மோதல்கள் நிறைந்த மாநிலமாக இன்று கருதப்படும் மணிப்பூர் முதல்வர் பாஜகவைச் சேர்ந்த என். பிரேன் சிங் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம்.

வடகிழக்கு மாநிலங்களின் அழகு, மலைகள், இயற்கை வளங்கள் என்று கொண்டாட நிறைய இருக்கிறது. மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் முழுவதும் மக்கள் தொகை பரவியுள்ளது. இது வளமான கலாச்சாரம் கொண்டது. சர்வதேச விருதுகளை வென்ற சில சிறந்த விளையாட்டு வீரர்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது.

இந்த மாநிலத்தில் மூன்று இனக்குழுக்கள் இருக்கின்றன. குகி-ஸோ, நாகர்கள் மற்றும் மெயடீசு ஆகிய இனங்கள். குகி-ஸோ & நாகர்கள் மலைகளிலும், மெயடீசு இனம் பள்ளத்தாக்குகளிலும் வாழ்கிறது. இதில் பெரும்பான்மை மெயடீசு இனம். இங்கு மோதல்கள் குகி-ஸோ & நாகர்களுக்கு இடையே நடக்கும். சில நேரங்களில் குகி-ஸோ & நாகர்கள் ஒன்று சேர்ந்து பெரும்பான்மை இனமான மெய்டீசு இனத்தோடு மோதும்.

மிக நீண்ட காலமாக அந்த மாநிலத்தில் இருக்கும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா பல ஆண்டு காலங்கள் உண்ணாவிரதம் இருந்ததை, அந்த மாநிலப் பெண்கள் அங்கே இருக்கும் பாதுகாப்பு படையினரால் கற்பழிப்புக்கு உள்ளாவதை எதிர்த்துப் போராடிய போராட்டங்களை நாம் மறந்துவிட முடியாது.

வடகிழக்கில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் இரண்டிலும் ஒரு வித அச்ச உணர்வு பாதுகாப்பற்ற நிலையில் இயங்குகிறது. அசாமில் 1980களில் மாணவர்களின் போராட்டம் உட்பட பல சமூகங்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் கிளர்ச்சிகளின் தாக்கம் இன்று வரை அங்கே நிலவி வருகிறது.manipur violenceமெய்டீசு இனத்திற்கு ST அந்தஸ்து வழங்கியது

நீண்ட நாட்களாக தங்களின் பள்ளத்தாக்கு நில உரிமைகளைக் காப்பாற்ற தங்களுக்கும் ST அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டு இருந்தனர். அதை நீதிமன்றம் வழங்கியது.

ILP முறையை பள்ளத்தாக்கிற்கு கொண்டு வந்தது

அவர்கள் பகுதிக்கு மற்றவர்கள் வருவதற்கு ILP (உள்நாட்டு போக்குவரத்து அனுமதி) எனும் திட்டத்தைக் கொண்டு வர கோரிக்கை விடுத்தது. அதை இந்த பாஜக மாநில அரசு வழங்கியது.

பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் வளர்ச்சித் திட்டங்கள்

மெய்டீசு மக்கள் வாழும் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டும் பல்வேறு வித வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது, அங்கே இருக்கும் மலை வாழ் மக்களிடையே தங்களை மாநில ஒன்றிய அரசுகள் புறக்கணிப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டது.

முத்தரப்பு சமாதான உடன்படிக்கையில் இருந்து விலகியது

அடுத்ததாக, 2017 லே தேர்தலின் பொது பாஜக அரசால் ஏற்படுத்தப்பட்ட குகி-சோமி குழுக்களுடன் முத்தரப்பு சமாதான உடன்படிக்கையில் இருந்து மாநில அரசு விலகுவதாக அறிவித்தது. பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய மணிப்பூர் அரசு, திடீரென பழங்குடியினக் குழுக்களுக்கு, பெரும்பான்மையான மெய்தே சமூகத்தினர் (முதல்வர் ஒரு மெய்தேய்) அவர்களுக்கு தன்னாட்சி வழங்குவதை எதிர்க்கிறார்கள் என்ற செய்தியை அனுப்பியது. மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இடையேயான பரஸ்பர அவநம்பிக்கையின் காரணமாக இனவாத மோதல்கள் இருக்கும் மாநிலத்தில் பாஜக முதல்வர் எடுத்த முதிர்ச்சியற்ற அரசியல் முடிவாக இது பார்க்கப்பட்டது.

இந்தப் போராட்டங்கள் அமைதி வழியில் இருக்கும்போது அங்கே போராடிய மலைவாழ் பழங்குடி மாணவர் அமைப்பின் தலைவருக்கும், மலைவாழ் கமிட்டி தலைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதுவும் வன்முறையைத் தூண்ட காரணமாக அமைந்தது.

மே 3 அன்று மாநிலத்தின் அனைத்து மலை மாவட்டங்களிலும் இந்த நீதிமன்ற நோட்டீசை கண்டித்தும் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் பழங்குடியினர் அமைதி அணிவகுப்பை நடத்தினர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற ஓர் அணிவகுப்பின் போது வன்முறை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.

போராட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

மக்களின் இந்த போராட்டங்கள் ஆயுதமேந்திய குக்கி குழுக்களால் ஆதரிக்கப்படுவதாக மாநில அரசு உணர்ந்தது. போராட்டங்களின் காரணத்தை 'அரசியலமைப்புக்கு விரோதமானது' மற்றும் 'சட்டவிரோதமானது' எனக் கூறி, பேரணிகளை நடத்த அனுமதித்ததற்காக இரு மாவட்டங்களிலும் உள்ள துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

ஆயுத குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை

குக்கி-ஜோமி ஆயுதக் குழுக்கள் 2008 முதல் போர்நிறுத்தத்தில் உள்ளன. 2016 இல் இந்தக் குழுக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததற்காக மோடி அரசாங்கத்தை மணிப்பூர் மக்கள் பாராட்டினாலும், கடந்த ஏழு ஆண்டுகளில் பெரிய முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவில்லை. 2017 தேர்தலுக்காக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தான் பாஜக அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததா என்ற கேள்வி இருக்கிறது.

மலை மற்றும் பள்ளத்தாக்கு இடையே நல்லுறவை வளர்க்க உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் ஒரே நேரத்தில் இதை சரி செய்ய வேண்டும். அமைதியான சகவாழ்வுக்கு இது அவசியம்.

தேவாலய இடிப்பு

மாநில அரசாங்கத்தால் போராட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையாக மூன்று தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துவர் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சதி செய்வதாக மலை வாழ் மக்கள் கருதத் தொடங்கி இருக்கின்றனர் என்பதோடு இந்த கலவரம் இப்போது மத சாயம் பூசப்பட்டு பள்ளத்தாக்கு மக்களுக்கு உள்ளே ஹிந்துத்துவா கும்பல் ஊடுருவி இருப்பதாக நினைக்கின்றனர்.

இப்படி இனங்களுக்கு இடையே நடந்த மோதல்களை 'பெரும்பான்மை சமூகம் மற்றும் சிறுபான்மை சமூகம்' என்ற சண்டையைக் காட்டிலும், 'கிறிஸ்தவ மற்றும் இந்து' சண்டையாக பாஜக அரசாங்கம் இப்போது காட்டுவது இரு தரப்பிலிருந்தும் பல அப்பாவிகளின் உயிர்களை இழக்கக் காரணமாகி விட்டது.

தவறுக்கு மேல் தவறாக முதல்வர் தான் சார்ந்த ஒரு இனக்குழுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிருப்தி நிலவிய நேரத்தில் தான் இப்பேர்பட்ட போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியது.

மோதல்கள் நிறைந்த ஒரு மாநிலத்தில் முதல்வர் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த தூண்டுதல்களில் பலவற்றைத் தவிர்த்திருக்கலாம். மாறாக, அவரது நடவடிக்கைகள் பிளவுபடுத்துவதாகவும், வாக்குகளுக்காக பெரும்பான்மை சமூகத்தை ஈர்ப்பதை தெளிவான நோக்கமாகக் கொண்டிருந்தன. பெரும்பாலான சட்டமன்ற இடங்கள் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ளன.

பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் சமூகங்களுக்கு இடையேயான மோதல்கள் நடந்து வந்த நேரத்தில் இப்போது மதமாக மாற்றி இருப்பது ஆபத்தானது.

அமைதிக்காக மக்களை ஒன்றிணைக்கும் தலைவர்கள்தான் இப்பகுதிக்கு தேவை. இந்த விஷயத்தில் பீரேன் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார்.

- ஆர்.எம்.பாபு

Pin It