பொறியாளரான சிறந்த தமிழ் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் (1871) சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்தவர். இவர் செந்தமிழ்ச் செல்வி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்து தமிழுக்கென தனிப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்.
மறைமலையடிகளால், ‘தனித்திறமார் பேரறிஞர்’ என்று பாராட்டப்பட்டவர். 1919இல் கூட்டப்பட்ட புலவர்கள் மாநாட்டில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று மெய்ப்பித்தவர்.
இவர் 1926இல் ஜஸ்டிஸ் இதழில் கலைச்சொற்களைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதினார். இக்கால கட்டத்தில் தனித் தமிழ் இயக்கத்தின் சமஸ்கிருத எதிர்ப்பு தமிழக அரசியல், இதழியல் தளத்தில் மேலோங்கி ஒலித்தது.
பா.வே.மா அறிவியல் கலைச் சொல்லாக்கத்தில் சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு முதன் முதலில் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டார். சமஸ்கிருத எதிர்ப்புக் கருத்துக்களை மட்டும் முன் வைக்காமல் தனித் தமிழில் கலைச் சொற்களை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் செயல்பட்டு, கணிதம், இயற்பியல் கலைச் சொற்களை உருவாக்கினார்.
1923இல் சென்னை மாநில கல்வி இயக்கம், கலைச் சொற்களை உருவாக்குவதற்கென வட்டார மொழி அறிவியல் கலைச் சொற்குழுவினைத் தோற்றுவித்தது. அதற்கு ஏ.சி.பிராணதாத்திரஹரஐயர் தலைவராகவும், ஏ.கிருஷ்ணராவ் போன்ஸ்லே செயலாளராகவும், பொ.வே.மாணிக்க நாயக்கர் உறுப்பினர்களுள் ஒருவராகவும் செயல்பட்டனர் (இராதா.செல்லப்பன். கலைச் சொல்லாக்கம், தஞ்சை ப. 84).
அரசு அமைத்த இக்கலைச் சொல்லாக்கம் குழுவில் இடம் பெற்றிருந்த பெரிஞர் ‘தமிழர் நேசன்’ இதழின் முதலாண்டு நிறைவு விழாக்கூட்டம் (23-01-1927) நடந்தபோது அரசு அமைத்த கலைச்சொல்லாக்கக்குழு பற்றி இராயப்பேட்டையில் நடந்த சொற்பொழிவில் ‘அரசு சார்பில் உருவாகி வரும் கலைச் சொற்கோவையில் சொற்களும் சொற்றொடர்களும் தனித் தமிழிலேயே இருக்க வேண்டும் என முயற்சி எடுக்கப்படவில்லை’ (பா.வே.மாணிக்கநாயக்கர், 1927: 234) எனக் குறிப்பிட்டார்.
கலைச்சொல்லாக்க முறைகள்
ஜஸ்டிஸ் இதழில் 23-04-1926 முதல் ஜூன் 1926 வரை தாம் உருவாக்கிய கலைச் சொற்களைப் பற்றி எழுதி வந்த பா.வே.மா ‘என்னுடைய தமிழ் அறிவுக்கு எட்டியவரை உயர்ந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ள மொழிகளில் காணப்படுவது போலவே தமிழுக்கும் அதற்கு இணையான வேர்கள் உண்டு. எனவே. வேற்று மொழிகளிலிருந்து கடன் வாங்கி அதன் தனித் தன்மையை இழக்கத் தேவையில்லை.
மேலும் தமிழ் மொழிக் கல்விக்குத் தமிழிலேயே கலைச் சொற்களை உருவாக்கினால் அவை எளிதாக இருக்கும். தமிழ் மாணவர்கள் வேற்று மொழிச் சொற்களைக் காட்டிலும் தமிழ் மொழி மூலம் சுலபமாய் அர்த்தம் புரிந்துகொள்ள முடியும். துவக்கத்தில் இந்த முறை சற்று அந்நியமாய்த் தோன்றினாலும் பிற்காலத்தில் இவை பழகி விடுவதுடன் தூய்மையான சொற்களாகவும் கருதப்படக்கூடும்’ (ஜஸ்டிஸ் 23-04-1926)’ எனத் தனித் தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வற்புறுத்தினார்.
பா.வே.மா. மொழித் தூய்மையை வலியுறுத்தும் அதே வேளையில் மாணவர்களின் புரிதலுக்காகத் தமிழ் மொழியில் கலைச் சொற்களை ஆக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது கவனிக்கத் தக்கது. பா.வே.மாணிக்க நாயக்கரின் இக்கருத்து பாரதியாரின் கருத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
‘பரிபாஷை சேகரிக்க ஒருபாயம்’ கூறும் பாரதியார் ஸ்ரீகாசியிலே நாகரி ப்ரசாரிணி சபையார் ஐரோப்பிய சங்கேதங்களையெல்லாம் எளிய சமஸ்கிருத பதங்களில் போட்டு மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை தேசபாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன் பரிபாஷைகளைக் கைக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு செய்வதால் நமது மதபாஷைகளில் சங்கேத ஒற்றுமை ஏற்படும். அதனால் சாஸ்திரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.’ என்று கலைச் சொற்களை உருவாக்குவதில் சமஸ்கிருதச் சார்பாளராக இருந்த பாரதியாரும், தமிழ்ச் சார்பினராக இருந்த பா.வே.மாவும் மொழிக் கொள்கையால் வேறுபட்டு இருப்பினும் மாணவர்களுக்கு அறிவியல் கலைச் சொற்கள் எளிதில் புரியவேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களாகவே இருந்துள்ளனர்.
எ.கா. Opposite angle - எதிர் முடக்குகள், Reflex angle - பின் முடக்குகள், Chord - நாண், Concav- குழிந்த, Convex - பிதுங்குகின்ற, Horizontal line - மட்டம்வரை, Arc - வட்டை
பா, வே, மா, கணிதவியல் கலைச் சொற்களை மட்டுமல்லாது மருத்துவவியல், தாவரவியல், விலங்கியல் கலைச் சொற்களையும் உருவாக்கித் தம் சொந்த நூல் தொகுப்பில் வைத்துள்ளார்.
Anatomy - உடற்கூறு, Dysentery - வயிற்றுளைவு, Eye socket - கண்கவளை, கண்குழி, கட்குழி
தமிழ்க் கலைச்சொல்லாக்க முயற்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. 1932இல் சென்னை அரசாங்கம் குழு அமைத்து அதன் சார்பில் கலைச் சொல் பட்டியல் ஒன்று வெளியிட்டது. இதில் சுமார் 7, 400 கலைச்சொற்கள் இடம்பெற்றன.
பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதமாகவும், ஆங்கிலமாகவும் இருந்தன. சில மிகவும் நீண்ட சொற்களாகவும் இருந்தன. எ.கா. Census Report - குலஸ்திரீ புருஷபாலவிருத்த ஆயவ்யய பரிமாண பத்திரிகை (1968இல் வெளியான ஒரு கலைச் சொல்பட்டியல் இச்சொல்லிற்கு மக்கள் தொகை அறிக்கை என குறிப்பிடுகிறது) இதற்கு மாற்றாக பா.வே.மாணிக்க நாயக்கர், காழி. சிவ.கண்ணுச்சாமி இருவரும் ‘தமிழ் அறிவியல் சொற்கள் பலவற்றைச் செந்தமிழ் செல்வி வாயிலாக (தொகுதி 10.1932-33) வெளியிடத் தொடங்கினர்.
தமிழில் தாம் உருவாக்கிய கலைச் சொற்களைப் பற்றிய விளக்கத்தை ‘ஜஸ்டிஸ்’ இதழில் ஆங்கிலத்திலேயே பா.வே.மா. அளித்திருந்தார். பின்னர் இவர் விளக்கம் காழி. சிவ. கண்ணுச்சாமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு செந்தமிழ் செல்வியில் வெளியிடப்பட்டது.
பாரதியினாலும். டாக்டர் கிறீனினாலும் கலைச்சொல்லுக்கு, பரிபாஷை என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது பா.வே.மா அறிவியல் சொற்கள் என்ற சொல்லைக் கையாளக் காண்கிறோம்.
தமிழன்பர் மாநாடு
1933இல் தமிழ்ப் பயிற்றுமொழி, கலைக் களஞ்சியத் திட்டம், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக்கை, நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகிய தமிழின் வளர்முகப் பணிகள் பற்றி விவாதிக்க, தமிழன்பர்கள் மாநாடு 1933ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. இம்மாநாட்டில் உ.வே.சாமிநாதையர் தலைமையுரையாற்றினார்.
அத்தலைமையுரையில். ‘‘இக்காலத்தில் விருத்தியாகி வரும் சாஸ்திர அளவு தமிழ் மக்களிடத்தும் நன்றாகப் பரவ வேண்டியது இன்றியமையாததாதலின் அத்துறையிலுள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுதல் அவசியமாகும். அவ்வகை மொழி பெயர்ப்புகள் முறையாக இருக்க வேண்டும்” (உ.வே.சாமிநாதையர், 1945: 58) எனக் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவியல் நூல்களை மொழிபெயர்க்க வேண்டியதன் தேவையைக் குறிப்பிடும் உ.வே.சா. மொழி பெயர்ப்புகளில் சீர்மை உருவாக வேண்டும் என வலியுறுத்துவது கருத்தில் கொள்ளத்தக்கது.
கலைச் சொற்கள் பற்றி கருத்து தெரிவிக்கும்போது ‘‘சாஸ்திர சம்பந்தமாகவும் பொருளின் பெயர்களாகவுமுள்ள மற்ற மொழிச் சொற்களும் வேறு சிலவகைச் சொற்களும் இப்பொழுது சாதாரண தமிழில் வழங்குகின்றன.
இவற்றை மாற்றி பல புதிய சொற்களை உபயோகிக்கத் தொடங்கினால் அச்சொற்கள் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் அமைவதற்கு நெடுங்காலம் ஆகும். சொற்களின் வழக்கமும் அவற்றின் பொருள் எளிதில் விளக்குதலும் முக்கியமேயன்றி எல்லாத் தனித்தமிழ் வார்த்தைகளாக இருக்க வேண்டுமென்று அனுபவத்தில் இயற்றுவதன்று’’ (உ.வே.சாமிநாதையர் 1945: 58) என்கிறார்.
புதிய கலைச் சொற்களை உருவாக்கும் பணிகளால் காலதாமதமாகும் என்று கருத்து தெரிவித்த உ.வே.சா. கலைச் சொற்களைத் தனித்தமிழில் உருவாக்குவது இயலாத காரியம் என்றார். பா.வே.மா. வடமொழிக் கலைச் சொற்களை விலக்கி நல்ல தமிழில் கலைச் சொற்களை உருவாக்கலாம் என்றார். இக்காலகட்டத்தில் உ.வே.சா அதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கலைச்சொல்லாக்கக் கோட்பாடு
சமஸ்கிருத கலப்புச் சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களையே அறிவியல் சொல்லாக்கத்துக்குப் பயன்படுத்தலாம் எனப் பல சான்றுகள் காட்டி நீண்ட தொடர் கட்டுரைகளை ஜஸ்டிஸ் இதழில் பா.வே.மா. 1926ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். கலைச் சொல்லாக்கத்தில் மொழித் தூய்மைவாதத்தை வற்புறுத்தும் அவரின் கருத்து வருமாறு: ‘பிறமொழிக் கலப்பில்லாமலேயே தமிழ் அறிவியல் சொற்களை அமைத்துக்கொள்ளலாம்.
தற்காலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொருள்களுக்கு ஐரோப்பியரும் ஆங்கிலேயரும் கூட தங்கள் தங்கள் மொழியிலேயே தூய சொற்கள் அமைத்து வர நாம் மட்டும் பிற மொழிகளினின்றும் இரவல் பெறுவானேன்? புதுப் பொருட்களுக்கு அவ்வப்போது புதுப் பெயர்கள் இடப்படுகின்றனவேயல்லாமல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னமே பெயர்கள் இருந்தனவாகவில்லை. பொருளைச் செய்து முடித்த பின்னரே அம்மொழியிலுள்ள பல சொற்களைச் சேர்த்து பெயர் அமைக்கப்படுகின்றது’ (பா.வே.மாணிக்க நாயக்கர், 1927, 234).
ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் தூய சொற்களைக் கலைச் சொல்லாக ஏற்றுக் கொள்ளும்போது நாம் மட்டும் பிறமொழிச் சொற்களை ஏன் கடன் வாங்க வேண்டும்? என்ற அவரின் கேள்வி சரியானதே. தமிழ் மொழியில் கலைச் சொற்களைப் பிற மொழிக் கலப்பில்லாமலேயே உருவாக்க முடியும் என்ற கருத்தையும் முன் வைத்தார். பா.வே.மா. பிறமொழிக் கலப்பென்பது சமஸ்கிருத, ஆங்கிலக் கலப்பேயாகும்.
கருத்து முதன்மைக் கோட்பாட்டாளர்
கலைச் சொல்லாக்கத்தில் பன்னாட்டுக் கலைச் சொல்லாக்கக் குழுவினரால் ‘கருத்து முதன்மைக் கோட்பாடு’ இன்று வற்புறுத்தப்படுகிறது. இக்கருத்து முதன்மைக் கோட்பாட்டை ஆஸ்திரியரான யூஜின் ஊஸ்டர் 1931இல் உருவாக்கினார். ஆனால் இதற்கு முன் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட கலைச் சொல்லாக்க முறையை 1926ம் ஆண்டில் பா.வே.மா அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.
கலைச்சொல் மொழி பெயர்ப்பின் போது கருத்துருவை அடிப்படையாகக் கொண்டே கலைச்சொல் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரின் கருத்தை ‘‘Micrograph’’ என்ற சொல் MiKros என்ற சொல்லும் graph என்ற சொல்லும் எழுது என்று பொருள்படும். Graphin என்ற சொல்லும் சேர்ந்து பிறந்ததாலின் அதற்கு அணுவெழுதி என்ற நேர்பொருள் கொள்ளலாமோவெனின் கொள்ளக்கூடாது. Micrometer, Microscope என்ற சொல்லிலுள்ள micros என்பது நோக்கப்படும் பொருளின் நுண்மையைக் குறிக்கும்.
ஆனால் Micrograph என்பதிலுள்ள Micros என்பதோ micrograph என்னும் கருவிலுண்டாக்கப்படும் பொருளின் நுண்மையைக் குறிக்கும்’ (பா.வே.மாணிக்க நாயக்கர், 1933: 390) என்பதினின்றும் அறியமுடிகிறது. எனவே அணு என்ற சொல்லை விட நுணுகு என்ற சொல்லே micro என்பதற்கு ஏற்றது என்பதால் micrograph - நுணுக்கெழுத்துக்கருவி எனவும் வழங்குவது பொருத்தம் என்கிறார்.
அதே நேரம் microphone என்பதை நேரடியாக மொழி பெயர்ப்பது அணுவொலி என்ற தவறான பொருளைத் தந்துவிடும் என்பதால் அதன் செயலின் அடிப்படையில் ‘அணுவொலிப் பெருக்கி’ அல்லது ‘அணுவொலி பெருக்கி கருவி’ என வழங்குவது சிறப்பாக அமையும் என்பது அவர் கருத்து பல கலைச் சொற்களைச் சீர்மையாக உருவாக்க. கருத்து அடிப்படையில் சொற்களைப் பா.வே.மா. உருவாக்கியுள்ளார் Circle என்ற கலைச் சொல்லுக்கு இணையான சொல்லை உருவாக்கும் போது அது தொடர்பான பல கலைச் சொற்களைக் கருத்து ஒப்புமை அடிப்படையில் உருவாக்கியுள்ளார்.
இது மாதிரியான தமிழ்ச்சொற்களை உருவாக்க பா.வே.மாவின் இரண்டு கலைச்சொல் கோட்பாடுகள்
- கலைச் சொற்கள் வெறும் குறீயீடாகவோ ஒருபுடை விளக்கமாகவோ அமையாமல் அறிவியல் கோட்பாடுகளை அடியற்றியனவாக அமையவேண்டும்.
- கலைச்சொல்லாக்கத்தில் வினை முதற்பதங்களே (Verbal roots) உறுதுணையாக விளங்கி மேலும் பல தொடர்புடைய சொற்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றன என்பனவாகும்.
Circle - வட்டம், Circular - வட்டமான, வட்ட, Circumference - சுற்றுவட்டம், Circumscribe - சுற்றுப்புறம் வரைய, Inscribe - உள்வரையே, Arc- வட்டை, Segment - வட்டக்குறை, Semicircle- அரைவட்டம்
சொற்களின் ஒட்டு முறை ஆக்கத்திற்கு வினை முதற்பதங்களே ஏற்றன என்பதால் கிஸீரீறீமீ என்ற சொல்லுக்கு முடக்கு என்ற வினைமுதற் பதமே பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.
Acte Angle - கூர்முடக்கு, Obtuse Angle - விரிமுடக்கு, Right Angle - செம்முடக்கு எனப் பல்வேறு சொற்கள் ஒட்டுமுறை ஆக்கத்தால் உருவாக்குதலையும், பா.வே.மா. எடுத்துக்காட்டுகிறார்.
இவரால் உருவாக்கப்பட்ட சொற்கள் வழக்கொழிந்தாலும் அவர் கோட்பாடுகள் இன்றளவும் சொல்லாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்து வருகிறது.
புகைவண்டி என்ற ஒரு புடை விளக்கமான சொல்லைக் காட்டிலும் தொடர் வண்டி என்ற சொல்லே பொருத்தமானது எனவும் Air condition என்பதற்கு குளிர்பதனம் என்பதைக் காட்டிலும் வளிப்பதனம் என்ற சொல்லே பொருத்தமானது எனவும் பழைய கலைச் சொற்களுக்குப் பதிலாக புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு ஆளப்படுகின்றன. (சொல்லாக்கம். கி.மறைமலை, பக்.201)
நாட்டுப்புறச் சொல் பயன்பாடு
பா.வே.மா. நாட்டுப்புற, வட்டார தொழிலியல் சொற்களையும் கலைச் சொல்லாக்கத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். Diameter என்ற சொல்லுக்குத் தச்சு, கொல்லுத் தொழிலில் ‘உருவு’ என்பது இணைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது (இதற்கு ‘ஊடறுத்துச் செல்லும்’ என்று பொருள்). Diameter என்பது பொதுவாக வட்டத்தை உள்ளறுத்துச் செல்வதாகும். எனவே நாட்டுப்புறச் சொல்லான ‘உருவு’ என்பதிலிருந்து ‘உருவளவு’ என்ற கலைச் சொல்லை அவர் உருவாக்கியுள்ளார்.
நுண்ணிய வேறுபாடுகளைத் தருதல்
தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் நுண்ணிய வேறுபாடு உடைய சொற்களை (ஆங்கிலத்தில் இல்லாத சொல்லுக்கும்) உருவாக்கியுள்ளார் System என்பதற்கு அமைப்பு என்பது பொருள். இருப்பினும் இதனை, ‘இயல்பாக அமைக்கப்பட்டது’, ‘இன்னொரு செயலால் அமைக்கப்பட்டது’ என நுண்மையாகப் பிரித்துள்ளார்.
System என்பதற்கு அமைவு (இயல்பாக அமைந்தது), அமைப்பு (இன்னொரு செயலால் அமைந்தது) என்றும் பிரிக்கிறார். இவ்வாறாகப் பிரித்து இரண்டு கலைச் சொற்களை உருவாக்கியுள்ளார்.
கலைச்சொற்கள் : மதிப்பீடு
பா.வே.மா. சமஸ்கிருதச் சொற்களைக் கலைச் சொற்களாகப் பயன்படுத்தும் போக்குக்கு மாறாக ‘எதையும் சொல்லுந்திறன் தமிழுக்குண்டு’ என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினார். இவருடைய கலைச் சொற்களில் சமஸ்கிருதக் கலப்பு என்பது அறவே இல்லை. கலைச் சொற்கள் எளிமையாகவும், சுருக்கமானதாகவும், நல்ல தமிழிலும் இடம் பெற்றன. இவருடைய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருதச் சார்பில்லாமல் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின என்றால் மிகையில்லை.
கலைச் சொல்லாக்கப் பணி விறுவிறுப்பு அடைந்த இக்காலகட்டத்தில் பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, ஒளவை துரைசாமிப்பிள்ளை, இராஜாஜி முதலியோர் கலைச்சொல்லாக்க நெறிகள் பற்றி எழுதினர். எல்லோரும் கலைச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே இருக்க வேண்டும் என்பதிலும். வடசொற்கள் தவிர்க்க வேண்டும் என்பதிலும் உடன்பட்டனர். தமிழில் சொல் இல்லாதபோது ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப் படுத்திக்கொள்ளலாம் என்றனர். மூலச் சொல்லின் (கிரேக்கம், லத்தீன்) வேர்ப்பொருளை அறிந்து சொல்லுருவாக்க வேண்டும் என்றனர்.
- டாக்டர் சு.நரேந்திரன்