2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது மோடி அரசாங்கம். மோடி அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம், மூன்று ஆண்டுகள் கழித்து, 2022 செப்டம்பரில் தான் விசாரித்தது. உச்சநீதிமன்றம் 10% EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்து எவ்வித உடனடி இடைக்கால உத்தரவும் (Stay) பிறப்பிக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணையும் தொடங்கவில்லை.
இதற்கு எதிர்மாறாக, 1990ஆம் ஆண்டு விபி சிங் அரசாங்கம், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (OBC) 27% இடஒதுக்கீட்டை வழங்கி ஆணையிட்டதை அப்போதைய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை (Stay) மூலம் நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முரண்பாடான அணுகுமுறை குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு “10% EWS இட ஒதுக்கீட்டைத் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றத்தின் முடிவு 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது" என்று குறிப்பிட்டார்.
10% EWS இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக முன்னேறிய சாதிகளை உள்ளடக்கிய, அதாவது பார்ப்பன உயர் சாதிகளுக்கும், மராத்தாக்கள், படேல்கள், ஜாட்கள், காபுக்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இதனால், EWS இட ஒதுக்கீடு, மோடிக்கு மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடிய உயர் சாதியினருக்கும் மிகப்பெரிய பலனளித்தது. ஏற்கனவே அரசு நிர்வாகத் துறையை ஆக்கிரமித்துள்ள இவர்கள், இனி அரசு நிர்வாக அமைப்பில் கூடுதல் பலத்துடன் நுழைவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் முன்னேறி வருகிறார்கள் என்பது குறித்த உயர்சாதியினரின் அச்சத்தின் பெரும் பகுதி தற்போது EWS இட ஒதுக்கீடு மூலம் நீக்கப்பட்டு விட்டது.
நரசிம்ம ராவ் முதல் நரேந்திர மோடி வரை
உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த வாதம் "ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடுகளில் பயன் பெறாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற மக்களுக்கு" அரசு வேலைகளில் 10% இடஒதுக்கீடு செய்வதற்கான பிவி நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் அரசாணைக்கு எடுத்துச் சென்றது. நரசிம்ம ராவ் அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றம், நரசிம்மராவ் அரசின் அரசாணையைத் தள்ளுபடி செய்தது. அதுமட்டுமில்லாமல், மண்டல் கமிஷன் பரிந்துரையை ஒட்டி விபி சிங் அரசால் வழங்கப்பட்ட 27% OBC இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், சமூகப் பின்தங்கிய நிலையே கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய சமூகக் குழுக்கள் அல்லது சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்னும் கூற்று நியாயப்படுத்தப்பட்டது.
நரசிம்மராவ் அரசின் EWS இட ஒதுக்கீடு அரசாணையை நிராகரிக்க உச்ச நீதிமன்றம் கூறிய காரணங்களை களைய, மோடி அரசாங்கம் 103 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (2019) மூலம் அரசியலமைப்பையே திருத்தி எழுதியது. அரசியலமைப்பு சட்டத்தில் புதிய உட்பிரிவுகளைச் 15(6), 16(6) சேர்த்தது. இந்த புதிய உட்பிரிவுகள் பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பினரைத் தவிர்த்து நாட்டில் இருக்கும் மற்ற "உயர்சாதி ஏழைகளின்" முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீடு வழங்க வழி செய்தது. இதன் மூலம், EWS இட ஒதுக்கீட்டை பெரும் சிக்கல்கள் இல்லாமல் உறுதி செய்ய, அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு வலுவான அடித்தளம் போடப்பட்டது.
சாதி (Caste) vs வர்க்கம் (Class)
103 வது திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறதா, இல்லையா? என்பது குறித்த வாதங்களை செப்டம்பர் 13, 2022 அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல்கள் மட்டுமே அடிப்படையாக இருந்தால் போதுமா, அல்லது இந்திய சமூகத்தின் கட்டமைப்பில் இருந்து எழும் சமூக, கல்வி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என ஒட்டுமொத்த குறைபாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா என்பது பற்றிய விவாதங்கள் நடந்தன.
வழக்கறிஞரும் அறிஞருமான மாளவிகா பிரசாத், இந்த விவாதங்களைச் சுருக்கமாக, பின்வருமாறு தொகுத்தார். “மக்கள் குழுக்கள் கூட்டாக அனுபவிக்கும் சமூகப் பின்னடைவிற்கு மாறாக, ஒரு தனி நபருக்கும் மற்றொருவருக்குமான மாறுபாட்டை, அதாவது பொருளாதாரப் ஏற்றத்தாழ்வை மட்டுமே சரிசெய்யும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகளையோ, இட ஒதுக்கீடோ வழங்குவது என்றுமே சிறந்த செயலாக அமையாது".
அரசியல் நிர்ணய சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த விவாதங்களும் வாக்குவாதங்களும், "பொருளாதார நிலை அடிப்படையில் அல்ல, மாறாக சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்" என்பதை நமக்கு தெளிவாக புரிய வைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் நாம் இப்போது காண்போம். "ஒவ்வொரு ஹரிஜன (இன்று பட்டியலினத்தவர் என்று குறிப்பிடப்படும் தலித் மக்கள்) குடும்பத்துக்கும் 10 ஏக்கர் விவசாய நிலமும், 20 ஏக்கர் தரிசு நிலமும், அவர்களின் குழந்தைகளுக்கு பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்படும்” என்பதை உறுதி செய்தால், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதை ஆதரிக்க தானும் தயாராக இருப்பதாக எஸ். நாகப்பா எனும் சென்னை மாகாணத்தை சேர்ந்த அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் வாதிட்டார். அதற்கு எதிர்த்த ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த மோகன் லால் கெளதம் என்பவர், ஹரிஜன்களுக்கு, அதாவது தலித்களுக்கு, அவ்வளவு பெரிய சலுகைகள் கொடுத்தால், ஒவ்வொரு பார்ப்பனரும் தலித்தாக மாறி சகல சவுகரியங்களுடன் அரசு தரும் இலவசங்களை, சலுகைகளை அனுபவிக்க விரும்புவார்கள் எனக் கூறினார். மோகன் லாலின் இந்த கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய நாகப்பா, "இந்து மதத்தின் மற்ற உயர்சாதிகளின் கழிவுகளை அப்புறப்படுத்தவும், அவர்களின் மலத்தை அள்ளவும் தயாராகாத வரை ஒரு இந்து, தலித்தாக மாறவே முடியாது" என்று பதிலடி கொடுத்தார்.
நாகப்பா, கௌதம் இடையேயான விவாதம், இந்தியர்களில் பெரும் பகுதியினர் பல நூற்றாண்டுகளாக இழிவான, கீழ்த்தரமான தொழில்களில் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தாமாக முன்வந்து முழு மனதுடன் இந்த தொழிலை தேர்வு செய்வதில்லை, மாறாக அவர்களின் தொழில் வாய்ப்புகள் பெரும்பாலும் சாதி அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டதாகவே உள்ளன. இந்த சாதியக் கட்டமைப்பு, ஒடுக்கப்பட்ட மக்கள் நவீனக் கல்வி கற்பதை தடுக்கிறது. மேலும் சாதிக்கும் தொழிலுக்கும் உள்ள இணைப்பு பாலத்தை உடைப்பதையும் தடுக்கிறது.
எளிமையாகச் சொல்வதென்றால், சாதி என்னும் இந்த வரலாற்றுக் குறைபாடு, அரசு வேலைகளிலும், நவீன தொழில்துறையிலும் பட்டியலின, பழங்குடியின மக்களின் மிகக் குறைவான பிரதிநிதித்துவத்தை விளக்குகிறது. உண்மையில், சமூக அவமரியாதையே ஏழ்மையை உருவாக்குகிறது. இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை தொன்று தொட்டு தொடரும் இழிவான தொழிலில் இருந்து பிரித்து, இந்திய சமூகத்தை பன்முகப்படுத்த முயல்கிறது.
2019 இல் 103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக பேசிய ராஜ்யசபா உறுப்பினர் மனோஜ் ஜா, ஒரு பேட்டியில் ஏழ்மைக்கும், பிறப்பிற்கும், சாதிக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை இப்படி பொருத்தமாக விளக்கினார், “நான் மனோஜ் ஜா, நான் ஒரு ஏழையாக இருக்கலாம். ஆனால் எனது ஏழ்மை ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் எழவில்லை. ஆனால் மறுபுறம், ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் மட்டுமே வறுமைக்குள் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு, வறுமையே அவர்களின் தலைவிதியாக ஆக்கப்பட்டு, மலக்குழிகளில் மரணிக்கும் ஒரு பெரும் மக்கள் பிரிவும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தான் தலித்துக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். வறுமைக்கு இட ஒதுக்கீடு தீர்வாகாது. மாறாக வறுமையை ஒழிக்க நினைப்பவர்கள் உதவித்தொகை போன்ற மற்ற பிற வழிமுறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்".
மனோஜ் ஜா போன்றவர்கள் கூறுவதைப் போல, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் முடிவு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறதா?, என்பதற்கு உச்ச நீதிமன்றமே விரைவில் பதிலளிக்கும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) யார்?
ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்கோ அல்லது சாதிக்கோ இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், சமூகப் பொருளாதார ஆய்வுகளை நடத்துவது வழக்கம். உதாரணமாக, மண்டல் கமிஷன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் முன் சமூக பொருளாதார ஆய்வுகளை நடத்தியது. ஆனால், 2019 ஆம் ஆண்டில் யார் ஏழைகள்? அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசாங்க வேலைகளில் அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உள்ளதா? என்பதை தீர்மானிக்காமலேயே 8 லட்சம் வருமானம் கொண்ட உயர்சாதியினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு தரும் முடிவை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்தது.
2006 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர் சின்ஹாவின் தலைமையில், பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களைத் தவிர்த்து, அதாவது ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான (Economically Backward Class) ஒரு குழுவை அமைத்தது. அந்த EBC பிரிவு தான் இன்றைய EWS பிரிவு. இந்தியாவின் மக்கள் தொகையில் 5% மட்டுமே இந்த EBC பிரிவினர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வெறும் 5% மக்களுக்கு, 10% EWS இட ஒதுக்கீடு, வழங்கப்பட்டுள்ளது. உயர் சாதிகளில் உள்ள உண்மையான ஏழைகள், இந்த EWS இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெறுவார்களா என்பதே கேள்விக்குரியது தான். ஏனென்றால் ஆண்டொன்றுக்கு 8 லட்சம் ரூபாய் வரை குடும்ப வருவாய் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் இந்த 10% EWS இட ஒதுக்கீட்டை பெற தகுதி பெறுகிறார்கள். அப்படி பார்த்தால், உயர்சாதியினரில் 95% பேர் இந்த EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுகிறார்கள். உண்மையான உயர்சாதி ஏழைகள் இந்த 95% போட்டியில் வென்று, EWS இட ஒதுக்கீட்டை பெறுவார்களா என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
நிர்வாக அமைப்பிற்குள் பலவந்தமாக ஊடுருவுதல்:
பெரும்பான்மையான பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களின் இடங்களை அபகரித்து, வளமான உயர் சாதியினருக்கு மடைமாற்ற EWS இட ஒதுக்கீடு வழிவகை செய்கிறது என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அரசுத் தேர்வாணைய விதியின்படி, பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை விட கூடுதலாகப் பெற்ற பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட(OBC) பிரிவுத் தேர்வர்களுக்கு பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்படும், அதாவது அவர்கள் SC, ST, OBC இட ஒதுக்கீட்டிற்குள் வரமாட்டார்கள். மாறாக பொதுப் பிரிவுக்குள் வருவார்கள். இந்தச் சேர்க்கை விதிமுறையினால், 49.5 விழுக்காட்டிற்கும் அதிகமான அரசாங்க வேலைகள் SC, ST, OBC பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கலாம் என்ற நிலை உருவாகிறது.
இது நடைமுறையில் எப்படி நிறைவேறுகிறது என்பதை நாம் காண்போம். பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம். பொதுப் பிரிவினருக்கான (General Category) குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்ணாக (Cut Off) 70 முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். OBC பிரிவைச் சார்ந்த ஒருவர் கூட 70 மதிப்பெண்ணைப் பெறவில்லையெனில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 100 இடங்கள் மட்டுமே OBC பிரிவினருக்கு கிடைக்கும்.
இப்போது 10 பிற்படுத்தப்பட்ட (OBC) தேர்வர்கள் பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணான 70 ஐ விட அதிகமான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு 10 பொதுப்பிரிவு இடங்கள் ஒதுக்கப்படும். இவர்களுடன் இணைந்து, ஏற்கனவே OBC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களையும் சேர்ந்து, 110 இடங்கள் OBC பிரிவினருக்கு கிடைக்கும். அதாவது, பொதுப்பிரிவில் அனைவரும் போட்டியிடலாம். இட ஒதுக்கீடு மூலம் பாதுகாக்கப்பட்ட இடங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.
ஆனால் இந்த 10% EWS இட ஒதுக்கீடு 10 விழுக்காடு இடங்களை பொதுப்பிரிவில் இருந்து குறைத்து விடுகிறது. பொதுப்பிரிவில் இருந்து 10 விழுக்காடு இடங்களைக் கழித்துவிட்டால், பொதுப் பிரிவில் போட்டியிடும் பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களுக்கு குறைவான இடங்களே மிஞ்சும். குறைவான இடங்களே உள்ளன என்பதால், பொதுப் பிரிவினருக்கான போட்டி அதிகரித்து, கட்-ஆஃப் (cut-off) மதிப்பெண்ணும் உயரும். உண்மையில் அரசு நிர்வாகத்திலும் வேலைகளிலும் உயர் சாதி ஆதிக்கம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே EWS இட ஒதுக்கீடு, வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகல் கொள்ளையா அல்லது?
10% EWS இட ஒதுக்கீடு பல பிற்படுத்தப்பட்ட (OBC) தலைவர்களை கொதித்தெழச் செய்துள்ளது. அதில் நியாயமும் உள்ளது. மண்டல் கமிஷன் நாட்டின் மக்கள் தொகையில் 52 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளதாக கணக்கிட்டது. ஆனால் அவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை மட்டுமே பரிந்துரைத்தது. ஆணையத்தின் தலைவரான மண்டல் உச்ச நீதிமன்றம் வரையறுத்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை மீறவில்லை. அதைக் கருத்தில் கொண்டே, SC, ST இட ஒதுக்கீட்டுக் கூட்டுத்தொகையான 22.5 விழுக்காட்டோடு OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சேர்த்தால் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வகையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு 27 விழுக்காடாக மட்டுமே இருக்க முடியும் என்று மண்டல் குறிப்பிட்டார்.
உயர்சாதியினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை அரசு நீக்குவதற்கு முன்பு, OBC இட ஒதுக்கீட்டின் அளவை முதலில் உயர்த்தியிருக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் வாதிடுகின்றனர். உச்ச நீதிமன்ற விதிப்படி, இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பான 50 விழுக்காட்டைக் கடைபிடித்த மண்டலின் நேர்மையான செயலை மோடி தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, உயர்சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்.
கடந்த 1931 ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களின் தொகை, மண்டலின் மதிப்பீடான 52 விழுக்காட்டை விட அதிகமாக உள்ளது. அதனடிப்படையில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர். ஆனால் மோடி அரசாங்கமோ உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களை கூறி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நிராகரித்து விட்டது. 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2011 ஆண்டு தரவுகளின் படி நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 68 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர் என்பதால், 10% EWS இட ஒதுக்கீடு என்பது பகல் கொள்ளைக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று ஆர்ஜேடி ராஜ்யசபா எம்பி ஜா குறிப்பிடுகிறார்.
10% EWS இட ஒதுக்கீட்டை பகற்கொள்ளை என்று அழையுங்கள் அல்லது கல்விச் செயல்பாட்டாளரான ஜீன் டிரேஸ் குறிப்பிடுவதைப் போன்று, இது உயர் சாதியினரின் எதிர்க்கிளர்ச்சிக்கான சான்று என்றும் அழைக்கலாம். மோடி அரசின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வரும் உயர்சாதியினரின் எதிர்ப்புரட்சியை நம்மால் நிறுத்தவோ, மந்தப்படுத்தவோ முடியுமா?
- அஜாஸ் அஷ்ரப்
நன்றி: newsclick.in இணையதளம் (2022, செப்டம்பர் 11 வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: ஆயிஷா உமர்