ஜாதிகளாலும் மதங்களாலும் மக்களைப் பிரித்தாளும் அரசியல் வியூகங்களில் ஒன்றாக, மக்கள் உணர்ச்சியின் மென்னைகளைத் தட்டிவிடும் பொதுப்புத்தி பரப்புரையில் முக்கியமானது மாட்டிறைச்சி அரசியல்.
ஜிப்ஸி படத்தில், முஸ்லிம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் குடிக்கத் தண்ணீர் கேட்கும் காட்சியில்,
“பீப் பிரியாணி வாசம் தூக்குது!”
என பிரியாணியும் கேட்கத் தூண்டுவார் கதாநாயகனின் நண்பர்!
நாகூரையும், நாகூர் தர்காவின் கந்தூரி வைபவத்தையும் சினிமாத்தனங்கள் எதுவுமின்றி ஓரளவுக்குச் சரியாக ஆவணப்படுத்திய அந்த படத்தின் இயக்குநருக்கு நாகூர் முஸ்லிம்கள் எந்த இறைச்சியில் பிரியாணி சமைப்பார்கள் என்பது நிச்சயமாய் தெரிந்திருக்கும். மதவாதத்தின் பாதிப்புகளை காட்சிப்படுத்தியதுடன் காவி அரசியலையும் சாடிய அப்படத்தில், காவி அரசியலின் முக்கிய வியூகங்களின் ஒன்றான மாட்டிறைச்சி அரசியலையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதைச் சேர்த்திருக்கலாம்!
ஏனென்றால், முஸ்லிம்கள் அனைவருமே மாட்டுக்கறி உண்பார்கள் என்ற பொது கருத்துக்கு நேர் மாற்றமாக, ஆடு கோழி தொடங்கி மீன் பிரியாணி வரை சமைக்கும் முஸ்லிம் குடும்பங்களில் மாட்டுக்கறி பிரியாணி அரிதிலும் அரிதான ஒன்று!
தமிழ்நாட்டின் விதிவிலக்கான சில பகுதிகளைத் தவிர, மாட்டுக்கறியை விரும்பி சாப்பிடும் தமிழ் முஸ்லிம்கள் கூட விருந்துகளிலும் பண்டிகை தினங்களிலும் மாட்டுக்கறியைச் சமைப்பது கிடையாது.
எங்கள் வீட்டுக்கு பின்புறத் தெருவில், தொழுகை பள்ளியான மீராப்பள்ளியின் பக்கவாட்டில் பிரம்மாண்டமாய் வளர்ந்து விரிந்திருந்த புளிய மரத்தடியில் தொடங்கி அரசலாற்றாங்கரை வரை பரந்திருந்தது மீராப்பள்ளித் தோட்டம். மீராப்பள்ளியின் பராமரிப்புக்காக யாரோ ஒரு தனவந்தர் தானமாக தந்த பல ஏக்கர் நிலம். அந்த தோட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காலங்காலமாய் குடிசை போட்டு வசித்து வந்தார்கள். நிலம் பள்ளிவாசலுக்குச் சொந்தமானதுதான் என்றாலும் அங்கு வசித்தவர்களில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து ஜாதி, மதத்தவரும் அடக்கம். ஏழை என்ற ஜாதி அவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இருந்தது!
மீராப்பள்ளி தோட்டத்தில் வசித்த மஹ்மூது ஒருவர் தான் எங்கள் ஊரின் ஒரே மாட்டுக்கறி வியாபாரி. தெருக்கோடிக்கு ஒன்றாக ஊர் முழுவதும் ஆட்டிறைச்சிக் கடைகள் இருந்தாலும் மாட்டிறைச்சி வாங்க மஹ்மூதுவிடம்தான் போக வேண்டும்! பிரதி ஞாயிறு ஒரு நாள் மட்டும் ஊருக்கு வெளியே, வவ்வால் தோட்டத்தில் கறி விற்பனை செய்வார்!
மஹ்மூதின் மாட்டுக்கறியைப் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம்,
“கழிசல்ல போறவன்... செத்த மாட்டையெல்லாம் வித்துடுவான்டீ!”
என எரிந்து விழுவாள் பாட்டி!
இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சி எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் செத்த மாடு என மிகைப்படுத்திச் சொன்னாலும் ஞாயிறு விற்பனைக்காக அவரது குடிசைக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் மாடு எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாகத்தான் நிற்கும். அப்படிப்பட்ட மாட்டின் கறியை விருந்து உணவுகளில் பயன்படுத்துவது கெளரவ குறைச்சலாக கருதப்பட்டதும் வசதியான மேல்தட்டு முஸ்லிம்கள் மாட்டுக்கறியைத் தொடாததற்கான காரணம். பெருநகரங்களின் கையேந்தி பவன்களில் விற்கப்படும் ‘பீப் பிரியாணியை’ பிரபல ஹோட்டல்கள் சீண்டுவதில்லை!
இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி என்பது ஒடுக்கப்பட்ட எளியவர்களின் குறைந்த விலை அசைவ புரதமாகத்தான் விளங்கி வருகிறது.
வாப்பாவின் கடைக்கு அடிக்கடி வரும் எலெக்ட்ரிசியன் மஸ்தானால் தான் எங்கள் வீட்டில் மாட்டுக்கறி நுழைந்தது!
வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு கடைக்கு வரும் மஸ்தான்,
“ஊட்ல மாட்டுக்கறி நானா... எங்க உம்மா கையால மாட்டுக்கறி பெரட்டி சாப்புட்டா அத்திப்பழம் மாதிரி இருக்கும் நானா...”
எனக் கூறும் போதெல்லாம்,
“ஓய்! சொல்லிக்கிட்டே இருக்கீமே தவிர கண்ல மட்டும் காட்டிறாதேயும்!”
என்பார் வாப்பா!
நானும் கடையிலிருந்த ஒரு நாள், சிறிய சில்வர் தூக்குச் சட்டி ஒன்றில் கொஞ்சம் மாட்டுக்கறியைக் கொண்டே வந்துவிட்டார் மஸ்தான்!
சற்றே தயக்கத்துடன் தூக்குச் சட்டியைத் திறந்து ஒரு துண்டை எடுத்து ருசி பார்த்த வாப்பா,
“ம்ம்ம்... நல்லாத்தாம்பா இருக்கு... சாப்ட்டு பாரு!”
என என்னிடமும் நீட்ட,
நிறைய எண்ணைவிட்டு, இஞ்சிப்பூண்டும் வெங்காயமும் பச்சை மிளகாயும் போட்டு வதங்கச் சுருட்டிய மாட்டுக்கறியை வாப்பாவுக்கும் எனக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று!
"தின்று கெட்டான்!” என்ற எங்கள் பகுதியின் சொலவடைக்கு வாழும் உதாரணமானவர் என் வாப்பா! ஞாயிற்றுக்கிழமை காலையில் மார்க்கெட் போய் திரும்பும் வாப்பாவின் வாடகை சைக்கிள் ஹேன்டில்பாரின் இரு பக்கமும் மீனும் கறியும் காய்கறிகளும் பிதுங்கி வழியும் துணிப்பைகள் தொங்கும். சில நேரங்களில் பாரம் தாங்காமல் பிடி அறுந்து விழுந்த பையை மூட்டையாய் கட்டி காரியரில் கொண்டு வருவார்!
ஞாயிறு மதியத்துக்கு ”ஆக்கிப் பொரித்து, மரவை பரத்தி” சாப்பிட்டுவிட்டு மதிய உறக்கத்துக்குப் பின்னர் அந்தி மார்க்கெட்! மாலை மயங்கும் நேரத்தில் மீன் மார்க்கெட்டில் வந்திறங்கும் பெரிய ‘காக்கை மீன்களை’ பங்கு சேர்ந்து விலைபேசி வாங்கி வருவார்! ஞாயிறு இரவும் ”’ஆக்கிப் பொரித்து, மரவை பரத்தி’ உணவு!
மஸ்தான் கொடுத்த மாட்டுக்கறியை ருசி பார்த்த பிறகு வந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வாப்பாவின் கடைத்தெரு ‘ஜாப்தாவில்’ மாட்டுக்கறியும் சேர்ந்து கொண்டது!
புது வாடிக்கையாளர், அதுவும் மீராப்பள்ளி தோட்டத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் பெரிய வீட்டின் மாப்பிள்ளை என்பதனால் முதலிலிருந்தே மஹ்மூது நானாவின் முக்கிய வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார் வாப்பா! முதல் நாள் எவ்வளவு கறி வேண்டும் எனச் சொல்லிவிட்டால் போதும், ஞாயிறன்று மாட்டுக்கறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்!
“அந்த குடிகாரப்பய கொடுத்ததை தின்னுப்புட்டு இந்த புள்ள இத வாங்கிட்டு வந்திருக்கே!...”
முதலில் மருமகனின் ஆசையைத் தவிர்க்க முடியாமல் புலம்பிக்கொண்டு அடுக்களையில் மாட்டுக்கறியை அனுமதித்த உம்மா வழி பாட்டியார் வெகு சீக்கிரமே மாட்டுக்கறி பக்குவத்தில் மஸ்தானின் உம்மாவையும் மிஞ்சி விட்டார்!
“பலா கொள்ளுவான்... எலும்பையும் சவ்வையும் போட்டு கறின்னு கொடுக்கறான்”
என சதாசர்வகாலமும் ஆட்டுக்கடை சேட்டு நானாவைத் திட்டி தீர்க்கும் பாட்டியாவுக்கு மஹ்மூது நானா அனுப்பும் ஸ்பெசல் கட்டிசதைக்கறி திருப்தியாகி விட்டது!
வெகு சீக்கிரத்தில் குடும்பம் மொத்தமுமே அதன் சுவைக்குப் பழகிவிட்டது!
“பரோட்டா நல்லிக்கறி” போலவே மாட்டுக்கறி பிரட்டலை சாப்பிடவும் ஒரு முறை உண்டு! மாட்டுக்கறி பிரட்டலைக் கொஞ்சம் எடுத்து, அதைக் குறுக அறிந்த நாட்டு வெங்காயத்துடன் சேர்த்து, ‘மிளகுத்தண்ணீ’ ஊற்றி நொறுங்க பிசைந்த சோற்றுருண்டையில் பொதித்து, நன்றாக மென்று, பச்சை வெங்காயத்தின் காரத்தையும், மாட்டுக்கறியின் உறைப்பையும் உணர்ந்து ருசிக்க வேண்டும்!
“என்னா மஹ்மூதே... சீக்கு மாடுன்னெல்லாம்...”
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை காசு வசூல் பண்ண வந்த மஹ்மூது நானாவிடம் தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்டே விட்டாள் பாட்டியா!
“அல்லாவே... அப்படியெல்லாம் பண்ணுவேனா லாத்தா? அடுத்த வாரம் வவ்வால் தோட்டத்துக்கு மாப்பிள்ளையையே வந்து பாக்கச் சொல்லுங்களேன் லாத்தா!”
பதறி, வாப்பாவை சாட்சிக்கு அழைத்தார் மஹ்மூது நானா!
"தம்பி அவ்வளவு தூரமெல்லாம் வராதுன்னு தெரிஞ்சதால துணிஞ்சி சொல்றீரு!”
பாட்டியாவின் சீண்டல் சரியாகத் தாக்க,
“அடுத்த நாயிறு ஊட்டுக்கு அனுப்ப வேண்டா நானா... அங்க வந்து வாங்கிக்கறேன்!”
இப்படியாக வாப்பாவின் கடைத்தெரு பயண தடத்தில் வவ்வால் தோட்டமும் இடம்பிடித்தது!
கவர்னர் மஹால் தெரு மதகடி சாலையாக மாறும் நாற்சந்தியில் இருக்கும் மரைக்காயர் பெட்ரோல் பங்குக்கு மறுபுறமிருந்து தொடங்கி ஊருக்கு வெளியே செல்லும் சாலைதான் வவ்வால் தோட்ட சாலை. இருபக்க ஓரங்களிலும் ஓங்கி வளர்ந்த தென்னையும் பனையும் கடற்காற்றின் சப்தத்துக்கு சதா தலையாட்டி சலசலத்துக்கொண்டிருக்கும் சாலை! சாலையின் ஆரம்ப எல்லையில் மொய்த்திருக்கும் குடிசை வீடுகளைத் தாண்டி வண்ணான் துறை. மரங்களுக்கிடையே அனைத்து வண்ணங்களிலும் பளிச்சிட்டு காற்றில் ஆடி காயும் துணி தோரணங்களைத் தாண்டிய வயல்வெளியை அடுத்து ஆட்டுத்தொட்டி. ஊருக்குள் விற்பனையாகும் கறிக்கான அனைத்து ஆடுகளும் அங்குதான் அறுக்கப்படும்.
சலவை மணத்துக்கு நேர் மாறான குமட்டல் நாற்றத்துடன் ஆட்டுத்தோல்கள் காய்ந்து கொண்டிருக்கும் ஆட்டுத்தொட்டிக்கு அப்புறமாய் பாட்டில்களின் சப்தம் கினுகினுக்கும் டைமண்ட் சோடா பாக்டரி, புளித்த மணத்துடன் ‘வட்ட பன்’ மொத்த தயாரிப்பு பேக்கரி என இரண்டு கிலோமீட்டர் நீளத்துக்குள் வவ்வால் தோட்ட சாலை தன்னுள் ஒளித்துக் கொண்டிருந்த சுவாரஸ்யங்கள் பல!
மேற்சொன்ன அனைத்தையும் தாண்டிய பிறகு மஹ்மூது நானாவின் மாட்டுக் கறிக்கடை! நான்கு மூங்கில்கள் தாங்கி நிற்கும், சுற்றுத்தடுப்பு கூட இல்லாத பந்தலின் ஒரு ஓரத்தில் கறிவெட்டும் மரத்துண்டு போடப்பட்டிருக்கும் கடை. ஆடிக் காற்று, மழைக்காலம் என வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை கடை பறந்து, காணாமல் போய்விடும்!
ஒட்டி உலர்ந்த அடிமாடுகள்தான் மஹ்மூது நானாவின் கடையில் வந்து முடியும் என்பதைத் தவிர பாட்டியார் பயந்ததை போலச் சீக்கு மாடுகளையோ செத்த மாடுகளையோ அவர் விற்பனை செய்யவில்லை!
‘சலவாத்து’ சொல்லி, மாட்டை அறுத்து, தோலுரித்து சுத்தம் செய்து கறிவெட்டும் மரமேடைக்கு மேலாக அவரது கடை ஆட்கள் தொங்கவிடும் நேரத்துக்குச் சைக்கிளில் வந்து இறங்குவார் மஹ்மூது நானா. சைக்கிளின் பின்னால் சாக்கில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் கத்தி கப்படாக்களை எடுக்கும்போதே கறிக்காகக் கடையைச் சுற்றி நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டுக்கொள்வார். மாட்டின் தொடை, கெண்டை பகுதி என குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து லாவகமாய் சதைத்துண்டங்களை முதலில் அறுத்து தனியாக ஒதுக்கிவிடுவார். அப்படி அறுக்கும்போதே கடைக்கு முன்னால் காத்திருப்பவர்களில் முக்கியஸ்தர்களான சிலரிடம் பொறுத்திருக்குமாறு கண்களால் ஜாடை காட்டிவிடுவார்! மற்றவர்கள் சென்ற பிறகு, அவர்களுக்கு தனியே எடுத்து வைத்த பகுதிகளை விற்பனை செய்வார்.
சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது மஹ்மூது நானாவின் ஞாபகம் வந்தது.
ஊரின் மற்ற பகுதிகளைப் போலவே மீராப்பள்ளித் தோட்டமும் காலத்தின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் மாறாத அந்தப் பகுதி மக்களின் வறுமையை நினைத்து மறுகியதாலோ என்னவோ அந்த நிலத்தின் அடையாளமாகப் பரந்திருந்த புளியமரம் சில ஆண்டுகளுக்கு முன்னால் பெய்த அடைமழையில் தன்னை மாய்த்துக் கொண்டது!
மஹ்மூது நானாவின் மாட்டுக்கடை மீராப்பள்ளியிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் மெய்தீன் பள்ளி மைய்யாத்தாங்கொள்ளைக்கு அருகில் இடம் மாறியிருந்தது.
மாட்டுக்கறி கடைக்கு உள்ளே இருக்க, கடையின் முன்பகுதியில் பிரதானமாய் பிராய்லர் கோழி விற்பனை!
நான் சென்ற போது மஹ்மூது நானா இல்லை.
மாட்டுத் தொடைகளை கடைப்பையன் இரும்பு கொக்கிகளில் மாட்டித் தொங்கவிடும் நேரத்துக்கு மிகச் சரியாக வந்திறங்கினார் மஹ்மூது நானா!
அதே சைக்கிள்! கடையைச் சுற்றும் அதே பார்வை!
காலம் அனைத்தின் மீதும் பாரபட்சமற்று பதிக்கும் சுவடுகள் மஹ்மூது நானாவின் மீதும் அவரது சைக்கிளின் மீதும் பதிந்திருந்தன! சாயம் என்று ஒன்று இருந்ததின் அடையாளமே இல்லாமல் எங்கும் துரு ஏறி தடதடத்திருந்த சைக்கிளை ஸ்டாண்ட் போடும் போது மஹ்மூது நானா தடுமாறினார். முழுவதுமாய் நரைத்து, நடை தளர்ந்திருந்தவர் புருவக்கூட்டுக்கு மேலாக கை குவித்து பார்வையைக் கூர்மையாக்கி என்னை நோக்கினார்.
“யாரு?... அட அட... நம்ம நாகூர் மாப்பிள்ளை மகனா? நல்லாருக்கீங்களா தம்பி? வாப்பா உம்மாவெல்லாம் வந்திருக்காகளா? கறி வேணுமா?”
என்னைப் பேச விடாமல் பூரிப்புடன் பேசியபடி கடைப்பையனை நகரச் செய்தவர், கூரிய கத்தியைக் கொண்டு மாட்டுத் தொடையின் சில பகுதிகளின் கறியைத் தனியே வெட்டி எடுக்கத் தொடங்கினார்!
“காலம் ரொம்ப மாறிடிச்சி தம்பி. மதம் மாச்சரியமெல்லாம் பார்க்காம தாயா புள்ளையா பழகின மக்களை பிரிக்கனும்ன்னு கங்கணம் கட்டி ரெண்டு பக்கமும் சில பயலுவோ அலையிறானுவோ... அதான் இப்படி ஒதுங்கியாச்சு!”
எனது மெளனத்தின் கேள்வியை உணர்ந்து பேசியவரைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் கடந்த காலத்தின் எண்ணப் படிவங்களிலிருந்து இரு சம்பவங்கள் மேலோங்கி நிழலாடின.
மீசை அரும்பத் தொடங்கிய விடலை பருவத்தில், சைக்கிளும் பழகிய தைரியத்தில் பெரிய மனுச தோரணையுடன் தனியாக வவ்வால் தோட்டத்துக்கு மாட்டுக்கறி வாங்கப் போன சமயம்...
மஹ்மூது நானாவின் கடைக்கு மறுபுறத்தில் புதிதாக ஒரு பந்தல் முளைத்திருந்தது! அங்கு ஒரு பன்றியை நெருப்பில் போட்டு அதன் முடிகளைப் பொசுக்கிக் கொண்டிருந்தனர். எதிர் காற்றில் பன்றித்தோல் பொசுங்கும் வாடை! மாட்டுக்கறிக்காகக் காத்திருந்தவர்கள் முகம் சுளித்து மூக்கு பொத்தினார்கள்.
“ஏம்பா... அவங்களுக்கு பன்னி ஆகாதுதானே... மஹ்மூது நானா கடைக்கு அந்தான்ட பக்கமா போய் கொளுத்துங்கடா... காத்தொட்டத்துல வாடை கடையைத் தொடாது!”
இங்கிருந்தவர்களின் முகசுளிப்பை கண்டு அங்கிருந்த பெரியவர் ஒருவர் பேச, பன்றி இடம் மாறியது!
ஒரு சொந்தக்கார வீட்டுக்கு திடீர் விருந்தாளியாகப் போக நேர்ந்தது. தந்தை வழி சொந்தம். வாழ்ந்துகெட்ட குடும்பம். எனக்கு மாமி முறை. வறுமையை மறைத்துப் பழகிய மாமி எங்களை உபசரிக்கப் பரபரத்தார்.
“டேய் தம்பி... நீங்க மாட்டுக்கறி சாப்புடுவீங்கதானே?... அடியே... ஒரு கிலோ வாங்கிட்டு வா... அதான் வெல கம்மி...”
“அப்படியே ஒரு நூறு கிராம் ஆட்டு எறச்சி வாங்கிக்க... பெருமாளண்ண மாட்டிறைச்சி சாப்ட மாட்டாரு!”
வேலைக்கார பெண்ணிடம் குசுகுசுப்பாய் பேசி அனுப்ப எத்தனித்தவர் வீட்டின் தலைவாசலுக்கு வெளியே திண்ணையில் அமர்ந்திருந்த முதியவரைப் பார்த்துப் பேசினார்! செழிப்புடன் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வீட்டில் குதிரை வண்டி ஓட்டி, குதிரையும் வண்டியும் விற்கப்பட்ட பிறகும் விசுவாசம் மாறாமல் அந்த வீட்டின் எடுபிடி வேலைகளைச் செய்பவர் பெருமாள் அண்ணன்!
ஆளும் வர்க்கமும் அரசியல்வாதிகளும் பிரித்தாளும் வசதிக்காக ஊதிப் பெரிதாக்கும் ஜாதி மத வேறுபாடுகளை காலங்காலமாய் புறந்தள்ளுவது மனிதநேயம் ஒன்றை மட்டுமே அறிந்த இவர்களைப் போன்ற எளிய மக்கள்தான்!
- காரை அக்பர்