இந்துக்கள் அடிக்கடி கூறும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. ஒரு கூட்டத்தார் தனித்தும் விலகியும் வாழ்கின்றனர் என்றும், அக்கூட்டத்தாரிடம் சமூக விரோதத் தன்மை உள்ளது என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்த சமூக விரோதத் தன்மையானது தங்களுடைய சாதி அமைப்பின் மிக இழிவான அம்சம் என்பதை இந்துக்கள் வசதியாக மறந்து விடுகின்றனர். கடந்த உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு வசைபாடினார்களோ, அதே அளவுக்கு இந்தியாவில் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியாரை வசைபாடி மகிழ்கின்றனர்.

இந்துக்களின் இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் சாதி வம்சாவழிக் கதைகளில், ஒரு சாதிக்கு உயர்ந்த பிறப்பிடமும் மற்ற சாதிகளுக்கு இழிவான பிறப்பிடமும் கற்பிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இலக்கியங்களுக்கு ‘சாஹியத்ரி கண்டம்' என்பது பேர்போன ஓர் எடுத்துக்காட்டு. சமூக விரோத மனோபாவம் என்பது சாதியோடு நின்றுவிடவில்லை. அது இன்னும் ஆழமாகப் பரவி உட்சாதிகளுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவையும் கெடுத்துவிட்டது. என் மாகாணத்தில் ‘கோலக்' பார்ப்பனர்களும் ‘தியோருக' பார்ப்பனர்களும் ‘கரட' பார்ப்பனர்களும் ‘பால்கி' பார்ப்பனர்களும் ‘சித்பவன்' பார்ப்பனர்களும் தங்களை பார்ப்பன சாதியின் உட்பிரிவுகள் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இடையிலும் சாதித் துவேஷம் இருக்கிறது.

பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்கும் இடையே உள்ள காழ்ப்புணர்ச்சி, எந்த அளவுக்குக் குறிப்பிடத்தக்கதாகவும் கொடுமையானதாகவும் இருக்கிறதோ - அதே அளவுக்கு பார்ப்பன உட்பிரிவுகளுக்குள்ளும் காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது. இதில் புதுமை ஒன்றும் இல்லை. எங்கெல்லாம் ஒரு கூட்டம் ‘தனக்கென்று பிரத்தியேக நலன்களை'க் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் இந்த சமூக விரோத மனப்பான்மை காணப்படும். இந்த சமூக விரோத மனோபாவமே அக்கூட்டத்தார் மற்ற கூட்டத்தாரோடு முழுமையாகக் கலந்துறவாடுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் அது தான் பெற்றுள்ள பிரத்தியேக நலன்களைக் காத்துக் கொள்ள முடிகிறது. இதுவே அதன் முதன்மையான நோக்கமும் ஆகும்.

சாதிகளின் சுயநல மனப்பான்மை

நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அதுபோலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதாருக்கு எதிராக தங்கள் "சொந்த நலன்களை'க் காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராக தங்கள் ‘சொந்த நலன்களை'க் காத்துக் கொள்வதே - பார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை; தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் - பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.

சாதி அøமப்பில் வருந்தத்தக்க மற்றொரு அம்சம் உண்டு. முன் காலத்தில் இங்கிலாந்தில் ‘ரோஜா யுத்தமும்' ‘கிராம்வெல் யுத்தமும்' நடந்தபோது, இன்றைய ஆங்கிலேயரின் மூதாதையர் அப்போர்களில் ஆளுக்கொரு தரப்பில் நின்று போரிட்டனர். ஆனால், அவர்களின் சந்ததியினரோ ஒருவருக்கொருவர் எந்தவிதமான வெறுப்பையும் வன்மத்தையும் கடைப்பிடிக்கவில்லை. ஆக, பகை மறக்கப்பட்டு விட்டது. ஆனால், அன்றைய பார்ப்பனர்களின் மூதாதையர் சிவாஜியை அவமதித்ததற்காக இன்றைய பார்ப்பனர்களை மன்னிக்க, இன்றைய பார்ப்பனர் அல்லாதவர்களால் முடியவில்லை. முற்காலத்தில் பார்ப்பனர்கள் ‘காயஸ்தர்' களை அவமதித்ததால், இன்றைய ‘காயஸ்தர்'கள் பார்ப்பனர்களை மன்னிப்பதில்லை.

இந்த வேறுபாட்டுக்குக் காரணம்தான் என்ன? சந்தேகமில்லாமல் சாதி அமைப்புதான் காரணம். சாதிகளும் சாதி உணர்வும் மக்கள் பழம்பøகயை மறக்காமல் காத்துவரக் காரணமாகிவிட்டன. மக்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டன.

8

பழங்குடியினரின் நாகரீகமற்ற நிலைக்கு யார் காரணம்?

விலக்கப்பட்ட பிரதேசங்கள் எவை, ஓரளவு இணைக்கப்பட்ட பிரதேசங்கள் எவை என்பது பற்றி அண்மையில் நடந்த விவாதம், இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களின் நிலை பற்றி கவனம் செலுத்தத் தூண்டியுள்ளது. அவர்களின் எண்ணிக்கை, குறைந்த பட்சம் 130 லட்சமாக இருக்கலாம். புதிய அரசியல் சாசனத்தில் அவர்களைச் சேர்க்காமல் விலக்கி வைப்பது முறையா இல்லையா என்பது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரீகத்தில் திளைத்து வருவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு தேசத்தில், பழங்குடிகள் இன்றைய நாள்வரை - தம் தொடக்ககால நாகரீகமற்ற நிலையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.

அவர்கள் நாகரீகம் அற்றவர்களாய் இருப்பதோடு மட்டுமல்லாது, அவர்களில் சிலர் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலின் காரணமாக குற்றப்பரம்பரையினர் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு நாகரீக வளர்ச்சிக்கு மத்தியிலும் 130 லட்சம் பேர் இன்னும் நாக ரீகம் அற்றவர்கள் ஆகவும் குற்றப் பரம்பரையினராகவுமே வாழ்க்கை நடத்த வேண்டிய அவலம் உள்ளது.

ஆனால், இந்துக்கள் இதற்காக ஒருபொழுதும் வெட்கித் தலைகுனிவதில்லை. இது வேறு எங்கும் காண முடியாத ஒரு நிகழ்வாகும். இந்த வெட்கக்கேடான நிலைக்குக் காரணம் என்ன? இந்தப் பழங்குடியினரை நாகரீக மக்களாக ஆக்கவும், கண்ணியமான ஒரு வாழ்க்கையை மேற்கொள்ளும்படியாக அவர்களை வழி நடத்திச் செல்லவும், எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்? பழங்குடியினர் பிறவியிலேயே மூடர்களாக அமைந்துவிட்டதுதான் அவர்களின் நாகரீகமற்ற நிலைக்குக் காரணம் என்று கூற இந்துக்கள் முற்படலாம். பழங்குடியினரை நாகரீக மக்கள் ஆக்கவும் மருத்துவ உதவி செய்யவும் சீர்திருத்தவும் நல்ல குடிமக்கள் ஆக்கவும் - இந்துக்கள் எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளாததுதான் - பழங்குடியினர் அநாகரீக மக்களாகவே நீடிக்கக் காரணம். இதை ஒப்புக் கொள்ள இந்துக்கள் மறுக்கலாம்.

சாதியுடைமையை இழக்க இந்துக்கள் தயாரில்லை

ஒருவேளை ‘கிறித்துவ மிஷினரி'கள் பழங்குடியினருக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை, இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்÷வாம். அவனால் அதைச் செய்ய முடியுமா? முடியாது என்றே பணிவுடன் கூறுகிறேன். தொல்குடியினரை நாகரீக மக்களாக ஆக்குவது என்றால், அவர்களை உங்கள் உறவினராக நடத்த வேண்டும். அவர்களில் ஒருவராக அவர்கள் மத்தியில் வாழ வேண்டும். தோழமை உணர்வை வளர்க்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அவர்களை நேசிக்க வேண்டும். இப்படிச் செய்வது இந்து ஒருவனுக்கு எப்படி சாத்தியம் ஆகும்? தன் சாதியைப் பேணிக் காப்பதே ஒவ்வொரு இந்துவின் வாழ்க்கையின் முழு லட்சிய மாகும். தன் சாதி என்பது, ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்க முடியாத பெரும் சொத்து. ஆக, எப்பாடுபட்டாவது எந்த ஓர் இந்துவும் அதைக் காப்பாற்றியே தீர வேண்டும்.

வேத காலத்து ஆரியர் அல்லாதவர்களின் சந்ததியினரான பழங்குடிகளோடு தொடர்பு கொள்வதன் மூலம், சாதி என்ற உடைமையை இழக்க எந்த ஒரு இந்துவாலும் முடியாது. தாழ்ந்து கிடக்கிற மனித இனத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமை பற்றிய உணர்வை, இந்து ஒருவனுக்கு எவராலும் கற்பிக்க முடியாது என்று நான் கூறவில்லை. வேறு எந்தக் கடமை உணர்வும் ஓர் இந்துவை தன் சாதியைக் காப்பது என்கிற கடமையை மீறும்படிச் செய்ய முடியாது என்பதுதான் - இங்குள்ள இக்கட்டான நிலைமை. இவ்வளவு நாகரீக வளர்ச்சிக்கு மத்தியிலும் நாகரீகம் அற்ற மக்கள், நாகரீகமற்றவர்களாகவே நீடிப்பதை - எந்தவித வெட்கமோ, வேதனையோ, மனச்சாட்சியின் உறுத்தலோ இல்லாமல் இந்து மதத்தவர் அனுமதிப்பது ஏன் என்ற கேள்விக்கு சாதிதான் சரியான விளக்கமாக இருக்கிறது.

பழங்குடியினரின் இந்த நிலைமை, எப்படி ஓர் உள்ளார்ந்த ஆபத்துக்கு இடமாக இருக்கிறது என்பதை இந்துக்கள் உணரவே இல்லை. இவர்கள் நாகரீகம் அற்றவர்களாகவே நீடித்தால், இந்துக்களுக்கு இவர்களால் எவ்வித இடைஞ்சலும் இருக்காது. ஆனால், இந்து அல்லாத மற்ற மதத்தவர்கள் இவர்களை வென்றெடுத்து தம் மதத்தில் சேர்த்துக் கொண்டு விட்டால் - இந்துக்களின் பகைவர்களுடைய தொகை பெருகி விடும். இந்த நிலைமை ஏற்பட்டால், இந்துக்கள் தங்களையும் தங்கள் சாதி அமைப்பையும்தான் நொந்து கொள்ள வேண்டும்.
Pin It