IPL என்ற வார்த்தை இன்று இந்தியாவில் மட்டுமல்ல, அகில உலகத்திலும் பிரசித்தி பெற்ற ஒன்றாகி விட்டது. அமைச்சரை பதவி விலக வைத்தது, அடுத்த காவுக்காக காத்திருப்பது, அரசியல்வாதிகளுக்கு முறைகேட்டில் தொடர்பு, வெளிநாட்டு பணம் முதலீடு என பல வழிகளிலும் பிரச்சனை பூதாகரமாகி நாடாளுமன்றத்தையே நிலை குலையச் செய்யும் அளவுக்கு வந்துள்ளது இந்த ஐ.பி.எல்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) என்ற தனி அமைப்பே இந்திய கிரிக்கெட் அணியின் அதிகார மையம். இதற்கும் இந்திய அரசிற்கும் எந்தவிதமான தொடர்பு இல்லாமலேயே தன்னிச்சையாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஒரு கட்டத்தில் உலகளவில் அசைக்க முடியாத வலுவான அணியாக திகழ்ந்த இந்திய ஹாக்கி அணி தற்போது போதிய நிதி இல்லாததாலும், ஸ்பான்சர்கள் கிடைக்காததாலும், பயிற்சி மேற்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல் நிலவியதாலும், அணியில் விளையாடும் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் வழங்கப்படாததாலும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு தள்ளப்பட்டது உலகம் அறிந்தது.

இதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உலகளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் நிலையில் அந்த அணியினருக்கும் ஸ்பான்சர்கள் போதிய அளவில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆனால் இந்தளவுக்குக் கூட வழி இல்லாமல் மற்ற விளையாட்டுகளும், தடகள வீரர்களும் தவித்து வருகின்றனர். இது தான் இந்தியாவில் கிரிக்கெட் தவிர்த்த மற்ற விளையாட்டுகளின் நிலை.

ஆனால் இந்திய கிரிக்கெட்டில் மட்டும் உலகமே வியக்கும் அளவிற்கு பில்லியன், டிரில்லியன் கணக்கில் அமெரிக்க மதிப்பில் டாலர்கள் கறுப்பும், வெள்ளையுமாக விளையாடி வருகிறது. இப்படி இந்திய கிரிக்கெட்டை வைத்து உலகளவில் வர்த்தகம் கொடி பறக்கத் துவங்கிய நிலையில் இந்தியாவிலும், உலகளவிலும் போட்டிகளை ஒளிபரப்புவதில் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்ட நிலையில் பிசிசிஐ குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக முடிவெடுத்த நிலையில் தொழில் போட்டி முற்றிய நிலையில் இந்திய கிரிக்கெட்டின் நாயகன் ஜாம்பவான் கபில்தேவை தலைவராகக் கொண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) என்ற அமைப்பு புதிதாக துவங்கப்பட்டது.

இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் பொருளாதாரம், மற்றும் அரசியல் தலையீடு என பல்வேறு காரணங்களுக்காக இடம் கிடைக்காமல் தவித்த வீரர்களும், அணியின் முன்னாள் வீரர்களும், ஓரங்கட்டப்பட்ட வீரர்களுடன் பாகிஸ்தான், இலங்கை என பல நாட்டு வீரர்களுடன் தினேஷ் மோங்கியா, ரோகன் கவாஸ்கர் என பிரபல வீரர்களைக் கொண்டு மாநில அளவில் அணிகளை உருவாக்கி 20-20 போட்டிகளை நடத்தினர்.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இந்திய ரசிகர்களிடம் புதுவிதமான கவனத்தை ஈர்க்கத் துவங்கியது. இது பிசிசிஐ கவனத்தை பெரிதும் ஈர்க்கத் துவங்கியது, மேலும் பிசிசிஐ-யில் ஏற்கனவே பங்கெடுத்துள்ள இந்திய பண முதலைகள் தங்களின் வியாபாரத்திற்கு முதலாக கிரிக்கெட்டை மாற்றத் திட்டமிட்ட நிலையில் விதிகளை மீறியும், தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டும் ஐ.சி.எல் அமைப்பிற்கு போட்டியாக ஐ.பி.எல் என்ற இந்தியன் பிரீமியர் லீக் என்ற தன்னிச்சையான அமைப்பு துவங்கப்பட்டது. இதில் வானளாவிய அதிகாரத்தோடு லலித்மோடி தலைவராகவும், ஆணையராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான அணிகளின் தேர்வு ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட நிலையில் பண முதலைகள் தங்களது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியிலும், மேலும், மேலும் கறுப்புகளைச் சேர்க்கும் விதமாகவும் அணிகளை வாங்குவதற்காக போட்டி போட்டனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் என்ற அணியை முகேஷ் அம்பானி அவரது மனைவி நிதா அம்பானியின் பெயரில் 112.9 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு (441 கோடி) வாங்கினார். பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பிரபல மதுபான கம்பெனிகளின் அதிபர் விஜய்மல்லையா 116.6 மில்லியன் (440கோடி) வாங்கினார். ஹைதராபாத் டெக்கான சார்ஜர்ஸ் அணியை பிரபல தொழிலதிபர்கள் வெங்கட்ராம் ரெட்டி, காயத்ரி ரெட்டி ஆகியோர் 107 மில்லியன் (439 கோடி) டாலருக்கு வாங்கினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன் 91.90 மில்லியன் (359 கோடி) டாலருக்கு வாங்கினார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பிரபலமான கன்ஸ்ட்ரக்சன் நிறுவனமான ஜி.எம்.ஆர் குழுமம் 84 மில்லியன் (331கோடி) டாலருக்கு வாங்கியது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை பாலிவுட் நடிகை பிரீத்திஜிந்தா 76 மில்லியன் (300கோடி) டாலருக்கு வாங்கினார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக்கான், ஜூகிசாவ்லா ஆகியோர் 75.1மில்லியன் (296கோடி) வாங்கினர். இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி 67 மில்லியன் (264 கோடி) டாலருக்கும் வாங்கி உலகளவிலான வீரர்களுக்கு முதலாளிகளாக வலம் வந்தனர்.

இதன்பிறகு ஒவ்வொரு முதலாளிகளும் தங்களுக்கு தேவையான தொழிலாளிகளை (வீரர்களை) மீண்டும் ஏலத்தின் அடிப்படையில் விலைக்கு வாங்கினர். இந்த ஏலத்தில் உள்ளுர் வீரர்கள், மற்றும் இந்திய வீரர்களுடன் உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் ஏலம் போனார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1.5 மில்லியன் டாலருக்கு அதிகளவில் ஏலத்திற்கு எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் கிலிகிறிஸ்ட் டெல்லி அணிக்காக 70 லட்சம் டாலருக்கும், இலங்கையின் முரனிதரன் சென்னை அணிக்காக 60 லட்சம் டாலருக்கும், ஜெயவர்த்தனே பஞ்சாப் அணிக்காக 40.75 லட்சத்திற்கும் ஏலத்தில் அணியையும், வீரர்களையும் மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்டனர்.

ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமத்தை சோனி நிறுவனம் 8700 கோடிக்கு பெற்றது. இதைத் தவிர்த்து நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள், பாகிஸ்தான் என உலகின் பல்வேறு நாடுகளில் போட்டியை பல நிறுவனங்கள் எடுத்திருந்தாலும் அதற்குரிய விலை குறித்து இன்றளவும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. டி.எல்.எப் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக 2013 ஆம் ஆண்டு வரையில் 50 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தமாகியுள்ளது. இப்படி ஐ.பி.எல் சம்பந்தப்பட்டு அனைத்துமே அமெரிக்காவின் மில்லியின் கணக்கிலேயே ஒப்பந்தமாகியுள்ளன. இவை தவிர்த்து பல்வேறு செல்போன், மொபைல் நிறுவனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் என ஐ.பி.எல்லுடன் ஒப்பந்தம் செய்யப்படாத பொருட்களே இல்லை. அந்தளவிற்கு ஐ.பி.எல் மிகப் பெரிய வியாபார சந்தையாக மாறியது. இந்த நேரத்தில் தான் உள்நாடு, மற்றும் வெளிநாட்டு கறுப்பு பணங்களும், அரசியல் புள்ளிகளின் பினாமி விளையாட்டுகளும் அரங்கேறத் துவங்கின. போட்டியின் போது ரகிகர்களை குசிப்படுத்த அரைகுறை ஆடைகளுடன் அழகிகளின் ஆபாச ஆட்டங்களும் அரங்கேறின.

முதல் சீசன் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு 46 நாட்களில் 59 போட்டிகள் நடைபெற்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. முதலாவது ஆண்டில் கிடைத்த வெற்றியும், லாபமும் இரண்டாவது சீசன் போட்டிகளை அரசின் எதிர்ப்பை மீறியும் நடத்துமளவுக்கு கொண்டு போய்விட்டது. 2009 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்றுவந்த நிலையில் போட்டிகள் நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் கைவிரித்த நிலையில் போட்டியை நடத்த எதிர்ப்பு கிளம்பின. இந்நிலையில் ஓரிரு மாதங்கள் கழித்து போட்டியை நடத்த தயாரில்லாத சர்வாதிகாரி லலித்மோடி உடனடியாக தென்ஆப்பிரிக்காவில் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு நடத்தியும் காட்டினார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளை ஒளிபரப்ப மல்டிமீடியா பிராட்கேஸ்டர் என்ற நிறுவனம் 8210 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றது. இந்த போட்டிகளை 200 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். அதே நேரம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் எதிர்ப்பு கிளம்பியதால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதன்பிறகு 2010 ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீசன் 3 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதால் போட்டிகளை பிறகு நடத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் வெற்றிபெற்றது சர்வாதிகாரி மோடிதான். பெங்களுரில் போட்டி நடைபெறுவதற்கு முன் வெடிகுண்டுகள் வெடித்தும், பல வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையிலும் எந்தவிதமான சலனமும் இன்றி போட்டி நடத்தப்பட்டது. பொதுமக்களின் உயிர் குறித்து யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

போட்டிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் போட்டிகளுக்கு ஏற்கனவே கிடைத்த வரவேற்பையடுத்தும், வியாபாரத்தில் கிடைத்த லாபமும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்திட திட்டமிட்டது. இதன்படி 2 அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் புனே அணியை பிரபலமான சஹாரா நிறுவனம் 1702 கோடிக்கு எடுத்தது. இதே போல் கொச்சி அணியை ரேண்டஸ்வஸ் நிறுவனம் 1533 கோடிக்கு கோடிக்கு எடுத்தது. இது ஏற்கனவே ஏலம் போன 8 அணிகளின் மொத்த தொகையை விட 2 அணிகளும் சேர்ந்து கூடுதலாக ரூ 365 கோடிக்கு வாங்கின. இதிலிருந்து தான் ஐ.பி.எல்-ல் பெரும் புயல் கிளம்பியது.

கொச்சி அணியின் பங்குதாரர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் காதலி சுனந்தா புஷ்கருக்கு சசிதரூரின் பரிந்துரையின் பேரில் ரூ 70 கோடி மதிப்புள்ள 19 சத பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டதாக புயல் கிளம்பியது. இதில் சிக்கி அமைச்சர் பதவியை சசிதரூர் இழக்க நேரிட்டது. இதனையடுத்து லலித்மோடியை சுற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகள் வெளிவரத்துவங்கின. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.டில் போட்டிகளில் ரூ 100 கோடி டாலர் (4500 கோடி) புழங்குவதாகவும், இது இந்திய அரசிற்கு இணையாக ஒரு குட்டி ராஜ்ஜியம் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. அதேநேரம் கொச்சி அணிக்கான ஏலத்திலிருந்து விலகிக் கொள்ள மோடி ரூ 225 கோடி வரையில் கொடுக்க முன்வந்ததாக லலித் மோடியின் மீது குற்றசாட்டு திரும்பியது.

இதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டு எனும் அம்புகள் பாயத் துவங்கியது. பல அணிகளில் மோடிக்கு பங்கு உண்டு என்றும், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல்படேலின் மகள் ஐ.பி.எல்லில் உயர் பதவி வகித்து வருவதால் சண்டிகரில் இருந்து கோயம்புத்தூருக்கு வரவேண்டிய விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினார் என்றும் பிரபுல் படேலின் மீதும் குற்றச்சாட்டு பாய்ந்தது.

ஐ.பி.எல்லில் அதிகளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும், பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பணங்கள் புழங்குவதாகும், பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், போட்டிகளில் பெருமளவில் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாகவும் கூறி நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால் பாராளுமன்றம் பல நாட்கள் முடங்கியது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறையினரும் திடீரென தூக்கம் கலைத்து தங்களது கணக்கைக் காட்டத் துவங்கியுள்ளனர்.

அதேநேரம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் இது கிரிக்கெட்டே அல்ல என்றும், மைதானத்தின் அளவை குறைத்து பேட்ஸ்மேன்களிடம் பந்தவீச்சாளர்களை காவு கொடுக்கிறார்கள் என்றும் கூறியதோடு, வணிக ரீதியில் விதிகளை மாற்றி வியாபாரமாக்கிவிட்டனர் என்றும், கிரிக்கெட்டை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் அமைச்சரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். தற்போது ஐ.பி.எல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பி.சி.சி.ஐ, ஐ.பி.எல் ஆகியவை கலைக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கம்யூனிஸ்ட், பாஜக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. அதே நேரம் ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படுமானால் இதற்கு அமலாக்கப்பரிவு, வருமானத்துறை, சில அரசியல்வாதிகள், வணிக நிறுவனங்கள், மற்றும் போட்டி போட்டு செய்திகளை வெளியிட்ட இந்திய தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகத் துறையினருக்கு தொடர்பு உண்டு என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஒருவேளை லலித்தோடி ஐ.பி.எல்-லின் தலைவர் மற்றும் ஆணையாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு புதிய ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டு அவருக்குள்ள அதிகாரத்தை குறைத்து பிசிசிஐ யின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தாலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தொடரவே வாய்ப்புள்ளது. அதே நேரம் காலத்தின் தேவையில் இன்னும் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுவதோடு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம், மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இரு அமைப்புகளையும் உடனடியாக கலைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் மட்டுமே கிரிக்கெட்டை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டுகளையும் காப்பாற்ற முடியும், இல்லையேல் இந்திய ஹாக்கி அணியின் நிலை தான் மற்ற விளையாட்டுக்களுக்கும்.

- மு.ஆனந்தகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It