தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் 4ஆம் ஆண்டு மாநாடு
தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி ! தமிழ் வழியில் படித்தோர்க்கே வேலை ! தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை ! என்னும் முகமையான கோரிக்கை களுடன் தமிழ்நாட்டுக் கல்வியை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயனுறும் கல்வியாக மாற்றும் நோக்கில் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
1975-இல் நெருக்கடி நிலைக் காலத்தில் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பொதுப் பட்டியல் என்பது இந்திய ஒன்றிய - மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியல் என்று சொல்லப்பட்டாலும் அது முழுமையாக ஒன்றிய அரசின் வல்லதிகாரம் மிக்கதாகவே உள்ளது. இதனால், கல்வியின்மீது ஒன்றிய அரசின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதுடன், மொழிவழித் தேசியங்களின் - மாநிலங்களின் தாய்மொழி வழிக் கல்வி புறக்கணிக் கப்பட்டு, இந்தி - சமற்கிருதத் திணிப்பு, சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் நுழைவுத் தேர்வுகள், அத்தகைய தேர்வுகளுக்கு ஒன்றிய அரசின் பாடத்திட்டங்கள் என எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விக் கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. பாசக தலைமையிலான இந்திய வல்லரசு மொழிவழித் தேசியங்களை நசுக்குவதிலும், “ஒரே நாடு (இந்தியா) - ஒரே மொழி (இந்தி) - ஒரே பண்பாடு (இந்து)” என்று கூப்பாடு போட்டு ஒற்றை இந்தியாவைக் கட்டமைப்பதிலும் முன் எப்போதைக் காட்டிலும் விசையாகச் செயல்படுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கல்வித்துறையிலும் பணிய மர்த்தங்களிலும் போராடிப் பெற்றுள்ள சமூக நீதி உரிமைகளையும் அழித்தொழிக்கும் வேலையையும் விசையாகச் செய்து ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்விக்குச் சவக்குழி தோண்டிவிட்டது.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான - பன்முகத்தன் மையைச் சிதறடிக்கும் நோக்கிலான இத்தகைய கல்விக் கொள்கை தகர்க்கப்படவேண்டும். அதற்குக் கல்வி என்பது மாநில அரசின் உரிமையாக-அதிகாரமாக மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். சிந்தனை வளர்ச்சி மேம்பாட்டுக்கேற்ற தாய்மொழிக் கல்வி, சமூக நீதி மேம்பாட்டு அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை, மக்கள் தொகைக் கேற்ற கட்டமைப்புடன் கூடிய கல்வி நிலையங்கள், தொலைநோக்குப் பார்வையுடனான மொழிவழி மாநிலங்களின் நிலம் சார்ந்த பாடத்திட்டங்கள் இவற்றின் மூலம் வலிமையான எதிர்காலத் தலை முறையை உருவாக்க, மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2018 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாள்களில், சென்னையில் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் நான் காம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.
26-9-2018 அறிவன் கிழமை மாலை 5.00 மணிக்கு எழுச்சியோடு தொடங்கிய முதல்நாள் நிகழ்விற்கு கல்வி யாளர் அரங்கிற்குத் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினர் முனைவர் முத்தமிழ் தலை மையேற்றார். மாநாட்டு வெளியீடான மாநிலங்களுக்குத் தான் கல்வி உரிமை எனும் நூலினைத் துணைவேந்தர் பொன்னவைக்கோ வெளியிட த.க.இ நெறியாளர் கண.குறிஞ்சி, இலியாகத் உள்ளிட்ட தோழர்கள் பெற்றுக் கொண்டனர். மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என்பதை வலியுறுத்தி மூன்று முகாமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புரவாளன் தீர்மானங்களை முன்மொழிந்திட மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் வே.வசந்திதேவி, முனைவர் மா.இராசேந்திரன், மேனாள் நடுவர் து. அரி பரந்தாமன், வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் பேராசிரியர்கள் வீ.அரசு, சோம.இராசேந்திரன், கு.அரசேந்திரன், நல்லூர் சரவணன், இலெனின், ஹாஜாகனி, காமராசு, ஆசிரியப் பெருமக்கள் புலவர் அய்யாமோகன், மத்தேயு, மார்க்சு இளவேனில் ஆகியோர் தீர்மானங்களை வழிமொழிந்து உரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் பொழிலன் நிறைவுரையாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு 27-9-2018 மாலை 5 மணிக்குத் தொடங்கிய இயக்கங்கள் - கட்சிகளுக்கான அமர்வுக்குத் தலைமைப் பொறுப்பினர் த.ரெ.தமிழ்மணி தலைமையேற்றார். மா.பெ.பொ.க பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து நூல் வெளியிட்டு உரையாற்றினார். பொழிலன் தொடக்கவுரையாற்றிட தமிழ்த்தாசன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மேனாள் கேரள அமைச்சர் பேரா. அ.நீலலோகிததாசன், டி.கே.எஸ்.இளங் கோவன், (தி.மு.க.), பழ.நெடுமாறன் (உ.த.பே), தொல். திருமாவளவன் (வி.சி.க), வீரபாண்டியன் (இ.பொ.க), மல்லை சத்யா (ம.தி.மு.க.), தெகலான் பாகவி, குடந்தை அரசன், மே17 அருள்முருகன், இரஜினிகாந்த், பாவெல், இசைமொழி, சுந்தரமூர்த்தி, சுப்பு மகேசு, குழல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தீர்மானங் களை வழிமொழிந்து உரையாற்றிட இறுதியாகத் தி.வேல் முருகன் (த.வா.க.) நிறைவுரையாற்றினார்.
மூன்றாம் நாள் நிகழ்வு 28-9-2018 மாலை 3.00 மணிக்கு த.க.இ கொள்கைப்பரப்புநர் பிரிசில்லா தலைமையில் தொடங்கிய ஆசிரியர் - மாணவர் அரங்கில் இறை.பொற்கொடி நூல் வெளியிட, நெறியாளர் கி.குணத்தொகை தொடக்கவுரை நிகழ்த்தினார். இயக்குநர்கள் கவுதமன், மு.களஞ்சியம், இலெனின் பாரதி மற்றும் இரா. பகுத்தறிவாளன், சிலம்பரசன், சு.மூர்த்தி, பாவலர் இளம்பொறை, நீட் போராளிகள் ஆசிரியர் சபரி மாலா, அனிதாவின் அண்ணன் மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் உரையாற்றினர். இறுதியாக தமிழரண் மாணவர்களின் சிலம்பாட்டத்தோடு நிறைவுற்ற மாநாட்டின் அனைத்துத் தொடர்புகளையும் செய்தித் தொடர்பாளர் திருமலை தமிழரசன் ஒருங்கிணைத்தார். இம்மூன்றுநாள் மாநாடு களில் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை எனும் குரல் ஒட்டு மொத்தத் தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்தது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று முகாமையான தீர்மானங்கள் :
1) இந்திய - பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்கைகள் - திட்டங்கள் எவையும் இனி இந்தியாவிலுள்ள எந்த மொழிவழித் தேசியங்களின் - மாநிலங்களின் மீதும் திணிக்கப்படுவதை தமிழர்கள், தமிழகக் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மறுக்கிறோம்.
2) கல்வி உரிமை - அதிகாரம் முழுமையும் அந்தந்த மாநிலங்களுக்குத்தான் உடையனவாக இருக்கவேண்டும் எனத் தமிழர்கள் அனைவரும் கோருகிறோம்; இதனை ஏற்றுக் கொள்வதற்கு இசைவாகத் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை களில் இக் கோரிக்கையை வெளியிட்டு வலியுறுத்திட வேண்டுகிறோம்.
3) 2020-க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசு ஆளுகையின்கீழ் இல்லாத எந்தக் கல்வி நிறுவனங் களும் தமிழ்நாட்டில் இயங்கக்கூடாது என வலியுறுத்து வதுடன் அவற்றை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இணைந்து போராட்டங்கள் நடத்தும் எனப் பேரறிவிப்பு செய்கிறோம். மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சியின் சார்பில் தோழர்கள் இரா.பச்சமலை, சா.குப்பன், சி.நடராசன் ஆ.கு.ஆறுமுகம், கலசம், மு.சாமிநாதன், மதனகவி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.