கடந்த ஜூன் 14, 2022 அன்று, மத்திய அமைச்சரவை, அக்னிபாத் எனப்படும் இராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயது வரை உடைய இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு துணை ராணுவப் படைகளான மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் சேரும் அக்னிபாத் வீரர்களுக்கு வயது வரம்பிலும் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் ஆசை வார்த்தைகளை வீசியது.

 மேலும் அக்னிபாத் திட்டத்தில் முதல் சுற்றில் தேர்வாவோருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் பிஜேபியின் புளுகை நம்பாத இளைஞர்கள் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்திற்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றார்கள். இதனால் நூற்றுக்கணக்கான ரயில்கள் வட மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

protest against agneepathதொழிற்வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக போராட்டம் இல்லாததும், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதும் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணத்தை மெய்ப்பிக்கின்றது.

பொதுவாக தேசபக்தி என்ற ரீதியில் அல்லாமல் உயிரைக் கொடுத்தாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே பெரும்பாலான இளைஞர்கள் ராணுவத்தைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

 ஒரு பதினைந்து வருடம் வேலை செய்துவிட்டால் பென்சன், மானிய விலையில் கேண்டீனில் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் போன்ற சலுகைகள் தான் ராணுவத்தை நோக்கி பெரும்பாலானவர்களை இழுக்கின்றது.

அதுமட்டுமல்ல ராணுவ வீரர்களுக்கு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் கட்டண சலுகை, இலவசமாக மருத்துவ சிகிச்சை, குறைந்த வட்டியில் கடன், மற்றும் ரேஷன் எனப் பல சேவைகள் உள்ளது. தோராயமாக ஒரு ராணுவ அதிகாரி துவக்கத்தில் 50000 முதல் 65000 ரூபாய் வரையிலான சம்பளத்தை இதுவரை பெற்று வருகின்றார்.

தகுதிவாரியாகப் பார்த்தால் சிப்பாய், லேன்ஸ் நாயக் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 21,700 மொத்த சம்பளம் - ரூ. 57,138, நாயக் பதவி , அடிப்படை சம்பளம் - ரூ. 25,500 மொத்த சம்பளம் - ரூ. 60,938, ஹாவல்தார் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 29200 மொத்த சம்பளம் - ரூ. 64,638

நயிப் சுபேதார் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 35400 மொத்த சம்பளம் - ரூ. 70,838, சுபேதார் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 44900 மொத்த சம்பளம் - ரூ. 80,338, சுபேதார் மேஜர் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 47,600 மொத்த சம்பளம் - ரூ. 83,038, லெப்டினன்ட் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 56100 மொத்த சம்பளம் - ரூ. 91,538

 கேப்டன் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 61300 மொத்த சம்பளம் - ரூ. 97,622, மேஜர் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 69700 மொத்த சம்பளம் - ரூ. 1,07,450, லெப்டினன்ட் கர்னல் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 1,22,100 மொத்த சம்பளம் - ரூ. Rs 1,68,758, கர்னல் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 1,39,100, மொத்த சம்பளம் - ரூ. 1,88,648, பிரிகேடியர் பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 1,44,200 மொத்த சம்பளம் - ரூ. 1,94,615, மேஜர் ஜென்ரல் பதவி , அடிப்படை சம்பளம் - ரூ. 1,87,700 மொத்த சம்பளம் - ரூ. 2,26,440, லெப்டினன்ட் ஜென்ரல் பதவி , அடிப்படை சம்பளம் - ரூ. 2,11,600 மொத்த சம்பளம் - ரூ. 2,55,338, காமெண்டர், துணை ராணுவ தளபதி பதவி, அடிப்படை சம்பளம் - ரூ. 2,25,000 மொத்த சம்பளம் - ரூ. 2,75,228, ராணுவத் தளபதி, அடிப்படை சம்பளம் - ரூ. 250000 மொத்த சம்பளம் - ரூ. 3,04,478மும் கிடைக்கும்.

ஆனால் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முறையே 21000, 23100, 25580, 28000 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் போர் முனையில் இறந்தால் 1 கோடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 ஒருவன் நன்றாக ஆயுதப்பயிற்சி பெற்று, தான் பணிபுரியும் இடத்தின் கள எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவே நான்கு ஆண்டுகள் போதாது என்பதுதான் உண்மை. காரணம் ஒரு சாதாரண தொழிற்சாலையில் கூட பணியில் சேரும் பயிற்சித் தொழிலாளியைக் குறைந்தது நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய பிறகே பணி நிரந்தரம் செய்கின்றார்கள்.

 பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே பயிற்சியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றால், நாட்டைப் பாதுகாக்கும் பணிக்கு நான்கு ஆண்டுகள் போதும் என்பது முட்டாள்தனமான, நாட்டை நாசம் செய்யும் வேலையாகும்.

 ஆனால் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் தரகர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

 போதாத குறைக்கு கார்ப்ரேட் முதலாளிகள் அக்னிபாத் வீரர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணி வழங்கப்படும் எனக் கூறி இளைஞர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள்.

 “பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்கள் பணியில் சேர்வதற்கான வாய்ப்பினை மகேந்திரா குழுமம் வழங்கும்” என அந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும், அதேபோல ஆர்பிஜி குழுமத்தின் ஹர்ஷ் கோயங்காவும் அறிவித்து இருக்கின்றார்கள்.

 மேலும் டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு என்பவர், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை இந்தத் திட்டம் ஏற்படுத்தும் என்றும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

 பார்ப்பன, பனியா, கோயாங்கா போன்ற இந்தியாவை ஆளும் ஆதிக்கசாதி கும்பலுக்கு தங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்க கூலி அடிமைகளாக நல்ல உடற்கட்டான ஆட்கள் தேவைப்படுகின்றார்கள்.

 மேலும் நான்காண்டுகள் முடிந்து வீசி எறியப்படும் இராணுவ வீரர்களை செக்யூரிட்டி வேலைக்கு மலிவு விலையில் எடுத்து, அவர்களைப் பெரு முதலாளிகளின் நிறுவனத்திற்கு வரும், போகும் பணக்கார நாய்களுக்கு சல்யூட் அடிக்க வைக்கவும், கதவு திறந்துவிடவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

 இந்தியா முழுவதும் ஏறக்குறைய 6000 பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 7 மில்லியன் பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இது தவிர, பணத்தை ஏடிஎம் போன்றவற்றில் நிரப்பும் பாதுகாப்புப் பணியில் 50000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 இப்படி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக சம்மந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலாளிகள் வழங்குவார்கள். ஊழியர்களுக்கான ஊதியத்தை அந்த பாதுகாப்பு நிறுவனங்களே நிர்ணயித்து வழங்குகின்றன. கோடி வருமானம் வரும் இந்தத் துறையில் ஆயிரக்கணக்காக முன்னாள் ராணுவத்தினர் கொத்தடிமைகளாக குறைவான கூலிக்கு சுரண்டப்பட்டு வருகின்றார்கள்.

 தற்போது கொண்டுவரப்பட்டு இருக்கும் அக்னிபாத் திட்டத்தால் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வயது குறைந்த இளைஞர்கள் கிடைப்பார்கள். இதைப் பயன்படுத்தி தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் முதலாளிகளிடம் இருந்து பெரும்தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் வயது முதிர்ந்த முன்னாள் இராணுவத்தினரை குப்பைத் தொட்டியில் வீசி எறியெறிய முடியும்.

 21 வயதுக்குப் பின்னால் இராணுவத்தில் இருந்து வெளியே வீசி எறியப்படும் இளைஞர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு அழிந்து போகவே வாய்ப்பிருக்கின்றது. அத்தோடு வெளியே வந்த பின்னால், வேலை இல்லாத சூழலில் அவர்களுக்கு ஏற்படும் மனரீதியான அழுத்தம் தற்கொலைகளை அதிகப்படுத்தும்.

 இராணுவத்தில் வேலையில் இருக்கும் போதே கடுமையான பணிச்சூழலும் அதிகாரிகளின் அடாவடித்தனமும் பல பேரை தற்கொலை செய்துகொள்ள வைக்கின்றன.

 இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் படி 2014 முதல் 2021 வரை ஏறக்குறைய 787 ராணுவவீரர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள்.

 நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்களை ஏற்கெனவே அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் சித்தரவதை செய்யவே வாய்ப்பு அதிகம். எப்படி இருந்தாலும் நான்காண்டுகளில் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்பதால் அவர்களை முன்னிலைப் படையாக பயன்படுத்தவே சீனியர்கள் விரும்புவார்கள். இவை எல்லாம் பாராதூரமான விளைவுகளை இராணுவத்தில் நிச்சயம் ஏற்படுத்தும்.

 உலகிலேயே மிகப்பெரிய ராணுவப் படையைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் மட்டும் சுமார் 11,29,900 பேர் கொண்ட ஆக்டிவ் ட்ரூப்ஸ் மற்றும் 9,60,000 பேர் கொண்ட ரிசர்வ் ட்ரூப்ஸ் உள்ளது.

 இந்தியா கடந்த ஆண்டு ராணுவத்துக்குச் செலவிட்ட தொகை 76.6 பில்லியன் டாலர் ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 0.9 சதவிகிதம் அதிகம். அதேசமயம் 2012-ம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. உலக வல்லரசான ரஷ்யா கூட 65.9 பில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்துள்ளது.

 இவ்வளவு பெரிய இராணுவத்தை நடத்துவதற்கு ஆகும் செலவு என்பது உண்மையில் மிகப்பெரியதுதான். ஆனால் இந்திய அரசு உண்மையில் ராணுவத்தை எதற்காகப் பயன்படுத்துகின்றது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் அதன் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

 உண்மையில் இந்திய ராணுவம் மற்ற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுவதைவிட சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெரும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கவும், பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்களுக்கு எதிரான போராட்டத்திலும் இராணுவ வீரர்கள் இறக்கி விடப்பட்டு இருக்கின்றார்கள்.

 இந்திய பெருமுதலாளிகளின் நலனுக்காகவும், தரகு முதலாளிகளின் நலனுக்காகவும், பன்னாட்டு கனிமவளக் கொள்ளை கும்பலுக்காகவும் வேலை செய்யும் இவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பினாலே இராணுவ செலவுகள் பெருமளவு குறைந்துவிடும். ஆனால் அதை ஒருபோதும் இந்திய அரசு செய்யாது.

 மேலும் இராணுவத்தில் படி நிலைவரிசையில் இருக்கும் பதவிகளும் அதற்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடும், வெளிப்படைதன்மை அற்ற அதன் நிதி கையாளும் முறையும் மிகப்பெரிய நிதி இழப்புக்கும் ஊழலுக்கும் வழி வகுத்துள்ளது.

 நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இராணுவத்திற்காக செலவு செய்யப்படும் தொகையை அந்த நாட்டு மக்களே தெரிந்துகொள்ள முடியாது என்பதுதான் வேடிக்கை.

 இராணுவத்தில் உயர் பொறுப்புகளில் உள்ள நபர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளார்கள். தங்களுக்குப் படியளக்கும் மக்களுக்கு பதில் கூறத் தேவையில்லாத உயரத்தில் இருக்கின்றார்கள். அதனால்தான் இந்திய ராணுவம் இன்னும் நவீனமாகாமல் ஓட்டை பீரங்களையும், உடைந்த துப்பாக்கிகளையும், எதற்கும் உதவாத காலவதியான போர் விமானங்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

 ஒதுக்கப்படும் தொகை எல்லாம் முறையாக செலவு செய்யப்படுகின்றதா என்பதை நேர்மையாக ஆய்வுக்கு உட்படுத்தினாலே இந்திய ராணுவத்தின் செலவுகளை கணிசமாகக் குறைக்க முடியும்.

 அதை எல்லாம் செய்யாமல் இந்தியாவில் உள்ள வறுமையை பயன்படுத்திக் கொண்டு படிக்கப் போகும் சிறுவர்களை எல்லாம் இராணுவத்திற்கு அனுப்புவது அயோக்கியத்தனமான முடிவாகும். இதற்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் இருக்கலாம் என சந்தேகப்பட வைக்கின்றது. காரணம் ஆர்.எஸ்எஸ் சாகாவில் காக்கி டவுசர் போட்டு பயிற்சி எடுக்கும் சிறுவர்களை எல்லாம் மோடி அரசு அப்படியே இராணுவத்திற்கு இடமாறுதல் செய்ய 100 சதவீதம் வாய்ப்பிருக்கின்றது.

 ஏற்கெனவே காவல்துறை, நீதிமன்றம் என அனைத்து அரசு உறுப்புகளையும் காவி மயப்படுத்தி நாசப்படுத்தி வைத்திருக்கும் மோடி அரசு நிச்சயம் இதைச் செய்யாது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

- செ.கார்கி

Pin It