சமற்கிருத இலக்கியம் – ஒரு திறனாய்வு:

சமற்கிருத மொழியின் செயற்கைத்தன்மை பற்றியும், அது உயிருள்ள கவிதைக்கு பயன்படாத மொழியானது குறித்தும் டேனியல் இங்கால்சு (Daniel H.H. Ingals), ‘சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை. குழந்தைபருவத்தில் விளையும் எண்ணங்களின் அடிமனக் குறியீடுகளையோ, முன் காளைப்பருவத்தில் நம்முடைய பண்பை உருவாக்கும் உணர்வுகளின் அடிமனக் குறியீடுகளையோ அது பெற்றிருக்கவில்லை. ஓர் இயல்பான மொழி என்று நான் கருதும் மொழியின் கவிதை அதன் ஆற்றலை எதிலிருந்து பெறுகிறதோ அவ்வாழ்க்கைப் பகுதியிலிருந்து சமற்கிருதம் துண்டிக்கப்பட்டிருந்தது’ எனக் கூறுகிறார். இராசசேகரன் என்ற குசராத்தியர் பிராகிருத மொழி மென்மையானது எனவும் சமற்கிருத மொழி கரடுமுரடானது எனவும் கூறி, தான் எழுதிய கற்பூரமஞ்சரி என்ற நூலை முழுமையாக பிராகிருதத்தில் எழுதியுள்ளார். அந்நூலில் பிராகிருதத்தைப் பாராட்டியும், சமற்கிருதத்தை கடுமையாகத் தாக்கியும் பல கவிதைகள் எழுதப்பட்டுள்ளன (34).

கல்கத்தாப் பல்கலைக்கழக வடமொழிப் பேராசிரியை சுகுமாரி சட்டர்சி என்பவர் தான் எழுதிய சமற்கிருத செவ்வியல் இலக்கிய வரலாறு என்ற நூலில் சமற்கிருத இலக்கியத்தை ஐந்து காலப்பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்துள்ளார். கி.மு. 3 முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலத்தை ‘முளைவிடுதல்’ என்கிறார். கி.பி. மூன்று முதல் ஐந்து வரையான நூற்றாண்டை ‘முதல் மொட்டுகள்’ என்கிறார். கி.பி. ஆறு முதல் ஏழு வரையான நூற்றாண்டை ‘முழு மலர்களின் தோற்றம்’என்கிறார். கி.பி. 8 முதல் 12 வரையான நூற்றாண்டை, ‘உறைபணியால் தாக்கப்பட்டு உதிர்ந்து போதல்’ என்கிறார். கி.பி. 13 முதல் 16 வரையான நூற்றாண்டை வாடி வதங்கிப்போன மலர்கள் என்கிறார். ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்தப் பிரிவின் இலக்கியவாதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். முதல் பிரிவில் நாடகங்களே முதலில் தோன்றின, அதற்கு கிரேக்க நாடகங்களே மூலகாரணம் என்கிறார். இரண்டாவது பிரிவில் அசுவகோசு, பாசகவி போன்றோரை ஆய்வு செய்கிறார். பாசகவியின் நாடகங்களில் இருந்து அவர் காலச் சமுதாயம் பெண்ணை இழிவாக நடத்தியது என்பதையும் பார்ப்பனர்களை வருணப் பாகுபாட்டில் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்பதையும் சான்றுகளோடு உறுதி செய்துள்ளார் (35).

மூன்றாவது பிரிவில் மனு சுமிருதி, காளிதாசர், சந்திர கோமின் போன்ற பலரை ஆய்வு செய்துள்ளார். காளிதாசனின் நாடகங்களையும், காவியங்களையும் பெரிதும் பாராட்டுவதோடு, அவருக்கு முன்போ, பின்போ அவரைப்போன்று யாரும் உரைநடையைச் சிறப்பாகக் கையாளவில்லை என்கிறார். அக்காலத்தில்தான் பஞ்சதந்திரக் கதைகள் தோன்றின என்கிறார். நான்காவது பிரிவில் பாரவி, பட்டி, மாக கவி போன்றோரை ஆய்வு செய்துள்ளார். பாரவியின் காப்பியத்தில் முருகியல் இன்பத்தைக் கெடுக்கும் மலிவான சொல் விளையாட்டுகள் பொருத்தமற்ற இடங்களில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். பட்டியின் நூலை ஒரு கவிதையாகக் கருத இயலாது என்கிறார். காளிதாசனுக்குப்பின் வந்த காப்பிய மரபில் கடைசிக் கவிஞனும் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான மாக கவியின் சிசுபாலவதம் எனும் நீண்ட காப்பியத்தில் கவிதை என்று பாரட்டக்கூடிய பகுதிகள் மிகக்குறைவு எனவும் அதன் நடை கடினமானது, மொழி செயற்கையானது; சொல்லாட்சி வழக்கொழிந்தது என்கிறார் (36).

தார்வார் பல்கலைக்கழக வடமொழிப்பேராசிரியர் கே. கிருசுணமூர்த்தி காளிதாசனுக்குப் பின் வந்த நூல்கள் குறித்து, ‘மாக கவியின் சிசுபாலவதம், பட்டியின் இராவணவதம், இரத்னகாரரின் அரவிஜயம், சிரிஅர்சனின் மைசதியசரிதம் ஆகிய நூல்களிலும் பிற நூற்றுக்கணக்கான நூல்களிலும் எவ்விதமான புதுமையோ சிறப்போ ஏதுமில்லை. அவற்றின் மொழி செயற்கையானது, கற்பனை உயர்வு நவிற்சியானது. அவை அனைத்தும் அடிமைத்தனமான தழுவல்களே. நாடகங்களில் உயர்நிலையில் உள்ள பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பிராகிருதத்தில் பேச, தலைமைப் பாத்திரம் மட்டுமே சமற்கிருதத்தில் பேச உரிமையுள்ளது. சமற்கிருதத்தில் உள்ள பக்திப்பாடல்கள் எல்லாம் கவிதைத்தரம் உள்ளவையல்ல. சுபந்துவின் வாசவதத்தா, பாணபட்டரின் காதம்பரி ஆகிய நூல்கள் செயற்கை உத்திகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன. காளிதாசனுடைய நாடகங்களிலும், காப்பியங்களிலும் சங்க இலக்கியத்தின் தாக்கம் இருப்பது என்பது அவனுக்கு பெருமை சேர்ப்பது’ என்பதாக திறனாய்வு செய்துள்ளார் (37).

வடமொழி இலக்கிய வரலாற்றை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தும்பொழுது தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளுக்கு இணையான பெருமை அதற்கு இல்லை என்பது உறுதியாகிறது. சமற்கிருத இலக்கியத்தின் மிகச் சிறந்த காலகட்டம் என்பது குப்தர் காலம் முதல் அர்சர் காலம் வரையான கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டம். அதிலும் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளை வழங்கியவர் காளிதாசர். அந்த மிகச் சிறந்த இலக்கியப்படைப்புகளும் கூட பார்ப்பனச்சார்பு கொண்டவைதான். கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவான இலக்கிய நூல்களின் தரம் தாழ்ந்து வரத் தொடங்கியது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப் பின் சமற்கிருத இலக்கியம் என்பது இறந்துபோன ஒன்றாக ஆகிப்போனது. ஆதலால் பெரும்பாலான சமற்கிருத இலக்கிய வரலாற்று நூல்கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையான இலக்கிய வரலாற்றைத்தான் கூறுகின்றன.

வடமொழி நூல்களின் பரப்பும் தமிழும்:

சமற்கிருதத்தில் சமய அடிப்படையில் எழுந்த நூல்கள் எண்ணில் அடங்காதவை. அவை போக மருத்துவம், வானவியல், சிற்பம், அறம், இலக்கணம், அகராதி, தத்துவம், அணிநூல், அரசியல், வரலாறு, கணிதம், சோதிடம், இசை, நாட்டியம், நாடகக்கலை மந்திரம் எனப் பலவகைப்பட்ட நூல்கள் வரைவின்றிப் பெருவாரியாக உள்ளன. இவைபோக காசுமீரின் இராஜதரங்கிணி போன்ற வரலாற்று நூல்கள், வாத்சாயனரின் காமசூத்திரம், சாணக்கியனின் அர்த்த சாத்திரம் போன்ற ஒரு சில முக்கிய நூல்களும் உள்ளன (38). சமற்கிருத நூல்களில் பல கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ், பிராகிருதம், பாலி போன்ற நூல்களில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. கலை, அறிவியல், தத்துவார்த்த, தொழில்நுட்ப நூல்களில் பெரும்பாலானவை தமிழ் மூல நூல்களைக் கொண்டு உருவானவை அல்லது மொழி பெயர்க்கப்பட்டவை. சான்றாக பரதநாட்டிய சாத்திரம் என்ற இசை, நாட்டிய நூல், சரக சம்கிதை என்ற மருத்துவ நூல், சிற்பக்கலை, கட்டடக்கலை குறித்த மயமதம், மானசாரம் போன்ற நூல்கள், கணிதம், வானவியல் குறித்த ஆரியபட்டியம் போன்ற பல நூல்களைச் சொல்லலாம். வடமொழியின் கிரந்த எழுத்தில் பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆகம நூல்கள் உள்ளன. ஆகமங்களில் இசை, நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை, கணிதம், வானவியல், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து நிறைய நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் தமிழில் இருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கொண்டு செல்லப்பட்டவை.

கி.பி. 250 வாக்கில் தமிழ் நாட்டின் மீதான களப்பிரர் படையெடுப்பின்போது தமிழ்நாடு பேரழிவுக்கு உள்ளானது. காஞ்சியைத் தவிர அனைத்து நகரங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. 1000 வருடங்களுக்கு மேலாக வளர்ச்சி பெற்ற நகர நாகரித்தைக் கொண்டிருந்த பழந்தமிழ்நாடு தத்துவார்த்த, கலை, அறிவியல், தொழில்நுட்ப நூல்களைப் பேரளவில் கொண்டிருந்தது. அவை அனைத்தும் அப்பொழுது அழிவுக்குள்ளாயின. அதில் ஒரு பகுதி நூல்கள் சமற்கிருதமயமாகின. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் மிக நீண்டகாலம் இந்த சமற்கிருதமயமாக்கல் நடைபெற்றது. அதன் காரணமாகவே சமற்கிருதம் கலை, அறிவியல், தொழிநுட்ப நூல்களைக்கொண்ட மொழியாக ஆகியது. தமிழ் கீழ் மக்களின் மொழியாக மாற்றப்பட்டு தத்துவார்த்த, கலை, அறிவியல், தொழில்நுட்ப நூல்களை எழுதுவதற்கு தகுதியற்ற மொழியாக ஆகியது. ஆதலால் தமிழ் நாட்டு அறிஞர்களும் சமற்கிருதத்தில்தான் எழுதினர். சான்றாக தமிழரான தின்னாகரை பௌத்த தருக்கவியலின் தந்தை என்பர். இவர் சமற்கிருதத்தில் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவரைப் போன்றே தர்மகீர்த்தி, தருமபாலர், போதிதர்மர் போன்ற தமிழர்களும் வடமொழியைத்தான் பயன்படுத்தினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிசங்கரர், இராமநுசர் போன்றவர்களும் சமற்கிருதத்தில்தான் நூல்களை எழுதினர். ஆகவே சமற்கிருதத்தில் உள்ள நிறைய நூல்கள் தமிழ்நாட்டில் உருவானவை. சமற்கிருத இசைஇலக்கண நூல்கள் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் உருவாகின (39).

சமற்கிருதம் உயர்ந்த மொழி, கடவுளின்மொழி, கலை, அறிவியல் மொழி, அனைத்தும் அதில்தான் உள்ளன போன்ற கருத்துகள் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன. தமிழில் உள்ள மூல நூல்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி அழிந்து போயின. இருந்த நூல்களும் ஆற்றிலும், தீயிலும் போடப்படும் சடங்குகள் உருவாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. சமற்கிருத நூல்கள் தொன்மையானவை. ஆதலால் தமிழில் உள்ள நூல்கள் அனைத்தும் வடமொழியில் இருந்து வந்தவை என்ற கருத்தும் பரப்பப்பட்டது. சான்றாக பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், மெய்கண்டார் நூல் போன்றவற்றின் மூலம்கூட வடமொழிதான் எனப் பொய்யுரைக்கப்பட்டது. தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் கூட வடமொழியில் இருந்து வந்தவைதான் எனப்பட்டது (40). 181. பல தமிழறிஞர்களும் அதனை நம்பினர். பலர் இன்றும் நம்புகின்றனர். இந்தியாவின் ஆதி இசையாகவும், அனைத்திற்கும் மூல இசையாகவும் உள்ள தமிழிசை இழிவுக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழிசை அறிஞர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கர்நாடக இசை வட பகுதியிலிருந்து வந்ததாக கதைகட்டி விடப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை அந்நியர்களால் ஆளப்பட்டதாலும், 700 ஆண்டுகால அடிமைத் தனத்தாலும், வரலாறு இல்லாததாலும், பகுத்தறிவு கொண்டு பார்க்கும் பண்பு இல்லாததாலும் இவை நடந்தன. இன்றும் தொடர்கின்றன. சமற்கிருத மொழியினரின் இவை போன்ற ஆதிக்கச் செயல்களால் தமிழ்ச் சமூகம் பேரளவான அறிவுச் செல்வத்தை இழந்ததோடு, தனது நீண்ட நெடிய வரலாற்றையும் மறந்து போய் நம்பிக்கையற்று, புத்துணர்வோ, புதுமையோ இல்லாத அடிமைச் சிந்தனையில் மூழ்கிப்போயுள்ளது.

சமற்கிருதமும் உலக மொழிகளும்:

இன்று உலகில் 9 முக்கிய மொழிக் குடும்பங்கள் உள்ளன. அதில் சமற்கிருதம் இந்தோ ஐரோப்பியன் (Indo-European) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. கிட்டைட்டி, பர்சியன், பார்த்தியன், அவெசுதான், சமற்கிருதம், பாலி, பிராகிருதம், மைசீனியன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய 10 பண்டைய மொழிகளும், அதன் கிளை மொழிகளும், இன்றைய ஐரோப்பா வட அமெரிக்க, தென்அமெரிக்கா போன்றவற்றில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மொழிகளும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். இன்று உலக மக்கள் தொகையில் 48 விழுக்காட்டு மக்கள் இந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பங்களின் மொழிகள் அனைத்துமே கி.மு. 2000க்குப்பின்தான் எழுத்தும் இலக்கியமும் பெற்ற மொழிகளாக ஆகின. இவற்றில் மைசீனியன், கிட்டைட்டி ஆகிய இரு மொழி மக்களும் கி.மு. 1500 வாக்கில் நகர நாகரிகத்தையும் எழுத்தையும் கொண்டிருந்தனர். அவற்றில் இலக்கியம் இருந்திருக்கலாம் எனினும் அவை அழிந்து போயின. பண்டைய இந்தோ ஐரோப்பியன் மொழிகளில் பர்சியன், பார்த்தியன், அவெசுதான், பாலி, பிராகிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகள் கி.மு. 1000க்குப்பிறகுதான் எழுத்தையும் இலக்கியத்தையும் பெற்றன (41).

கி.மு. 1200-1000 வாக்கிலேயே இருக்கு வேதம் தோன்றி விட்டது என்பதால் சமற்கிருத மொழிதான் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் தொன்மை மொழி எனக் கூறிக்கொண்டனர். இருக்கு வேதம் போன்ற நாட்டார் பாடல்கள் பல மொழிகளில் முன்பே இருந்தன. சமற்கிருத மொழி கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் எழுத்துகொண்டு எழுதப்பட்டது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில்தான் தனக்கான செவ்வியல் இலக்கியத்தைப் பெறத் தொடங்கியது. ஆனால் கிரேக்கம் தனக்கான எழுத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டிலும், தனக்கான செவ்வியல் இலக்கியத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டிலும் பெற்றிருந்தது. இலத்தீன் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தனக்கான எழுத்தையும், கி.மு. முதல் நூற்றாண்டில் செம்மொழி இலக்கியத்தையும் பெற்றிருந்தது. வேதமொழி பேசிய ஆரியர்கள் இனக்குழு நிலையில் இருந்த பொழுதே கிட்டைட்டி, மைசீனியன் மக்கள் நகர நாகரிகத்தையும் எழுத்தையும் கொண்டவர்களாக இருந்தனர் (42).

ஆகவே இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வேதமொழி அல்லது சமற்கிருத மொழிக்கு முன்பே நாகரிகம் பெற்றவர்களும், எழுத்தையும் செம்மொழி இலக்கியத்தையும் உடையவர்கள் இருந்தனர். ஆகவே வேதமொழி அல்லது சமற்கிருத மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குக் கூட தாய்மொழி இல்லை என்பதுதான் உண்மை. சுமேரியன், எகிப்தியன், அக்காடியன், பாபிலோனியன், மினோன், சீனம் போன்ற பிற குடும்ப மொழிகளில் ஒரு சில இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தையும் எழுத்தையும் இலக்கியத்தையும் கொண்டவைகளாக இருந்தன. சான்றாக சுமேரியன் நாகரிகம் கி.மு. 4500 வாக்கில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக் கொண்ட நாகரிகமாக இருந்தது. உலகின் முதல் எழுத்து முறையான ‘கியூனிபார்ம்’ எழுத்து கி.மு. 3500 வாக்கில் தோன்றியது. அந்த எழுத்தில் எழுதப்பட்ட உலகின் முதல் காப்பியமான ‘கில்காமெசு’ (Gilgamesh) இன் காலம் சுமார் கி.மு. 2000 (43). ஆகவே கி.மு. 800 வரை இனக்குழு நிலையில் இருந்த இந்தோ ஆரியர்களின் சமற்கிருதமொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது மிகப் பெரிய பொய்யுரை.

சமற்கிருதம், தமிழ் - சமூகமும் மொழியும்:

ஒரு சமூகத்தின் மொழி என்பது அந்தந்த சமூகத்தின் வளர்ச்சியைப்பொருத்தே வளர்ச்சியடைகிறது. வரலாற்றில் அநாகரிக நிலையின் இடைக்காலத்தில் உள்ள இனக்குழு சமூகம் கால்நடை வளர்ப்பையே தனது வாழ்வாதாரமாகக் கொள்கிறது. அதுபோன்ற ஒரு நிலையில்தான் இந்தோஆரியர்கள் இந்தியா வந்தடைந்தனர். அவர்கள் சீரழிந்த நிலையில் இருந்த சிந்துவெளி நாகரிகத்தை அழித்துவிட்டு வடமேற்கு இந்தியாவை கால்நடை வளர்ப்புக்கான இடமாக மாற்றியமைத்தனர். நாளடைவில் வேளாண்மையும், இன்னபிற தொழில்களும் சிறிது சிறிதாக வளர்ந்தன. அங்கு இனக்குழுவுக்கான கணஆட்சிமுறைதான் இருந்து வந்தது. அரசோ, வர்க்கமோ, வகுப்புகளோ, நகரமோ, நாகரிகமோ, ஒருதார மணமுறையோ, குடும்பமோ உருவாகி இருக்கவில்லை. ஆனால் அவற்றை நோக்கி அவர்கள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் கி.மு. 1200-1000 வாக்கில் இரிக் வேதம் உருவாகியது. அது வாய்மொழிப் பாடலாகவும், நாட்டார் பாடலாகவும் இருந்தது. ஏழெட்டு குடும்பப் பரம்பரை கவிஞர்கள் அல்லது இரிசிகளால் அவை பாடப்பட்டு தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அதன்பின்னர்தான் பிற வேதங்களும் பிராமணங்களும், ஆரண்யங்களும், உபநிடதங்களும் தோன்றின. ஆனால் அவை அனைத்தும் இரிக் வேதம் உருவாகி 1000 வருடம் கழித்து, கி.பி. 200க்குப்பின்னரே எழுத்தால் எழுதப்பட்டன. அதில் நிறைய இடைச்செருகல்களும் சேர்ந்தன.

கி.மு. 800 வரை இந்தோ ஆரியர்கள் இனக்குழுநிலையில்தான் வாழ்ந்து வந்தனர். கி.மு. 800 வாக்கில் கிழக்கே கங்கைச் சமவெளி நோக்கி அவர்கள் இடம்பெயர்ந்த பின்னரே அங்கு இரும்புக்காலம் தோன்றி வேளாண்மையும் சிறு தொழில்களும் வேகமாக வளர்ச்சி அடையத் தொடங்கின. அதன் காரணமாக 7ஆம் 6ஆம் நூற்றாண்டில் 16 சனபதங்கள் எனப்படும் சிறுகுறு அரசுகள் உருவாகின. அக்காலத்தில்தான் உபநிடதங்களும் தோன்றின. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சமண, பௌத்த மதங்கள் உருவாகின. அதே காலகட்டத்தில் இச்சிறுகுறு அரசுகள் இல்லாதுபோய் மகதப் பேரரசு உருவாகியது. பின் அசோகன் ஆட்சியில் கி.மு. 250 வாக்கில் தமிழி எழுத்திலிருந்து பிராகிருத மொழிக்கு அசோகன் பிராமி என்ற எழுத்து உருவாகியது. கி.மு. 187முதல் கி.மு. 30 வரை பார்ப்பனர்களின் சுங்க, கன்வ வம்சங்கள் மகதத்தை ஆண்டன. ஆதலால் கி.மு. 187க்குப்பின் வைதீக பார்ப்பனியம் உருவாகியது. அதன்பின்தான் சமற்கிருத மொழிக்கான இலக்கணமும். பல வைதீக பார்ப்பனிய நூல்களும் உருவாகின. மகதப்பேரரசு காலம் முழுவதுமே இலக்கியம் எதுவும் தோன்றவில்லை. கி.பி. 150 வாக்கில் சமற்கிருத மொழிக்கான முதல் கல்வெட்டு வெட்டப்பட்டது. வைதீக பார்ப்பனியம் இக்காலத்திற்குள் வலுவாகக் காலூன்றி வருணத்தைச் சாதியாக மாற்றியமைத்தது. பின் கி.பி. 4 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான 400 வருட காலத்தில் சமற்கிருத மொழிக்கான இலக்கியங்கள் தோன்றின. ஆனால் அவை அனைத்தும் சமயச் சார்பான இலக்கியமாக இருந்தன. அவற்றில் காளிதாசரின் படைப்புகள்தான் செவ்விலக்கியப் பண்பைக்கொண்டிருந்தன. கி.பி. 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரையான சமற்கிருத இலக்கியங்கள் தரமானவை அல்ல.

பழந்தமிழ்நாட்டில் கி.மு. 2500க்கு முன்பே இரும்புக்கால நாகரிகம் உருவாகி இருந்தது. உலக நாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதியும் நடைபெற்றது. கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்தது. அன்று தமிழ்ச் சமூகம் ஆதிச்சநல்லூர் போன்ற சிறு குறு நகர அரசுகளைக் கொண்டிருந்தது. கி.மு. 1500 வாக்கிலேயே தமிழ்க் குறியீடுகள் என்ற எழுத்தைத் தமிழ்ச் சமூகம் தனது தமிழ் மொழிக்கான எழுத்தாகப் பயன்படுத்தி வந்தது. கி.மு. 1000 வாக்கில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக் கொண்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உருவாகி இருந்தது. கி.மு. 800 வாக்கில் வளர்ச்சி பெற்ற தமிழி எழுத்து உருவாகி, கி.மு. 750 முதல் தமிழ் இலக்கியங்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. அன்றே தொல்கபிலர் என்ற மாமேதை தோன்றி எண்ணியம் என்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தோற்றுவித்து, தமிழ்நாட்டின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்கினார். அதன் காரணமாக கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே பரவலான படிப்பறிவும் எழுத்தறிவும் பழந்தமிழ்நாட்டில் இருந்தது. அதனை கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. சங்க இலக்கியங்களின் காலமான கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலத்தில் நகர அரசுகளும், கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலத்தில் பேரரசுகளும் இருந்தன. கி.மு. 550 முதல் கி.பி. 250 வரையான 800 வருட காலத்தில் பேரளவான தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உருவாகியிருந்தன. அதில் பெரும்பகுதி அழிந்து போயின. தொல்காப்பியமும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினென் கீழ்க்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரமும் மிஞ்சின. இந்த சங்க இலக்கியங்கள் மிகச் சாதாரணவர்கள் முதல் அரசர் வரை பாடப்பட்டவை. இவற்றில் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், சிலப்பதிகாரமும் மிகச்சிறந்த செவ்வியல் இலக்கியங்கள். இவற்றில் பெரும்பாலானவை சமயச் சார்பற்றவை.

கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான களப்பிரர் படையெடுப்பும் அதன் ஆட்சியும் பேரழிவைக் கொண்டு வந்தது. அதன்பின் தமிழ்ச் சமூகம் சமயச்சார்பான சமூகமாக மாறிப் போனது. அதன் இறுதிக் காலத்தில் திருமூலரின் திருமந்திரம் தோன்றியது. காரைக்கால் அம்மையார் தோன்றி பக்திப்பாடல்களைத் தொடங்கி வைத்தார். அதன்பின் கி.பி. 550 முதல் 850 வரை பாண்டியப் பல்லவப் பேரரசுகள் ஆண்டன. இக்காலகட்டத்தில் ஏராளமான இசையோடு கூடிய பக்திப்பாடல்கள் உருவாகி தமிழ் ஒரு தெய்வீக மொழியாக மாறிப்போனது. இக்காலத்தில் முதலில் மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற சில காப்பியங்கள் உருவாகின. கி.மு. 850 முதல் கி.மு. 1325 வரை பிற்காலச் சோழர் பாண்டியர் பேரரசுகள் ஆண்டன. இக்காலத்தில் கம்பராமாயணம் என்ற புகழ் பெற்ற காவியமும், கலிங்கத்துபரணி பெரிய புராணம் போன்ற நூல்களும் உருவாகின. பட்டினத்தார், பத்ரகிரியார் போன்ற சித்தர்களின் பாடல்கள் தோன்றின. உரையாசிரியர்கள் பலர் தோன்றினர். கி.பி. 1325 முதல் 1800 வரை 50 ஆண்டுகள் முசுலீம் ஆட்சியும் பின் 425 ஆண்டுகள் விசயநகர ஆட்சியும், நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் நடைபெற்றன. இக்காலத்தில் பெரிய இலக்கியங்கள் எதுவும் உருவாக வில்லை. அருணகிரியாரின் திருப்புகழ் போன்றவைகளும், நிறையச் சிற்றிலக்கியங்களும் உருவாகின. கி.பி. 250க்குப்பின் தோன்றியவற்றில் பக்திப் பாடல்களும், கம்ப இராமாயணமும் மிகச் சிறந்த இலக்கியங்கள்.

தமிழின் சிறப்பு:

வடமொழி இலக்கிய வரலாற்றையும் அதன் செவ்விலக்கியங்கள் என்பவை பற்றியும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தும்பொழுது, தமிழ், கிரேக்கம், இலத்தின் போன்ற மொழிகளோடு ஒத்து எண்ணத்தக்க பெருமை அதற்கில்லை என்கிறார் பேரா.ப. மருதநாயகம் (44). “செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது” என்கிறார் என்றி ஒய்சிங்டன். “தமிழ் இலக்கியச் செல்வத்தை விட வளமான இலக்கியம், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை…. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம், மனித இனச் சாதனைகளுள் மிகச்சிறந்தவைகளுள் ஒன்று” என்கிறார் ஆர்.ஈ.ஆசர். “மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலை நுணுக்கத்தோடு முதிர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவை சங்க இலக்கியம்” என்கிறார் ஏ.கே. இராமானுசன். “கிரேக்க உணர்ச்சிப் பாடல்களின் தலைசிறந்த நவமணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள்; இந்தியாவில், ஏன் உலகிலுள்ள இலக்கியப் படைப்புகளின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்”என்கிறார் பிரெஞ்சு ஆசியவியல் அறிஞர் பியர் மெய்ல். “சங்க இலக்கியம் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமியங்கள் ஆகியவற்றை நிரம்பக்கொண்டவை… அதன் “அகம்-புறம்” கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை” என்கிறார் செக் நாட்டு அறிஞர் கபில் சுவெலபில். “தமிழ் செம்மொழி இலக்கியம், வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித் தன்மைகளைக் (unique) கொண்டது…. அது நுண்மாண்நுழைபுலம் மிக்கது; மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங்களைக் கூறியுள்ளது… அவ்விலக்கியம் பாடித்துலக்கம் தராத மாந்த இனப்பட்டறிவு என ஒன்றும் இல்லை” என்கிறார் சியார்சு எல். ஆர்ட் (45).

தமிழும் சமற்கிருதமும் - ஓர் ஒப்பீடு:

கி.மு. 750 முதலே தமிழ் இலக்கியங்கள் உருவாகத்தொடங்கி கி.பி. 250 வரை பேரளவான இலக்கியங்கள் உருவாகியிருந்தன. இக்காலங்களில் தமிழ், மக்கள் மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும், இலக்கிய மொழியாகவும், வணிக மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் என அனைத்துமாக இருந்தது ஆனால் சமற்கிருதம் என்றுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இருந்துதான் அது ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் ஆகியது. ஆனால் அன்றும் பிராகிருதக் கிளை மொழிகள்தான் மக்கள் மொழிகளாக இருந்தன. சமற்கிருதத்துக்கான எழுத்து கி.பி. 150க்கு பின்னரும், அதன் இலக்கியங்கள் கி.பி. 4 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் உருவாகின. ஆகவே தமிழ் சமற்கிருதத்தை விட 1500 வருடங்களுக்கு முன்பே எழுத்தைக் கொண்ட மொழியாகவும் 1000 வருடங்களுக்கு முன்பே இலக்கியத்தைக்கொண்ட மொழியாகவும் இருந்துள்ளது. ஆகவே தமிழ்மொழி சமற்கிருதத்தைவிட தொன்மையான மொழி என்பதிலும் மிகச்சிறந்த செவ்விலக்கியங்களைக் கொண்ட மொழி என்பதிலும் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.

தமிழர் நாகரிகம் உருவான காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் மொழியாக தமிழ்மொழிதான் இருந்து வருகிறது. ஆனால் சமற்கிருதம் மக்கள் மொழியாக என்றுமே இருந்ததில்லை. சமற்கிருதம் உருவாவதற்கு முன்பும் பின்பும் கி.பி. 1000 வரை பிராகிருத மொழிகளும் அதன்பின் இன்றுவரை இன்றைய நவீன வட இந்திய மொழிகளும்தான் மக்கள் மொழிகளாக இருந்து வருகின்றன. ஆகவே அடிப்படையில் சமற்கிருதம் ஒரு செயற்கை மொழி. சமற்கிருத மொழியின் செயற்கைத் தன்மை பற்றியும், அது உயிருள்ள கவிதைக்கு பயன்படாத மொழியானது குறித்தும் டேனியல் இங்கால்சு (Daniel H.H. Ingals) என்பவர் கூறியதை முன்பே குறிப்பிட்டோம். ஆனால் தமிழ் இயற்கையான உயிருள்ள மொழி.

சமற்கிருத இலக்கியம் சமயச் சார்பானது, முக்கியமாக பார்ப்பனியச் சார்பானது. மனிதர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிப்பது, சமுதாய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. அதன் கருத்துகளும், சிந்தனைகளும் மனித நேயத்துக்கு எதிரானவை. அதன் பெரும்பாலான இலக்கியங்கள் கவிதை அல்லது காவியத்துக்கான சிறப்பம்சங்கள் இல்லாதவை, காமரசம் மிக்கவை. தமிழ் இலக்கியம் இவைகளுக்கு மாறானது. மிகச்சிறந்த விழுமியங்களைக் கொண்டது.

தமிழ்ப் பாடல்கள் சமற்கிருதப் பாடல்களைவிட மிகச் சிறந்த புலவர்களால் பாடப்பட்டு மிகச்சிறந்த கவிதைப்பண்புகளோடு இருப்பதற்கு அதன் உட்பொருள் உத்தி மிக முக்கியக் காரணம் எனவும் தமிழ்மொழி இதனைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மொழியாக இருக்கிறது எனவும் ஆனால் சமற்கிருதம் அதற்கு ஏற்ற மொழியாக இல்லை எனவும் கூறுகிறார் சியார்சு எல் ஆர்ட். காளிதாசர் மட்டுமே இந்தத் தமிழ் உத்தியைப் பயன்படுத்தி, சமற்கிருதத்தின் மிகச்சிறந்த கவியாக ஆகியுள்ளார். கம்பர் கூட இந்த உட்பொருள் உத்தியை வேறுவகையில் கையாண்டு தமிழிலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக ஆகியுள்ளார் எனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த உட்பொருள் உத்தி முழுமையாக இருக்கிறது எனவும் அதன் பின்னரும்கூட இத்தகைய பாடல்கள் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார். இந்த உட்பொருள் உத்தி குறித்து 45 பக்கங்களில் அவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஆகவே தமிழ் மொழி சமற்கிருதத்தைவிட சிறந்த மொழி என்பதும் தமிழ்ப் புலவர்கள் உயர்ந்த கவிஞர்கள் என்பதும் உறுதியாகிறது. (46) பக்: 198-242.

தமிழ் இயற்கை மொழி, ஆனால் வடமொழி தமிழால் வளப்படுத்தப்பட்ட திரிமொழி. தமிழ் ஓரினத் தாய்மொழி, ஆனால் வடமொழி ஈரினக் கலவை மொழி. தமிழ் உலக வழக்கு மொழி, ஆனால் வடமொழி வழங்கா நூன்மொழி. தமிழ் மென்மொழி, ஆனால் வடமொழி வன்மொழி. தமிழ் இயற்கைப்பால் மொழி, ஆனால் வடமொழி செயற்கைப்பால் மொழி. தமிழ் பொருளிலக்கணத்தால் இலக்கண நிறைமொழி, ஆனால் வடமொழி அது இன்மையால் இலக்கணக்குறை மொழி. தமிழ் செம்மை வரம்பு மொழி, ஆனால் வடமொழி செம்மை வரம்பிலா மொழி. தமிழ் பெரும்பாலும் மூல இலக்கிய மொழி, ஆனால் வடமொழி பெரும்பாலும் மொழி பெயர்ப்பு இலக்கிய மொழி. தமிழ் உண்மை, சமன்மை, அன்பு முதலியவற்றை உணர்த்தும் மொழி, ஆனால் வடமொழி பொய்மை, பிரிவினை, ஒருகுல முன்னேற்றம் முதலியவற்றை உணர்த்தும் மொழி. எனத் தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளார் பாவாணர் (47). 71, 72.

வடமொழியாளர் வடமொழியின் வேர்ச்சொற்கள் 1750 எனவும் மேலை நாட்டினர் 2490 எனவும் கூறுகின்றனர். ஆனால் வடமொழியின் உண்மையான வேர்ச்சொற்கள் 120 தான் எனவும் வடசொற்களில் குறைந்தது 40 விழுக்காட்டுச்சொற்கள் தமிழ்ச் சொற்கள் எனவும் கூறுகிறார் பாவாணர் (48). 336, 339.

இதுவரையான ஆய்வுகள் வடமொழியைவிடத் தமிழ்மொழி தொன்மையானது என்பதையும் மிகச் சிறந்த கவிஞர்களால் பாடப்பட்ட மிகச்சிறந்த இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் உறுதி செய்துள்ளது. பாணினியின் இலக்கணம் தமிழின் ஐந்திர மரபைப் பின்பற்றியும், காளிதாசரின் படைப்புகள் சங்க இலக்கியத்தின் உட்பொருள் உத்தியைப் பயன்படுத்தியும் உருவானவை. சமற்கிருதத்தில் உள்ள சொற்களில் 40 விழுக்காட்டுச் சொற்கள் தமிழ்ச் சொற்கள். வடமொழியில் உள்ள அடிப்படைத் தத்துவார்த்த, கலை, அறிவியல், தொழில்நுட்ப நூல்களில் பல தமிழ் மொழியின் மூலத்தைக் கொண்டவை ஆகவே எவ்வகையிலும் வடமொழி தமிழ் மொழிக்கு இணையானது அல்ல என்பது உறுதியாகிறது.

பார்வை:

34. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 133 – 135

35, 36. 135-145.

37. பக்: 145 – 150.

38. வடமொழி இலக்கிய வரலாறு, கா. கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், நான்காம் பதிப்பு, நவம்பர், 2012. பக்: 29-31.

39. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், புத்தகம் – 1 பக்: 111; புத்தகம் – 2, பக்: 437, 496-500, 526-531. NCBH, 2023,

40. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 181.

41 - 43 பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, 2023, புத்தகம் – 2, பக்: 69, 70, 74, 75, 417-422.

44. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 146-151.

45. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, 2023, புத்தகம் – 1, பக்: 70-74.

46. தமிழ்ச் செவ்விலக்கியங்கள், சார்சு எல். ஆர்ட், தமிழில் பு. கமலக்கண்ணன், NCBH, 2022, பக் 198 – 242.

47. வடமொழி வரலாறு, தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், 2017, பக்: 71, 72.

48. பக்: 336. 339.

- கணியன் பாலன்

Pin It