சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கிறது. இந்து சமூகம் எப்படிப்பட்டவர்களைக் கொண்டுள்ளது என்பதில் பழங்குடியினரின் நிலைமையை முதலில் ஆராய வேண்டும்.

பழங்கால மக்கள்

மனித நாகரிக வரலாறு, காட்டு மிராண்டி நிலை, பண்படாத நிலை, நாகரிக நிலை என்று மாந்தனின் முன்னேற்றம் முழுவதையும் கூறுகிறது. மாந்த முன்னேற்ற மென்பது நயம்பட பேசுதல், திறன் வளர்ச்சி என்பதாக விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்துதல் என்பதாக முதலில் அமைந்தது. இது காட்டுமிராண்டி நிலையின் முதல்படியாகும். நெருப்பைக் கண்டு பிடித்தல், மண்பாண்டம் கண்டுபிடித்தல், இரும்பு உருக்கும் கலை எனப் பல கட்டங்களை மனிதச் சமூகம் சந்தித்தது. இக்கட்டங்கள் பெருத்த அளவில் நாகரிகத்திற்கும் வழி கோலின.

நாகரிகம் அடையாத கால மக்கள், நாகரிகம் அடைந்த மக்கள் ஆகியோருக் கிடையில் நாகரிகம் என்பதன் முழுப்பொரு ளில் வேறுபடுத்திக் காட்டும் கோடாகக் கருத்துக்களைக் குறியீடுகள் மூலம் தெரிவிக்கும் கலை, அதாவது எழுதும் கலை அமைந்தது. முந்தையக் கண்டு பிடிப்புகளால் தூரத்தை வென்ற மனிதன் நேரத் தையும் வென்றான்.

தன் செயல்களையும் எண்ணங்களையும் எழுதினான். தொடர்ந்து மனித அறிவு, அவனது கவிதைக்கனவு, நல்லொழுக்க நோக்கங்கள் ஆகியவை தன் காலத்தில் மட்டுமின்றி அடுத்துவரும் தலை முறைக்கும் போய்ச்சேர எழுதினான். மனித வரலாறு பாதுகாப்பனதாகவும், உறுதியாகவும் மாறியது. இந்த செங்குத்தான ஏற்றமும் அதில் ஏற்பட்ட முன்னேற்றமும் நாகரிகத்தின் தொடக்கமாயிற்று. நாகரிகமும் கொண்டவர்கள் இவர்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை 36 வகைப்பழங்குடிகள் உள்ளனர்.

அவர் களில் மலையாளிகள், தோடர், கோத்தர், காணிக்காரர் போன்றவர்கள் காலங் காலமாக நிலவுடைமையாளராக இருந்து வருகின்றனர். திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கன்னியாகுமரி வரை உள்ள பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பரம்பரை பரம்பரையாகப் பழங்குடியினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. எனினும் அவற்றுக்கு நிலவுரிமை மட்டும் வழங்கப்படவில்லை (இரா.கிறிஸ்து காந்தி, தி இந்து, சனி, மார்ச் 5, 2016)

இதைத்தவிர களக்காடு, பொதிகை, கோடை, வால்பாறை, ஆசனூர், கடம்பூர், சிறுவாணி, ஊட்டி போன்ற பல்வேறு ஒதுக்கக் காடுகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 100-ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடிகள் வசித்து வந்தனர். அந்தப் பகுதிகளில் அவர்களுக்கென குடியிருப்புகள் ‘செட்டில்மென்ட்கள்’ என்ற பெயரில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. குடும்பத்துக்கு 5 ஏக்கர் வீதம் 50,000 ஏக்கர் வரை இதற்காக ஒதுக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் குற்றச் செயல்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ள பிரிட்டிஷ் அரசு முயன்றது. இதன் விளைவாக அரசாங்கம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டது.

19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு சமூகங்கள் பாரம்பரியப் பொருளாதார ஆதாரத்தை இழந்ததன் காரணமாகவே குற்றவாளி பட்டத்தோடு வாழ்க்கை நடத்தும் படியானது. 1887-இல் ஏற்பட்ட பஞ்சமானது உள்ளூர் சமூகங்களுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இதனை போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். புதிய வனக்கொள்கை, போட்டி வணிகம், ரயில் போக்குவரத்து விரிவாக்கம் ஆகிய வற்றின் விளைவுகள் சரியான முறையில் பிரிட்டிஷ் நிருவாகத்தால் அடையாளம் காணப்பட்டன.

குறவர், எருக்குலவார், கொறச்சா, பிரிஞ்சாரி, லம்பாடி போன்ற வியாபாரச் சமூகங்கள் மட்டுமல்லாமல் தாசரி, வாகனூர் பறையர், பைடி (Paitis), ரெல்லி (Rells), ஏனாதி (Yennadies) போன்ற பல சமூகங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான பாரம்பரியத் தொழில்முறைகளை இழந்தன.

இதன் காரணமாக இவர்களும் பழங்குடிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.  (Meena Rathakrishna, 1989:269,275)

இவ்வாறு பாரம்பரியத் தொழில் இழப்பால் தங்களது வாழ்க்கைக் கேள்விக் குள்ளானபோது சில குற்ற நடவடிக்கைகள் நடந்தன. பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்தி ஆளவேண்டிய தேவையில் இருந்த பிரிட்டிஷார் அன்றைய சாதி இந்துக்கள், உள்ளூர் சாதிய நிலப்பிரபுக் களின் ஆதரவோடு 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டிலும் தன்னை நீதியின் காவலனாகக் காட்டிக் கொண்டு தன்னிடம் பெருகியிருந்த அதிகாரத்தின் துணையோடு குற்றப்பரம்பரைச் சட்டத் தினை இயற்றினர். அதை வன்மமாய் நடை முறைப்படுத்த துவங்கினர். அப்போது அநியாயமாய் வஞ்சிக்கப்பட்ட குடிகளின் வகை மாதிரியாய் தமிழகத்தில் வாழ்ந்தவர் கள் மரபார்ந்த தங்களது வாழ்க்கையைப் பறிகொடுத்த குறவர்கள் ஆவர்.

இவர்களை ஒடுக்க ஆங்கிலேய அரசு கி.பி.1871-இல் இயற்றிய பழங்குடிகள் சட்டத்தால் (The Criminal tribes Act of 1871) அலைந்து திரியும் இவர்களின் நடமாட்டத் தை ஒடுக்கினர். ஆனால் இச்சட்டம் சாதுக்கள் எனும் இந்து சன்னியாசிகளைக் கட்டுப்படுத்தவில்லை. சென்னை மாகா ணத்தைப் பொறுத்தவரை கி.பி.1911-இல் தான் இச்சட்டம் இங்கு அமல்படுத்தப் பட்டது. இச்சட்டத்தின் படி 10-1- A /10-1- B என்னும் இரண்டு பதிவேடுகள் உருவாக்கிப் பராமரிக்கப்பட்டன.

குற்றப் பரம்பரையினர் என்று அரசால் முடிவு செய்யப்பட்டவரின் பெயர், தந்தையின் பெயர், வயது, தொழில் அங்க அடையாளங்கள், நடமாடுகின்ற இடங்கள் பற்றிய விவரங்கள், உறவினர் வாழுமிடங்கள், ஒவ்வொருவரின் கைரேகை ஆகியன முதல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது பதிவேட்டில் குற்றவாளி களாக நீதிமன்றத்தில் உறுதி செய்யப் பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

முதல் பதிவேட்டின் நகல்கள் கிராமப் பஞ்சாயத்தார், காவல் நிலையம், தலைமைக் காவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் பராமரிக்கப்பட்டன. இப்பதிவேட்டில் கைரேகை இட்ட ஒருவர் தன் ஊரைவிட்டு வேறு ஊருக்குச் செல்ல கிராமப் பஞ்சா யத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் காவல் நிலையத்தில் சென்று தங்களின் இருப்பிடத்தை தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவது பதிவேட்டின் நகல் காவல் துறையில் பராமரிக்கப்பட்டது. குற்றவாளிகளின் (தீர்மானிக்கப்பட்ட) கை ரேகைகள் இப்பதிவேட்டில் பராமரிக்கப் பட்டது. இந்த கைரேகைகளைக் கொண்டு கண்காணிப்பதால் இதற்கு ‘கைரேகைச் சட்டம்’ என்று பெயர்.

குற்றப்பழங்குடியினச் சட்டமும் குறவர்களும்

வெவ்வேறு கட்டங்களாக கி.பி.1871, 1876, 1897, 1911, 1924 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட இச்சட்டங்கள் வாயிலாகக் குறவர் மக்களை அரசு கண்காணித்து வந்தது; ஒடுக்கியது. குறவருக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட இச்சட்டங்கள் குறவரினத்தைச் சார்ந்த அனைவரையும் பாதித்தன. அவர்களின் உரிமையை நசுக்கின.

எங்காவது ஓரிடத்தில் திருட்டு நடந் திருந்தாலும் திருட்டு நடந்த இடத்தைச் சுற்றி யுள்ள கிராமங்களில் வசித்து வரும் குறவர் களைப் பிடித்து, சிறையிலடைத்து உண்மைக் குற்றவாளிகள் பிடிபடும் வரை குறவரையே குற்றவாளியாகக் கருதிப் போலீசார் வதைத் தனர். குறவர்களின் கட்டைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ பலவந்தப்படுத்தப்பட்டனர். செய்த குற்றங்களுக்கேற்ப காவல் நிலை யத்தில் இரவிலோ / வாரத்திற்கு இரு முறை யோ குறவர்கள் தம்மை ஆஜர்படுத்தி வந்த தாகவும் கூறப்படுகிறது.

படுக்கப்போடுறது

குறவரொருவர் தன்னுடைய ஊரை விட்டு வேறொரு ஊருக்குப் போக விரும்பினால், ஊர்ப்பஞ்சாயத்தில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றாலும் இரவு நேரத்தில் அவ்வூரில் தங்காது சொந்த ஊருக்குத் திரும்பி விட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்கு மேல் குறவர்கள் காவல் நிலையத்தில் தங்க வேண்டும். இதைப் ‘படுக்கப்போடுறது’ என்று குறவர் குறிப்பிடு கின்றனர். தமிழகம் முழுவதும் குறவர்கள் பல இடங்களில் குற்றவாளிப் பழங்குடியின ராகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

சேலம் மாவட்டத்தில் காணப்படும் தப்பைக் குறவர், கருவேப்பிலைக் குறவர், உப்புக் குறவர் போன்றவர்களைக் கண்காணிக்கத் தக்க குற்றவாளிகளாகவே வைத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் குறவர் களும் குற்றவாளிகளாகக் கண்காணிக்கப் பட்டனர். வேடசந்தூரைச் சுற்றி அமைந்துள்ள அரியபத்தம்பட்டி, வெள்ளையக் கவுண்ட னூர், கோவிலூர் ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வந்த இவர்களை வேடசந்தூர் காவல் துறையினர் குற்றவாளிகளாகக் கருதி மாலை நேரங்களில் கட்டை வண்டியை (மாட்டு வண்டி) ஓட்டிக் கொண்டு போய் அவர்களை அழைத்து வந்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் படுக்க (தங்குதல்) வைத்திருக் கின்றனர்.

திருடர் என்ற குறவர் அடையாளமும் மதமாற்றமும்

பள்ளர், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமையின் காரணமாகக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியபோது குறவரினப் பழங்குடிகளும் தம்மீது சுமத்தப் பட்ட திருடர்கள் என்ற இழிநிலைக்கு எதிராகக் கிறிஸ்துவ மதத்தை நோக்கிச் சென்றனர்.

அமெரிக்க மிஷனரிகள் கிணறு வெட்டித் தந்தனர். ஒடுக்குமுறைக்குள்ளான குறவரினத்தவரின் மத்தியில் வேலை செய் தனர். வீடுகளை கட்டித் தந்தனர். பழங்குடி மக்கள் அநீதியாய் காவல் நிலையங்களுக்கு இழுத்துச் செல்லப்படும்போது, அது தொடர் பான சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் போது ஏசு சபையினர் அவர்களுக்கு வழக்காடு பவர்களாக இருந்தனர். கிறித்தவ மதம் மாறிய குறவர்கள் திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.

கந்தவர்வக் கோட்டை குறவர் (தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை) ஈஞ்சிக் குறவர் (தஞ்சை, நாகை, திருச்சி, புதுக் கோட்டை) கள்ளக் குறவர், தோகை மலைக் குறவர் (திருச்சி), கேப்மாறிக் குறவர், உப்புக் குறவர் (திண்டுக்கல், மதுரை, திருவண்ணா மலை), வதுவார்ப்பட்டிக் குறவர் (இராமநாத புரம், திருநெல்வேலி) போன்ற குறவர்கள் குற்றவாளிகளாகவே கண்காணிக்கப்பட்டனர்.

கண்காணிக்கப்பட்ட இக்குறவரின பின் தாங்கிய கல்விச் சூழ்நிலையை மாற்ற கல்வியறிவைப் புகட்டவும், தங்கிக் கல்வி கற்கவும் லண்டன் மிஷினரி சொசைட்டி கி.பி.1928-இல் சேலம் ஆத்தூரில் குறவர் மாணவர்களுக்கான ஒரு தங்கும் விடுதியைக் கட்டித் தந்தது. 1929ல் விவசாயப் பண்ணை யன்றையும் ஏற்படுத்தித் தந்தது. திண்டுக் கல், மானாமதுரை, வத்தலக்குண்டு, அருப்புக்கோட்டை போன்ற இடங்கள் அமெரிக்க மிஷனரிகள் குற்றப்பரம்பரையினருக்கான விடுதிகளையும் நடத்தியது. 1905-இல் அருப்புக்கோட்டையில் ‘குறவர் விடுதி’ ஒன்றும் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

கிறித்தவ சமய நிறுவனங்களாலும், அரசு நடவடிக்கைகளாலும் குறவரின மக்களில் சிலர் கல்வியறிவையும்,  அரசுப்பணியையும் பெற்றனர் என்பது ஒரு புறமிருந்தாலும் சுதந்திர இந்தியாவில் குறவர் மீதான குற்ற பரம்பரைச் சட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பினும் சில சலுகைகளைக் குறவரில் சிலர் அனுபவித்து முன்னேறியிருந்தாலும் காவல் துறையினர், பொது மக்கள் ஆகியோர் ‘கண்ணோட்டத்தில்’ குறவர்கள் ‘திருடர்கள்’ என்னும் பார்வை மாறிவிட்டது எனக் கூறமுடியாது. ‘கொறமுழி முழிக்கிறான் பாரு’ என மக்கள் ஏசிக் கொள்வதை இன்றளவும் காணமுடிகின்றது. காவல் துறை, பொது மக்கள் என அனைவரிடமும் குறவர்கள் என்றவுடன் திருடர்கள் என்று இழிவாகப் பேசும் நிலை யுள்ளது. காவல் துறையினரின் கெடுபிடிகள் குறவர்கள் மீது இன்றைக்குமுண்டு.

ஆக்கூர் இளைஞன் செந்தில் (தலித் முரசு,2005:11) கல்யாணியின் மீது சுமத்தப் பட்ட திருட்டுக் குற்றம், புளியம்பட்டி பழனி யம்மாளின் மீதான பாலியல் வன்முறை, பழங்குடி சாணைத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் (உழவன் உரிமை, 2005:17-18) எனத் தொடர்ந்து இன்றுவரை தொடரும் தாக்குதல் பலவற்றைக் கூறமுடியும்.

குறவர் இனப் பழங்குடிகள் சந்திக்கும் மிகமுக்கிய சிக்கல்களில் அவர்கள் மீது போடப்படுகிற திருட்டு, கொள்ளைத் தொடர்பான வழக்குகளாகும். ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குறவர் மற்றும் கள்ளர், மறவர் ஆகிய சமூகப் பிரிவினரை குற்றப்பரம்பரையினர் எனும் சட்டத்தில் வைத்து குற்றவாளியாக்கி கொடுமை புரிந்ததைக் கடந்தகால வரலாறு நமக்குக் காட்டுகிறது. இதற்கெதிராகக் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தலைவர்கள் பி.இராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோரும் முத்து ராமலிங்கம் போன்றோரும் போராடிக் குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கினர். கி.பி. 1952இல் இது நீக்கப்பட்ட போதிலும் குறவர்  மக்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடர் கிறது. குறவர், இருளர், ஒட்டர் மக்கள் மட்டுமே குற்றம் செய்திட பிறந்தவர்கள் போலவும் படித்துப் பட்டம் பெற்று சுயமரியாதையுடன் வாழ மறுப்பவர்கள் போலவும் திட்டமிட்டு தமிழக காவல்துறை இன்றளவும் தொடர்ச்சியாகப் பொய் வழக்குப் போட்டு அவர்களை சீரழித்து வருகிறது.

எந்தப் பகுதியில் திருட்டுக் குற்றம் நடந்தாலும் உடனே அந்தப் பகுதியில் வாழும் குறவர் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களைப் பிடித்து வைத்து அடித்து சித்திரவதை செய்தல், செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள வைப்பது, பொய் வழக்குப் போடுவது, அடித்துக் கொன்றுவிடுவது இவர்களோடு தொடர்புடைய பலரையும் மிரட்டி வழக்குத் தொடுப்பதையும் அவர் களிடம் பணம் பறிப்பது என்று காவல் துறை தொடர்ந்து செயல்படுகிறது. குறவர் மக்கள் அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதைப் பார்க்கமுடிகிறது.

குறிஞ்சி நில  மைந்தர்கள் என்று பெருமையோடு தமிழரின் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வேட்டைச் சமூகம் காவல்துறையின் பொய் வழக்கு வேட்டைக்கு இரையாகி வருகின்றது. எனவே குறவன் என்று வெளியில் தெரிந் தாலே கேவலம் என்று கருதி தன் அடை யாளத்தையே மறைத்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒருமுறை திருட்டு வழக்கில் காவல் துறையிடம் சிக்கி விட்டால் அக்குடும்பம் மண்ணுக்குப் போகிறவரை தப்பமுடியவில்லை.  குறவர் மீதான தாக்குதல்களான அடிப்பது, காயப்படுத்துவது, வீடு புகுந்து அங்கிருக்கும் பண்ட பாத்திரங்கள், அவர்களின் சேமிப்புப் பணம், பெண்களின் காது, மூக்கில் இருக்கும் அணிகலன்கள் மற்றும் குடும்ப அட்டை வரை குறைந்த பட்ச பொருள்களைத் தூக்குவது, உற்றார் உறவினர் மீது வழக்குப் போடுவது, சிக்கிக்கொண்டவனின் குடும்பப் பெண் களை அவமானப்படுத்துவது, வன்புணர்ச் சிக்கு உள்ளாக்குவது, சிறுவன், சிறுமி என்று பார்க்காது தாக்குவது என எல்லையற்ற கொடுமைகள், பொய் வழக்குகள், கொட்டடி சித்திரவதைகள் என குறவரின பழங்குடி மக்கள் மீதான நமக்குத் தெரிந்து கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கொடுமைகள் ஏராளம்.

 1. 05.04.1997 திருவள்ளுவர் மாவட் டம் கடம்பத்தூர், கசடா நல்லூர் கிராமத் தைச் சார்ந்த 4 பேர்- தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சித்திரவதை.

2. 30.11.1997இல் வேலூர்  மாவட் டம் பொன்னைக் கிராமத்தைச் சார்ந்த 5 குறவன் இனமக்கள் திருவள்ளுவர் மாவட்ட போலீசாரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு மனைவி மக்களுக்கும் தெரியாமல் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள வைத்து தாம் திருடி வைத்திருந்த நகைகளை அந்த ஊர் பெரிய மனிதர்களிடம் கொடுத்ததாக சொல்லச் சொல்லி நகை, பல லட்சக் கணக்கான ரூபாயை வசூல் செய்தனர். கிட்டத்தட்ட 11 பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளினர். இதில் அனைத்து வழக்கு களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 3. நவம்பர் 4 ஆம் தேதி 97ஆம் வருடம் வேலூர் மாவட்டம் வெங்கடேசன், கிருஷ்ணன், விசயகுமார், பலராமன் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு R.K.Pettai Police Station இல் 10 நாள் அடைத்து வைத்து வழக்குப்பதிவு செய்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர்.

4. விருத்தாச்சலம் முதனை கிரா மத்தைச் சேர்ந்த ஆர். ராஜாக்கண்ணுவை 19.03.93 அன்று நகை திருட்டு வழக்கில்  தொடர்புபடுத்தி விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கள் 2 பேருக்கு 31.05.2004&இல் விருத்தாச் சலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல்முறை யீட்டுக்குப் பின் உயர்நீதி மன்றமும் அத் தீர்ப்பை உறுதி செய்து தற்போது குற்ற வாளிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

5. அக்டோபர் 17ஆம் தேதி, 1999 ஆம் வருடம் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம் பட்டு கிராமம், தேவராஜன், மனோகரன், கந்தன் ஆகியோர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இரவு 10 மணிக்கு அடைப்பு-ச் சித்திரவதை.

6. 2000ஆம் வருடம் ஜுலை ஆந்திரா மாநிலம், சித்தூர் குப்பம் காவல் நிலை யத்தில் தர்மபுரி குப்புசாமி 10 நாட்கள் அடைப்புச் சித்திரவதை.

7. 2000 செப்டம்பர் மாதம் ஆவடி காவல் நிலையத்தில் பரமசிவம் என்பார் மீது பொய் வழக்கில் சித்திரவதை.

8. 2000 ஆம் வருடம் நவம்பர் 3ஆம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர், வாடவாக்கரை விஜயகுமார் சித்திரவதை (பத்மினி என்பவர் வன்புணர்ச்சி செய்யப்பட்ட காவல் நிலையமும் இதுவே)

9. 2001இல் சேலம் சுப்பிரமணி என்பவர் மீதான வழக்கு.

10. 2002 சனவரியில் தர்மபுரியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் மணிமே கலை கணவனுக்கு முன்பாகவும் 27 வயது விஜயாவும் காவலர்களால் வன்புணர்ச்சிக் குள்ளாயினர். (முதல்வர் ஜெயலலிதா சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு, துணை ஆய்வாளர் சுப்பிரமணி, ஆய்வாளர் கண்ணப்பன் ஆகியோர் குற்றவாளி எனத் தீர்ப்பு)

11. 2002 நாகை மாவட்டம் கலிய மூர்த்தி, கண்ணன், ஆனந்தன், குமரவேல், வடிவேல், பாக்கியராஜ் ஆகியோர் 3 நாள் சித்திரவதை.

12. 2002 சூலையில் மதுரை மாவட் டம் மேலூரைச் சார்ந்த குமாரும் 2002இல் நள்ளிரவு 1 மணிக்கு சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த உலகநாதபுரம் சரஸ்வதி, பாண்டிமீனா ஆகியோர் தனிப்படைக் காவலர் களால் கைது செய்யப்பட்டு நிர்வாண சித்திரவதை.

13. 2002இல் பர்கூர் கஞ்சிகுப்பம், பாண்டிச்சேரி தர்மபுரி பர்கூரில் 8 காவலர்கள் உலக்கை தடியுடன் சென்று முதியவர் தோழன், செல்வம், சிவகுமார் ஆகியோரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர்.

14. கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதி நகர் பரந்தாமன், சொக்கண், முரளி, தேவகிரி என 15 பேரை தனிப்படைக் காவலர் அரக்கோணத்தில் வைத்து கொடுமை செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.

15. திருப்பத்தூர், (வேலூர்) தந்துளி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் காமராஜ், ஏட்டு பாஸ்கர், ஜீப் ஓட்டும் போலீசார் என 7 பேர் திருப்பத்தூர் வட்டம் குறிச்சி கிராமத்தில் குறவர் மக்கள் கோயில் திருவிழாவை முடித்துவிட்டு உறங்கி கொண்டிருந்தபோது வீடு புகுந்து இராமன், முருகன், தினகரன், மகேந்திரன் ஆகியோரை கைது செய்து, ஆண்கள், பெண்கள், குழந்தை களை காலால் எட்டி உதைத்து தாக்கினர், 7 நாட்கள் வரை ஊரை விட்டே குறவர் மக்கள் ஓடிவிட்டனர்.

16. விழுப்புரம் மாவட்டம் நயினார் குப்பம் குளத்து மேட்டைச் சார்ந்த என்.நாராயணன் (அகவை 25) திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1.06.2004 இல் இறந்து போனார்.

17. வாணியம்பாடி காவல் நிலை யத்தில் அன்றைய தருமபுரி மாவட்டம் எலச்சூர் கிராமத்தில் வாழும் கோவிந்தசாமியின் மகன் ஆனந்தன் என்பவரை தேடுகிறோம் என்ற பெயரில் ஆனந்தனுடைய தகப்பனார், மனைவி, தம்பி, தம்பி மனைவி மணிமேகலை, உறவினர் விஜயா ஆகிய அனைவரையும் கைது செய்தனர். அடித்து உதைத்து உலக் கையில் கட்டித்தொங்கவிட்டு சித்திரவதை செய்தனர். பெண்களை மானபங்கப்படுத்த மங்கை, மணிமேகலை ஆகிய இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததை கேள்விப் பட்ட சி.பி.எம். தலைவர்கள் தலையிட் டதும், ‘பிக்பாக்கெட்’ அடித்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

18. நாகை மாவட்டம் மயிலாடு துறையைச் சார்ந்த ஆக்கூர் செந்தில் என்ற 18 வயது இளைஞரை 09.12.2004 இல் விசாரணை என்ற பெயரில் சட்ட விரோத மாக 6 நாட்கள் செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டார்கள்.

19. கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண் டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம் மாளின் கணவரை 27.03.2005 அன்று சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். கணவரை பார்க்கச் சென்ற பழனியம்மாளை காவலர்கள் பல நாட்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதின் விளைவாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தீர்வு என்பது காணப் படவில்லை. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கையில்லை.

20. 18.08.2010 அன்று நாமக்கல் மாவட்டம் கே.எஸ்.ஆர். நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்த ரூபினி (அகவை 18) என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லி அவரது உறவினர்களை காட்டச் சொல்லினர். பிறகு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியி லுள்ள கண்ணன் லாட்ஜில் அடைத்து வைத்தனர். சித்திரவதை செய்தனர். அவரது கழுத்திலுள்ள 1 பவுன் தங்கச் சங்கிலியை காவல் துறையினர் பறித்தனர்.

21. விழுப்புரம் மாவட்டம் பரிந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபரை 16.08.2010 அன்று இரவு கைது செய்தனர். 18.08.2010 அன்று நடுவீரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்து கொன்றனர். ஆனால் விசாரணைக்கு அழைத்து வரும்போது தப்பி ஓடியதாகவும், விரட்டும்போது மரத்தில் மோதி இறந்து விட்டதாகவும் போலீசார் கூறினர். போச்சம்பள்ளி, தேனி, சமயபுரம், டால்மி யாபுரம், உப்பிலியாபுரம், ஒட்டஞ்சத்திரம், இராமநாதபுரம், கமுதி, திருச்சி கண்டோன்ட் மெண்ட், திருப்பூர் டி1 காவல்நிலையம், பரமக்குடி நகர காவல்நிலையம், கோவை மதுக்கரை, திருப்பூர் நல்லூர், ஊத்தங்கரை, நல்லவன்பட்டி, பள்ளிப்பாளையம், கரூர், குளித்தலை, திண்டுக்கல், நிலக்கோட்டை, வாலாஜாபாத் என பல பகுதிகளில் இன்று வரை குறவரினத்தின் மீதான பொய் வழக்கு கள், லாக்கப் சித்திரவதைகள் தொடர் கின்றன. அண்மைச் சம்பவம் ஒன்றையும் காணலாம்.

கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி புதன்கிழமை காஞ்சிபுர மாவட்ட வாலாஜாபாத் அடுத்த தேவரியம் பாக்கத்தில் பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு கொள்ளையர் களின் உடல்கள் அவர்கள் மனைவிகளிடம் ஒப்படைப்பு. வீட்டில் திருடிய கொள்ளை யர்கள் பொது மக்களால் அடித்துக் கொலை. நகைப் பணத்துடன் தப்பிய கொள்ளை யனைப் பிடிக்கத் தனிப்படை, இரண்டு கொள்ளையர்கள் அடித்துக் கொலை, தப்பிய கொள்ளையன் எங்கே? - தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை. வீடு புகுந்து கொள்ளையடித்த சகோதரர்கள் அடித்துக் கொலை.

இறந்த கொள்ளையர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பரபரப்பாகத் தமிழ கத்தின் பத்திரிகைகளான தினத்தந்தி, தமிழ் தி இந்து, தினமணி, தினமலர் என பத்திரி கைகள் கதை, திரைக்கதை, வசனம் எழுதின. இச்செய்தியானது பத்திரிகைகள் புலனாய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்து எழுதியதல்ல. காவல் துறை சொன்ன செய்தி யையே பத்திரிகைகள் அப்படியே வெளியிட்டன.

தமிழ் தி இந்து நாளிதழ் கூடுதலாக இக்கொள்ளையர்கள் குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வெளியிட்டது.

தினமணி இக்கொள்ளையர்கள் மீது விழுப்புரம் அதனைச் சுற்றியுள்ள காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளைத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக எழுதியது.

அதுமட்டுமல்லாமல் அப்பத்திரிகைகளின் இக்கொள்ளைப் பற்றியச் சாராம்ச மான செய்தி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கொந்தராம் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (53) அவர் தம்பி அர்ஜுனன் (48) தங்கைக் கணவர் மாணிக்கம் (40) ஆகிய மூவரும் தேவரியம் பாக்கம் கிராமத்தில் முனியாண்டி என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்ததாகவும் வீட்டினுள் புகுந்து 30 பவுன் நகையையும் 3.5 இலட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாகவும் அதன்பின் வீட்டிலிருந்து வெளியேற வாசல் பகுதிக்கு வந்ததாகவும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கொள்ளையர்களில் ஒருவன் பறிக்க முயன்ற தாகவும் தனலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத் தினர் ஓடிவர பெரியசாமி, அர்ஜுனன் இரு வரும் தப்பிச் செல்வதற்காக அருகிலிருந்த வயலில் ஓடியதாகவும் பொதுமக்கள் வளைத்துப் பிடிக்க பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிராமத்தினரைத் தாக்க பலராமனுக்கு முதுகில் காயம் ஏற்பட அவரது உறவினர் கிருஷ்ணனுக்கு கையானது துண்டாகி விடவே ஆத்திரமடைந்த கிராமத்தினர் இருவரையும் கற்களாலும் உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாலும் பலத்த காயமடைந்த இவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இறந்ததாகவும் மாணிக்கம் என்பவர் மட்டும் இரு சக்கர வாகனத்தில் ஓடியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இந்த சாராம்ச செய்தி சிலவற்றை கேட்கத் தூண்டுகிறது. பெரியசாமி, அவரது சகோதரர் அர்ஜுனன், தங்கைக் கணவர் மாணிக்கம் இம்மூவரும் தேவரியம் பாக்கத் திற்குச் சென்ற காரணம் என்ன?

 கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் 30 பவுன் நகையும் 3.50 இலட்சம் ரொக்கம் இருப்பது அவர் களுக்கு எப்படித் தெரியும்?

30 பவுன் நகையும் 3.50 இலட்ச ரூபாயும் வைக்கப்பட்ட முனியாண்டி வீட்டின் பீரோ எப்படித் திறந்து கிடந்தது? காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து அவர்கள் எப்படி தூங்கி யிருக்க முடியும்?

விழுப்புரம் அதனைச் சுற்றியுள்ள காவல்நிலையங்களில் இவர்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் ஏன் போடப்பட்டன?

கொள்ளையின்போது இறந்த இவர்களைக் குறவர் எனும் சாதிக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி ஏன் செய்திகள் வெளியிட வேண்டும்?

இறந்துபோன பெரியசாமி, அர்ஜுனன் ஆகியோரின் குடும்பத்தாரை அணுகிய போது பெரியசாமி கொள்ளைச் சம்பவத் தின் முதல் நாள் வழக்கொன்றிற்காக வாய் தாவுக்குப் போய்விட்டு வாலாஜாபாத்தி லிருக்கும் தனது தம்பியான உடல்நிலை சரியில்லாத அர்ஜுனனைப் பார்க்க பெரிய சாமி மாலை 7.00 மணிக்கு வந்தார்.

அர்ஜுனன் நாக்பூரில் பேருந்து பழுதுபார்க்கும் வேலை செய்து வருபவர். அவ்வாறு வேலை செய்து வாங்கும் ஊதியத்தை அங்கிருந்தபடியே வாலாஜாபாத்திலுள்ள தனது வீட்டாருக்கு அனுப்பி வந்தார்.

அவர் மீது எந்த வழக்கும் கிடையாது. உடல்நிலை சரியில்லாமல் வாலாஜாபாத்தில் தனது வீட்டிலிருக்கும் போது தான் பெரியசாமி அவரைப் பார்க்க வந்தார். அன்று காலைதான் உடல்நிலை சரியில்லாத அர்ஜுனன் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்துள்ளார். பெரியசாமி தனது தம்பியைப் பார்த்து நலம் விசாரித்தபடியே அன்று இரவு 9 மணி வரை பேசிக்கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகுதான் இக்கொள்ளைச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரை, இரத்த அழுத்தம் என உடல்நிலை சரியில்லாத அர்ஜுனனை பார்க்க வந்த பெரியசாமி அர்ஜுனனோடு சேர்ந்து முன்பின் தெரியாத தேவரியம்பாக்கத்தில் எப்படி கொள்ளை யடிக்கச் சென்றிருக்க முடியும்?

பெரியசாமி கடைசிவரை தையல் தொழிலாளியாக இருந்து வந்தவர். இச் சம்பவத்திற்குப் பின்னால் பெரியசாமி, அர்ஜுனன் ஆகியோரின் குடும்பத்தாருக்கு இறந்த செய்தியை சொல்லாமல் வாலாஜா பாத் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து ஒரு நாள் முழு இரவு வரை லாக்கப்பில் அடைத்து வைத்து அடித்தனர்.

முதலில் அர்ஜுனன் மனைவி, பிள்ளை களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். பிறகு மறுநாள் பெரியசாமியின் மனைவி, பிள்ளைகளைக் கொண்டு வந்தனர்.

பெரியசாமியின் பெண்ணான 10ஆவது படிக்கும் பெண்ணை அசிங்கம் அசிங்கமாக கெட்ட வார்த்தைகளில் திட்டினர். அர்ஜுனனின் 5 வயது சிறுவனைத் ”திருட்டுப்பயலே” என்று கன்னத்தில் ஓங்கி அறைந்தனர். பெரியசாமி, அர்ஜுனன் ஆகியோரின் மனைவி மற்றும் பெண் பிள்ளைகள் அணிந்திருந்த நகைகள், உண்டியல் சேமிப்பு பணம் எல்லாவற்றையும் திருடி சம்பாதித்தது என குற்றம் சாட்டிப் பிடுங்கினர்.

குடும்ப அட்டை, வருமானவரி அட்டை, காப்பீட்டு ரசீது, ஓட்டுனர் உரிமம் உட்பட எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டது. பெரியசாமி, அர்ஜுனன் என்ற இந்த இரண்டு குடும்பத்தாரிடமும் வெற்றுத் தாளில் கையெழுத்துப் போடச் சொல்லி அடித்து எழுதி வாங்கினர். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள், 5ஆவது படிக்கும் பள்ளிச் சிறுவன் உட்பட அனைவரிடத்தும் ‘கைரேகை’யை வாங்கிக் கொண்டது.

வாலாஜாபாத்தில் படிக்கும் அர்ச்சு னனின் பிள்ளைகளின் பள்ளிக்குச் சென்று அப்பிள்ளைகளின் சாதிச் சான்றிதழை கேட்டு மிரட்டி வாங்கிப் பார்த்தது. பள்ளிக்கு இவர்கள் வந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தரு மாறு பள்ளியில் மிரட்டிச் சென்றது.

காவல் துறையானது பள்ளிக்குச் சென்று அர்ச்சுனனின் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கும் போது பள்ளி நிர்வாகம் அப்பிள்ளைகள் தவறாமல் பள்ளிக்கு வருவார்கள் என்றும் நன்றாகப் படிப்பார்கள் என்றும் கல்விக் கட்டணம் கூட நிலுவை இல்லாமல் சரியாகச் செலுத்தி வருகிறார்கள் என்றும் கூறியது.

அர்ஜுனனின் மகள் தேசிய அளவில் சென்று வெற்றிப் பெற்று வந்தவர் என்றும் இவர்களால் தங்கள் பள்ளிக்குப்  பெருமை என்றும் கூறியது.

“சம்பவத்தைச் செய்தித் தாளில் பார்த்துதான் தெரிந்து கொண் டோம். செய்தித் தாளில் இவர்களை குறவர் கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் பள்ளியில் தரப்பட்டுள்ள சாதிச்சான்றிதழில் நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று நிர்வாகம் கூற காவல் துறையோ அவர் கள் குறவர்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லிச் சென்றது.

பின்னர் அர்ச்சுனன் குடியிருக்கும் வாலாஜாபாத் வீட்டிற்குச் சென்று வீட்டு உரிமையாளரை மிரட்டி இவர்களை எப்படி குடி வைத்தீர்கள் என்றும் இவர்கள் பெருங்கொள்ளைக் காரர்கள் என்றும் பீதியூட்டினர். வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் சிலவற்றை அள்ளிச் சென்றனர்.

மேலும் காவல் நிலையத்தில் இருவரின் குடும்பத்தாரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து வதைத்ததோடு மட்டுமல்லாமல் “உன் கொள்ளைக்கார புருசன் இறந்துவிட்டான். இதோடு பிரச்சனையை முடித்துக்கொள். இல்லையெனில் உன் மூத்த மகன் மேல திருட்டு கேசு போடுவேன்.

உன்னையும் விபச் சார கேசுல போடுவேன்” என்று மிரட்டி விரட்டி அடித்தனர். ஸ்ரீபெரும்புத்தூர் சுடுகாட்டில் இரு வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தகனத்தின்போது பெரியசாமி, அர்ஜுனன் ஆகியோரின் குடும்பத்திற்கு ஆதரவாகச் சென்ற சமூகச் செயல்பாட்டாளரான புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறையின் நிர்வாகி திரு.நீலமேகம் கடுமையாகக் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார்.

“என்னா! தலை வரே! இவனுங்க பெரிய கொள்ளைக்கார னுங்க திருடி அப்பார்ட்மண்ட் வீடெல்லாம் கட்டி வச்சிருக்கானுங்க. இவனுங்கிட்ட ஒரு கட்டிங் வாங்கிரு” என்றதும் அச்சமூகச் செயல்பாட்டாளர் “அவர்கள் ஏழை தலித் என்பதற்காக வந்தேன்.

நீங்கள் பேசுவது தவறு” என்று பேசியதும் அவரைச் சூழந்து கொண்டு “உனக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?” எனக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அவமானப்படுத்தினர்.

மயானத்தில் அர்ஜுனன் மற்றும் பெரியசாமியின் இறந்த உடல்களை எரிப்பதற்கான செலவைக் கேட்டு அக்குடும்பத்தாரை காவல்துறை மிரட்டியது.

அவர்களிடம் பணமில்லை என்றதும் ஒரு காவல் ஆய்வாளர் “நான் பணம் தரேன் திரும்ப கொடுத்துட வேண்டும்” எனச் சொல்லினார்.

பின்னர் 15,000 ரூபாயை எரிப்பதற்கான செலவாகப் பறித்துக் கொண் டனர். தொடர்ந்து அவர்களின் உறவினர் கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பலரையும் தேடிச்சென்று மிரட்டிப் பணம் பறித்தது. இவ்விடத்து எப்படி வரலாற்றில் ‘மீனா’ (meenas) என்னும் பழங்குடிகள் ராஜஸ் தான் வாழ் மேவ்  (Meo) பழங்குடியினரோடு தொடர்புடையவர்கள் என்பதற்காகவே குற்றப் பழங்குடி என ஒடுக்கப்பட்டார்களோ அதேபோலத்தான் பெரியசாமி, அர்ஜுனன் குடும்பத்தாரோடு உறவுள்ளவர்கள் என்று கருதி பலரும் இப்பிரச்சனையில் குற்ற வாளிகளாக நடத்தப்பட்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய தேதிவரை அக்குடும்பத்தாரின் குடும்ப அட்டையைக் கூட வைத்துக் கொண்டு தராமல் அதைக் கேட்டால் “கேசு போடு வேன்” என்று தொடர்ந்து மிரட்டுகிறது வாலாஜாபாத் காவல் நிலையம்.

காவல்துறை என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக குறவர் மக்களின் வாழ்வில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் ஒரு காரணி யாகவே உள்ளது என்பதைக் இச்சம்பவங் களிலிருந்து காணலாம்.

திருட்டில் ஈடுபடவைக்கும் போலீஸ்

பொதுவாகவே ஊரில் எங்கேனும் நகை, பணம் எனத் திருடுபோனால் கூடை முடையும், கல் உடைக்கும், சாணைத் தொழில் புரியும் ‘உழைக்கும் குறவர்’ மக்களை குறி வைத்து அழைத்துக் கொண்டு போய் இரண்டு நாள், மூன்று நாள் எனக் காவல் நிலையத்தில் வைத்தோ/தனியாக வேறொரு இடத்தில் வைத்தோ “நீ திருட்டு நகை கொடுத்ததாக ஏதாவது ஒரு நகை கடையைக் காட்டு. விட்டுடுறோம்” என அடித்து வதைப்பது, பொய் வழக்கு போடுவது, மிரட்டி குறவர்களின் உடைமை களான நகை, பணம் போன்றவற்றை பிடுங்குவது, குறவர்கள் வேறு தொழில்களுக்குப் போனாலும் அப்படிப்போக விடாமல் அவர்களை நிர்ப்பந்தம் செய்து திருட்டுக் குற்றத்தில் ஈடுபடத் தூண்டுவது, திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டி வழக்கிலுள்ளவர்களைக் கட்டாயப் படுத்தித் திருடச் சொல்லுதல், திருடிய பொரு ளைக் கொண்டு காவல்துறையே பணம் சம்பாதித்தல், குடும்பத்தில் அப்பாவின் மீது திருட்டு வழக்குப் போட்டு நெருக்கடி தந்து திருட வைத்து சம்பாதித்தல், அப்பா இறப்புக்குப் பின் குடும்ப உறுப்பினர்களான பிள்ளைகளைத் திருட்டு வழக்கில் சேர்த்து திருட நிர்பந்திப்பது, நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்கையெல்லாம் போட்டு சாகும் வரை அவர்களைச் சீரழிப்பது என்பதாகக் குறவர் மக்களைத் திருடர்களாகவே வைத்திருப்பது என்பதை தொடர்ந்து செய்து வருகிறது காவல்துறை.

பிரிட்டிஷார் ஆட்சிக்காலம் முதற்கொண்டே திருட்டு வழக்குகளைப் பதிவு செய்தல், திருடர்களை கைது செய்தல், அவர்களை தண்டித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும் போலீசாருக்கு பதவி உயர்வு, Increment ஆகியவற்றினை அரசாங்கம் வழங்குகிறது.

இதனால் போலீஸ் போலியான திருட்டு வழக்குகளை பதிவு செய்து அப்பாவிகளை கொடுமை செய்கிறது. அதன் வாயிலாக பணபலம் உடைய திருடர் களை காப்பாற்றுகிறது.

இதன் அங்கமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் குறவர்கள் என்ற சமூகப் பிரிவினர் ஏற்கனவே இருந்த ஒரே காரணத்தினால் திருட்டு வழக்குகளை எளிதாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீக்கப்பட்ட மேற்காணும் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.

குறவர் மக்கள் கண்ணிய மாக வாழ்வதற்கு எந்த வாழ்வாதார ஏற்பாட் டையும் செய்யாமல் இருக்கும் நம் சமூகத்தில் அவர்கள் சில நிர்பந்தங்களின் காரணமாக சில குற்றச் செயல்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அத்தகையோர் நடுத்தர மக்களிடம் அவ்வாறு ஈடுபடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் தவிர்க்க முடியாமல் இவ்வாறு ஈடுபடும்போது மேல் வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ என்று பார்க்க இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

 இதை வகை மாதிரியான (நடுத்தர) உடமை வர்க்க மனப்பான் மையின் அடிப்படையில் புரிந்துகொள்ளக் கூடாது. குறவர் மக்கள் ஒப்பீட்டளவில் நல்ல வாழ்வாதாரத்துடன் வாழும் தேனி மாவட்டத்தில் அவர்கள் மீது திருட்டு வழக்குகள் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுவீத உற்பத்தி, சிறுவீத வணிகம் ஆகியவற்றில் முதன்மையாக ஈடுபடும் குறவர் மக்களின் உபரியை ஏற்கனவே ஏகாதிபத்தியம், வளரும் இந்திய ஏகாதிபத்தியம் போன்றவை அபகரிக்கும் இச்சூழலில் அவற்றின் காவலனான காவல் துறையும் தனது பங்கிற்கு திருட்டுச் செயல்களை தடுப்பதாக போலியாக காரணங்காட்டி இம்மக்களின் உழைப்பினால் விளையும் உபரியை கொள்ளையடித்து விட்டு அவர்கள் மீதே திருட்டு பட்டம் கட்டிவிடுகிறது.

Pin It