யார் ரிஷி சுனக்?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் இந்தியரா, பாகிஸ்தானியரா, ஆப்பிரிக்கரா, பிரித்தானியரா, இந்துவா, கிறித்துவரா, பார்ப்பனரா, பார்ப்பனர் அல்லாதவரா, பார்ப்பன அடிமையா, மாட்டுக்கறி சாப்பிடுவாரா, இந்திய மருமகனா, இடதுசாரியா, வலதுசாரியா, பணக்காரரா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை ஒன்று உண்டு.

அந்த உண்மை என்னவெனில், இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அவர் ஒரு வந்தேறி. வந்தேறி என்ற சொல் பயன்படுத்துவதற்கு வக்கிரமாக அல்லது இழிவான பொருள் தருகிறது என்ற உணர்வு இருக்குமானால், குடியேறி (அல்லது புலம்பெயர்ந்தவர்) என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளலாம். Immigrant என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ச் சொல்லே குடியேறி.rishi sunak 670பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் ரிஷி சுனக்கின் முன்னோர்கள் ஆப்ரிக்காவில் குடியேறி பின்னர் பிரிட்டனின் குடியேறியபோது அங்கு பிறந்தவர் தான் ரிஷி சுனக். பின்னர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை திருமணம் செய்து கொண்டதின் மூலமும் தனது இந்திய அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டார் ரிஷி சுனக். மற்றபடி அவருக்கும் இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தற்போதைக்கு அவர் பிரிட்டனின் பிறந்து வளர்ந்த பிரிட்டன் குடிமகன். பிரிட்டனில் பிறந்ததால் அவருக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைத்ததே அன்றி, அவர் இனத்தால் பிரித்தானியர் அல்ல. வழிவழியாக பிரிட்டனில் வசித்த குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல. பிறப்புவழி பிரிட்டன் குடியுரிமை கொண்டவராக ரிஷி சுனக் இருப்பினும், பிரிட்டனைப் பொறுத்தவரையில் அவரது முதன்மை அடையாளம் வந்தேறி.

உலகின் பெரும்பகுதியை கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம் கட்டி ஆண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வெள்ளையர் அல்லாத ஆசிய வம்சாவளியைச் சார்ந்த குடியேறி ஒருவர் பிரதமராக பதவியேற்றதின் பிண்ணனியையும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் விவாதிப்பது மிக தேவையான ஒன்றாக மாறியிருக்கிறது.

வந்தேறி சூழ் உலகு:

நாகரிகமும் தொழில் நுட்பமும் வளராத காலம் தொட்டு இன்று வரை வெளிப் பிரதேச மக்களின் குடியேற்றத்தை (அதாவது வந்தேறிகளைச்) சந்திக்காத எந்த ஒரு நிலப்பரப்பும் இந்த பூமிப் பந்தில் இல்லை. ஏனெனில் மனிதர்கள் வளமான வாழ்க்கையை தேடி புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் எண்ணற்றவை உண்டு. எவரும் எந்த ஒரு நாட்டின் நிரந்தர குடியாக இருந்ததே இல்லை. தேசியம் என்ற கருத்தாக்கம் வளருவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே குடியேற்றம் நடந்து வருகிறது.

தேசியமும் நாகரிகமும் தொழில் நுட்பமும் வளராத காலத்தில் நடந்த வெளி நாட்டவர் குடியேற்றத்தினால் உருவான பிரச்சினைகளும், தேசியமும் நாகரிகமும் தொழில் நுட்பமும் வளர்ந்த தற்காலத்தில் வெளி நாட்டவர் குடியேற்றத்தினால் உருவாகும் பிரச்சினைகளும் வெவ்வேறானவை.

தேசியமும் நாகரிகமும் தொழில் நுட்பமும் வளருவதற்கு முந்தைய காலத்தில், வெளிநாட்டவர் இன்னொரு நாட்டில் குடியேற அரசியல் தடைகள் பெருமளவு ஏதும் இல்லையெனினும், இன்றைய நவீன போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் குடியேறுவது மிகக் கடினமான ஒன்றாகவே நீண்ட காலம் இருந்தது.

போக்குவரத்து வசதிகள் வளர்ந்த பின்னர் தேசியம், தேசிய எல்லைகள் என திட்டவட்டமான தடைகள் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிராக உருவாகியுள்ளன. ஆனால் வெளிநாட்டவர் குடியேற்றங்கள் குறைந்து விட்டனவா? இல்லை. மாறாக நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் நடைபெற்ற குடியேற்றத்தை காட்டிலும் தற்போது அதிகமான குடியேற்றம் சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் நடைபெறுகிறது.

பிரிட்டனின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 சதவீத மக்கள் குடியேறிகள் (வந்தேறிகள்). அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், வெளிநாட்டு குடியேறிகள் மற்றும் அவர்களின் (அமெரிக்காவில் பிறந்த) குழந்தைகள் எண்ணிக்கை தோராயமாக 84.8 மில்லியன் மக்கள், அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 26 சதவீதம் வந்தேறிகளே. கனடா, ஆஸ்திரேலியா, சௌதி அரேபியா, அமீரகம், ஜெர்மனி, சிங்கப்பூர் என எந்த பொருளாதார வலுவுள்ள நாட்டை எடுத்துக் கொண்டாலும், வந்தேறிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2020 இல் உலகளாவிய அளவில் 280.6 மில்லியன் வந்தேறிகள் இருந்தனர் - இது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் (7.8 பில்லியன் மக்களில் 4 சதவீதம். வந்தேறிகளை இணைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு (மற்றும் இந்தோனேசியாவை விட சற்று பெரிய), உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அது இருக்கும்.migrant share of global population

migrant share of global population 1

வந்தேறிகளும் தேசியமும் முதலாளித்துவமும்:

வந்தேறிகளை தேசியமும் தேசிய எல்லைகளும் தடுத்தாலும் வந்தேறிகளின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏனெனில் மூலதனச் சுரண்டல் காரணமாக வளர்ந்த நாடுகளில் தான் அதிக வேலைவாய்ப்பும், நல்ல அடிப்படை வசதிகளுடன் கூடிய வாழ்க்கைச் சூழலும் உள்ளன. மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் ஆப்ரிக்க, ஆசிய நாடுகளின் வாழ்க்கைச் சூழல் மிக மோசம். எனவே வளராத அல்லது சுரண்டப்பட்ட நாடுகளில் இருந்து பொருளாதார வலுவான நாடுகளை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை தேசியமும் தேசிய எல்லைகளும் தடுத்துக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் முதலாளித்துவம் தேசியம் என்ற தடைக்கு எதிராக வெளி நாட்டவர் குடியேற்றத்தை ஆதரிக்கிறது. ஏனெனில் வந்தேறிகளால் முதலாளித்துவம் லாபம் ஈட்டுகிறது. எனவே தேசியமும், தேசிய எல்லைகளும் சுவர் கட்டித் தடுத்தாலும், தாராளமயமாக்கம் மற்றும் உலகமயம் என்னும் முதலாளித்துவ கொள்கைகள் தீவிரமாக உலகெங்கும் செயல்படுத்தப்படுவதின் தவிர்க்க இயலாத விளைவாக வளரும் நாடுகளில் இருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு குடியேறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலைவாய்ப்பு, உயர்கல்வி, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வறிய நாடுகளில் இருந்து வளமான நாடுகளுக்கு எண்ணற்றோர் குடியேற விரும்புகின்றனர். அவர்களில் கணிசமானோரால் குடியேறவும் இயலுகிறது. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்க வெளிநாட்டவர்களுக்கு வேலை தருகின்றன. ஏனெனில் அவர்கள் உள்நாட்டவர்களை விட குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய தர தயாராக உள்ளனர். அது மட்டுமின்றி, உலகமயமாக்க பிண்ணனியில், தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக பெரு நிறுவனங்கள் தங்களின் வேலைகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு Outsourcing செய்கின்றன. Outsourcing மூலம் பெருத்த லாபத்தை பெருநிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. ஏனெனின் (Cheap Labor) குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய எண்ணற்றோர் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கிடைக்கின்றனர்.

“மூலதனம் (முதலாளித்துவம்) 10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும். 20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது. 50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லாக் கெடுதலையும் செய்யத் துணிவு கொள்கிறது. 100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது. 300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும். தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்” என்றார் கார்ல் மார்ஸ். வெளி நாட்டவருக்கு வேலைகளை தருவதின் மூலம் இலாபம் அதிகரிக்கும் என்றால் முதலாளித்துவ நிறுவனங்கள் சும்மா இருக்குமா?

முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு லாபம். தொழிலாளர்களுக்கு ஒப்பிட்டளவில் வளமான எதிர்காலம். இரண்டும் இணையும் போது, வெளி நாட்டவர் குடியேற்றம் நிகழ்கிறது. இவ்வாறாக வேலை வாய்ப்பு, கல்வி, நல்ல வளமான வாழ்க்கைச் சூழல் காரணமாக வெளி நாட்டில் இருந்து வந்து பணக்கார நாட்டில் குடியேறும் மக்கள், அந்தந்த நாடுகளில் குடியுரிமை வாங்கவும் முயற்சிக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கிடைக்கிறது. இதன் விளைவாக வெளி நாட்டவர் (குடியேறிகள்) மக்கள்தொகை அதிகரிக்கிறது. இது தவிர்த்து, உள் நாட்டுப் போர் உள்ளிட்ட மற்ற காரணங்களுக்காக அகதிகளாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் ஏழை நாடுகளில் இருந்து பணக்கார நாடுகளுக்கு குடியேறுகின்றனர்.

வெளி நாட்டவருக்கு தரப்படும் வேலைகள், வெளி நாடுகளுக்கு மாற்றப்படும் வேலைகள், அதிகரிக்கும் குடியேறிகள் மக்கள் தொகை என வெளி நாட்டவரை முன்வைத்து நடக்கும் அரசியல், கடந்த பல பத்தாண்டுகளாக பொருளாதார வலு கொண்ட மேலை நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை செலுத்திவருகிறது. இதன் விளைவாக வெளிநாட்டவர் குடியேற்றத்தை எதிர்க்கும் கண்ணோட்டம் (Anti Migration) கொண்ட கட்சிகள் வளர்கின்றன. வெளி நாட்டவர் குடியேற்றத்தை எதிர்க்கும் கட்சிகள் குடியேறி மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன. குடியேறி மக்கள் வேலை வாய்ப்புகளை பறித்து விடுவதால் அந்த நாட்டின் நீண்ட நாள் குடிமக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பிரச்சாரம் மேலை நாடுகளில் செல்வாக்கு பெறுகின்றன.

இதை வேறு வார்த்தைகளில் சரியாகச் சொல்வதானால், முதலாளித்துவம் தனது லாபத்திற்காக வந்தேறிகளை உருவாக்கியதால், வளர்ந்த நாடுகளில் ”குடிமக்கள் நலன் என்ற பெயரில்” வலதுசாரித் தேசியவாதம் வளர்கிறது. முதலாளித்துவத்தின் இலாபவெறி வந்தேறிகளுக்கும் வளர்ந்த நாடுகளின் பாரம்பரிய குடிமக்களுக்கும் இடையே ஒரு முரண்பாட்டை உருவாக்கி விட்டது.

வலதுசாரித் தேசியவாதம்:

வலதுசாரித் தேசியவாதம் வந்தேறிகளை உருவாக்கிய முதலாளித்துவத்தோடு மோதாமல், பிழைப்புக்காக குடியேறும் மக்களோடு மோதுகிறது. ஐரோப்பிய யுனியனில் இருந்து உடனடியாக பிரிட்டனை பிரிப்பேன் (Get Brexit Done) என்ற முழக்கத்தை முதன்மையான தேர்தல் முழக்கமாக வைத்து 2019 தேர்தலில் வென்று பிரிட்டன் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். ஐரோப்பாவின் ஏழை நாடுகளான உக்ரைன், போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பிரிட்டனுக்கு வேலை நிமித்தமாக குடிபெயர்வதின் காரணமாக பிரிட்டனில் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் உருவாகின்றன என்ற கோஷத்தை முன்வைத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றத்தை விரைவு படுத்தியதின் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றினார் போரிஸ் ஜான்சன்.

இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் அமெரிக்க குடியேற்றத்தை குறைக்கவே H1B விசா விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். மெக்சிகோவை சேர்ந்த ஏராளமானவர்கள் எல்லை வழியாக ஆண்டுதோறும் சட்ட விரோதமாக ஊடுருவுவதை தடுக்க, அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்பது அதிபர் டிரம்பின் கனவு திட்டம். மெக்சிக்க எல்லையில் சுவர் கட்டுவேன் என்ற கோஷம் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் துருப்புச் சீட்டுகளில் ஒன்று. வெற்றி பெற்றபின்னர் சுவர் எழுப்பவும் முயன்றார். தடுப்புச் சுவர் கட்டும் பணி முழுமையடவில்லையெனிமும், சுவர் பிரச்சினை அமெரிக்கத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

உள்நாட்டவர் (குடிமக்கள்) வேலைகளை வெளிநாட்டினர் (வந்தேறிகள்) பறிக்கின்றனர் என்ற வாதம் சிங்கப்பூர் எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான தேர்தல் வாதங்களில் ஒன்று. வெளி நாட்டவரை பணியமர்த்துவதை குறைத்து உள் நாட்டவரை கூடுதலாக பணியமர்த்துவதை சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு வீசா (Employement Visa) விதிமுறைகளை சிங்கப்பூர் அரசு பலமுறை திருத்தியுள்ளது. வந்தேறிகளுக்கு நிரந்தர குடியிருப்பு விசா (Permanent Resident Visa) வழங்குவதில் பல கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்தது சிங்கப்பூர்.

சுருக்கமாகச் சொன்னால், உலகின் பல வளர்ந்த நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினையாக அதிகரித்து வரும் வெளி நாட்டவர் குடியேற்றம் (Immigration) இருந்து வருகிறது. குடியேற்றத்திற்கான காரணங்களாக எதைச் சொன்னாலும், குடியேற்றத்தை தவிர்க்க எவ்வித தடைகளை ஏற்படுத்தினாலும் வெளிநாட்டவர் குடியேற்றங்களை எவராலும் தடுக்க முடியவில்லை.

வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் தவிர்க்க முடியாதபடி ஆகிவிட்டதால், குடியேறிய நாடுகளில் அவர்களில் குறிப்பிடத்தகுந்த தொகையினர் குடிமக்களாக மாறுவதும் தவிர்க்க இயலாததாகி விட்டது. குடியேறிய நாட்டில் குடிமக்கள் ஆகும் வரை, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட சில வாய்ப்புகளைத் தவிர்த்து, ஓட்டுரிமை உள்ளிட்ட பெரிய அரசியல் உரிமைகள் குடியேறிகளுக்கு கிடையாது. குடியுரிமை கிடைத்த பின்னர் ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்து அரசியல் உரிமைகளும் கிடைக்கும் போது குடியேறிகள் தாங்கள் குடியேறிய நாட்டில் அரசியல் அதிகாரங்களை கேட்பதும் இயல்பே. இந்த வகையில் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல குடியேறிகள் அரசியல் அதிகாரங்களை பெறுவதும் தவிர்க்க இயலாத மாற்றம். அதன் உதாரணமாக அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணும், அவரைத் தொடர்ந்து பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக்கும் தற்போது பதவியேற்றுள்ளார். அந்த வகையில் இது ஒரு எதார்த்தம். ஆனால் வலதுசாரிகள் சும்மா இருப்பார்களா?

வளர்ந்த நாடுகளில் வலது சாரிகளின் எழுச்சி:

ஒருபுறம் முதலாளித்துவம் உருவாக்கிய வந்தேறிகள், மறுபுறம் முதலாளித்துவத்தால் உள் நாட்டில் ஏற்படுகின்ற வேலைவாய்ப்பின்மை, உழைப்புச் சுரண்டல், பொருளாதார ஏற்றத் தாழ்வு, விலைவாசி என இருபக்கமும் வளர்ந்த நாடுகளின் குடிமக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த வாழ்வாதார பிரச்சினைகளை பயன்படுத்திக் கொண்டு வலதுசாரிகள் “நாடு, நாட்டுப்பற்று” போன்ற வெற்றுக் கோஷங்களை முன்வைத்து தேர்தலைத் சந்தித்து வெற்றியும் பெருகின்றனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், இத்தாலியின் ஜியார்ஜியா மெலானி, இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு, ஸ்விடனின் வலதுசாரி கூட்டணியின் தேர்தல் வெற்றிகளை எடுத்துக் கொள்ளலாம். சமீபத்தில் டென்மார்க்கில் நடந்த பொதுத் தேர்தலிலும், ஆட்சியை பிடிக்காவிடினும் வலதுசாரித் தேசியவாத கட்சிகள் குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளன. 2022 ஏப்ரல் மாதத்தில் நடந்த பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரித் தேசிய வாதம் பேசிய மரைன் லு பென் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தான் தோற்றார்.

தீர்வு உண்டா?

முதலாளித்துவம் ஏற்கனவே ஏற்படுத்தி வரும் நெருக்கடிகளுடன் இணைந்து, கொரானா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் மோதல் போன்ற பிரச்சினைகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் உருவாகியுள்ளன. மேலும் 2008-09 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பெருமந்தம் போல் ஒரு பொருளாதாரப் பெரு மந்தம் ஏற்படுவது போன்ற நெருக்கடியான சூழலும் உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடிகளுக்கு மேற்கு ஐரோப்பிய – வட அமெரிக்க பணக்கார நாடுகளில் உடனடியாக கிடைக்கிற தீர்வு “தீவிர வலதுசாரித் தேசியவாதம்”.

தீவிர வலதுசாரித் தேசியவாதம் முதலாளித்துவம் உருவாக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. மாறாக பிரச்சினையின் தீவிரத்தை கூர்மைப் படுத்தும். அதற்கான சான்று பிரிட்டனின் சமிபத்திய தேர்தல் பிரச்சார விவாதங்களிலும், ரிஷி சுனக் அமைச்சரவையின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் நடவடிக்கைகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும்.

வேலையின்மை, பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, தனியார்மயக் கொள்கைகள் ஏற்படுத்திய தீய விளைவுகள், உக்ரைன் - ரஷ்யா போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள், ஊழல் என பல பிரச்சினைகள் இருந்தாலும், பிரதமர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ்ஸும் ரிஷி சுனக்கும் இங்கிலாந்தின் முதன்மை எதிரியாக சீனாவை பிரகடனம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து விட்டதால், அதை முன்னிறுத்த வாய்ப்பில்லாமல் போனதால் சீனாவைத் தேர்ந்தெடுத்தார்கள் போலும். அதேபோல் ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுயெல்லா பிரேவர்மேனின் முதல் அரச நடவடிக்கை “வந்தேறிகளுக்கு எதிராக” பேசியது தான். சுயெல்லா பிரேவர்மேனும் ஒரு வந்தேறி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரிஷி சுனக் போலவே, சுயெல்லா பிரேவர்மேனக்கும் மொரிசியஸ், கென்யா, இந்து, தமிழ், கிறித்துவர், இந்தியா, கோவா என பல அடையாளங்கள் இருக்கின்றன. அவரே வந்தேறியாக இருப்பினும் அவர் தீவிர வந்தேறி எதிர்ப்பு கொள்கை கொண்டவராக இருக்கிறார். சொந்த நாட்டில் வாழ வக்கற்று, உயிரைப் பணயம் வைத்து, கடல் மார்க்கமாக சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் அகதிகளின் வருகையை "பிரிட்டன் மீதான படையெடுப்பு" என்று வர்ணித்தார் சுயெல்லா பிரேவர்மேன்.

அகதிகள் உள்ளிட்ட வந்தேறிகள் விஷயத்தில் பிரதமர் ரிஷி சுனக் தனது உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை விட எவ்விதத்திலும் தாராளமயக் கொள்கை கொண்டவர் அல்ல. குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு குடியேற விரும்பும் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பும் ரிஷி சுனக், "படகு மக்களை" பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்றார். வந்தேறிகள் விஷயத்தில் போரிஸ் ஜான்சனும், ரிஷி சுனக்கும், டிரம்பும், ஜியார்ஜியா மெலானி, பெஞ்சமின் நேதன்யாகு வெவ்வேறானவர்கள் அல்ல. மேலும் வந்தேறிப் பிரச்சினை தனி நபர் பிரச்சினையும் அல்ல. முதலாளித்துவம் உருவாக்கும் தொடர் பிரச்சினை.

முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது ”வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.

சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும் முதலாளித்துவ உலகை வீழ்த்தி, சமூகப் பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் சோசலிச சமுகத்தை அமைக்கும் போது தான் வந்தேறிப் பிரச்சினை தீரும். அதுவரை போராடுவது நம் கடமை.

- சு.விஜயபாஸ்கர்

Pin It