கல்வி வணிகத்தை ஒழித்து அனைவருக்கும் தரமான, சமமான பள்ளிக் கல்வியை இலவசமாக தமிழ் மொழி வழியில் வழங்க வேண்டும்!

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குறித்தான கூட்டறிக்கை

 1. தனித்துவமான கல்விக் கொள்கையே கூட்டாட்சிக்கு உயிரூட்டும்: நமது நாட்டில் தற்போதுள்ள கல்வி அமைப்பிலும் கல்வி முறையிலும் பல்வேறு கேடுகளும் குறைகளும் சிக்கல்களும் உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கை மேலும் பல பாதிப்புகளை உருவாக்கும் என்பதன் காரணமாகவே தமிழ்நாட்டு நலனுக்கென்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. வேறெந்த மாநில அரசும் செய்யாததை தமிழ்நாடு அரசு செய்வது வரவேற்கத்தக்கது. ஒற்றை அதிகார முறைமைக்கு மாற்றாகக் கூட்டாட்சி முறைமைக்கு உயிரூட்டும் செயலாகவும் இதைக் கருதுகிறோம்.
 1. சுதந்திரமான கொள்கை உருவாக்கம்: தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஓராண்டு முடிவடையும் நிலையில் பேராசிரியர் ஜவஹர் நேசன் அவர்கள் குழுவிலிருந்து விலகி இருக்கிறார். மேலும் இரண்டு பேராசிரியர்கள் குழுவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். கல்விக் கொள்கை உருவாக்கப் பணியை முடிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை சுதந்திரமாக வகுப்பதற்குத் தடையாக, அரசின் உயர் அலுவலர்களின் தலையீட்டினால் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக பேராசிரியர் ஜவஹர் நேசன் அவர்கள் குழுவில் இருந்து விலகி இருக்கிறார். இச் சிக்கல் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்தான ஐயத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் சார்ந்த அழுத்தங்கள், வணிக சக்திகளின் அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் கல்விக் கொள்கைக்கான உயர்நிலைக் குழு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.Tamilnadu school students
 1. மக்களின் நலனுக்கான கல்விக் கொள்கை: கல்வியில் தனியார் வணிகர்களின் ஆதிக்கம் பெரும் அளவில் நிலவும் இன்றைய சூழலில், மக்களின் நலனையும் குழந்தைகள் நலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு சுதந்திரமான கல்விக் கொள்கை வகுப்பதற்குப் பல தடைகள் இருக்கும். கல்வி வணிக சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அழுத்தங்கள் இருந்தே தீரும். கல்வியில் தனியார் வணிகர்களின் நலன் என்பது மக்களின் நலனுக்கு நேர் எதிரானது. எனவே, கல்விக் கொள்கை வகுப்பதில் மக்கள் நலனே முதன்மையாகக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். குழந்தைகளின் உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் மதிப்பளிக்கும் கல்விக் கொள்கை உருவாகவேண்டும்.
 1. கல்வியில் தனியார் வணிகம்: நாற்பதாண்டு காலமாக கல்வியில் தனியார் வணிகத்திற்கு கட்டுப்பாடுகளின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தனியார்மய - வணிகமயக் கல்விக் கொள்கைகளே சமூக நீதி பேசப்படும் தமிழ்நாட்டிலும் இன்று வரை பின்பற்றப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் நிதி உதவிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. மேலும் தனியார்கள் கல்வியைத் துளி அளவும் சேவையாகக் கருதாமல் வணிகப் பண்டமாகப் பயன்படுத்துவதற்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் நமது விடுதலைப் போராட்ட ஈகங்களுக்கும் அரசியலமைப்பின் குறிக்கோள்களுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் கல்வி அறங்களுக்கும் எதிரானவை.
 1. கல்வி வணிகத்திற்கு உதவும் சட்டம்: ஒன்றிய அரசு தற்போது நடைமுறைப்படுத்த உள்ள தேசியக் கல்விக் கொள்கை, கல்வி வணிகத்தால் மக்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாவதைப் பற்றி எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. 2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் கல்வியைத் தனியார் விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை. மாறாக கல்வி வணிகத்திற்கு சட்டப்படியான அங்கீகரத்தை அளித்துள்ளது. சட்டத்தின் பிரிவு 12, அரசிடம் நிதி உதவி பெறாமல் நடந்த அனுமதி பெற்றுள்ள தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதத்திற்குக் குறையாமல் அருகமைப் பகுதியில் வசிக்கும் நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறது. இக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி வணிகத்தை ஊக்கப்படுத்த கல்வி உரிமைச் சட்டம் வழி வகுத்துள்ளது. இன்று 14 வயது வரையிலான பெரும்பாலான குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்திப் படிக்கின்றனர். அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்பது வெறும் கானல் நீராக உள்ளது. மேலும், அரசு நடத்தும் பொதுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து நலிவடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொதுக் கல்வி முறை முற்றிலுமாக சீரழிந்து வருகிறது.
 1. கல்விச் செலவு எனும் பொருளாதாரச் சுரண்டல்: கல்வியில் அரசின் முழுமையான பொறுப்பும் கடமையும் கைவிடப்பட்டதும் தனியார்கள் கல்வியை வணிகப் பண்டமாகப் பயன்படுத்த அனுமதித்ததும் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் பெரும் கேடுகளை உருவாக்கியுள்ளன. தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர்கள் குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மேல் கல்விக்காக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. மூன்று வயதுக் குழந்தைக்குக் கல்வியளிக்க ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் பல இடங்களில் உள்ளன. இதைவிடக் கூடுதலான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் உள்ளன. கல்வி வணிகத்தை அனுமதித்தன் மூலம் குழந்தைகளின் உரிமையும் மாண்பும் மீறப்பட்டுள்ளது. பெற்றோர்கள் கல்வி வணிகர்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
 1. ஆங்கில வழிக் கல்விப் பரவல்: கல்வியைத் தனியார் விற்பனைப் பண்டமாக்கியது தாய்மொழி வழிக் கல்விக்கும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் மேல்த்தட்டு வகுப்பினருக்காக முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தடையற்ற விற்பனைப் பண்டமாக கல்வி ஆக்கப்பட்டதால், ஆங்கில வழிக் கல்வி பட்டிதொட்டி எல்லாம் பரவும் நிலை உருவானது. ஆங்கில மொழியைக் கற்பதை விட ஆங்கில வழியில் கற்பது அவசியமானது என்ற தவறான எண்ணம் இன்று கிராமப்புற மக்கள் வரை பரவியுள்ளது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் வரை ஆங்கில வழிக் கல்வி விரிவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக் கல்வியை இரண்டாம் தரக் கல்வியாக கருதும் நிலையும் உள்ளது. இந்தியத் துணைக்கண்டத்தின் தொன்மை மொழியான தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் ஆங்கில வழிக் கல்விப் பரவல் தடையாக உள்ளது. உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி அறிவியலான தாய்மொழி வழிக் கல்வியை மறுத்து ஆங்கில வழிக் கல்வியை விரிவாக்குவது எளிய மக்களின் கல்வியை மறுப்பதாகவே கருத முடியும். புரியாத மொழியில் கல்வி கற்கச் செய்வது குழந்தைகளின் இயல்பான, முழுமையான அறிவாற்றல் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.
 1. விழுமியங்களும் அறமும் சமூக நலனும் இழந்த கல்வி: கல்வி விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டதால் தனியார் கட்டணப் பள்ளிகளுக்கிடையில் வணிகப் போட்டிகள் உருவாகியுள்ளன. மதிப்பெண் போட்டிக்கான பந்தயக் குதிரைகளாக குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். மதிப்பெண் விளம்பரங்களுக்கு எந்தக் கட்டுபாடுகளும் இல்லை. கற்றதைத் தன்னியல்பாக வெளிப்படுத்துவதற்கான புரிதலைக் காட்டிலும் குருட்டு மனப்பாடத் திறனை அளவிடுவதே கற்றல் அடைவிற்கான அளவீடாக உள்ளது. படிக்கும் குழந்தைகள் அனைவரையும் முழுமையான அடைவைப் பெறவைப்பதே கல்வியின் இலக்காக இருக்கவேண்டும். ஆனால், குருட்டு மனப்பாடத் திறனால் எளிதாக அதிக மதிப்பெண் பெறும் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே தனியார் பள்ளிகள் தனிக் கவனம் செலுத்துகின்றன. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைத் தங்கள் வணிக நலனுக்கான இலவச விளம்பரத் தூதுவர்களாக பயன்படுத்துகின்றன. தனியார் பள்ளிகளின் தாக்கங்கள் பொதுப் பள்ளிகளான அரசின் கல்வித் துறைப் பள்ளிகளிலும் எதிரொலிக்கின்றன. இன்றைய கல்வி, விழுமியங்களும் அறங்களும் சமூக நலன்களும் இழந்த கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சமத்துவ உணர்வுகளையும் மனிதப் பண்புகளையும் வளர்க்காத கல்வியால் நாட்டுக்குக் கேடு தான் விளையுமென்று அம்பேத்கர் கூறியது கல்வி வணிகம் மூலம் உண்மையாகியுள்ளது.
 1. அரசுப் பள்ளிகளை நலிவடையச் செய்தல்: கல்வியில் வணிக உரிமையை தனியார்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகள் மூலம் தரமான, சமமான கல்வி வழங்குவதற்கு வேண்டிய போதுமான அரசின் நிதி ஒதுக்கீடுகளும் அளிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கூடுதல் கலைத்திட்ட செயல்பாடுகளுக்கான ஆசிரியர் நியமிக்க அரசிடம் நிதியில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இலவசக் கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகள் கல்வியை விலை கொடுத்துப் பெற முடியாத ஏழைகளின் பள்ளிகளாக, அடிப்படை வசதிக் குறைபாடுகள் நிறைந்த பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி கிடைக்க வழியில்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், நல்ல உயர் கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் ஏழைக் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளன. அரசுப் பள்ளிகளை நலிவடையச் செய்ததன் மூலம் கல்வி வணிகத்திற்கு ஆட்சியாளர்களே துணை செய்யும் அநீதி நிகழ்ந்து வருகிறது. அரசியலாளர்கள் பலர் கல்வி வணிகர்களாகவும் உள்ளனர்.
 1. கல்வியில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை: ஜனநாயகத்தின் விளைநிலங்களாகப் பள்ளிகள் விளங்கவேண்டும். ஆனால், கல்வியை விற்பனைப் பண்டமாக்கியதால் பல தனியார் பள்ளிகள் கருப்பு பணத்தின் உற்பத்திக் கூடங்களாக மாறி உள்ளன. வசதி உள்ளவர்களுக்குத் தனியார் பள்ளி, வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளி என்ற சமூக இடைவெளி உருவாகியுள்ளது. வசதியானவர்களுக்குத் தரமான கல்வி, வசதி இல்லாதவர்களுக்குத் தரமற்ற கல்வி என்ற நிலை இருப்பதால் கல்வியில் சமத்துவமின்மையும் குழந்தைகளிடம் அறிவாற்றல் இடைவெளியும் உருவாகியுள்ளன. மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கும் இதைவிடக் கொடிய தீங்கு வேறெதுவும் இருக்க முடியாது. இளநிலைத் தொழில் முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது கல்வியில் முழுமையான சமத்துவத்தை உருவாக்காது. கேடுகளை மறைக்கவே உதவும்.
 1. கல்வியில் நிலவும் நான்கு பெரும் கேடுகள்: கல்வியில் நான்கு பெரும் கேடுகள் நிலவுகின்றன.. முதல் கேடு, கல்வியை தனியாரின் விற்பனைப் பண்டமாக அனுமதித்து மக்களைப் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாக்கியது. இரண்டாவது கேடு, அரசு நடத்தும் பொதுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் ஆசிரியர் நியமனங்களையும் முறையாக நிறைவேற்றாமல் தரமற்ற, மக்கள் நம்பிக்கையற்ற பள்ளிகளாக மாற்றியது. மூன்றாவது கேடு, ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வை கல்வியிலும் பிரதிபலிக்கச் செய்தது. நான்காவது கேடு உலகளாவிய கல்வி முறையான தாய்மொழிக் கல்வியை ஒழித்து அரசுத் தொடக்கப் பள்ளிகள் வரை ஆங்கில வழிக் கல்வியை விரிவாக்கியது. இக் கேடுகளை ஒழிக்காமல் கல்வி சிறந்த தமிழ்நாடு உருவாக முடியாது.
 1. கல்வி வணிகத்தை ஒழிப்பதற்கான உறுதிப்பாடு: கல்வி வணிகம் என்பது தவிர்க்க முடியாத கொள்கையும் அல்ல, மானுட உரிமையும் அல்ல. கல்வி வணிகர்கள் கல்வி அளிப்பதில் பங்காற்றுகிறார்கள் என்று கருதுவது தவறானது. மக்களும் விரும்பி கல்வியை விலை கொடுத்துப் பெறவில்லை. குழந்தைகள் நலன் சார்ந்த அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்கு இருந்தால் கல்வி வணிகத்தை ஒழிக்க முடியும். அனைத்துக் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியில் கட்டணமில்லாமல் தரமான, சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தே ஆகவேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக, கல்வி வணிகத்தை ஒழிப்பது சாத்தியமில்லை என்று கல்வியில் மேம்போக்கான மாற்றங்களைச் செய்வதற்கான கொள்கையை உருவாக்குவது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பதாகவே அமையும். கல்வி வணிகம் பெரும் சமூகக் குற்றமே.
 1. குழந்தைகளின் உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் மதிப்பளித்தல்: இன்றைய கல்வி அமைப்பிலும் கல்வி முறையிலும் உள்ள கேடுகள், கேடுகளுக்கான காரணங்கள், கேடுகளை ஒழிப்பதற்கான தீர்வுகள், தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றை நுட்பமாக ஆய்ந்தறிந்து கூறுவதே தனித்துவமான கல்விக் கொள்கையாக இருக்கும். கல்வி வணிகத்தால் விளைந்துள்ள கேடுகளை ஒழிப்பதன் மூலமே ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி உள்ளிட்ட மக்களாட்சி நெறிகளைக் காப்பாற்ற முடியும். கல்வி வணிகத்தை ஒழிப்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை கல்விக் கொள்கை மூலம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவேண்டும். எந்தக் கட்டணமும் பெறாமல் கல்வி கொடுப்பது தான் ஒரு குழந்தையின் உரிமையை, மாண்பை மதிப்பதாக அமையும். அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வியை அவரவர் தாய்மொழியில் கட்டணமில்லாமல் வழங்குவது மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் மக்களாட்சி அரசின் முதன்மையான கடமை என்பதை கல்விக் கொள்கை மூலம் ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தவேண்டும்.
 1. கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு: மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்காக 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று ஏற்கனவே ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கல்விக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டப்படியான பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், "அரசுக்கு நிதிப் பற்றாக்குறை" என்ற பொய்யைக் கூறி தனியார் கல்வி வணிகத்தை அனுமதிப்பது அரசியலமைப்பு நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிரானது. முழுமையாக அரசின் பொறுப்பில் கல்வி வழங்கத் தேவையான நிதியை வரி வருவாய்களில் இருந்து அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை (CSR) முறையாக வசூலித்து பொதுக் கல்விக்குப் பயன்படுத்தவேண்டும். கல்வி வரியை கல்விக்காக மட்டுமே செலவிடவேண்டும்.
 1. தனியார் கட்டணப் பள்ளிகளை அரசு உதவிப் பள்ளிகளாக மாற்றுதல்: தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை கல்வியில் தனியார் பங்கேற்பு மூலம் இலவசக் கல்வி வழங்கும் அரசு உதவிப் பள்ளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வசதி படைத்தவர்கள் நிலமும் நிதியும் கொடுத்து கல்வி வளர்ச்சிக்கு உதவினர். தனியார் கட்டணப் பள்ளிகள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, அரசின் பொறுப்பில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லாமல் பள்ளிக் கல்வியை வழங்குவது சாத்தியமில்லை, அரசிடம் நிதியில்லை என்று கூறுவது உண்மையல்ல. உலகில் கல்வியில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அரசின் பொறுப்பில் கட்டணமில்லாமல் கல்வி வழங்குவதை மக்களாட்சிக் கடமையாகப் பின்பற்றி வருகின்றன. கல்வி வணிகர்களுக்குக் கட்டுப்பாடற்ற இலாப நோக்கிலான சுதந்திரம் வெறெங்கும் வழங்கப்படவில்லை. தனியார் கட்டணப் பள்ளிகளை இலவசக்கல்வி வழங்கும் அரசுதவிப் பள்ளிகளாக மாற்றியமைத்து கல்வி வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
 1. பொதுப்பள்ளி முறையும் அருகமைப்பள்ளி முறையும்: ஏழைகளுக்கும் வசதியானவர்களுக்கும் தனித்தனிப் பள்ளிகள் இயங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. சமூக ஏற்றத்தழ்வுகளும் பிரிவினைகளும் பள்ளிகளிலும் பிரதிபலிக்கும் நிலை இருக்கக் கூடாது. உலகளாவிய அளவில் கல்விக்கான ஜனநாயக வடிவங்களாக பொதுப்பள்ளி முறையும் அருகமைப் பள்ளி முறையும் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. நமது நாட்டில் 1964 இல் அமைக்கப்பட்ட முனைவர் கோத்தாரி அவர்கள் தலைமையிலான கல்விக் குழு முதற்கொண்டு பொதுப்பள்ளி முறையும் அருகமைப் பள்ளி முறையும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக நெறியிலான கல்வி அமைப்பு முறைகளை உருவாக்குவதன் மூலமே எதிர்காலத் தலைமுறைக்கு வளமான, நலமான வாழ்க்கை அமையும்.
 1. புதிய கல்வி உரிமைச் சட்டம் இயற்றுதல்: கல்வி வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கல்வியில் உள்ள மிகப் பெரிய கேடுகளை ஒழிக்கவே முடியாது. தமிழ்நாடு அரசு பொதுக் கல்விக்கு என்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தனியார் கட்டணப் பள்ளிகளை அரசு உதவிப் பள்ளிகளாக மாற்றியமைத்து அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான வழிமுறைகளை கல்விக் கொள்கை வகுப்பதற்கான உயர்நிலைக் குழு பரிந்துரைக்க வேண்டும். 
 1. தமிழ் வழிக் கல்விக்குப் புத்துயிர் அளித்தல்: தமிழ் வழிக் கல்வி வகுப்புகள் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்படும் அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லாத நிலை இன்னும் மூன்று, நான்கு தலைமுறைக் காலம் நீடித்தால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் தெரியாத மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். தனியார் ஆங்கில வழிக் கல்வியால் தமிழ் மொழி அழிவுக்கு ஆளாகும் நிலை தடுக்கப்படவேண்டும். தமிழ் வழிக் கல்வியைக் காப்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கு மட்டுமன்று. எளிய மக்களின் கல்வி உரிமையை தமிழ் வழிக் கல்வி மூலமே உறுதிசெய்ய முடியும். தமிழ் வழிக் கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் அறக்கட்டளைகள் மூலம் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. வணிக நோக்கமில்லாமல் இயங்கி வரும் இப்பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விக்கும் இரு மொழிக் கொள்கைக்கும் புத்துயிரூட்ட கல்விக் கொள்கை வழிகாட்டவேண்டும்.
 1. கல்வி உரிமைகளையும் விழுமியங்களையும் காத்தல்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மே 20, 2023 ஆம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் "கொள்கை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான நுட்பமான தொடர்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது" என்று கூறியுள்ளார். கல்விக் கொள்கை குழந்தைகளின் கல்வி உரிமைகளைக் கவனத்தில் கொண்டு சுதந்திரமாக வகுக்கப்பட வேண்டும். கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். கல்வி வணிகர்களின் நலன்களைக் காட்டிலும் குழந்தைகளின் மாண்புகளையும் நலன்களையும் கல்வி உரிமைகளையும் கல்விக்கான ஜனநாயக விழுமியங்களையும் காப்பதில் அக்கறை உருவாக வேண்டும். 
 1. மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுதல்: ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது என்று மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழி காப்பாற்றப்படவேண்டும். கல்விக் கொள்கை வரைவு உருவாக்கப்பட்டு நிறை குறைகள் குறித்து மக்கள் கருத்துக் கூற வாய்ப்பளிக்கவேண்டும். பிற மாநிலங்களும் பின்பற்றத் தகுந்த சிறந்த முன்மாதிரி வடிவமாக தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை அமைவதற்கு இது வழிவகுக்கும். தமிழ்நாட்டுக் கல்வியில் ஆக்கப்பூர்வமான அடிப்படை மாற்றங்களுக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் ஜனநாயக மலர்ச்சிக்கும் கல்விக் கொள்கை அடித்தளமாக அமைய வேண்டும்.
 1. கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்: கல்விக் கொள்கை ஏட்டுச் சுரைக்காயாக இருந்தால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வியை உருவாக்கும் நோக்கில் 2006 ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் கல்வி வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இருந்தால் தமிழ்நாட்டுக் கல்வியில் கேடுகள் குறைந்து கல்வியில் நல்ல மாற்றங்கள் நடந்திருக்கும். ஆனால், சமச்சீர்க் கல்விக் குழு அளித்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. வரும் காலத்திலும் இது போன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது. தற்போது உருவாக்கப்படும் கல்விக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை மூலம் கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற கனவு நனவாக வேண்டும்.     

- பேரா.ப.சிவக்குமார், பேரா. பிரபா கல்விமணி, பொள்ளாச்சி நசன், பா.தினேஷ், சு.உமாமகேஸ்வரி, முனைவர் க.ரமேஷ், வீ.சிவகாமி, எழில் அ. சுப்பிரமணியன், சுப்ரபாரதிமணியன், தேவிபாரதி, விழியன், சிவா, மு.சிவகுருநாதன், செ.சி.நடராஜ், தென்கனல் இசைமொழி, புதுகை செல்வா, முனைவர் ல.பெர்னாட், இரா.முருகப்பன், க.திருப்பதி, சு.தெய்வகுமார், கண. குறிஞ்சி & சு.மூர்த்தி

Pin It