பெட்ரோல் டீசல் விலையை இப்போதைய சூழலில் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதை அப்படியே திருப்பி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என்று வதந்தி பரப்பி சுகம் காணுகிறார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்.
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர்
கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்த போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.69 தான். இதில் மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. தற்போது ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 40 டாலராக உள்ள போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழக அரசின் பங்கு ரூ.23. மீதமுள்ள தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சேர்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை கிண்டலடித்திருக்கிறார்கள் உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அடிவருடிகள்.
தமிழக நிதியமைச்சரின் கூற்றை மறுப்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் காரணம் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.
சமீபத்தில் கூட ஒரு பாஜக பிரமுகர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சொன்னாரே, "பெட்ரோல் விலையை உயத்துவது எதற்கு என்றால் பெட்ரோல் பயன்பாட்டை குறைப்பதற்குத்தான்" என்று... அதற்கு சற்றும் சளைத்ததல்ல...
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்ய சபாவில் அளித்த விளக்கத்தை படியுங்கள்....
"கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களை சென்றடையாது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிட்டது என்பதற்காக சரக்கு போக்குவரத்து கட்டணமோ காய்கறிகள் மளிகை சாமான்கள் போன்றவற்றின் விலைகளோ குறையப் போவதில்லை. இடையில் உள்ள வியாபாரிகள் கூடுதல் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே கலால் வரியை உயர்த்தி அந்த பணத்தை எல்லாம் ஒன்றிய அரசே வைத்துக் கொள்ளும்"
இதுதான் உரைகல் முன்வைக்கும் மிகவும் சொம்பையான வாதம்...
மறைந்த அந்த நிதியமைச்சரின் விளக்கத்தை சரியாக சொல்வதென்றால் பெரிய அளவிலான பொருளாதார ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. நமக்கு நன்கு தெரிந்த குரங்கு கதையே போதும்.
இரண்டு பூனைகள் ஒற்றுமையாக இருந்தன. என்ன உணவு கிடைத்தாலும் பங்கிட்டுச் சாப்பிட்டன. ஒருநாள் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரு அப்பத்தைக் கண்டன.
"அப்பத்தை முதன்முதல் பார்த்தது நான்தான்! அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு பாதி தருகிறேன்!'' என்று இரண்டுமே வாதிட்டன.
முடிவில், "சரி! நாமே பேசிக் கொண்டிருந்தால் சரிவராது. யாராவது மத்தியஸ்தரிடம் போவோம்!'' என் முடிவு செய்து புறப்பட்டன. வழியில் ஒரு குரங்கைக் கண்டன.
அதனிடம் போய், "குரங்காரே! எங்களுக்கு ஒரு அப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சமமாய் பங்கிட்டு உதவ வேண்டும்!'' என கேட்டுக் கொண்டன.
குரங்கு ஏமாற்றும் குணம் கொண்டது. உள்ளுக்குள் மகிழ்ச்சியோடு வெளியில் சலிப்போடு ஒப்புக் கொண்டது.
எங்கிருந்தோ ஒர தராசைக் கொண்டு வந்தது. அப்பத்தை வேண்டுமேன்றே ஒரு பாதி பெரியதாகவும், மறுபாதி சிறியதாகவும் இருக்கும்படி பிரித்தது.
"அடாடா! இது பெரியதாகிவிட்டதே!'' என்று பெரிய துண்டு அப்பத்தைக் கூடுதலாகக் கடித்தது. இப்போது சின்னத்துண்டு பெரியதாகி விட்டது. இப்போது அதைக் கடித்தது. இப்படியே அப்பம் அனைத்தையும் தின்றுவிட்டது.
இது அப்படியே ஒன்றிய அரசுக்கும் பொருந்தும்.
மாநில அரசுகளுக்கு சேர வேண்டியதை தராமலும், மக்களுக்கு விலை குறைப்பின் பயனை தராமலும் அப்பம் கிடைத்த குரங்காக அனைத்து வரிகளையும் வாயில் அமுக்கிக் கொண்டுவிட்டது ஒன்றிய அரசு. ஆனால் வடமேற்கு மாநிலங்கள் பெட்ரோலிய விலையை குறைத்திருக்கின்றனவே என்ற கேள்வி எழலாம்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு ரூ.1 கொடுத்தார்கள் என்றால், ரூ.10 வரை வரியை திருப்பி வாங்குகிறார்கள்.
தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக்கூடாது என்றால் எப்படி அரசை நடத்துவது? என்றும் இந்த காரணத்தால்தான் எங்களால் பெட்ரோல் - டீசல் விலையை உடனடியாக குறைக்க முடியவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். விளக்கம் அளித்துள்ளதை மட்டும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்...?
இதில் என்ன குற்றம் கண்டார்கள் என்று தெரியவில்லை.
எங்களுக்கு வரவேண்டியதையும் விட மாட்டேன்... மாநிலங்களுக்கு தரவேண்டியதை தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஒன்றிய அரசை கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் அவர்கள் செய்யும் தவறுக்கு துணை போகச் சொல்லி ஒரு கருத்து நிலவுகிறது என்றால், அதையும் மக்கள் நலத்துடன் முடிச்சிப் போடுகிறது என்றால் இது எவ்வளவு பெரிய கயமைத்தனம்?
நான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை பாதி அளவாக குறைப்பேன் என்றாரே... ஆனால் இரண்டு மடங்கு விலை ஏற்றி விட்டாரே... அதைக் கேட்டீர்களா?
நான் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி வேலையின்மை விகிதத்தை 17 சதவீதமாக உயர்த்தி விட்டாரே? அதுகுறித்து ஏதேனும் கட்டுரை எழுதியிருக்கிறீர்களா?
நான் ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் செலுத்துவேன் என்று சொன்னாரே? ஆனால் இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் மக்களின் சேமிப்பையும் சுரண்டி எடுத்தார்களே அது குறித்து பேசியிருக்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழில் பத்திரிகை நடத்திக் கொண்டே டமில் என்று எழுதியவர்கள் தமிழக மக்களுக்காக பேசுகிறார்கள் என்றால் யாரேனும் நம்புவார்களா?
- சஞ்சய் சங்கையா