இந்திய உச்சநீதிமன்றம் தன்னுடைய 70 ஆண்டு கால வரலாற்றில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சில நேரங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றோடொன்று முரண்பட்டுள்ளன. வெவ்வேறு உச்சநீதிமன்ற அமர்வுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை பலவிதமான பொருள்கொண்டு தீர்ப்பளித்துள்ளன. இப்படிப்பட்ட முரண்களை நம்மால் உணர முடிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அதி முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகளான அனைவருக்குமான சம உரிமை, தனிநபர் சுதந்திரம், கருத்துரிமை, மத உரிமை போன்றவை எளிதில் பொருள்படும் படியான மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை விளக்கிக் கூறுவதில் உச்சநீதிமன்றத்தின் பங்கு அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த பொருளை விழிப்புணர்வுடன் வெளிக்கொணர்வதும், கூர்ந்து ஆராய்வதும் உச்சநீதிமன்ற பொறுப்பாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் போது அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் அதனோடு தொடர்புடைய வரலாற்றையும் கவனமாக ஆராய்ந்து, இதுகாறும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சட்ட விதிகளை சிரத்தையுடன் கையாள்வார்கள். இயல்பாகவே அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டு இருக்கிற உத்தரவாதத்தை புரிந்து கொள்ள முயல்கிற நீதிபதிகள், வெவ்வேறு நீதிபதிகள் மாறுபட்ட முடிவுகளை எடுக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விவாதிக்க உச்சநீதிமன்றம் முனையும் போது, மேற்சொன மாறுபட்ட கருத்துகளும் புரிதல்களும் விளக்கங்களும் சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன.supreme court 309பாகுபாடு கொண்ட பார்வை:

உயர் சாதி ஏழைகள் என்ற பெயரில், 10% EWS இட ஒதுக்கீடு தரும் வகையில் பாஜக அரசின் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சட்டத் திருத்தம் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பின் மூலம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்திற்கான உரிமையின் மையத்தில் உள்ள சில அடிப்படை நியதிகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. சாதி அடிப்படையிலான எவ்வித பாகுபாடும் அனுமதிக்கப்படக் கூடாது என்ற கருத்து அவற்றில் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அடிப்படை விதி பெரும்பான்மைத் தீர்ப்பில் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டுள்ளது. 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை செல்லும் என்ற பெரும்பான்மை தீர்ப்பீன் மூலம் உச்சநீதிமன்றத்தின் 70 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பாகுபாடு கொண்ட கொள்கைக் கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்தர் பட் வார்த்தைகளில் புரிந்து கொள்ளலாம்.

பாஜக ஒன்றிய அரசால் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 103 ஆவது சட்டத்திருத்தம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15, 16 ஆகியவற்றைத் திருத்தி பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிகபட்சமாக 10% இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை ஒன்றிய-மாநில அரசுகளுக்கு தருகிறது. ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறும் SC, ST, OBC பிரிவினரைத் தவிர்த்துவிட்டு, மற்றவர்களுக்கு மட்டுமே இந்த 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியலின, பழங்குடியின, கிரீமி லேயரில் வராத பிற்படுத்தப்பட்ட சாதியினர் EWS இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு 1973 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம் முழுமையானதல்ல என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் பாராளுமன்றத்தின் அதிகார வரம்புகள் அரசியலமைப்பில் உள்ளடங்கியவை என்றும், அதை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் என்ற சொற்றொடர் மூலம் நேரடியாகப் புரிந்து கொள்ளலாம் எனவும் நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அப்படி அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் தன்னுடைய உண்மையான அடையாளத்தை இழக்குமெனில், அந்தத் திருத்தச்சட்டம் சட்ட விரோதமானது என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியும். வேறு வார்த்தையில் சொல்வதானால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் அளவிற்கான தன்னிச்சையான, முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை என்பதாகும்.

மனுதாரர்களின் வாதங்கள்

சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் மூன்று வகைகளில் 103 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளது என்றனர்.

முதலாவதாக தனிநபர் பொருளாதார நிலையை முதன்மையாக வைத்து இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு இட ஒதுக்கீட்டு கொள்கையின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. ஏனெனில் சமூகத்தில் நீண்டகாலமாக நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்தாகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. இரண்டாவதாக இந்தச் சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15,16 ஆகியவற்றின் கீழ் இட ஒதுக்கீடு பெறும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கி வைப்பதால் இச்சட்டத் திருத்தம் பாகுபாட்டை அங்கீகரிப்பதாக அமைந்திருக்கிறது. மூன்றாவதாக, உச்ச நீதிமன்றம் வரையறுத்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பு மீறப்படுகிறது.

சட்டத்திருத்தம் செல்லும் என தனித்தனியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, ஜேபி பர்திவாலா ஆகிய மூவரும், பெரும்பான்மை தீர்ப்பை மறுதலித்து சட்டத்திருத்தம் செல்லாது என தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்தர் பட்டும், அதை ஆதரித்த தலைமை நீதிபதி யூயூ லலித் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளும் பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதில் முடிவில் இணங்கிப் போகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஒற்றுமை, வரலாற்று ரீதியாக நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் நியாயமான பங்கைக் வழங்கும் கோரிக்கையில் இருந்து உருவான இட ஒதுக்கீட்டின் அடிப்படை கட்டுமானத்தை குலைத்துள்ளது. ஏனெனில் இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை அடைவதற்கான நிவாரணமாக இதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்தக் காரணங்களுக்காக 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்திரா சஹானி வழக்கில் (1992) பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது .

அனைவருக்குமான சமத்துவத்தை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தினாலும், அந்த கருத்தாக்கத்தோடு பாராளுமன்றத்தை இணங்கச் செய்யும் வேலையை அரசியலமைப்புச் சட்டம் செய்யவில்லை என்ற வாதம் எழ வாய்ப்புண்டு. எனவே, பொருளாதார நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு போன்ற செயல்பாடு சமத்துவத்தை மேம்படுத்தும் என தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அரசு தீர்மானித்துச் செயல்படலாம். அந்த வகையில், கூடுதலான மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக அமையாது என்றும் ஒன்றிய பாஜக அரசு வாதிடலாம்.

103 ஆவது சட்டத்திருத்தத்தின் முக்கியப் பிரச்சினை என்னெவெனில், பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையை உருவாக்குவதின் மூலம் தற்போதுள்ள நடைமுறையில் உள்ள சாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான வகுப்பினரை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து அரசியலமைப்புச் சட்டம் விலக்குகிறது. இதன் விளைவு உயர் சாதிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய இட ஒதுக்கீடு. அதோடு பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனைவரும் இந்தக் கருத்தை, தகுதிவாய்ந்த காரணமாக ஆதரிக்கின்றனர். தனி நபர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தும் பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டின் பலன்களை வழங்குதல் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(6) நோக்கத்திற்காக பொருத்தமானது என்று கூறும் நீதிபதி பரிதிவாலா, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவற்காக ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திப் பார்ப்பது சரியான பார்வை என்றால் SC, ST, OBC சாதியினரை விலக்கி இட ஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே இந்தச் சட்டத் திருத்தம் தன்னிச்சையானது எனவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறது எனவும் சொல்ல இயலாது என்கிறார்.

பெரும்பான்மை தீர்ப்பு எதை புறக்கணிக்கிறது?

SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை இல்லை, மாறாக சமத்துவத்திற்கான உத்தரவாதம் என்பதை EWS சட்டத் திருத்தத்தை ஆதரித்த நீதிபதிகள் பார்க்கத் தவறிவிட்டனர்.

என்.எம்.தாமஸ் வழக்கில் (1975) ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு “சமத்துவத்தை நிலை நாட்டுவதே இட ஒதுக்கீட்டு கொள்கையின் உள்ளார்ந்த நோக்கம்” எனத் தீர்ப்பு வழங்கியதில் தொடங்கி இன்று வரை, இந்த நிலைப்பாடு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாக கருதப்பட்டு வருகிறது. அதை மிகச் சரியாக, “SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்ப்டும் இட ஒதுக்கீடு இலவச இணைப்பு அல்ல, மாறாக கடந்த கால ஒடுக்குமுறையை ஈடு செய்யும் நிவாரணம்” என மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்தர் பட் சுட்டிக் காட்டினார். எனவே, கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பை நாம் வெற்றும் காகிதமாக கருதாத வரையில், 103 ஆவது சட்டத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதாகவே பார்க்கவேண்டும்.

மேலும், நீதிபதி பட் குறிப்பிடுவது போல், இந்த பொருளாதார அளவுகோல் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறும் நபர்களை அடையாளம் காண ஆதாரப்பூர்வமான ஆவணங்களும், ஆய்வுகளும் இல்லாதபோது, நாட்டின் மக்கள்தொகையில் 82 விழுக்காடு உள்ள SC, ST, OBC வகுப்பைச் சார்ந்த பெரும்பான்மையோர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என்ற வரையறைக்குள் பொருந்துகிறார்கள். இவ்வகையில், 103 ஆவது சட்டத் ​​திருத்தத்தின் நோக்கம் தெளிவாகிறது. அது என்னவெனில், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை மாற்றியமைத்தல், இந்திய சமூகத்தில் கடுமையாக ஓடுக்கட்டப்பட்டவர்களை பொதுப்பிரிவுயில் (General Category) இருந்து பிரித்தல், பொதுப்பிரிவுக்குள் நுழைய தடைகளை உருவாக்குதல் ஆகியவையாகும்.

இவ்வகையில், பாஜக அரசின் அநீதியான EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ஆதரித்ததின் மூலம், சமத்துவக் கோட்பாட்டிற்கு முரணான மிகவும் ஆபத்தான பாகுபாட்டு வடிவத்தை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்நிலை தொடர அனுமதித்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடு மீதான சீர்கேடுகள் அதிகரிக்கும்.

சுஹிர்த் பார்த்தசாரதி

நன்றி: The Hindu ஆங்கில நாளிதழ் (2022, நவம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: கார்த்திக் திராவிடன், சென்னை

Pin It