கீற்றில் தேட...

ஒருவரைப் போலவே உலகத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். எனக்கு அந்த எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒருவர் சாயலில் இன்னொருவர் இருப்பார் என்பதை நாமே நமது அனுபவத்தில் கண்டிருப்போம். அது எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ இடங்களில் "அட இவர் அவர் மாதிரியே இருக்காரே... அட அந்தக்கா மாதிரி இல்ல...?" என்று பார்த்த நொடி வந்து போகும் சாயல் எண்ணம்... சாய்ந்த அச்சில் நம்மை சுற்றி சுழன்று கொண்டே தான் இருக்கிறது.

எங்கும் எங்கெங்கும் சாயலால் ஆன உருவங்கள் இருந்தபடியே தான் இருக்கின்றன.

பழைய அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த செல்வாவை போல... பள்ளி நாட்களில் சீனியர் ஒருவரைப் பார்த்திருக்கிறேன். ஊரில் ஒரு அண்ணனை பார்த்திருக்கிறேன். இதில் என்ன ஒற்றுமை என்றால் மூவருமே இடது கை பழக்கம் உள்ளவர்கள். மூவருமே கால்பந்து வீரர்கள். இதை செல்வாவிடம் மட்டும் தான் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மற்ற இருவர்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் செல்வா நம்பவே இல்லை. கணக்குப்புள்ள கதை சொல்லுதுன்னுட்டு போய்ட்டான்.

முக சாயலை தாண்டி மனதின் வழியே ஒரு சாயல் நமக்குள் ஏற்படுவது உண்டு. தோற்றப் பிழை... மனம் ஏற்ற பிழை என்று எப்படியும் சொல்லலாம்.

அதை 7வது படிக்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறேன்.

man face 400பள்ளி விட்டு வருகிறேன். வீட்டைப் பிரிந்த ஏக்கத்தோடு தான் ஊரில் படித்துக் கொண்டிருக்கிறேன். சாலையை விட்டு ஊருக்குள் நுழைந்து புளிய மரத்தடியே நடக்கையிலேயே எனக்கு தெரிந்து விட்டது. ஊரில் இருந்து அம்மா வந்திருக்கிறார். இடுப்பில் என் தங்கையை வைத்துக் கொண்டு சோறு ஊட்டிக் கொண்டிருக்கும் காட்சி மனதில் புளியங்காயாய் உதிர்கிறது. ஓடோடி வருகிறேன். உடல் முழுக்க சட்டென பூத்து குலுங்கும் வியர்வை பூக்கள். எதிர்ப்படும் காற்றில்... இனம் புரியாத குளிர்ச்சி. தலைக்குள் இதயம் துடிக்க ஓடி வந்து... வந்த வேகத்தில் காலைக் கட்டிக் கொண்டேன்.

சில நொடிகள் தான். அந்தக் கைகள் என்னை கட்டாயமாக விலக்கி..."ஏய் விஜி என்ன பண்ற...!" என்றது.

குரல் வேறு. சட்டென ஒதுங்கினேன். வீதி லைட்டின் மங்கிய வெளிச்சம் இப்போது முகத்தை காட்டிக் கொடுத்து விட்டது. அது... வீதியின் முதல் வீட்டம்மா. மூத்த பிள்ளை 11 படிக்குது. இது மூன்றாவது பிள்ளை. மூனு வயது. இந்த மூனு வயது பிள்ளை இடுப்பில் இருக்க தான் குழம்பி விட்டேன். மேலும் தூரத்தில் இருந்து பார்க்க அந்தக்கா அப்படியே அம்மா சாயல்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவிலை. அழவும் மறந்து போன முக பாவனை. கால்கள் நடக்கிறதா ஒடிந்து விட்டதா என்று கூட புரியவில்லை. ஒரு கேனை சிரிப்பை உதிர்த்தபடியே ஓடி விட்டேன். அடுத்த நாள் எல்லாருமே கேட்டார்கள். யாருக்கும் பதில் சொல்லவில்லை. சொல்ல பதிலும் இல்லை. இப்போது நினைத்தாலும் தள்ளாடும் ஓட்டம் அது.

நாலைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு ஆட்டோ சம்பவம் இது.

கவுண்டம்பாளையத்துக்கு என்னவோ வாங்க போயிருக்கிறேன். போய் விட்டு வீடு திரும்புகிறேன். எனக்கு முன் சென்ற ஆட்டோவில் கவிக்குயிலும் சே குட்டியும் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆட்டோ... பின்னால் நன்றாக திறந்திருக்கும் வகைமை. என்ன இது... இப்ப தான வீட்ல இருந்தாங்க. இங்க எங்க வந்துட்டு போறாங்க. சே கீழ விழுந்துட்டானோ...டாக்டர்கிட்ட போறாங்களா என்று ஏதேதோ குழப்பம். அதே தலை வாரல்.. அதே மென் சோக முக அமைப்பு... அதே அமைதியான இருத்தல். குழப்பம் தீவிரம் அடைய அடைய வண்டியை வேகப் படுத்தினேன். ஆட்டோவை சைடு எடுக்கும் போதும் பார்க்கிறேன். அப்படியே இருக்கிறார்கள். என்ன இது என்று வண்டியை முன்னால் விட்டு நிறுத்தி விட்டேன்.

ஆட்டோ நின்ற அடுத்த நொடி.. அய்யயோ.. அவுங்க வேற யாரோ. தூக்கி வாரி போட்டது. கையை காட்டி சாரி சாரி சாரி என்று சொல்லிக்கொண்டே வண்டியை இன்னும் வேகமாய் முறுக்கி விட்டேன்.

மன பிம்பத்தின் சாயல் எங்கும் எப்போதும் கண்களின் வழியே ஒரு மாயத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கும்... என்று அன்றைய சம்பவம் இன்றைக்கும் மாயம் சொல்கிறது.

அப்போ மஞ்சள் பைக். லாலி ரோட் சிக்னல் தாண்டி போன் பேச நிறுத்தி இருக்கிறேன். பாக்கட்டிலிருந்து போன்- ஐ எடுக்க எடுக்கவே... "என்ன பைக்லாம் மாத்திட்ட...?"என்று ஒரு குரல். போன் எடுப்பதை நிறுத்தி விட்டு குரலையே கூர்ந்து பார்த்தேன். அனிச்சையாய் ஹெல்மெட்டை எப்போதோ கழற்றி இருந்தேன்.

"என்ன மீசைலாம் எடுத்துட்ட....!" என்று தொடர்ந்த அந்த குரல் ஓர் அழகான முகத்தில் இருந்து அசைந்தது. பார்வையை இன்னும் தீவிரமாக்கினேன்.

ஒரு புள்ள தோளில் பேக்கோடு நின்றிருக்கிறாள். காத்திருக்கும் உடல்மொழி. "எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது.. எங்க போன...?" என்று அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருக்கிறாள். எனக்கு குழப்பம். யார் இது. ஆராய்ந்து பார்த்தேன். பழக்கம் இல்லாத முகம். அப்போது தான் அவளுக்கும் பிடி பட்டிருக்கிறது.

"ஐயோ சாரிங்க... நான் அவன்"னு... சொல்லி.. கிட்டத்தட்ட சிரிக்கவே தொடங்கி விட்டாள்.

நான் ஒன்றுமே பேசவில்லை. மனதுக்குள் ஒரு கரும்பலகை கொப்பளிப்பு. இப்பிடி ஏதாது பேச்சு குடுத்து காசு புடுங்கற கூட்டமா என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே வண்டியை வேகமாய் எடுத்து விட்டேன். இப்போது நினைக்கையில்... அவளுக்கும் அந்த முக சாயல் பிரச்சனை தான் இருந்திருக்கும் என்று புரிகிறது.

11 ம் நம்பர் பேருந்தில் கூட்டத்தோடு கசகசத்து நின்று.... இடம் வந்திருச்சா இடம் வந்திருச்சா என்று ஜன்னல் அளவுக்கு குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டு வந்த ஒருவரை என் சித்தப்பா என்று தொட்டு... என்ன.... இங்க எப்ப வந்தீங்க என்று கேட்டது போல தான். சின்ன வயதில் ஹிப்பித் தலை நீல சட்டையில் நின்றிருந்த ஒருவரை என் அப்பா என்று தோளில் தொற்றியது போல தான்.

ஒரு முறை... ஊரில் நாடகம் நடக்கிறது. ஒப்பனை அறையில் அமர்ந்திருக்கிறோம். நான் நடிக்கும் காட்சியில் நடித்து விட்டு திரும்பி ஒப்பனை அறைக்கு வந்தவன்... கீர்த்தி என்று நினைத்து பின்னிருந்து மேரி கண்களை மூடி விட்டேன். சில நொடி விளையாட்டு தான். எதிரே உள்ளறையில் இருந்து வந்த கீர்த்தி.... என்ன பண்ணிட்டிருக்க என்பது போல என்னை பார்க்க.. அய்யயோ... அப்போ இது யாரு என்று கையை விலக்கி குனிந்து பார்த்தேன். ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த மேரி கழுத்தை திருப்பி மேலே பார்த்து புன்னகைத்தாள். மோனாலிசா புன்னகை.

அதன் பிறகு கீர்த்தியை சமாளிக்க பட்ட பாடு. ஆனால் சாயல் அடுத்த பத்து நிமிடத்திலேயே மீண்டும் அரிதாரம் பூசிக்கொண்டது. அடுத்த காட்சி முடிந்து மீண்டும் உள்ளே நுழைந்தவன்.. இந்த முறை சரியாக கீர்த்தி கண்களை மூடி விட்டேன். பட்டென என் கையை பற்றிய மேரி... "ஏய் விஜி.... வேணுன்னு தான பண்ற..." என்றாள். அய்யயோ மறுபடியும் மேரியா. அதே பச்சை புடவை. அதே குண்டு கன்னம். அதே உயரம். அதே உடல்வாகு. நான் ஓடியே விட்டேன். நாடகம் முடியும் வரை ஒப்பனை அறைக்கும் வரவில்லை. கீர்த்தி கண்களிலும் படவில்லை. அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் மேரியின் கண்களில் கோலி குண்டுகளை கண்டேன்.

என் அத்தையின் முக சாயலில் எங்கள் வீதியில் ஒரு பெண் இருக்கிறாள். அந்த பெண்ணை பார்க்கையில் எல்லாம்.... இப்போது இல்லாத அத்தையை பார்த்துக் கொள்வது போல அப்படி ஒரு சமாதானம். நாஞ்சில் நாடன் ஐயாவிடம் என் மாமாவின் சாயலைக் கண்டிருக்கிறேன்.

எதிர் வீட்டு அட்சயா என்று கவிக்குயிலை... எப்பம்மா ஊர்லருந்த வந்த என்று முன்பொரு முறை மளிகை கடைக்காரர் கேட்டிருக்கிறார். நான் ஊருக்கு போகலயே என்றிருக்கிறாள். நீ டீச்சர் பொண்ணு தான என்றதும் தான் கவிக்குயிலுக்கு விஷயம் புலப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருவருமே ஒரே சாயலில் தான் இருப்பார்கள். அந்த புள்ள இப்போது பெங்களூரில் இருக்கிறது. எப்போதாவது தான் வரும். இப்போது குண்டாகி வேறு மாறி ஆகி விட்டார்கள்.

கல்லூரி நாட்களில் நானும் கமலும் அர்ச்சனாவில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நடிகர் ஆடிக் கொண்டிருக்கிறார். கமல் சொல்கிறான். டேய் இவன நான் எங்கயோ பார்த்திருக்கிறேன்டா. அவனால் பாட்டில் ஒன்றவே முடியவில்லை. அவன் சொல்லிக்கொண்டே இருக்கிறான். எனக்கும் அதே சிந்தனை தான். ஆமா... எங்கயோ பார்த்த மாதிரி தான்னு நானும் சொல்றேன். ஆனா ரெண்டு பேருக்குமே பிடி கிடைக்கவில்லை. படம் முடிந்து கிட்டத்தட்ட வீடே வந்து விட்டோம். சட்டென என்னை நிறுத்தி உற்றுப் பார்த்தான்.

ஓரிரு நொடிகளில் திரை கிழித்து வெளியேறியவன் போல "டேய்... அவன் உன்ன மாதிரி தான்டா இருக்கான்..." என்றான். பூரித்த முகத்தில் சாதித்த திருப்தி.

யோசித்த எனக்கும் பிடி பட்டு விட்டது. அட ஆமா... என் மன கண்ணாடியில் அவன் முகமும் என் முகமும் ஒன்றோடொன்று இணைந்து வேடிக்கை காட்டியது போல உணர்ந்தேன். ஆமா... அவன் என் சாயலில் தான் இருக்கிறான். இப்போ போன வாரத்தில் விவெவின் பையன்... 5 வயசு மாறாகுட்டி... அந்த நடிகன் சிரிப்பதை படத்தில் பார்த்து விட்டு... அப்பா பெரிப்பா அப்பா பெரிப்பா சிரிக்கிறாங்கன்னு சொல்லி இருக்கான். முக சாயலின் தோற்றப் பிழை எந்த கண்களிலும் தீபம் ஏற்றி விடும். அந்த பிஞ்சு கண்களிலும் பிரகாசித்திருக்கிறது.

இப்படி அவரைப் போலவே இருக்கார்ல... அப்படியே அந்த புள்ள மாதிரியே இருக்கால்ல... என்று நாம் அனைவருமே ஒரு முறையாவது ஒருவரின் சாயலையாவது வேறு எங்கோ பார்த்திருப்போம். சிலருக்கு கண்கள் ஒரே மாதிரி.. சிலருக்கு நடை.. சிலருக்கு பேச்சு தொணி.. சிலருக்கு பார்வை.. சிலருக்கு முக ஒற்றுமை... சிலருக்கு உடல் மொழி... என்று சாயல்கள் பல வகையில் நம் கண்களில் மாயம் செய்யும். செய்து கொண்டிருக்கும். நம்பிய நொடியில் அந்த நபருடனான உறவோ நட்போ பகைமையோ பதற்றமோ வந்து சூழ்ந்திருக்கும். இல்லை என்ற நொடியில் தன்னை தானே சமாதானப் படுத்தும் சுய புன்னகை நம்மில் பூத்து உதிரும். எனக்கும் இன்னுமே அப்படியான அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. எழுதினால் எழுதிக்கொண்டே போவேன்.

எங்கும் எங்கெங்கும் சாயலால் ஆன உருவங்கள் இருந்தபடியே தான் இருக்கின்றன.

இதோ இப்போது.... உங்களை ஏமாற்றிய அந்த சாயல்... உங்கள் மனதில் வந்து போகிறது தானே.

- கவிஜி