foot

ஜனநாயக நாட்டில் வாழும் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை, வாழ்வியல் மேடு பள்ளங்களை, பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை ஈடு செய்வதற்கு அம்பேத்கர் என்கிற சமூக விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று சமுக நீதி. ஆக்கம் அழிவு என்கிற முதலாளித்துவச் சுரண்டலின் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை விட, சமூக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனித வாழ்வை, மனித மதிப்பீடுகளால் உயிர்ப்பிக்கின்ற சமூக நீதிக்கான கண்டுபிடிப்பாக இடஒதுக்கீடு இருந்து வருகின்றது.

உலகமயம், தனியார்மயம் ஒடுக்கப்படுகின்ற மக்கள் மீது நெருக்கடிகளை உருவாக்கி வரும் சூழலில், ஒடுக்கப்படுகின்ற மக்களின் வாழ்வாதார நம்பிக்கையை உறுதி செய்கிற இந்த அரிய கண்டுபிடிப்பு, பார்ப்பனியக் கூட்டுச் சதியால் மெல்ல தகர்க்கப்பட்டு வருகின்றது. சுய நிதிக்கல்லூரி என்கிற தனியார் "தாதா'க்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் அதுதான். இவை ஒருபுறம் இருந்தாலும், பல ஆண்டுகளாக தலித் கிறித்துவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெறுவதற்கு சாத்தியக் கூறுகளே இல்லாத நிலையை 23.8.2005 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

"தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்று போராடிய பலர் இன்று உயிரோடு இல்லை. செத்துப்போன தலித்துகளுக்கு கல்லறைகளில்கூட இடஒதுக்கீடு கொடுக்க திருச்சபைகள் மறுத்தன. இந்தியக் கிறித்துவர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் நிரம்பிக் கிடக்கின்ற தலித் கிறித்துவர்கள் மற்ற தலித்துகளைப் போல சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் இன்னமும் வேர் பறிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். 1947 க்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அதுதான் இன்றைக்கும்.

“கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதி தீண்டாமைக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இவர்கள் தலித் அல்லாத கிறித்துவர்களாலும், மற்ற ஆதிக்கச் சாதியினராலும் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள்'' என்பதை மிகக் கூர்மையாக அம்பேத்கர் சுட்டிக் காட்டினார் (அம்பேத்கர் நூல் தொகுதி : 5, பக்கம் : 470). இதனைக் கருத்தில் கொண்டே 1948 இல் அரசியல் சட்ட மறுவடிவை அவர் கொண்டு வந்தார். இந்த முயற்சியை கே.எம். முன்ஷி மறுத்து நிராகரித்த பிறகும் 1950 இல் வெளியான "குடியரசுத் தலைவரின் இந்திய அரசியல் சட்ட ஆணை 1950' (10.8.1950 பத்தி: 3, எஸ்.ஆர்.ஓ. 385 சி.ஓ. 19) இன்றுவரை முட்டுக்கட்டையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

இந்த ஆணையை மாற்றி புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குப் பிரிவு 341(1), 341(2) இன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட இன்று வரை வாய்ப்பில்லை. ஆனால், ஆதாரங்கள் மட்டும் ஏராளமாக இருக்கின்றன. இதற்காக கடந்த 15 ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கத்தோலிக்கத் திருச்சபைகள் சில முயற்சிகளை மேற்கொண்டன. தமிழகத்தில் பிராங்ளின் சீசர் என்பவர், பல ஆதரவுத் திருச்சபைகளை இவ்வழக்கிற்குச் சாதகமாக்கியுள்ளார். 1992 இல் "தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின், சார்பில் 200 உறுப்பினர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். தங்களின் முன் வரைவை அரசுக்கும் பரிந்துரை செய்தனர். அதே போல, 1996 இல் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தனது சட்டத் திருத்த வரைவில் (12016/30/90 SCR (R cell 23.8.1996) தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி பரிந்துரை செய்துள்ளது.

மண்டல் ஆணையம், காகா கலேல்கர் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணைய அறிக்கை 1981-1982, ஆந்திர மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையம், கேரளாவின் பிற்படுத்தப் பட்டோர் குறித்த குமாரபிள்ளை ஆணையம், இளைய பெருமாள் குழு அறிக்கை 1969, சிதம்பரம் ஆணையம், போன்ற பல குழுக்களின் அறிக்கைகள் தலித் கிறித்துவர்களின் பிரச்சனைகளை விவாதித்து அரசுக்கு கொடுத்துள்ளன. வழக்கம் போல எல்லா அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் அறிக்கையில், தலித் கிறித்துவர்களின் இடஒதுக்கீட்டு முழக்கங்களை 2005 தேர்தல் அறிக்கை வரையிலும் தயாராக வைத்திருக்கின்றன. இதுபோக, தலித் கிறித்துவர்கள் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள், தலித் கிறித்துவர்களின் துயரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளன. இருந்த போதிலும் இன்னும் பிரச்சனை மட்டும் தீரவில்லை.

தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை எங்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டால், மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறது. நாடாளுமன்றத்தில் கேட்டால், உச்ச நீதிமன்றத்தின் குழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்கிறது. 23.8.2005 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி லகோத்தி தலைமையில் நடந்த விவாதம், இதே பார்ப்பனக் கூத்தை அரங்கேற்றியுள்ளது. மீண்டும் வருகிற அக்டோபர் 10 க்கு ஒத்திவைத்திருக்கின்ற காத்திருப்பு அறிக்கைகூட, தலித் கிறித்துவர்களுக்கு நம்பிக்கை அளிக்காது என்பதற்கான அறிகுறி சுயநிதிக் கல்லூரி விவகாரங்களில் தெளிவாகத் தெரிகின்றது. இது போன்ற அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, எல்லா நீதிக்கான தேடலையும் உச்ச நீதிமன்றத்திடம் தான் எதிர்பார்க்க வேண்டுமா? என்கிற கேள்வி எழுகிறது.

சுயநிதிக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும், கிடப்பில் காயடிக்கப்பட்டு வருகின்ற தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்காக இருந்தாலும் இவை எதை உணர்த்துகிறது என்றால், பார்ப்பனியம் உலகமயம் கூட்டணியோடு இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு களம் நோக்கி வருகிறது என்பதை உணர்த்தியுள்ளது. தலித்துகளே! பிச்சை, சலுகை, தர்மம் என்கிற சமூக அநீதிப் பாதைக்கு வாருங்கள் என அமைதியாக அழைக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உரிமை, சமூக நீதி போன்றவற்றை வேரறுக்கத் துடிக்கின்றன.

தலித்துகள் இன்றைக்கு அனுபவித்து வருகின்ற இடஒதுக்கீடுகூட ஜனநாயக அரங்கில் விவாதிக்கப்பட்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியாகப் பெறப்பட்ட உரிமையாகும். ஆனால், மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனச் சமூகம், பிற ஆதிக்கச் சாதியினரும் சமூக நீதிக்கு எதிராக கோயில் மானியம், பிரம்ம தேயம், சதுர்வேதி மங்கலம், தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச் சந்தம், பட்டவிருந்தி, வேதவிருத்தி என கொள்ளையடிக்கப்பட்ட ஒதுக்கீடுகளை அனுபவித்து வளர்ந்து வருகின்றன என்பதை மறுக்க முடியுமா? இந்த வழிப்பறி உண்மை, காலங் காலமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறதே!

மநுநீதி ஒதுக்கீடுகளை இன்றுவரை இட ஒதுக்கீடாக பார்ப்பன சமூகம் அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றது. சாதியச் சமூகங்கள் விவாதித்து வழங்கிய இச்சலுகைகள் யாருக்கும் கிடைக்காதவை; இன்றைய ஜனநாயக அமைப்பு முறையில் எங்கேயும் விவாதிக்கப் படாதவை. நாட்டின் எந்த நீதிமன்றம் இதற்கெதிராக தீர்ப்புச் சொன்னதில்லை. மிகப் பாதுகாப்பாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இச்சமூக அநீதியின் பாத்தியங்களில் எந்தக் குறுக்கீடும் இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் அனுபவித்து வருகிறார்கள் என்கிற மாயை இடைவிடாமல் திணிக்கப்பட்டு வருகின்றது.

1950 க்குப் பிறகு தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் கல்வி, வேலை வாய்ப்புகள் பறிபோயின. தனித் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தங்கள் மீது இழைக்கப்படும் சாதிய வன் கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (1989) பயன்படுத்தவே முடியாமல் போனது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் விதிகள் 330, 332, 334, 335, 338, 341, 366(24) இன்படி, அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டிய உரிமைகள் எதிராளிக்குச் சேர்ந்தன.

பவுத்த, சீக்கிய மதங்கள் அடிப்படையில் சாதியை தங்களின் சமயத் தளங்களில் அங்கீகரிப்பதில்லை; வழிபடுவதும் இல்லை. ஆனாலும், சீக்கியர்களும் (1956), பவுத்தர்களும் (1990) தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். பல போராட்டங்களினாலும், நெருக்கடியினாலும் இவை சாத்தியமாயின. அதுபோலவே, தலித் கிறித்துவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே கடந்த 55 ஆண்டுகால கோரிக்கை. மதம் மாறிய கிறித்துவ பழங்குடியினர்கூட, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (எஸ்.டி) சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, தலித் கிறித்துவர்களுக்கு மட்டும் இதை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

ஒட்டுமொத்த கிறித்துவர்களில் முக்கால்வாசி தலித்துகளைப் பிடித்து வைத்திருக்கின்ற திருச்சபைகள், அவர்களின் இடஒதுக்கீட்டு உரிமைக்காகத் தொடர்ந்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கவில்லை. தஞ்சாவூர், திருச்சி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கும்பல் கும்பலாகக் கிறித்துவத்தைத் தழுவிய அருந்ததியர்கள், கிறித்துவத்தின் எந்த நலனையும் அனுபவிக்க முடியாமல் மீண்டும் இந்து மதத்திற்கும் போக முடியாமல் சிக்கித் தவிக்கும் பல தலைமுறையினரைப் பற்றி, திருச்சபைகள் கவலைப்பட்டதில்லை என்று தென் இந்தியத் திருச்சபையின் திருச்சி மண்டல ஆயர் முனைவர் துரைராஜ் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் நமக்கான சிந்தனையை எதிரணியினரின் பட்டறை கூர்தீட்டிக் கொடுப்பதும் உண்டு. தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் குரல் எழுப்ப வேண்டிய தேவையை பார்ப்பனியச் சமூகம் எச்சரித்துள்ளது. தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஓரணியில் நிற்பதற்கும், தலித் இயக்கங்களுடன் தோழமை இயக்கங்கள் களத்தில் நிற்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிறித்துவத் திருச்சபைகளும் இதில் சாட்சி பகர வேண்டிய தேவை இருக்கின்றது. இட ஒதுக்கீட்டை அனுபவித்துச் சென்ற தலித்துகள், கொஞ்சம் வெட்கப்படாமல் அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை உயிர்ப்பிக்க வேண்டிய வேலையைச் செய்யுங்கள் என அம்பேத்கரின் கருதுகோளை நினைவூட்டியே ஆக வேண்டும்.

இடஒதுக்கீடு என்பது காலங்காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் நீதிச் செயல். வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வாழ்வுக் காப்பீடு. உரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுறுதி. இதனை ஒரு போதும் தப்பவிடக் கூடாது.

Pin It