என் பதவி விலகும் முடிவை எடுக்க இத்தனை காலம் பிடித்ததற்கு காரணங்கள் உண்டு. முதலாவதாக, அமைச்சரவையின் உறுப்பினராக இருந்த பெரும்பாலான காலத்தில், 1950 சனவரி 26 வரை, அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியிலேயே மூழ்கியிருந்தேன். அதற்குப் பிறகு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வரைவிலும், எல்லைகளை நிர்ணயிக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வந்தேன். ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டாவதாக, இந்து சட்டத் தொகுப்பின் பொருட்டு தொடர்ந்து பதவியில் இருப்பது அவசியம் என்று எண்ணினேன். இந்து சட்டத் தொகுப்பிற்காக பதவியில் நான் நீடித்தது தவறு என்று சிலர் எண்ணக்கூடும். நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தேன். இந்து சட்டத் தொகுப்பு இந்த நாட்டின் சட்டமன்றம் மேற்கொண்ட மிகப் பெரிய சமூக சீர்த்திருத்த நடவடிக்கையாகும்.
கடந்த காலத்தில் இந்திய சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டமோ, இனி இயற்றக்கூடிய எந்த சட்டமோ - இதற்கு இணையான முக்கியத்துவம் உடையதாக இருக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத்தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக் கொண்டே போவது, நமது அரசமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும். இது, சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பானதாகும். இந்து சட்டத் தொகுப்புக்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இதுதான். இதன் பொருட்டே எனது மன வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நான் பதவியில் நீடித்திருந்தேன்.
ஆகவே நான் ஏதேனும் தவறை செய்திருப்பேனாகில், ஏதேனும் நல்லதைச் செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்திருப்பேன். இது தொடர்பாக அவையில் பிரதமர் கொடுத்த மூன்று அறிக்கைகளை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1949 நவம்பர் 28 அன்று பின்வரும் உறுதிமொழிகளைப் பிரதமர் வழங்கினார்: “இந்து சட்டத்தொகுப்பை செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான சட்டவரைவை அது பரிசீலித்து வருகிறது.''
“இந்து சட்டத் தொகுப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வது அவையின் விருப்பம். ஆனால் அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, அவை அதை நிராகரிக்குமானால் அது அரசையே நிராகரிப்பதாகும். அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளுள் இதுவும் ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பொருத்தே அரசு நிலைப்பதும் வீழ்வதும் இருக்கிறது.''
1949 டிசம்பர் 19 அன்று மீண்டும் பிரதமர் இவ்வாறு கூறினார்: “இந்து சட்டத் தொகுப்பு முக்கியமானதல்ல என அரசு கருதுவதாக இந்த அவைக்கு சிறிதளவு எண்ணம் வருவதைக் கூட நான் விரும்பவில்லை. ஏனெனில், நாங்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளில் ஆகப் பெரியதான இந்த பிரச்னை குறித்த அதன் அடிப்படை அணுகுமுறைக்காகவே அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நாம் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். நமது பயணத்தில் இது ஒரு கட்டமாகும். இதோடு, பொருளாதாரம், சமூகம் என்று இன்னும் பல கட்டங்கள் உள்ளன. நமது சமூகம் முன்னேற வேண்டுமெனில், எல்லா முனைகளிலும் இப்படியான ஓர் ஒருங்கிணைந்த முன்னேற்றம் தேவை.''
1951 செப்டம்பர் 26 அன்று பிரதமர் கூறியதாவது: “சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் எந்த அளவு முடியுமோ அந்த அளவில் இந்த சட்டத் தொகுப்பை நிறைவேற்ற அரசு கொண்டுள்ள விருப்பம் குறித்து இந்த அவைக்கு உறுதி அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நம்மைப் பொருத்த வரையில் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் வரையில், இது தள்ளிவைக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த வாய்ப்பை இந்த நாடாளுமன்றமே அளிக்கும் என நம்புகிறேன்.''
இது இந்த சட்டவரைவைக் கைவிடுவதாகப் பிரதமர் அறிவித்த பிறகு கூறியது. பிரதமரின் இந்த அறிவிப்புகளை யார்தான் நம்பாமல் இருக்க முடியும்? பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றால், அத்தவறு கண்டிப்பாக என்னுடையதல்ல. அமைச்சரவையிலிருந்து நான் வெளியேறியது, இந்நாட்டில் எவரும் அக்கறை கொள்ளக் கூடிய ஒரு செய்தியாக இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் எனில், நான் வெளியேறுவதன் மூலமே அது சாத்தியம். அதற்கு முன் அமைச்சரவையின் உறுப்பினராக நான் இருந்தபோது என்மீது காட்டிய அன்புக்காகவும் பாசத்திற்காகவும் எனது சகாக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு நான் விலகவில்லை என்ற போதும், என்னை இதுநாள் வரையில் சகித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-முற்றும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1325)