10% EWS இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பு, பட்டியலின (SC), பழங்குடியின (ST) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) பார்வையில் சமூகப் பொருளாதார ரீதியாக பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்ற விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. 2022 நவம்பர் 10 அன்று, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கமும் (All Bar Association - ABA) அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பும் (All India Backward and Minority Communities Employees Federation - BAMCEF) இணைந்து ஒரு இணையவழி கருத்தரங்கை நடத்தின. நீதித்துறையும் அரசாங்கமும் பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பு மக்களை தவறாக வழிநடத்துவதைத் தடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைளை குறித்து அந்த இணைய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

நவம்பர் 7, 2022 அன்று, 3:2 என்ற விகிதத்தில் EWS இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்தாலும், மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் ரவிந்திர பட்டும் சில கடினமான கேள்விகளை முன்வைத்தனர். சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக, சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படை கருத்தை அரசியலமைப்பு சட்டம் பேசவில்லை என்று EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கில் இணைந்து வழக்காடிய ABA சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46 சாதியை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நலிந்த பிரிவினரின், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதார நலன்களை அரசு தனிப் பொறுப்புணர்வுடன் வளர்த்தெடுக்க வேண்டும். மேலும், சமூக அநீதியிலிருந்தும், எல்லாவித சுரண்டல்களிலிருந்தும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்”.Supreme Court 424'சாதி' என்ற சொல், அதாவது 'பட்டியல் சாதிகள்' என்ற சொல்லின் ஒரு பகுதியாக, ஒரே ஒரு முறை மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாதியால் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு இடத்தில் கூட ஒடுக்கப்பட்ட மக்களாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16 இன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள் எனவும், பிரிவு 15 இன் அடிப்படையில் சமூகரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய குடிமக்கள் எனவும் மட்டுமே வகைப்படுத்தப் பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடுகளில் பயன்படுத்தப்பட்ட இவ்வகையான சொல்லாடல் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பல அரசியல் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் மற்றும் பலருக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பற்றி பேசுவதற்கு போதுமான வாய்ப்பைக் கொடுத்தது. இதன் விளைவாக, EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடும் தரும் வகையில் அரசியலமைப்பின் 103 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அச்சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்தகைய பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் (EWS) இரு பிறப்பாளர்களான பார்ப்பனர்களும் பயனடைவதால், EWS இடஒதுக்கீட்டை நீதித்துறைச் சார்ந்த பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர். பொருளாதார அளவுகோல் அடிப்படையிலான எந்தவொரு இடஒதுக்கீடும், ஒப்பீட்டளவில் பார்ப்பன சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமல்லாது, தங்கள் மக்கள் தொகையை விட அதிகமான பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் வசதி படைத்த பார்ப்பனர்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் வாய்ப்புகளை கொண்டுவருகிறது.

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை வரையறுக்கும் போது, ​​சாதி, வர்க்கம், இனம், பாலினம், பிறந்த இடம் போன்றவற்றினால் ஏற்படும் பாகுபாடுகளைக் களைவதற்குத் தேவையான விதிகளைச் சேர்த்திருக்க வேண்டும். விபி சிங் ஆட்சிக் காலத்தில் மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து தொடங்கி, அனைத்து இடதுசாரி, தாராளவாத, இந்துத்துவா சித்தாந்தவாதிகளும், சாதி அடிப்படையிலான கல்வியறிவின்மை, வறுமை, சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடன் பொருளாதார அளவுகோலை மைய்யப்படுத்திய இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பை விவாதிக்கும் நீதிபதிகளும் சட்ட வல்லுநர்களும் அரசியலமைப்பின் அடிப்படைகளை பொருளாதார வர்க்க நிலை (Economic Based) சார்ந்தே விளக்குகின்றனர். இட ஒதுக்கீட்டிற்கு ஜாதி அல்ல, வர்க்கமே மிகவும் பொருத்தமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான தவறான சட்டங்களும், நீதித்துறை தீர்ப்புகளும் வெளிவரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு சரிசெய்யத் தகுந்த பெரிய ஆளுமை அம்மக்களிடமிருந்து அம்பேத்ருக்குப் பிறகு உருவாகவில்லை. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய தேவை இப்போது உள்ளது. சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் களைவதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை செய்வது மட்டுமே சாதி எனும் புதைகுழியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி. அதற்கு, மக்கள் மத்தியிலும், சட்டத்துறையிலும், அறிவுத்துறையிலும் ஒரு வலுவான இயக்கம் தேவை.

சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை எதிர்நிறுத்தி, ஆர்எஸ்எஸ்ஸும் பாரதிய ஜனதா கட்சியும் இந்து ஒற்றுமையைப் பேசுகின்றன. ஆனால் அவர்கள் செய்யும் உண்மையான வேலை என்னவெனில், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளுவதாகும். அவர்களின் கட்டுப்பாட்டு மையமாக நீதித்துறை திகழ்கிறது. இந்திய அரசியலமைப்பில் நீதித்துறையே மக்களாட்சியின் தலைவிதியை இறுதியாக தீர்மானிக்கிறது. எனவே, இந்திய நீதித்துறையில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவது மிக அவசியம். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் அம்பேத்கரை போல் சட்ட வல்லுனர்களாக மாற வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமநிலையான ஜனநாயகத்தை நிறுவ வேறு வழியில்லை. மிகப் பெரும்பான்மையான பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. SC, ST, OBC மக்கள் மத்தியில் இருந்து உருவாகும், நன்கு பயிற்சி பெற்ற, திறமையான சட்ட வல்லுநர்களால் மட்டுமே சட்டப் போராட்டங்களை நடத்தமுடியும். உண்மையான, சமமான பிரதிநிதித்துவம் கொண்ட நாட்டை உருவாக்க முடியும்.

சட்டங்களை விளக்கும் இறுதியான அதிகாரம் நீதித்துறை என்பதால், அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் உழைக்கும் மக்கbளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட அறிவுஜீவிகள் உருவாகாதவரை, உழைக்கும் மக்களான SC, ST, OBC மக்களின் நலன்களைப் பாதுகாப்பது சாத்தியமில்லை. இந்தப் போரில் ஆங்கில மொழியின் பங்கு முக்கியமானது. ஆங்கிலம் பேசும் சட்ட வல்லுநர்கள் இல்லாததால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் சட்ட, அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் வழியாக இயங்கும் அதிகார மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அவர்களால் உணர முடியவில்லை.

தெருக்களில் கூடும் பெருந்திரள் மக்கள் இயக்கங்களோ அல்லது பாராளுமன்றத்தில் நடக்கும் கடுமையான விவாதங்களோ நீதித்துறையின் கட்டுப்பாட்டை மாற்ற உதவாது. பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மையான எம்.பி.க்கள் SC, ST, OBC வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், EWS இடஒதுக்கீடு மிக வேகத்துடன் கொண்டு வரப்பட்டதைப் போன்று, SC, ST, OBC மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆளும் சக்திகள் மிக எளிதில் உருவாக்குகின்றன அல்லது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருகின்றன. காங்கிரஸ் முன்பு செய்ததை விட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக, ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை நசுக்குவதில் மிகத் தந்திரமாகவும் குறிக்கோளுடனும் இருக்கிறது.

வழக்கறிஞர் சங்கத்திலும் (Bar) நீதிமன்றங்களிலும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் தேவையான அளவு இல்லை. அங்கு இருக்கும் குறைந்தபட்ச நபர்களாலும் நீதித்துறையின் நடைமுறைத் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த தந்திரங்களைப் புரிந்து கொள்வதற்கும், இத்தனை ஆண்டுகளாக எதையும் சாதிக்காமல் ஏமாறியவர்கள், இனி ஏமாற மாட்டார்கள் என்பதை நாடு முழுமைக்கும் உணர வைப்பதற்கும் அம்பேத்கருக்கு நிகரான சட்ட அறிஞர்கள் உழைக்கும் மக்களுக்குத் தேவை. தற்போதைய சமூக நிலைமையை மாற்றுவதற்கு மக்களை ஒருங்கிணைத்து தெருவில் இறங்கி போராடுவதோடு மட்டுமல்லாமல், சட்டப் போராட்டத்தையும் சேர்த்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தவிர, வேறு எந்த சூத்திரக் கட்சிகளுக்கும் இந்தப் போராட்டங்களைச் சமாளிக்க தைரியமும் நம்பிக்கையும் இல்லை. அவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மிகக் குறைவான பார்ப்பனர் சமூக வாக்குகளைச் சார்ந்திருக்கிறார்கள்.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், ஜாட், படேல், ரெட்டி, கம்மா, வேலமா, நாயர் போன்ற OBC இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்ற சூத்திரர்களும் தங்கள் இளைஞர்கள் பொதுக் கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பார்கள், அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் EWS இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர்.. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களில் EWS இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டதன் தரவுளைப் பார்க்கும்போது, இந்த சாதிகள் உண்மையில் பயனடையவில்லை என்று தெரிகிறது. EWS இட ஒதுக்கீட்டின் உண்மையான பயனாளிகள் பார்ப்பனர்கள்தான். அவர்கள் சூத்திரர்களைக் காட்டிலும் கல்வித் துறையில் அதிக பயன் அடைகிறார்கள். சில மாநிலங்களில் சூத்திர சாதியினர் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் தேசிய, அறிவுசார் துறையில் அவர்கள் எந்த தீர்க்கமான மதிப்புமிகு இடத்தையும் பெறவில்லை. நீதித்துறையில் கூட அவர்கள் ஒரு குறிப்பிடப்படும் சக்தியாக இல்லை.

EWS இடஒதுக்கீட்டில், 8 லட்சம் வருமான உச்சவரம்பு பார்ப்பனர்களுக்குச் சாதகமாக பயன்படுத்தப்படும். 8 லட்சம் வருமான உச்ச வரம்புக்குள் வரும் சூத்திரர்கள் கல்வித் துறையில் பார்ப்பன இளைஞர்களுடன் பல ஆண்டுகள் போட்டியிட்டாலும், அவர்களால் பார்ப்பனர்களை வெல்ல முடியாது.

இட ஒதுக்கீடும் ஊழலும் இந்தியாவின் பின்தங்கிய நிலைக்கு முக்கியக் காரணம், எனவே இட ஒதுக்கீடு முறை படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்ற பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் நீதித்துறையின் பார்வையை EWS தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களிடம் இருந்து சக்திவாய்ந்த எதிர்ப்பு வராத வரை இந்த சிந்தனைப் போக்கு தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆளும். இது பல நூற்றாண்டுகளாக பட்டியலின , பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களிடம் ஊட்டப்பட்டு வரும் “நீங்கள் உணவு உண்டால் பலவீனமடைவீர்கள். பட்டினி கிடந்தால், கடவுள் உங்களுக்கு அதிக பலம் கொடுப்பார்” என்பது போன்ற மூட நம்பிக்கை இல்லை. இத்தகைய கோட்பாடுகளை இன்னும் நம்பும் பல விசுவாசிகள் இப்போதும் உள்ளனர். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அறிவுத்தளத்தில் உறுதியான எதிர்ப்பை முன் வைக்காத வரையில், மூடநம்பிக்கையை அறிவியல் என்று கூறுவதில் தயக்கமில்லாத பார்ப்பனர்கள் அரசியலமைப்பை கட்டுக்கதை என்று அறிவிப்பார்கள். இந்த EWS தீர்ப்பு அந்த திசையைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

காஞ்சா அய்லய்யா

நன்றி: Forwardpress.in இணையதளம் (2022, நவம்பர் 17 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சேகர் கோவிந்தசாமி

Pin It