பணக்காரர்கள் கடைக்குள் செல்வதற்காக வரிசையாய் காத்திருக்கின்றனர். ஏராளமான கார்கள் இப்படி நிறுத்தப்பட்டதால் சாலையில் பெரும் வாகன நெருக்கடி. இதில் சிக்கிக் கொண்ட வாகனங்களைச் சூழ்ந்து வழக்கம் போல் பிச்சை எடுக்கும் ஏழ்மை கூட்டம். ஒருபுறம் பன்னாட்டு புதிய உணவை சுவைக்க பணக்காரக் கூட்டம். எதிர்ப்புறம் ஒருவேளை உணவுக்கும் பிச்சை கேட்டு கையேந்தும் ஏழைக் கூட்டம்.  நடுவில்தான் நம் அவசர பயணம். எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

ஏறத்தாழ 10 கோடி ஏழைகள் உணவே இல்லாமலும், 102 கோடி ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளும் இவ்வுலகில் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று கூறுகிறது. உலக வரலாற்றில் 100 கோடிக்கு மேல் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் இருப்பது இதுவே முதல்முறையாம்! 2006-08 ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் 40-80% வரை பறந்த தானிய விலைஉயர்வு, 2008-09இல் ஏற்பட்ட தொடர்ச்சியான சந்தைசரிவுகளும்தான் இந்த நிலைக்கு காரணம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

உணவு வாழ்வின் அடிப்படை ஆதாரம். உலகின் அத்தனை உயிரினங்களும், அதன் பரிணாமங்களும், படிநிலை வளர்ச்சிகளும் உணவைச் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. சாதாரண கிளாமிடாமோனசில் இருந்து கிளைத்து கிளைத்து இன்று புவி வெப்படைதலை யோசிக்கும் ஆறு அறிவு ஆசாமிகளாய் நாம் உருவானதற்கு உணவுக்கான தேடல் ஒரு முக்கிய காரணம். “எண் சாண் உடலுக்கு வயிறே பிரதானம்’ என்ற  நற்றமிழ் சொற்றொடரும்,

"உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூம்

விட்டோன் என்பார்க்கின் நிலை"

என்ற குறளும் உணவும் அதற்கு ஆதாரமான உழவும், அது இல்லாமல் போனால் துறவிக்கும்கூட வாழ்க்கை இல்லை என்ற மகத்தான கருத்தை அறிவிப்பன. ஆனால் உழவின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

1960களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழவின் பங்கு கிட்டத்தட்ட 44% இருந்தது. 1990களில் அது 24% ஆக குறைந்தது. 1995களில் இந்த நிலையை கண்டு அஞ்சிய விவசாய அமைப்பினர், அன்றைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்திடம் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது "அதனாலென்ன! கணிணி துறை ஈட்டும் அந்நிய செலவாணி ஏராளமாய்ப் பெருகி வருகிறது. உழவுத்தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு மாறிக்கொள்ள வேண்டியதுதான். தேவையெனில் உணவை இறக்குமதி செய்து கொள்லாமே" என்றார். தற்போது அவர் கனவு பாதி பலித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழவின் பங்கு 12% ஆக குறைந்துள்ளது. ஆனால் அவர் கூறியது போல கணிணி வணிகம் காப்பாற்றவில்லை, காலை வாரி படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது.

நாட்டின் உண்மையான பாதுகாப்பும் இறையாண்மையும் உணவில் தன்னிறைவு காணும் போதே கிடைக்கும். ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று சமூக சிந்தனையாளர்கள் வலியுறுத்தியது, 21 ஆம் நூற்றாண்டில் கூடுதல் கவனம் பெற்று வருகிறது. எனவே, உணவு உற்பத்தி-விநியோகத்தைவிட அக்கறைப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஆளும்வர்க்கத்திற்கு வேறு இருக்க முடியாது. அதை மீறி பசிப்பிணி போக்க மறுக்கும் அரசும் நிலைக்காது என்பதுதான் வரலாற்று உண்மை. ஆனால் இப்போது நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருப்பதெல்லாம் விசித்திரமாக, வருத்தமாக உள்ளது.

உழவின் அத்தனை அம்சங்களும் வணிக பிடிக்குள் திட்டமிட்டு தள்ளப்படுகின்றன. உழவுக்கான வளர்ச்சிப்பணிகள் என்று சொல்லப்படுபவை, செய்யப்படுபவை அனைத்தும் அரசியல்வாதிகள், பெரும் ஒப்பந்ததாரர்களின் வணிகப்பசிக்கும், பெரும் செல்வந்தர்கள், கார்பரேட் விவசாய நிறுவனங்களின் வசதிக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

கண்மூடித்தனமாகக் கட்டப்படும் அணைகள்-பாசன வசதியாகட்டும், உற்பத்தித் திறனைப் பெருக்கும் உத்திகள் என்ற அரசு சான்றிதழுடன்  சந்தைப்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களாகட்டும் உழவை எந்நாளும் பெருக்கப் போவதில்லை. மாறாக, நம் உழவுச் சந்தையை மொத்தமாக அடிமைபடுத்தவும், அந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் உருவாக உள்ள பெரும் நோய்களின் மூலம் மருத்துவ சந்தைக்கு வித்திடவுமே வழிகோலுகின்றன.

பெரும் சர்ச்சைக்குள்ளான பி.டி. பருத்தியின் இன்னல் தீரும் முன்னரே,  அக்டோபர் 14 அன்று இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிரான பி.டி. கத்தரிக்கு அரசு அனுமதிச் சான்று வழங்கியுள்ளது. "பி.டி.கத்தரியை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்," என்று கடந்த ஜூன் மாதம் ஏகபோகமாக அறிவித்த மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அதற்கு நேர்மாறாக இன்றைக்கு அதை அனுமதித்துள்ளார். நடிகர்கள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.

இதில் கத்தரியில் உள்ள புழுவை அழிக்க கத்தரிக்குள்ளேயே விஷப் புரதத்தை விதைத்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வாமை தொடங்கி புற்று, குழந்தைப் பேறின்மை, எதிர் நுண்ணியிரிகள் (ஆன்டி பயாடிக்ஸ்) செயல்படாத நிலை என எத்தனையோ உடல்நல பிரச்னைகள், பிற பயிர்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர் குணங்கள் கலந்து ஏற்படும் விளைவுகள் என பல்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது பி.டி. கத்தரி.  நம் நாட்டின் உணவு உறுதிப்பாட்டை காப்பாற்றுவதற்காகவா இப்படி அவசரஅவசரமாக இதை அனுமதிக்கிறார்கள்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4,000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சாமனியனின் காய்கறியை சிதைப்பதில் காட்டும் அக்கறை, ஏன் வேறேதிலும் நடப்பதில்லை?

பி.டி கத்தரி வரிசையில் மான்சான்டோவின் தொழில்நுட்பத்தில்  பி.டி. பப்பாளி, பி.டி. அரிசி என வரிசையாய் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. இப்படி பன்னாட்டு வணிகப் பிடிக்குள் நாட்டு இறையாண்மையை அடகுவைக்கும் நிலைப்பாடுதானா, "நெருக்கடியான நிலையிலும் உணவு உறுதிப்பாட்டை அடைதல் எனும் இந்த ஆண்டு சூளுரைக்கு இந்தியாவின் பதில்? "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்" இந்தச் செயல்பாடு இந்திய விவசாய வரலாற்றில் பெரும் தலைக்குனிவு.

பட்டினியைப் போக்கவும் வறுமையைப் போக்கவும் என்ற முகமூடிகளுடன் இந்தியாவுக்குள் நுழைகிறது மான்சான்டோ. இதே காரணத்தைக் கூறித்தான் 40 ஆண்டுகளுக்கு முன் பசுமைப்புரட்சி நுழைந்தது. பட்டினியைப் போக்க வந்த பசுமைப்புரட்சி என்ன செய்தது? இன்று இந்தியாவில் அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா? வறுமைக்கும் ஊட்டச்சத்து குறைவுக்கும் காரணம் பயிர்கள் அல்ல, நம் நாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவு எட்டப்பட்டாலும் 40 கோடி பேர் ஒரு வேளை உணவின்றி வாடுகிறார்கள். இதற்கு ஊனமான அரசியலும், ஊழல் புரையோடிய கொள்கைகளும்தான் காரணம்.

மீண்டும் அதே பட்டினியை காரணமாகக் கூறி இப்போது நுழையப் பார்க்கிறது மான்சான்டோ. பசுமைப்புரட்சி நம் விவசாயிகளை அடிமைப்படுத்தி தற்கொலைக்குத் தள்ளியதைப் போல, மான்சான்டோவின் தந்திரங்கள் இந்தியாவை அடிமைபடுத்தவும் விவசாயிகளை நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றவும் முயற்சிக்கும் திட்டங்கள். முன்பு இதேபோல் ‘பிச்சை கோதுமை வேண்டாம். வீரிய மகசூல் ரகங்களை உங்களுக்கு பரிசாகத் தருகிறோம்’ என்று உள்ளே நுழைந்த "இனிஷியல்" தானியங்களும், அதனுடன் ஒட்டிப்பிறந்த பூச்சிகொல்லிகளும் நம்மையும் நம் மண்ணையும் என்ன ஆக்கின என்று நம் அனைவருக்கும் தெரியும். பலம் குன்றி நோயுற்ற உடலையும், மலடான மண்ணையும் பெற்றோம். இப்போது இன்னும் வலிமையாய், மீட்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத கேடுகளுடன் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் படை வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலக உணவு தின செய்தியில், “உலகமயமாக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக பசியையும், ஊட்டச்சத்தில்லாத மக்கள் கூட்டத்தை பரவலாக்கியும் உள்ளது. வளரும் நாடுகள், பசியில் தவிக்கும் நாடுகள் அனைத்தும் வணிகத்தில், வேளாண் சந்தையில் பெரும் நாடுகளைச் சார்ந்திருப்பதும், உலக பொருளாதார சரிவும் சேர்ந்துதான் முன் எப்போதும் இல்லாத வகையில் பட்டினி கிடப்போர் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது," என்கிறார் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் (டபிள்யு.எச்.ஓ.) தலைவர் டாக்டர் ஜாக்கஸ் டியோஃப். இந்தியாவில் கால் பதிக்கும் முன்பே, தேவையா இந்த உலகமயமாக்கம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியபோது புறக்கணித்த அரசு, இப்போதாவது விழித்துக் கொள்ளுமா?

தன்னிறைவான உணவு உற்பத்தி, விவசாயிகளுக்கு சுயமாக விலை நிர்ணயிக்கும் உரிமை, சமூக, பொருளாதாரப் பின்னணியில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதால் அதற்கேற்ற விவசாய பொருளாதாரக் கொள்கைகளும் மானியங்களும், அதற்கு பொருந்திவரும் நட்பு நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் ஆகியவையே நமக்குத் தேவை. "நாம் என்ன சாப்பிட வேண்டும். நமக்கு என்ன நோய் வர வேண்டும்? நோய் வந்தால் என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்?" என்பதை உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் பணக்காரன் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் ஏன் சம்மதிக்க வேண்டும்?

1930களில் வேளாண்மையில் டிராக்டரை அறிமுகப்படுத்துவது பற்றி மத்திய அரசு விவாதித்துக் கொண்டிருந்தபோது, காந்தியின் பொருளாதார ஆலோசகரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜே.சி. குமரப்பா சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். "டிராக்டர் நல்லாத்தான் உழும். ஆழமாகக்கூட உழும்! ஆனால் சாணி போடாதே!" என்றார் அவர். சாணியைப் பற்றி கவலைப்படாத நம் முன்னோர்கள் அந்த இயந்திரங்களைச் சார்ந்து மண்ணையும் உடலையும் அழித்ததுதான் மிச்சம். எங்கே போனது குமரப்பா போன்றோரின் சிந்தனைகள்? எதிர்காலம் குறித்த தெளிவான விழிப்புணர்வும், நேர்மையான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியும் சாத்தியப்படாத வரை, "நமது உணவு உறுதிப்பாடு" என்பது வெறும் பகல் கனவுதான்.

Pin It