ஐந்து மணிக்கே எழுந்து குளித்து தயாராகி... புதுத்துணி உடுத்தி... ஒரு புன்னகை மரமென வீட்டை விட்டு வெளியேறுவேன். பனியூடாக வாசலில் நண்பர்களும் நண்பிகளும் தயாராக இருப்பார்கள். ஆங்காங்கே உறவுகள் நடப்பதும் நிற்பதும் கூடி பேசுவதும் புறப்படுவதும் வீட்டை பூட்டுவதும்.. என்று அது ஒரு புனித பழங்கள் பழுப்பது போல இருக்கும். கனவுகள் கூடி விடிந்தது போல அப்படி ஒரு ஆஹா சுவாசம் அது. ஆலய மணி ஓசையும்... புகை மூட்ட பனியும்... நடைபாதையை நந்தவனமாக்கும்.
நேற்று மாலையில் இருந்தே ஆலயத்திலும் அதன் வாசலிலும்தான் பூசணிப்பூக்களாக மலர்ந்திருந்தோம். அதிகாலை மூன்றுக்கு தான் வீட்டுக்கு வந்தோம். ஆனாலும்...இதோ கிளம்பியாச்சு. கிறிஸ்துமஸ்க்கு முந்தின நாள் இரவு எப்போதும் சிறப்பு தான். சிறகு முளைப்பதை உணர முடிந்த ராத்திரி. ஏழு கதைகள் என்று தான் நினைக்கிறேன். ஏழோ ஒன்பதோ சொல்வார்கள். கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கும். அதுவும் பாஸ்டர் மொழியில்.. ஒரு இழுவை இருந்து கொண்டே இருக்கும். பேஸ் வாய்ஸில்... பேச்சு நடையே ஒரு விசித்திரமாக இருக்கும். சங்கீதம்... அதிகாரம் 12 ல் ஒன்றிலிருந்து ஒன்பது வசனங்கள் வாசிக்க என்று பாஸ்டர் சொல்வதும்.. சொன்ன மறுநொடி... பைபிள் ஸ்பெஷலிஸ்ட்ஸ் முந்திக்கொண்டு வாசித்து முடித்து... வாசிக்க வேண்டிய வசனம் வாசித்தாயிற்று என்று சொல்வதும்... அது ஒரு அட்டகாசமான உணர்வை பிரதிபலிக்கும். என்ன ஒரு வேகம் என்று யோசிக்க வைக்கும். நம் மூளைக்கும் இதயத்துக்குமான ஓர் இணக்கம் அங்கே இலை உதிர்க்கும்.கூட வந்தவர்கள் பலர் அப்படியே லைட்டாக சரிந்து விடுவார்கள். நாம ம்ஹும். பாஸ்டர்க்கே வாய் வழித்து கேப் விட்டாலும்... நாம் கண்கள் சிமிட்டுவது கிடையாது.
சண்டையிட்டவர்களோடு எல்லாம் மறந்து பேச முடியும். வெறுப்பு கூட சிரிப்பாக மாறும். சும்மா அங்கும் இங்கும் நடப்போம். புத்தாடையில் வீதிக்கே வெள்ளை அடித்தது போல தெரியும் தோரணை.... தோகை விரித்தாடும். கண்ணுக்கெட்டும் தூரம் வரை கலர் கனவுகள் தான். வளாக மரத்தடிகளில்... வாலிபம் விசிறி வீசும். ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் உடல்மொழியில் துள்ளும். வனப்பான கையாட்டல்கள்... மினுமினுக்கும் புன்சிரிப்புகள் என்று இன்னதென சொல்ல முடியாத இசை நாதத்தை இதயம் சுமந்து கொண்டே இருக்கும். இடையில் காதலி வேறு... தோழிகளோடு துள்ளல் நடையில் எதிர் மரத்தடியே கச்சேரி செய்து கொண்டிருப்பாள். உள்ளிருந்து ஜன்னல் வழியே பிரதர் கண்களாலே மிரட்ட அடுத்த கணம் உள்ளே ஓடி அவரவர் இடத்தில் அமர்வோம். இயேசு கிறிஸ்து பிறந்த நாள். அது தொடர்பான பிரசங்கம். ஒவ்வொரு வருடமும் அதே தான் கேட்டாலும்... திகட்டாத தின்பண்டம் மாதிரி... ஆசையாய் கேட்போம். வானத்தில் வரிசையாய் நிற்கும் அந்த ஜொலி ஜொலி மூன்று நட்சத்திரங்கள்... இன்னும் அருகே வந்தது போல நம்புவோம். மாட்டு தொழுவமும்... மகத்தான பிறவியும்...மனதுக்குள் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கும்.
வார வாரம் ஆலயத்துக்கு வராதவர்கள் கூட கிறிஸ்துமஸ் அன்று கட்டாயம் வந்து விடுவார்கள். அன்று இயேசு மட்டும் புதிதாக பிறக்கவில்லை. அவரை நேசிக்கும் மனிதர்கள் கூட மனதளவில் புதிதாகவே பிறக்கிறார்கள்.
ஜெருசலேம்.. நாசரேத்... ஜோர்டான் நதி... கல்வாரி மலைப்பகுதி.....கலிலியோ... 12 சீடர்கள்... மகதலேனா... என்று இயேசுவும் அவர் பற்றிய செய்திகளும்.... ஆர்வத்தை கூட்டிக் கொண்டே போகும். யார் இந்த ஆள்.. எப்படி கடவுளானார்... போன்ற அறிவுக்கு எட்டாத கேள்விகள் எல்லாம் வந்து வந்து போகும். ஆனாலும்.. கேள்விகளுக்கு அப்பால்... இயேசுவின் வசீகரமும் அவரது அறிவுரை பேச்சுகளும்... கேட்க கேட்க மெய்ம்மறக்க செய்யும். ஒரு எம்ஜிஆர் படம் பார்ப்பது போலவே ஓர் உல்லாலா சம்பவம் அது.
ஜோர்டான் நதி மீது அப்படி ஒரு ஆர்வம். அந்த பெயரே ஒரு வகை மின்னலை மனதுக்குள் பாய்ச்சும். அந்த கரையோரம் அமர்ந்து கவிதை எழுதுவது போல...காலாற நடந்து கனவு உழுவது போல.... அவ்வழியே செல்லும் ஜீசஸ்க்கு டாட்டா காட்டுவது போல... நம் கற்பனைகள் தீர்வதில்லை. ஊர்களின் பெயர்களில் இருக்கும் உரு தெரியாத வடிவம் எப்போதும் என்னை அங்கே உலவ செய்திருக்கிறது. அவரோடு சேர்ந்து ஆடு மேய்ப்பது போலவெல்லாம் வந்த கற்பனையை கதையாக்கி சொல்லி இருக்கிறேன்.
திருவிருந்து ஆராதனையில் பெரியவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும். ஒரு நாலாவது நமக்கும் அந்த திராட்சை ரசத்தையும்... ஒரு கடி அப்பத்தையும் தருவார்களா என்று பார்த்திருக்கிறேன். ம்ஹும். அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. சிறு வயதில் இந்த மாதிரி ஒரு நட்சத்திரம் புதுசா பூத்திருக்கு... அவுங்க சொன்ன அந்த மகான் பிறந்து விட்டார் என்று ஆடு மேய்க்கும் நான்கு சிறுவர்கள் பேசிக்கொள்வார்கள்... அப்படி ஒரு காட்சியில் நான்கில் ஒருவனாக..நாடகத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பரிசும் பெற்றிருக்கிறேன்.
இப்போதெல்லாம் கிறிஸ்துமஸ் வந்து விட்டாலே அது அந்த வருடத்தின் கடைசி திருவிழா என்ற எண்ணமும்.. அந்த வருடமே முடிய போகிறது என்ற இனம் புரியாத பதட்டமும் கண் முன்னால் கண்கள் உருட்டுகிறது. கடவுளை விட்டு வெகு தூரம் வந்து விட்டாலும்... ஒரு தீர்க்கதரிசி... ஞானி... தூதுவன்... கலகக்காரன்... தப்பை தட்டி கேக்கறவன்... நியாயத்துக்கு குரல் கொடுக்கிறவன்... மக்களுக்காக உயிரையே தருகிறவன்... காலத்துக்கு தேவையான ஒரு சூப்பர் ஹீரோ என்று எப்போதும் ஜீசஸ் மீதிருக்கும் பிரமிப்பு அகலவில்லை.
உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் பிறந்த ஒரு மனிதனின் பேரன்பு இந்த உலகையே நிறைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் 2000 வருடங்கள் கடந்தும் அதில் சமாதான புறாக்கள் பறக்கிறது என்றால்.... அது பிரமிப்பு தான். இடையே அவர் பெயரில் நடந்த மத குருமார்கள் செய்ய அட்டூழியங்கள் தனி அத்தியாயங்கள். அவரே இருந்திருந்தாலும்.. மதத்தின் பெயரால் நடக்கும்.... நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை அடித்து நொறுக்க தான் செய்திருப்பார். ஆனாலும் அவர் விதைத்த மரங்கள்.. ஒரு பக்கம் பேரன்பின் பூக்களால் பூத்து குலுங்குகின்றன. அவர் நினைத்த முழு உலகத்தையும் மீட்டெடுக்க தான்... ஒவ்வொரு வருடமும் நாள் தவறாமல் பிறந்து கொண்டிருக்கிறார். என்ன... யூதாசுகளும் பிறந்து கொண்டு தான் இருப்பார்கள்....!
அவர்களிடம் இருந்து அவரை காக்க... மானுட ஒற்றுமையும்... அன்பின் பற்றுகளும்... ஓங்கி ஒலிக்க வேண்டும். அவரோடு தோள் நிற்க வேண்டும். அவர் பற்றிய கதைகளை களைந்து அவர் பற்றிய கருத்துகளை முன்னெடுப்போம். அறிவின் தெளிவு கொண்டு அந்த ஞானியைக் கொண்டாடுவோம். அவர் காட்டிய வழியெல்லாம் வெளிச்சம் அன்றி வேறில்லை.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
- கவிஜி