சாதி அமைப்பைப் பாதுகாக்க, சிலர் உயிரியல் கருத்துகளைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மையையும் காப்பதே சாதியின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இனவியலாளரின் கருத்தோ வேறு மாதிரி இருக்கிறது. கலப்பற்ற ஒரு மனித இனம் எங்கும் இல்லை. இதுவரையில் உலகின் எல்லா பகுதிகளிலும் எல்லா இனங்களுக்கிடையிலும் கலப்பு இருந்தே வந்துள்ளது என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, இந்துக்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். ‘இந்திய சமூகத்தில் அந்நியர் கலப்பு' என்னும் நூலில் திரு. பந்தார்க்கர் கூறுகிறார்:

"அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் இல்லவே இல்லை. சத்திரிய வகுப்பினரிடையே மட்டுமல்ல; தங்கள் சாதி எவ்வித அந்நிய ரத்தக் கலப்புக்கும் ஆளாகவே இல்லை என்கிற ஆனந்த மாயையிலே ஆழ்ந்து கிடக்கிற பார்ப்பன சாதியிலும் கூட, அந்நிய ரத்தக் கலப்பு இருக்கவே செய்கிறது.''

சாதிப்பாகுபாடும் இனப் பாகுபாடும் ஒன்றாகாது

சாதி அமைப்பானது, இனக்கலப்பைத் தடுக்கவோ, ரத்தத் தூய்மையைக் காப்பதற்கோதான் உருவானது என்று கூற முடியாது. உண்மையில், இந்திய இனங்கள் தமக்குள் ரத்தத்திலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்ததற்கு, நெடுங்காலத்துக்கும் பின்னர்தான் சாதி அமைப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. சாதிப் பாகுபாடு என்பது, உண்மையில் இனப்பாகுபாடே என்பதும், பல்வேறு சாதிகளும் பல வேறுபட்ட இனங்களே எனக்கொள்வதும் - உண்மைகளை அப்பட்டமாகத் திரித்துக் கூறுவதே ஆகும்.

பஞ்சாப் பார்ப்பனருக்கும், சென்னை பார்ப்பனருக்கும் இடையில் என்ன இன ரீதியான ஒற்றுமை காணப்படுகிறது? வங்காளத்தில் உள்ள தீண்டத்தகாதோருக்கும், சென்னையில் உள்ள தீண்டத்தகாதோருக்கும் இடையே - என்ன இன ஒற்றுமை காணப்படுகிறது? பஞ்சாப் பார்ப்பனருக்கும் பஞ்சாப்பின் ‘சமர்' (Chamar) சாதிக்காரருக்கும் இடையே என்ன இன ரீதியான வேறுபாடு இருக்கிறது? சென்னை பார்ப்பனருக்கும் சென்னை பறையருக்கும் உள்ள இன ரீதியான வேறுபாடுதான் என்ன? பஞ்சாப் பார்ப்பனரும் பஞ்சாப் சமரும் - இனத்தால் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. சென்னை பார்ப்பனரும் சென்னை பறையரும் இனத்தால் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களே.

சாதி அமைப்பு, இன ரீதியான பிரிவினையைக் காட்டுவதாக இல்லை. ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களின் சமூக ரீதியான பிரிவினையாக சாதி இருக்கிறது. சாதி அமைப்பை இன ரீதியான பிரிவினை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால், ஒரு கேள்வி எழுகிறது. கலப்பு மணத்தின் வாயிலாக வேறுபட்ட இனங்களைச் சார்ந்த மக்களுக்கு இடையே - இனக்கலப்பும் ரத்தக்கலப்பும் ஏற்பட அனுமதித்தால் என்ன கெட்டுவிடும்? மனிதர்கள் சந்தேக மின்றி மிருகங்களிடமிருந்து வேறுபட்டவர்கள்தான். மனிதனும் மிருகங்களும் வெவ்வேறு உயிரினங்கள் என்பதை அறிவியலே ஒத்துக் கொள்கிறது.

ஆனால், இனத்தூய்மையில் நம்பிக்கை கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் கூட, வெவ்வேறு இனங்களை (Races) வெவ்வேறு உயிரினங்கள் (Species) என்று கூறுவதில்லை. அவை ஒரே மனித இனத்தின் பல்வேறு வகைகள் மட்டுமே. வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்களும் தங்களுக்கு இடையில் மணம் புரிந்து தலைமுறையைப் பெருக்க முடியும். அந்தத் தலைமுறையும் இனப்பெருக்கம் செய்யும் திறன் உள்ளதாக இருக்கும்; மலடாக இருக்காது. பாரம்பரியம், இனமோபாட்டியல் தொடர்பான ஏராளமான முட்டாள்தனமான கருத்துகள், சாதி அமைப்புக்கு ஆதரவாகப் பரப்பப்பட்டு வருகின்றன.

கலப்பு மணத்திற்குத் தடை எது?

அறிவார்ந்த இனச்சேர்க்கை மூ லம் ஓரினத்தை மோபடுத்துவது என்பதுதான், இனமோபாட்டியலின் அடிப்படைக் கொள்கை. சாதி அமைப்பு இக்கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது எனில், யார்தான் அதை எதிர்ப்பார்கள்? ஆனால், சாதி அமைப்பில் இதுபோன்ற சிறந்த இனச் சேர்க்கை எப்படி சாத்தியமாகும்? பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் கலப்பு மணம் புரிவதைத் தடுக்கும் எதிர் மறை அமைப்பாகவே சாதி அமைப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற அமைப்பாக அது இல்லை.

சாதியின் தோற்றத்துக்கு இனமோ பாட்டியலே அடிப்படை என்றால், உட்சாதிகளின் தோற்றுவாய்க்கும் அது தான் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால், உட்சாதிகளின் தோற்றுவாய்க்கு இனமோபாட்டியலே அடிப்படை என யாரேனும் துணிந்து கூற முடியுமா? அவ்வாறு வாதிடுவது அபத்தமாகவே முடியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சாதி என்பது இனத்தைக் குறிக்கிறது என்றால், உட்சாதிகளின் வேறுபாடு இன வேறுபாடுகளைக் குறிப்பதாக இருக்க முடியாது. ஏனெனில், பல்வேறு உட்சாதிகளும் ஒரே இனத்தின் உட்பிரிவுகள்தான். அப்படியானால், உட்சாதிகளுக்கு இடையே கலப்பு மணத்துக்கும் சமபந்திக்கும் எதிராக உள்ள தடை, இனத் தூய்மையையோ, ரத்தத் தூய்மையையோ காக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது. உட்சாதிகளின் தோற்றுவாய்க்கு இனமோபாடு என்பது அடிப் படையாக இருக்க முடியாது என்ற நிலையில், சாதியின் தோற்றுவாய்க்கு இனமோபாடே அடிப்படை என்று முடிவுகட்டுவது எந்த விதத்திலும் அர்த்தமற்றது ஆகும்.

சாதியின் தோற்றுவாய்க்கு இனமோபாடே அடிப்படை என்றால், கலப்புமணம் தடை செய்யப்பட்டு இருப்பது ஏன் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால், சாதிகளுக்கு இடையிலும் உட்சாதிகளுக்கு இடையிலும் சமபந்தி தடை செய்யப்பட்டு இருப்பதன் நோக்கம் என்ன? சமபந்தியால் ரத்தத் தூய்மை கெட்டு விடுமா? எனவே, அது இனத்தின் மோபாட்டுக்கோ, சீர்கேட்டுக்கோ காரணமாக இருக்க முடியாது.

சாதியின் தோற்றுவாய்க்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, இன மோபாடே சாதிக்கு அடிப்படை என்று கூறுகிறவர்கள், அறவே அறிவியல் பூர்வமற்ற சாதி அமைப்புக்கு, அறிவியல் சாயம் பூசவே முயல்கிறார்கள். பரம்பரை இயல்புகளின் விதிகள் பற்றிய திட்டவட்டமான அறிவை நாம் பெறாதவரை, இனமோபாட்டியல் என்பது, இன்றைய நாளிலும்கூட நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்து விடும்.

பேராசிரியர் பேட்சன், ‘பரம்பரைக் குணங்கள் பற்றிய மெண்டலின் கொள்கைகள்' என்னும் நூலில் கூறுகிறார்:

"ஒரு குறிப்பிட்ட வம்சாவழியின் உயர் குணங்கள், பரம்பரை பரம்பரையாக அந்த வம்சாவழியைச் சேர்ந்த மக்களை - ஒரு குறிப்பிட்ட முறையில்தான் வந்தடைகின்றன என்று கூற முடியாது. இத்தகைய உயர் குணங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்த உடலாற்றலும் மக்களை வந்தடைவது, ஒரு மரபியல் அம்சத்தைப் பெற்று இருப்பதனால் மட்டும் அல்ல. வேறு பல காரணிகளும் ஒன்றிணைவதால்தான்.''

வக்கிரமுள்ள தரங்கெட்ட நிலையில் இந்துக்கள்

சாதி அமைப்பு இனமோபாட்டை அடிப்படையாகக் கொண்டது என வாதிடுவது, இன்றைய நவீன விஞ்ஞானிகளுக்கே இல்லாத பாரம்பரியம் பற்றிய அறிவு, இன்றைய இந்துக்களின் மூதாதையருக்கு அன்றே இருந்தது என்று ஏற்றிக் கூறுவதே ஆகும். பழத்தைப் பார்த்துதானே அதைத் தந்த மரம் எப்படிப்பட்டது என மதிப்பிட முடியும்? சாதி, இனமோபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றால், சாதி அமைப்பு எப்பேர்ப்பட்ட மனிதர்களை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால், உடல்கூறியல் அடிப்படையில் இந்துக்கள் மூன்றாம் தரத்தினராகவே இருக்கிறார்கள். உயரமும், உடல் திறனும் குறைந்த குள்ளர்களாக, உடல் ஆற்றல் நிரம்பத் தேவைப்படுபவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் 100க்கு 90 பேர் ராணுவத்துக்கு அருகதை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இன்றைய நவீன விஞ்ஞானிகள் கூறும் ‘இனமோபாட்டியலை' (eugenics) சாதி அமைப்பு அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் சமூக அந்தஸ்தைச் செயல்படுத்தும் வல்லமை பெற்றவர்களும், தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் மீது அந்த அமைப்பைத் திணிக்கும் அதிகாரம் பெற்றவர்களுமான வக்கிர மனம் படைத்த இந்துக்களின் ஆணவத்தையும் சுயநலத்தையுமே சாதி அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது.

6

சாதியினால் பொருளாதார மோபாடு முடக்கப்பட்டுள்ளது. சாதி, இன மோபாட்டுக்கு வழிவகுக்கவில்லை. அவ்வாறு செய்யவும் சாதியால் இயலாது. இந்துக்களை முற்றிலும் சீரழித் துச் சின்னா பின்னமாக்கியதுதான் சாதி செய்த ஒரே செயல்.

முதலாவதாகவும் முக்கியமானதாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இந்து சமூ கம் என்பதே ஒரு கட்டுக் கதை என்பதைத்தான். ‘இந்து' என்கிற பெயரே ஓர் அந்நியப் பெயர்தான். உள்ளூர் மக்களிடம் இருந்து தம்மை இனம் பிரித்துக் காட்ட முகமதியரால் அளிக்கப்பட்ட பெயரே இந்துக்கள் என்பது. முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து' என்கிற சொல்லே காணப் படவில்லை. இந்துக்களுக்கு தாங்கள் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாது இருந்த காரணத்தால், தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உண்மையில், இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை; இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே.

குழு உணர்வற்ற சாதி இந்துக்கள்

ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஓர் கூட்டமைப்பாகக்கூட ஆகவில்லை. இந்து - முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்கள் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவது இல்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளவுமே முயல்கிறது.

ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதியினரோடு மட்டும் உணவருந்துவது மட்டுமல்ல, தங்கள் சாதியினரோடு மட்டும் மண உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தங்கள் சாதிக்கென தனித்துவமான ஓர் உடையையும் தெளிவாக வரையறுத்துள்ளனர். இந்திய நாட்டைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் எண்ணற்ற விதங்களில் ஆடை அணிந்து, சுற்றுலா பயணிகள் வேடிக்கைப் பார்க்கத்தக்க காட்சிப் பொருளாக நிற்பதற்கு வேறென்ன விளக்கம் இருக்க முடியும்? உண்மையில், உண்மையான இந்து என்பவன், எவருடனும் தொடர்பு கொள்ள விரும்பாத ஒரு கிணற்றுத் தவளையாகவே இருக்கவேண்டும்.

சமூகவியலாளர் கூறுகிற குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அøனவரும் இந்துக்களே என்கிற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கிற உணர்வு, சாதி உணர்வுதான். இதன் காரணமாகத்தான் இந்துக்களை - ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முடியவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால், இந்தியர்கள் பலர் நாட்டுப்பற்று காரணமாக, இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

"வெளிப்படையாகத் தெரிகிற ஆயிரம் வேற்றுமைகளுக்கு அடியில் - பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமையே இந்துக்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுவதாக இருக்கிறது'' என்று அவர்கள் கூறுகிறார்கள். பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதால் மட்டுமே - இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒப்புக்கொள்வது, ஒரு சமூகத்தை உருவாக்கும் அடிப்படைக் காரணிகளையே தவறாகப் புரிந்து கொள்வது ஆகும்.

நெடுந்தொலைவில் இருப்பதால், ஒருவன் தன் சமூகத்தின் உறுப்பாக இல்லாமல் போவதும் இல்லை. பல மனிதர்கள் நெருக்கமாக வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகமாக ஆகிவிடவும் மாட்டார்கள். இரண்டாவதாக, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்தத் தன்மை மட்டுமே - மனிதர்களை ஒரே சமூகமாக ஒன்றிணைக்கப் போதுமானது அல்ல. செங்கல்லைக் கைமாற்றித் தருவதைப் போல, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் போன்றவற்றையும் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாருக்குக் கைமாற்றலாம். அதனால் அந்த இரு கூட்டத்தாருக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தோன்றலாம்.

எது நம்மை ஒரே சமூகமாக்கும்?

பண்பாடு தொடர்பின் மூலம் பரவுகிறது. அதனால்தான் பல்வேறு பூர்வ குடிகள் நெருக்கமாக வாழாத போதிலும் கூட பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் முதலானவற்றில் அவர்களிடையே ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால், பூர்வ குடிகள் இடையே இந்த ஒற்றுமை இருப்பதை மட்டும் கணக்கில் கொண்டு, பூர்வ குடிகள் எல்லோருமே ஒரே சமூகத்தினர் என்று எவராலும் கூற இயலாது. ஏனெனில், ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்று மட்டுமே - சமூகம் ஒன்றை உருவாக்கப் போதுமானது ஆகாது. தங்களுக்குள் பொதுவான விஷயங்களைக் கொண்டிருக்கும்போதுதான் மனிதர்கள் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மனிதர்கள் ஒத்த தன்மையைப் பெற்றிருப்பது என்பது, தமக்குள் பொதுவான விஷயங்களைப் பெற்றிருப்பது என்பதில் இருந்து முழுவதும் மாறுபட்ட வேறொரு விஷயமே ஆகும்.

மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களை அடைகிறார்கள். அதாவது சமூகமானது மனிதர்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது. மற்றவர்களுடைய செயல்பாடுகளோடு ஒத்துப் போகிற முறையில் மனிதர்கள் செயல்பட்டால் மட்டும் போதாது. ஒத்தத் தன்மையுடையதாக இருந்தாலும், இணையான நடவடிக்கைகள் மனிதர்களை சமூகமாக ஒன்றிணைக்காது. பல சாதியைச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள், ஒரே மாதிரியாக இருப்பதே இவ்வுண்மையை நிரூபிக்கும். இருந்தும் அந்த ஒரே மாதிரியான திருவிழாக்கள், அவற்றை இணையாகக் கொண்டாடும் பல்வேறான சாதிகளை ஒன்றுபட்ட ஒரே சமூகமாக இணைத்து விடுவதில்லை. அப்படி இணைக்கப்பட வேண்டுமானால், அவர்கள் ஒரு பொதுவான நடவடிக்கையில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம். அதன் மூலம் மற்றவர்களின் மனதில் எழும் அதே உணர்வுகள், இவர்களுக்குள்ளும் எழும்புவதும் அவசியம்.

கூட்டு நடவடிக்கையில் தனிமனிதனை - பங்கு பெறவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் போதுதான் - அந்தக் கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியை தன் தோல்வியாகவும் அவன் உணர்வான். இதுவே உண்மையில் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமூகமாக ஆக்கும் விஷயம் ஆகும். சாதி அமைப்பு, கூட்டு நடவடிக்கையைத் தடுக்கிறது. கூட்டு நடவடிக்கையைத் தடுப்பதன் மூலம் சாதி அமைப்பு, இந்துக்களை ஒன்றிணைந்த வாழ்க்கை முறையும் தன் உணர்வும் கொண்ட ஒரு சமூகமாக உருக்கொள்ள முடியாமல் தடுக்கிறது.
Pin It