கவுசிகா நதி.... கோவை மாவட்டத்தில் குருடி மலை, பொன்னூத்து மலைகளில் ஆரம்பிக்கிறது. கோவை குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதிகளை சேர்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் போன்ற ஓடைகளை தன்னகத்தே இணைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி (அசோகபுரம்) இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றின் நீளம் 52 கிலோமீட்டர். இந்த ஆறு பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாய்கிறது.

இவ்வளவு தான் விக்கிபீடியா சொல்கிறது. ஆனால் இந்த கவுசிகா நதி சொல்லாத கதைகள் ஏராளம். அதன் பாதையில் இப்போது நீர் இல்லாத சொந்த கதையின் துயரம் 50 கிலோ மீட்டர் பாரம். இருந்தும் இல்லாத உருவமற்ற ஓர் அருவமாய் அலையும் அந்நதியின் ஆற்றாமைக்கு நாம் ஒவ்வொரு முறையும் உச்சரிக்கும் அதன் பெயரே ஆறுதல்.

அவிநாசி சாலையில் அதன் பின்புறம் என்று எங்கோ இரண்டு மூன்று இடங்களில் கவுசிகா நதி என்று பலகை வைத்திருப்பதை எப்போதோ பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம். அந்த வழியாக ஒரு நதி சென்றிருக்கிறதா என்ற ஆச்சரியம் நம்மில் எல்லாருக்குமே இருக்கும். இன்னும் சொல்ல போனால் பெரும்பான்மையானோருக்கு இப்படி ஒரு நதி கோவையில் இருந்தது என்றே தெரியாது. நொய்யல் ஆறுக்கும் பவானி ஆறுக்கும் இடையே ஓடும் இந்த நதி... இயற்கையின் பிறழ் நிலையோ... வழக்கம் போல மானுடத்தின் கொலை வெறியோ... தன்னை நிறுத்திக் கொண்டது. எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கிருந்தே நிறுத்திக் கொண்டது என்பதைத் தான்... ஒரு நதியின் தற்கொலை என மலை அதிர உணர்கிறோம். அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்ட தற்குறிகளின் தவறுகள் என மண்டை உணர அதிர்கிறோம்.

நொய்யல் பற்றிய தேடல் இருந்த காலத்திலேயே இந்த கவுசிகா நதி பற்றி அறிய நேர்ந்திருந்தது. கவுசிகன் என்ற குறுநில மன்னன் இந்த பகுதியை ஆண்டு வந்ததால் இந்த நதிக்கு இந்த பெயர் என்று ஒரு பக்கம் சொன்னாலும்... குருடி மலை மேலே தவம் செய்து வந்த கவுசிக முனிவரின் பெயரால் தான் கவுசிகா நதி என்ற பெயர் வந்ததாகவும் இன்னொரு புறம் சொல்கிறார்கள். எது எப்படியோ இந்த பெயரின் மீது ஒரு கவர்ச்சி இருப்பதாக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். பெண்ணின் அத்தனை குணங்களும் கொண்ட நதிகளின் பெயர் தேர்வு அந்தந்த காலத்தில் மிக அனாயசமாக கையாளப்பட்டிருக்கிறது. அப்படி கவுசிகா... நதிகளின் நாயகி என்றால்... நம்புவோம்.

கொங்கு மண்டலத்துக்கு... நொய்யல் எப்படி முக்கியமோ அப்படி இன்னொரு பக்கம் இந்த கவுசிகா நதியும் முக்கியம்... என்பது தான் நதி தேடும் கண்களின் வார்த்தைகள்.

பொதுவாகவே... ஒரு நதி என்பது... வாழ்வியலின் ஆதாரம். அது தான் அதன் வழி தடத்தில் இருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டி. அதன் முடிவு... அது சென்ற பாதைகளில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் உயிரோடு நெருப்பு வைப்பது தான். அப்படித்தான் இந்த நதியின் நிறுத்தமும். ஏன் அதுவாகவே நிறுத்திக் கொண்டது.. அல்லது எது நிறுத்த வைத்தது... என்று தெரிந்து கொள்வது இயற்கை சூழ் வாழ்வின் இன்றைய தேவை என்று நம்புகிறேன்.

கவுசிகா நதிக்கரையில் பண்டைய காலத்தில் நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அருணகிரி நாதர் திருப்புகழில் பாடி இருக்கும் இந்த நதியின் போக்கு... மெல்லிசை போல என்று உணர்கிறோம். அதன் வடிவமே குழந்தையின் தத்தி தாவும் நடையாக தான் இருந்திருக்க முடியும். இதன் செழிப்பில் அதன் கரையோர மனிதர்களின் வேளாண்மையும் விவசாயமும் செழித்தோங்கி இருந்தது என்றும் தெரிய வருகிறது. நொய்யலின் முக்கிய கிளை நதியான கவுசிகா... சுமார் ரெண்டாயிரம் ஆண்டு பழமையான நதி என்று வரலாறு சொல்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மினுங்கும் தன் சலசலப்பை வெகு நேர்த்தியாக செய்து கொண்டிருந்ததாகவும்... அதன் பிறகு தான் தன் மூச்சை நிறுத்தி இருக்கிறது... என்று அதன் வறண்டலாறு சொல்கிறது.

அதன் வழி தடத்தில் சாக்கடையும்.. மழை வந்தால் தேங்கும் குட்டையாக அல்லது அடித்து வரப்படும் வெள்ளத்தின் வடிகாலாகவும்.... அதன் வேதனையை உள்ளார்ந்து கிளற கிளற... தற்கால வாழ்வியல் முறையின் வக்கிரம் தெரிய வருகிறது.

செழுமை நிறைந்திருந்த.... விவசாயம் கனிந்திருந்த அதன் வழி தடத்தில் இப்போது வறட்சி தான் வீரியம் கொண்டிருக்கிறது. நீர் இல்லாத நிலத்தில் ஜீவன் எப்படி இருக்கும். அதன் வழி தடத்தில் இருந்த ஓடைகள் காணாமல் போய் விட்டதாக செய்திகள் சொல்கின்றன. எப்படி ஓடைகள் காணாமல் போகும் என்ற கேள்வி எழுவதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். நதிக்கு மூலமான சில ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள்.... சாக்கடைகள் என பல்வேறு காரணங்களால் நதியின் ஓடைகள் உருமாறி சென்றுவிட்டன... என்றும் கேள்விப்படுகிறோம். பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால்.. நிலத்தடி நீர்மட்டம் சுமார் 1200 அடிக்கு... கீழே சென்று விட்டதாக கேள்விப்படும் செய்தியில் மனம் வறண்ட கீறலை அதிர்ச்சியோடு உணர்கிறோம்.

குறைந்த மழை பொழிவு... மலைகளில் உண்டாக்கப்பட்ட தடுப்பணைகள்....என்று நதியின் நிறுத்தத்திற்கு ஏகப்பட்ட காரண காரியங்கள். தமிழகத்தின் மழை குறைந்த இந்த வழித்தட பகுதிகளின் நிலத்தடி வளர்ச்சி கவுசிகா நதி சார்ந்தே இருந்திருக்கிறது. இந்த நதி பாய்ந்தோடும் வழியில் இருக்கும் அன்னூர் சூலூர் போன்ற ஊர்கள்... பெரும்பாலும் மழை பொழிவு குறைந்த பகுதிகள் என்பதை கருத்தில் கொள்க. பாலக்காட்டு கணவாய் மூலமாக மேற்கில் இருந்து திசை திரும்பும் ... கிட்டத்தட்ட மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பெருங்காற்றின் வழித்தடங்கள் இவைகள் என்பதையும் அறிக. அதன் தீர்வு மேகத்தை நகர்த்தி நகர்த்தி அந்த இடங்களில் மழை பொழிவை குறைத்து விடும். அந்த குறையை சரி செய்து கொண்டிருந்தது கவுசிகா நதி என்றால்... இயற்கை ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியை திறக்கும் என்பதற்கு ஆணித்தரமான சான்று.

இன்னும் நதி ஊர்ந்த வழியே நாம் ஊர்ந்தால்... நதியை மட்டும் பறித்துக் கொள்ளவில்லை.. நமது நாகரிகம் அதன் தடத்தையும் தான் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் தெரிந்து கொள்கிறோம். ஒரு நதியை கொன்று விட்டு அதன் சடலத்தின் மீது வண்டி ஒட்டி திரியும் கிறுக்கு பயல்கள் நம்மை தவிர வேறு யார் இருக்க முடியும். ஏலியன் எல்லாம் ஒருவேளை பூமி வந்தால் முதலில் செருப்பை கழட்டி ( அவன் செருப்பு எப்படி இருக்குமோ) அடிப்பான். பிறகு தான் தூக்கி போட்டு மிதிப்பதெல்லாம். இயற்கை கொடுத்த நீர் வளத்தை அழித்து விட்டு வானம் பார்த்து எச்சில் துப்புவதில் என்ன இருக்கிறது.

அரசு... ஓடைகளின் வழியை சரி செய்து கவுசிகா நதிக்கு நீரை கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறது என்றும்... இன்னும்... என்னென்னவோ திட்டம் போட்டு நதியை மீட்டெடுக்க முனைந்து கொண்டிருக்கிறது என்றும் வருகின்ற செய்தி... தேன் வந்து பாயுது காதினிலே போல தான். நீர் வந்து பாயட்டும் வாழ்வினிலே. நினைவில் குளிர்ச்சி பூத்தாற் போல ஒரு தித்திப்பு. பவானி ஆற்றின் உபரி நீரை அத்திக்கடவு என்ற இடத்தில் கவுசிகா நீர் தடத்தில் திருப்பி விடுவதால்.. மீண்டும் கவுசிகா நதி உயிர்பெறும் என்பது கூடுதல் செய்தி. அதன் மூலம் பழையபடி விவசாயமும் பாசனமும் உயிர் பெரும் என்பது கூடியவரை நீதி. எப்படியாயினும் கவுசிகா உயிர் பெற வேண்டும். அது இந்த கோவை மண்ணின் புராதனம். அது பண்டைய வாழ்வு முறையின் வழிகாட்டி.

மானுட செழிப்பின் அத்தாட்சி நதியில் தானே இருக்கிறது. அதை பறிகொடுத்து பண்டமாற்றத்தில் பிணமாவது எதில் சேர்த்தி.

கவுசிகா கரையோரங்களில் இப்போது... சுமார் 2000 ஆண்டு கால வரலாற்று தொல்லியல் மண்பாண்டங்கள் கிடைத்திருப்பது... கவுசிகா நதியின் புராதனத்தை நமக்கு சொல்ல வேண்டும் என்றே சொல்கிறது.

கவுசிகா நதி வழித்தடத்தில் இருந்து மண் கடத்தி செல்கின்றனர் என்ற செய்தியும் நம்மைப் பிராண்டுகிறது. பிறகெப்படி அதில் நீர் வரும் என்ற அடிப்படை கேள்விக்கு யார் பதில் தருவது. நீர் வழிப்பாதையில் தற்போது இருபது அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு.... பெரும் பள்ளளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் உளமற்ற வெற்றுயிராளர்கள். இந்நிலை நீடித்து ஆழம் அதிகரிக்கப்பட்டால்.... வட கிழக்குப் பருவ மழையின் போது வழிந்தோடும் மழை நீரின் இயலாமை.... இந்த பள்ளத்திலேயே தேங்கி... நீர்வழிப்பாதை தடுக்கப்பட்டு.... நீராதாரங்கள் வறண்டுவிடும்.... என்கிறது குருதி வழியும் தின செய்தி.

நீரின் வழியை நீரே தீர்மானிக்கும். மனிதனின் அறிவு அதை தேவைக்கு தகுந்தாற் போல பிரித்தோ... மடை மாற்றியோ உபயோகித்துக் கொள்ள வேண்டுமே தவிர அதன் கழுத்தை நெரித்து அதை கொன்று விடவோ அல்லது அதை தற்கொலைக்கு தூண்டுவதோ கூடாது. ஆனால் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சில மனிதர்களின் பேராசையும் அறியாமையும்... கவுசிகாவை ஓடி ஒளிய செய்து விட்டது. அதை சீவி சிங்காரித்து இஷ்டம் போல ஓடு என சொல்லத்தான்... கரையோரம் கன்னத்தில் கை வைத்து படபடக்கிறது... இந்த கட்டுரை.

கத்தி சொல்கிறேன். காதுள்ளோருக்கு எதிரொலிக்கும்.

நீரின் வழியை நீரே தீர்மானிக்கும். மனிதா.... நீ அதில் பை ப்ரொடக்ட்.

- கவிஜி

நன்றி: சில தகவல்கள்- இணையம்

Pin It