நம் நாட்டில் ஆரவாரங்களுக்குப் பஞ்சமிருப்பதில்லை. எதன் பொருட்டேனும் ஏதாவதொரு ஆரவாரம் அவ்வப்போது நிகழ்த்தப்படுவது, நமது ஜனநாயகத்தின் சிறப்பு. இத்தகைய ஆரவாரங்களுக்கிடையே மனித உரிமைகள் தொடர்புடையவை பற்றிச் சிந்திப்பதற்கு அப்படியொன்றும் நமக்கு நேரம் கிடைத்து விடுவதில்லை. மனித உரிமைப் பிரச்சினைகளில், மிக முக்கியமான குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அதைப் புகட்டும் முறைகள் தொடர்பாக அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து அவ்வப்போது சிறு சிறு முனகலோடு சமூகமும், ஆட்சியதிகாரமும் அமைதி காக்கிறது என்பதே உண்மையாகும்.Metric students

குழந்தைகளுக்கான உளவியல் சிக்கல்களைப் பெரியவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே நம் சமூக அமைப்பின் அவலம். தான் எடுக்க முடியாத இடத்தில் தன் பந்து விழுந்து விட்டால் அது குழந்தைக்கு நேரும் ஒரு பிரச்சினை. ஆனால் பெரியவர்கள் தனது நிலையிலிருந்தே அந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்துகிறார்கள். இன்றைய நிலையில் குழந்தைகளுக்கான கல்வி தொடர்பானவற்றிலும் இப்படித்தான் நேர்ந்து வருகிறது. இன்றைய நிலையில் எத்தனை ஆசிரியர்கள், குழந்தைகளின் உளவியலை அறியும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள்? எத்தனை குழந்தைகளால் தமது பிரச்சினைகளை பெற்றோரிடமும், பிறரிடமும் பகிர்ந்துகொள்ள முடிகிறது? கல்வி முறையில் - மிகக் குறிப்பாக நமது இந்திய மெட்ரிக் கல்வி முறையில் - ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளுக்கு நேர்ந்துள்ள மொழிச் சிக்கல் மற்றும் மொழிச் சுமை குறித்து ஏதேனும் தீர்வு காணப்பட்டுள்ளதா? முதுகெலும்பு முறிய குழந்தைகள் சுமக்கும் பாடப் புத்தகப் பொதிச் சுமையை அறிவைப் பயன்படுத்திக் குறைக்க முடியாதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. ஆனால் மெட்ரிக் கல்வி தொடர்பான வணிகங்கள் மட்டும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இங்கு நோக்கம் வணிகம்தானே தவிர கல்வி அல்ல.

மெட்ரிக் மனோபாவம், எனப் பெயர் சூட்டத்தக்க ஒரு வினோதமான மனோபாவம் தற்போது நமது தமிழகத்தில் வெகுவேகமாகப் பரவி வருகிறது. அதன்படி பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களும் படித்திருக்க வேண்டும். குழந்தைகள் கண்டிப்பாகப் பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்ள வேண்டும் (தமிழில் பேசியதற்காக சில மெட்ரிக் பள்ளிகள், குழந்தைகளை அநாகரிகமான முறையில் தண்டித்துள்ளன) குழந்தைகளும் மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வெறியூட்டப்பட்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பன போன்று மெட்ரிக் மனோபாவங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

பெற்றோர்கள் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையில் குரூரமான இரண்டு உள்நோக்கங்கள் உறைந்துள்ளன. ஒன்று, குழந்தைக்குப் படிப்பு சொல்லித்தர வேண்டிய வேலையைப் பெற்றோர்கள் தலையிலும் சுமத்தி, அவர்களையும் நிற்க வைத்துக் கேள்வி கேட்கலாம். மற்றொன்று, ஏதோ ஒரு வழியாக முதன்முதலாக, முதல் தலைமுறையாக மெட்ரிக் பள்ளிக்குள் நுழைவோரை அங்கீகரித்து ஆயிரக்கணக்கில் தமக்குப் பணத்தைக் கட்டிவிட்டு தன் பிள்ளைகளுக்குத் தானே சொல்லித் தருகிற அல்லது டியூஷன் வைத்துச் சொல்லித் தருகிற பெற்றோர்களே நமது மண்ணின் அதிநவீன மெட்ரிக் பள்ளிகளுக்குத் தேவைப்படுகின்றனர். அப்படிப்பட்ட பெற்றோர்களால் வளமான வளர்ச்சி கண்டு தழைத்திருக்கும் பள்ளிகள் நிறையவே உண்டு.

பங்குச் சந்தை உலகில் ஒரு நிறுவனத்தில் பங்கை வாங்கினால் கொஞ்ச நாளில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து நமக்கு லாபம் கிடைக்கலாம் அல்லது நட்டமும் ஏற்படக்கூடும். ஆனால் பல பள்ளிகளில் எல்லாக் கட்டணத்திற்கும் அப்பாற்பட்டு நன்கொடை எனும் பெயரில் ஒரு கட்டாய வசூல் நடக்கிறது. ஒரு நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் உரிமை கொண்டாடி அனுபவிக்கப் போகிற சொத்துக்களை உருவாக்க நாங்கள் ஏன் நன்கொடை தரவேண்டும்? இதன் சொத்துகள் பணம் கொடுத்த பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்படுமா? பள்ளிக்கென்று ஒரு கட்டடம்கூட கட்டிக் கொள்ள முடியாத நீங்கள் எல்லாம் எதற்குப் பள்ளி நடத்த முன்வருகிறீர்கள்? என்பன போன்ற கேள்விகளை எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. மகளுக்காக மருமகன் குடும்பத்தாரிடம் அடிமையாக இருப்பதும் தம் பிள்ளைகளுக்காகப் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் கொடுத்துவிட்டுப் பணிவதும் பெற்றோர்களின் இயல்பாகி விட்டது.

ஒரு வலுவான நிறுவனத்திற்கு எதிராகத் தனியாக நின்று கேள்வி கேட்பதற்கும், அப்படியே கேட்டாலும் தன் பிள்ளையைப் பழிவாங்கிவிடுவார்களோ என்கிற அச்சத்தாலும் பெருவாரியான பெற்றோர்கள் அமைதி காக்கின்றனர். பள்ளியின் வலுக் காட்டாயத்திற்கும் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கும் ஆளாகி, இன்றைய பள்ளிக் குழந்தைகள் இருதலைக் கொள்ளி எறும்பாகி, மனச்சுமையடைகின்றனர்.

தாய்மொழியல்லாத வேறொரு மொழியின் வாயிலாகக் கல்வி பயின்று மதிப்பெண்களைப் குவிப்பது அப்படியொன்றும் சுலபமான காரியமல்ல. தமது தாய்மொழியில் குழந்தைகள் இயல்பாகச் சிந்தித்துக் கேள்வி எழுப்புகிற ஆற்றலை, பயிற்றுமொழியான வேறொரு மொழி அழித்து விடுகிறது. அதனால்தான் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர்,

அப்துல் கலாம் போன்ற பல்வேறு தரப்பு அறிஞர்களும் கல்வியாளர்களும் குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கல்வி புகட்ட வேண்டுமென்று நெடுங்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் இன்றைய வணிக முறைக் கல்விக் கலாச்சாரத்தால் அவர்களது குரல் இன்னும் எடுபடாமலிருக்கிறது. 1998ஆம் ஆண்டு தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி மிகப் பெரியதொரு அறப்போராட்டத்தைத் தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்தியது. ஆயினும் இன்றைய கல்வி உலகில் வணிக வெறியும், ஆங்கில மோகமுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இன்றைய நமது மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகள் பணயக் கைதிகளாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான் கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த இயலாத நிலையிலிருக்கும் பிள்ளைகளைச் சில பள்ளிகளில் பாடம் நடக்கும்போது வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்துகின்றனர். தமது பிள்ளை அனுபவிக்கும் தண்டனையைத் தவிர்க்க, பெற்றோர்கள் எப்பாடுபட்டேனும் கட்டணத்தைக் கட்டிவிடுகின்றனர். எதன் பொருட்டேனும் தலைமையாசிரியரையோ அல்லது பள்ளி முதல்வரையோ பார்த்துவிட்டு வரச் சொல்வது வகுப்பாசிரியர்களின் கூடுதல் மிரட்டல் முறையாக இருக்கிறது. தலைமையாசிரியரோ பெற்றோரை வரச்சொல்லி, கட்டளை ஓலை அனுப்புவார். பெற்றோரும் நிம்மதி கெட்டு, பள்ளிவாசலில் தவங்கிடப்பது அடுத்து நடக்கும். இது போன்ற நடவடிக்கைகளால் குழந்தைகளின் மனநிலை எந்தக் கதிக்கு ஆளாகும் என்பது குறித்துக் கடுகளவும் சிந்திப்பதில்லை.

தேர்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையே தோல்வியடைந்துவிடும் என்கிற கருத்தை, பிஞ்சு உள்ளங்களில் ஆழப் பதிய வைத்துவிட்டதன் விளைவாக மாணவ-மாணவிகள் பலர், தேர்வில் தோல்வியடைந்ததும் தற்கொலை செய்து கொண்டு விடுகின்றனர். தேர்வுத் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளத் தேவையில்லை என்று சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்குப் பெற்றோரும் சமூகமும் உறுதியான ஆறுதலையும் புதிய நம்பிக்கைகளையும் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் கல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதியே தவிர வாழ்க்கையே அதுவல்ல. தேர்வில் தோல்வியடைந்தால் நுரையீரல் உடனடியாகச் செயலிழந்து போகும் என்பது போன்ற தொடர்பு, கல்விக்கும் வாழ்வுக்கும் கிடையாது.

தேர்வு முடிவுகளுக்குப் பயந்தும், எந்த நேரமும் தம்மைப் படிக்க வலியுறுத்தும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயந்தும் குழுவாகச் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடிப் போகிற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாகத் தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத் துறையின் ஆய்வு தெரிவிக்கின்றது. காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புள்ளி விவரத்தோடு அறிவுரை வழங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கல்வி, ஏழை மக்களின் குழந்தைகளுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை தமிழ்நாட்டின் மெட்ரிக் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிட்டிபாபு கமிட்டி ஆய்வு ஆதாரங்களோடு வெளிப்படுதியுள்ளது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு ஆர்வமாக இருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3,450 மெட்ரிக் பள்ளிகளில் 23 விழுக்காட்டுப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெறாதவை என்கிற அவலத்தையும் சிட்டிபாபு கமிட்டி அம்பலப்படுத்தியிருக்கிறது.

அது தவிர திடீரென்று மாற்றப்பட்டுவிட்ட பள்ளி நேரங்கள், மாணவர்களை மிகவும் பாதித்திருக்கின்றன. தந்தை அலுவலகத் திற்குப் போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே மகன், பள்ளிக்குப் போக வேண்டியிருக்கிறது. பள்ளி நேரம் மாற்றப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களிடையே மேலோங்கி யிருந்தும் ஏதும் நடக்கவில்லை. அளவுக்கதிகமாகப் பாடச் சுமை, அதிகாலை முதல் இரவு வரை பாடங்களிலேயே மூழ்கிக் கிடத்தல், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தருகிற நிர்ப்பந்தங்கள், தாய் மொழியல்லாத பயிற்று மொழிச் சிக்கல், தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவித்தாக வேண்டிய கட்டாயம், மனப்பாடக் கல்வி முறை போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைய பள்ளிப் பிஞ்சுகள், தமது சுயத்தை இழந்து இளம் வயதிலேயே இயந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளனர். கல்லாமையை இல்லாமையாக்குவோம் என்று சொல்லிக் கொண்டு, கற்பதற்குப் போகிறவர்களை இல்லாமல் போகச் செய்கிற வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

புத்தகங்களே

குழந்தைகளைக்

கிழித்து விடாதீர்கள்

என்று கவிஞர் அப்துல் ரகுமான் சொன்னார். ஆயினும் புத்தகங்கள் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை.

மாலையில் பள்ளி மணி அடித்ததும் ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் ஓட்டமும் நடையுமாகப் பிள்ளைகள் வீடு நோக்கிப் புழுதி கிளப்பிக்கொண்டு ஓடுகிற காட்சியை எல்லோருமே பார்க்கிறோம். ஆனால் காலையில் பள்ளி மணி அடித்ததும் அதே ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் அவர்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பள்ளிக்குள் நுழைகிற காட்சியை எங்கேனும் காண முடிகிறதா?

அப்படியொரு காட்சியைக் காணத் திட்டமிட்டுச் செயல்படுவதுதான் அறிவுள்ள சமூகத்தின் கடமையாக இருக்க முடியும்.

- ஜெயபாஸ்கரன்